நண்பர்களுக்கு அன்பான வாழ்த்துகள்.
‘1975’ நாவல் மென்பிரதியாக, என் பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகத்துக்கு அளிக்கப் பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். நூல் அடுத்த சில மாதங்களில் வெளியாகும்.
மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ – என் தமிழ் மொழியாக்கமான ‘பீரங்கிப் பாடல்கள்’ அடுத்த மாதம் (மே 2018) வெளியாகிறது என்பதையும் சந்தோஷத்தோடு அறிவிக்கிறேன்.
அடுத்து?
“Pepper Chronicles’ ஆங்கில நாவல் பதினோரு அத்தியாயங்களில் நிற்கிறது. கொங்கண்-மலபார் கடற்கரைப் பிரதேசத்திலிருந்து தொடங்கிச் சென்னையையும் தொட்டுப் பார்க்கும் மிளகுத் தடம் (pepper trail) பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு அப்புறம் குறிப்பிடத்தக்க விததில் முன்னோக்கி நடக்கவில்லை. நாவலை 16000 – 1800களில் நிகழ்வதாகச் சித்தரிப்பதாக மாற்றி மேலதிகம் கள ஆய்வு நடத்திச் செறிவாக்க வேண்டும். அதற்கான நேரம் வரும்.
அதற்குள் தற்கால வரலாறு சார்ந்த வேறொரு முக்கியமான புனைவு எழுத வேண்டியிருக்கிறது.
1970-களின் எமர்ஜென்சி காலம் ‘1975’ நாவலுக்குப் பின்புலமானதைப் போல, ஐடி – கணினித் துறை என் முதல் நாவலான ‘மூன்று விரல்’ கதையாடலுக்குப் பின்னணியாக இருந்தது. 1990 – 2000 வரையான காலகட்டம் இது.
நான் சார்ந்த நிதி, வங்கித்துறை, கணினித் துறைகளில் இந்தப் பத்தாண்டுகளுக்கு அடுத்த பத்து (2000 – 2010) உலக அளவில் பெரும் மாற்றங்களை விளைவித்தது. நூறு, இருநூறு குழு உறுப்பினர்களை நான் இங்கும், வெளிநாடுகளிலும் நிர்வகித்தும், வழிநடத்தியும், பங்குபெற்றும், பாதிக்கப்பட்டும் கடந்து வந்த இந்தக் காலகட்டத்தை எழுத்தில் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் ஆர்வமும், அறிவுத் தேடலும், சாதிக்க வேண்டுமென்று பிடிவாதமும் நிறைந்த இளைய தலைமுறை வழிநடத்திப் போனது. அவர்களின் அன்பும், வெறுப்பும், சுயநலமும், பொதுநலத்தில் அக்கறையும், பரந்துபட்ட பார்வையும், புத்தம்புதுச் சிந்தனையும், களவும், காதலும் தமிழ்ப் புனைகதையில் பரிவுணர்ச்சியோடும் நேர்மையான புரிதலோடும் பதிவு செய்யப்பட வேண்டியவை. அந்த இளைஞர்களும் இளம் பெண்களும் சிறப்பிக்கப் படவேண்டியவர்கள்.
எழுதத் தொடங்கிய ‘சிலிக்கன் சங்கப் பலகை’ அதைச் செய்யும். கிருஷ்ணார்ப்பணம்.