புதிது: மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – 1


மலையாள எழுத்தாளர் என்.எஸ்மாதவன் மலையாளப் புனைகதை இலக்கியத்தைப் புதுப்பித்தவர்களில் முக்கியமானவர், இலக்கியப் போக்கை நவீனத்துவத்துக்கு மடை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உரியது.

என்.எஸ்.மாதவனோடு என் நட்புக்கு இரண்டு மார்கழி வயது. அவருடைய எழுத்தோடு என் நட்பு இருபது மார்கழி கடந்த ஒன்று. இரண்டு வகை நட்பும், நான் மாதவனின் இலக்கியப் படைப்பை அண்மையில் தமிழுக்கு மொழிபெயர்த்தபோது வலிமை பெற்றது.

போன மார்கழிக்கும் இந்த மார்கழிக்கும் நடுவில் நான் அவருடைய நாவலான ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ நூலைத் தமிழாக்கினேன். ‘பீரங்கிப் பாடல்கள்’ என்ற பெயரோடு அது வெளிவர ஆயத்தங்கள் நடந்துவரும் இவ்வேளையில் வழக்கம்போல் மார்கழி இசைவிழா சீசன் துவங்கியது. எழுத்தோடு நட்பை இன்னும் இறுக்கமாக்கியது இசை ரசனையும், நல்ல சாப்பாட்டு ரசனையும்.

என்.எஸ்,மாதவனும், எங்கள் நண்பர் இந்தியன் எக்ஸ்பிரஸ் கார்ட்டூன் ஓவியர் ஈ.பி.உண்ணியும் நானும் நல்ல சங்கீதத்தை இசைவிழா அரங்குகளிலும் சுவையான உணவை வெளியிலும் நாடிப் போனோம். உண்ணி பாலக்காட்டுக்காரர் என்பதால் தமிழ் சரளமாகப் பேசுவார். மாதவனும் தேவைக்கு வேண்டிய தமிழோடு தான் கிளம்பி வந்திருந்தார். மலையாளத்தில் உரையாட நான் ஆசைப்பட்டது நிறைவேறாமல் தமிழிலேயே பேசிக் கொண்டிருந்தோம். இசையும், உணவும் கிட்டத்தட்டத் தமிழில் தான்.

அப்படியான ஒரு இனிய தருணத்தில், மியூசிக் அகாதமியில் புதிய தலைமுறை இசைக் கலைஞரான சுநில் கர்க்யானின் மரபிசை நிகழ்ச்சியை நாங்கள் மூவரும் ரசித்துக் கொண்டிருந்தோம். ‘மானச சஞ்சரரே’ என்று சாமா ராக கீர்த்தனையைப் பாடகர் பாடிக் கொண்டிருக்க, நான் தணிந்த குரலில் மாதவன் சாரிடம் சொன்னேன் – ‘ஆத்ம வித்யாலமேன்னு இதே ராகத்திலே பழைய மலையாள சினிமா ஹரிச்சந்திரன்லே ஒரு பாட்டு இருக்கு. வைக்கம் புருஷோத்தமன் பாடி, திக்குரிசி சுகுமாரன் நாயர் ஹரிச்சந்திரனா நடிக்கப் படமாக்கியிருப்பாங்க” உண்ணி என் காதில் சொன்னார், ‘அது கமுகரை புருஷோத்தமன்’. கமுகரை தான் என்று தீர்ப்பு வழங்கினார் மாதவன். சிரித்தபடி அடுத்த பாட்டுக்குக் கடந்தார் கர்கயான்.

இந்த இனிய தருணம் காலத்தில் உறைந்து நிற்கக் கூடாதா என்று ஒரு ஏக்கம். சட்டென்று நினைவு வந்தது, நாளை மறுநாள் மாதவனும் உண்ணியும் எரணாகுளம் திரும்புகிறார்கள். நாலுநாள் இசையில் மூழ்கி இருந்ததில் மறந்து போன ஒரு காரியம் உண்டு. என்.எஸ்.எம் அவர்களை நேர்காணல் நடத்த நினைத்தது இன்னும் நடக்கவில்லை.

பாட்டோடு என் பாட்டையும் கலக்கிறேன். ‘சார், மதியம் அடுத்த கச்சேரி கேட்கப் போகிறதுக்குள்ளே உங்களை ஒரு இண்டர்வ்யூ செய்யணுமே’. ”ஓ, ந்யூ உட்லண்ட்ஸ் வந்துடுங்க, முடிச்சுடலாம்”. அவர் மறுபடி இசையில் ஆழ்கிறார்.

இரண்டு இசை நிகழ்ச்சிகளுக்கு இடைப்பட்ட பிற்பகலில் அவரோடு நான் நடத்திய நேர்காணல் இது –

இரா.முருகன் : சார், உங்களைப் பற்றி இண்டர்நெட்டில் தேடினால், 1975-ல் நீங்கள் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்று பீகார் மாநிலத்துக்கு நியமிக்கப்பட்டதில் இருந்துதான் தகவல் இருக்கிறது. எனக்கு என்.எஸ்.மாதவன் என்ற படைப்பாளியின் முன்கதை வேணுமே.

என்.எஸ்.மாதவன் : நான் திருப்பணித்துறைக்காரன். வயலின் மேதை டி.என்.கிருஷ்ணன் அந்த ஊர் தான். என் தந்தையார் இந்தியன் ரெவின்யூ சர்வீசஸ் (ஐ.ஆர்.எஸ்) அதிகாரியாக இருந்தார். அம்மா சம்பிரதாயமான, வீட்டை நிர்வகித்துக் குழந்தைகளை வளர்க்கும் குடும்பத் தலைவி. கொச்சியில் 1948-ல் பிறந்து, பள்ளிக் கல்வியும், கல்லூரிக் கல்வியும் பெற்று, திருவனந்தபுரத்தில் பொருளாதாரத்தில் பட்ட மேல்படிப்பு முடித்தேன். என் குழந்தைப் பருவமும் மாணவப் பருவமும் எந்தப் பெரு நிகழ்வும் மறக்க முடியாத அனுபவங்களும் இல்லாமல் நகர்ந்தன. 1960-களில் முதல் தடவையாக சென்னை வந்த அனுபவம் தான் எனக்குப் பெரிய அளவில் வியப்பளித்த ஒன்றாக இன்னும் நினைவில் இருக்கிறது. போக்குவரத்தும் ஜன நெரிசலும் குறைந்த 50 வருடம் முந்திய சென்னை என்னைப் பிரமிப்படைய வைத்தது கொஞ்சநஞ்சம் இல்லை. பள்ளிப் பருவத்தில் தகப்பனாரின் வாசிப்புப் பழக்கம் எனக்கும் கைவர, மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் நிறையப் புத்தகங்கள் படிச்சேன்.

இரா.முருகன் : அடுத்து, உங்களைச் சந்திக்கிறவர்கள் பொதுவாகக் கேட்கும் கேள்வி. நிறைய எழுதிவிட்டு ஒரு பத்தாண்டு காலம் எதுவும் எழுதாமல் இருந்தீர்கள் நீங்கள். அப்புறம், அதிலிருந்து மீண்டு மறுபடியும் புது வேகத்தோடு எழுத ஆரம்பித்தீர்கள். நீங்கள் மனதில் அனுபவித்த எழுத்துத் தடை (writer’s block) பற்றிச் சொல்ல முடியுமா?

என்.எஸ்.மாதவன் : 1975 வரை நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். சிசு என்ற என் சிறுகதை 1970-ல் மாத்ருபூமி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதைத் தொடர்ந்து அது நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் நான் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்று, பீகார் மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணி செய்ய 1975-ல் அனுப்பப் பட்டேன். முழுக்க மலையாளத்தில் வாசித்து, சுவாசித்து, எழுதி, பேசி இருந்த சூழலில் இருந்து மலையாளமே புழங்காத இடத்துக்கு மாற்றம். அப்போதெல்லாம் டெலிவிஷன் இல்லை. ரேடியோவிலும் கேரள வானொலி நிலையங்கள் தொலைவில் இருக்கும் பீகாரில் கேட்கக் கிடைக்காது. பேச்சுத் துணைக்கு இன்னொரு சக மலையாளியோ, படிக்க மலையாளப் பத்திரிகையோ இல்லாத நிலை. அந்த இடமும் சூழலும் என் சிந்தனையை, எழுத்தை வெகுவாகப் பாதித்தன. என் கதாபாத்திரங்களின் மொழியைப் பேசி, அவர்களின் உணவை உண்டு, அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை நானும் வாழ்ந்திருக்காமல் நான் இலக்கியம் படைக்க முடியாது. பெரும்பாலும் மலையாளத்தில் எழுதி வந்த நான் எழுத்துத் தடை வந்தடைய அடுத்த பத்தாண்டுகள் மாதவன் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜீவித்திருக்க, மாதவன் என்ற எழுத்தாளர் காணாமல் போனார்.

இரா.முருகன் : புலம் பெயர்ந்த சில தமிழர்களும், மலையாளிகளும் தங்கள் இலக்கிய வெளிப்பாட்டுக்கு முக்கியக் காரணம், இப்படிப் பிறந்து வளர்ந்த பூமியை விட்டு வேற்று நிலங்களுக்குக் குடியேறியதால் வரும் ஏக்கமும், துயரமும் தான் என்று சொல்கிறார்கள். உங்கள் அளவில் புலம் பெயர்தல் எழுத்துக்குத் தடை போட்டிருக்கும் போல தோன்றுகிறதே.

என்.எஸ்.மாதவன் :உண்மைதான். சிலருக்கு புலம் பெயர்தல் இலக்கிய ஆக்கத்துக்குத் தூண்டுதலாக அமைந்து விடும். மலையாள எழுத்தாளர் ஆனந்த் கேரளத்துக்கு வெளியே பணி நிமித்தம் வருடக் கணக்காக இருக்க வேண்டியிருந்தது. அவருடைய ஒரு நாவல் இப்படிப் போன இடத்தை கதை நிகழுமிடமாக வைத்து எழுந்தது. மருந்துக்குக் கூட ஒரு மலையாளி இடம் பெறாமல் வேற்று மொழி பேசும் கதாபாத்திரங்களை வைத்தே கதை சொல்லியிருப்பார் அவர். ஆனால், எனக்கு மலையாளமும் மலையாளியும் இல்லாமல் என் எழுத்து இல்லை. அந்தப் பத்தாண்டு காலம் அதுவே நடந்தது.

இரா.முருகன் : நீங்கள் எழுதாமல் இருந்த காலத்தில் வேறென்ன நடந்தது?

என்.எஸ்.மாதவன் :நான் எழுதாமல் இருந்தாலும், மலையாள இலக்கியம் கதை, கட்டுரை, கவிதை என்று அந்தப் பத்தாண்டு காலத்தில் சுவடு பதித்துப் போனது. அதை எல்லாம் சமகாலத்தில் படித்து அறிந்து உள்வாங்கவும் மலையாள பூமியோடு தொடர்பற்றுப் போனேன் அப்போது. ’என்.எஸ்.மாதவன் என்ற எழுத்தாளன் இறந்து போனான்’ என்று அஞ்சலி செலுத்தி, நான் ஏற்கனவே எழுதிப் பிரசுரமான சில கதைகளை ’சூளை மேட்டில் சவங்கள்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பாக என் நண்பர்கள் கொண்டு வந்தார்கள். அந்தக் காலத்தில் எழுதப்பட்ட மலையாள இலக்கிய வரலாற்று நூலொன்றில், ’எழுதி, விசை தீர்ந்து போன படைப்பாளி’ என்று என்னைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

நான் அந்தக் காலகட்டத்தில் எழுதாவிட்டாலும் ஆங்கிலத்தில் நிறையப் படித்தேன். ஆங்கிலத்திலேயே எழுதப்பட்ட இலக்கியம், அ-புனைவு மட்டுமின்றி, பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளும் இவற்றில் அடங்கும். பீகார் மாநிலத்தில் கலை – கலாசாரத் துறைச் செயலாளராகப் பதவியில் இருந்ததால் அந்த மாநிலத்தின் பாடல், ஆடல் சார்ந்த மக்கள் நிகழ்கலை வடிவங்களை அடிக்கடி காணவும், அந்தக் கலாசாரத்தை அறியவும் இந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்.

இரா.முருகன் : இயக்கம் நிலைப்பதெல்லாம் மறுபடி புது வேகத்தோடு இயங்கத் தொடங்கத்தானே. நீங்கள் இந்த writer’s block எழுத்துத் தடையில் இருந்து மீண்டு வெளிவந்தது பற்றிச் சொல்லுங்கள்.

என்.எஸ்.மாதவன் : பீகாரிலிருந்து மறுபடி கேரளத்துக்கு உத்தியோக மாற்றத்தில் வந்தது 1990-களின் தொடக்கத்தில். கிட்டத்தட்ட ஒரு தலைமுறையே என்னைக் கடந்து போயிருக்கிறது. இலக்கியப் போக்குகளை மனதில் வாங்கிக் கொள்ளவும், அரசியலும், கலைகளும் கடந்து வந்திருந்த காலத்தைப் பின் திரும்பிப் பார்க்கவும் செய்து என்னை நான் புதுப்பித்துக் கொண்டேன். நான் அதன்பின் எழுதிய புனைகதைப் படைப்புகள் எனக்குள்ளும், மொழியிலும், கலை, சமூக ஊடாட்டத்திலும், ஏற்பட்ட வளர்சிதை மாற்றத்தைப் புலப்படுத்துவதாக மொழிநடையிலும், உள்ளடகத்திலும் உத்தியிலும் அமைய முயற்சி எடுத்துக் கொண்டேன். முக்கியமாக, என்னுடையது என்று அடையாளம் தரும் மொழிநடையையும், கதை அமைப்பையும் உருவாக்கிக் கொண்டேன். கேரளம் திரும்பிய உடனே புதுக் கதைகள் எழுதினேன் என்பதில்லை. ஏற்கனவே மனதில் சேமித்திருந்த கதைக் கருக்களை இங்கே திரும்பி வந்ததும் படைப்பாக்கினேன். எழுத்துத் தடை தானே அதற்கு முன்னால் இருந்தது? சிந்தனைத் தடை இல்லையே.

இரா.முருகன் : மீண்டும் எழுதத் தொடங்கியதும் படைத்த சிறுகதைகளில் ‘திருத்து’ முக்கியமானது. வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தச் சிறுகதை பற்றிக் கூறுங்களேன்.

என்.எஸ்.மாதவன் : 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் நிகழ்வது அந்தக் கதை. வடக்கே ஒரு பெருநகரில் வெளியாகும் ஆங்கிலத் தினசரி அலுவலகத்தில் நடப்பது அது. பத்திரிகையின் ஆசிரியர் சுள்ளத். மலையாளி. இப்படியான முக்கியமான தினங்களில் அவருடைய உடல்நலம் கெட்டு விடும். அன்றைக்கும் அதேபடி ஆக, உதவி ஆசிரியர் செய்திகளுக்குத் தலைப்பு கொடுத்துத் தேர்ந்தெடுத்து எழுதுகிறார். வெளியே கலவரம் வெடிக்கும் சூழல். ஆசிரியர் தன் நண்பரான முஸ்லீம் மருத்துவர் தம்பதிகளைத் தேடிப் போகிறார். அவர்கள் மசூதி இடிக்கப்பட்ட செய்தியால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் பத்திரிகை ஆசிரியருக்குச் சிகிச்சை அளிக்கிறார்கள். ஆசிரியர் பத்திரிகை அலுவலகம் திரும்புகிறார். அடுத்த நாள் தலைப்புச் செய்தி அச்சேறத் தயாராக உள்ளது. ‘சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிப்பு’ என்று செய்தித் தலைப்பு. ஆசிரியர் கோபத்தோடு, ’இத்தனை மொன்னையாகத் தலைப்புக் கொடுத்தது யார்?’ என்று கேட்கிறார். சுஹ்ரா என்ற இளம் முஸ்லீம் பெண்மணி தான் – அந்தப் பத்திரிகையின் துணை ஆசிரியர் அவர் – அப்படி ஜாக்கிரதையான, பயத்தோடு கூடிய தலைப்பு கொடுத்திருக்கிறார். அரசனை விட அதிகம் அரச பக்தி காட்ட வேண்டிய கட்டாயம் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுபோல, தன்னை இந்தியராகக் காட்டிக்கொள்ள அதிகம் பாடுபட வேண்டிய முஸ்லீம் இனப் பெண் அவள். சுள்ளத் அவள் எழுதியதை அடித்து விட்டு ‘பாப்ரி மசூதி இடிக்கப்பட்டது’ என்று பட்டவர்த்தனமாகத் தலைப்புக் கொடுக்கிறார். கதை அங்கே முடிகிறது.

இந்தக் கதையை, கதைத் தலைப்பைப் போலவே கிட்டத்தட்ட நாற்பது முறை திருத்தி எழுதினேன். இந்த முடிவு வரும்வரை கதையில் நான் சொல்ல வந்ததைச் சொன்னதாகத் தோன்றவில்லை. சிறுபான்மையினர் என்னதான் தேசிய நீரோட்டத்தில் கலந்தாலும், வேறுபாடு இன்றிப் பழகினாலும், அதெல்லாம் நொடியில் மறக்கப்பட, அவர்களைக் குறி வைத்துப் பேச்சாலும் எழுத்தாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டி விடப்பட்டு எழும் கும்பல் சார்ந்த வன்முறையின் வெளிப்பாடு பாப்ரி மசூதி இடிப்பு. சமுதாயம் ஒன்று திரண்டு இனம் கண்டு இது தவறு என்று சுட்டிக்காட்டி, எதிர்த்து நிற்காவிட்டால் இது இனியும் பரவும் என்ற என் நிலைபாட்டை இந்த முடிவு வாசகரோடு பகிர்கிறது. பாபரி மசூதி இடிக்கப்பட்ட கணத்தில் என் மனதில் எழுந்த துயரத்துக்கு இந்தக் கதையை எழுதிய தினத்தில் ஒருவிதமான வடிகால் கிடைத்தது. நெஞ்சில் கொண்டு நடந்து மனம் வெதும்பிய துயர சம்பவம் அது.

இரா.முருகன் : ’திருத்து’ மலையாளச் சிறுகதை இலக்கியத்தை பாதிக்கச் சற்றே முன்பு நீங்கள் எழுதிய ‘ஹிக்விடா’ என்ற சிறுகதை, திரும்பி வந்த என்.எஸ்.மாதவனை அழுத்தமாக வாசகர்களுக்கும், விமர்சகர்களுக்கும், சக எழுத்தாளர்களுக்கும் மறு அறிமுகம் செய்தது. மலையாள சிறுகதையை மாற்றி எழுதிய கதை என விமர்சகர்கள் கொண்டாடும் கதையல்லவா அது?

என்.எஸ்.மாதவன் : பாராட்டுகளோடு, சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி வந்தது. ஹிக்விடா 1980-களில் தில்லியில் நிகழ்வது. வயிற்றுப் பிழைப்புக்காக பீஹாரில் இருந்து தில்லி வந்த ஒரு ஆதிவாசி இளம் பெண்ணை மிரட்டிப் பாலியல் கொத்தடிமைப்படுத்தச் செயல்படும் ஒரு தில்லி தாதா. பாதிரியார் கீவர்கீஸிடம் அந்தப் பெண் முறையிட அவர் தாதாவிடம் அவளைத் தொடர வேண்டாம் என்று எச்சரிக்கிறார். பாதிரியாரை எடுத்தெறிந்து பேசித் தன் வன்முறையை அவன் தொடர்கிறான். கால்பந்து ஆட்டக்காரனாக இருந்த பாதிரியார் கீவர்கீஸ், அந்த விளையாட்டில் அசாதரணமான ஆட்டக்காரனான ஹிக்விடாவால் ஈர்க்கப்பட்டவர். ஹிக்விட்டா கொலம்பிய நாட்டு அணியின் கோல் கீப்பர். என்றாலும் ரிஸ்க் எடுத்து கோல் போஸ்ட்க்கு வெளியே வந்து, தனக்கு முன் வரும் பந்தை அடித்துத் தன் அணிக்கு கோல் போட்டுத்தர முயல்கிறவன். அவனால் ஈர்க்கப்பட்ட பாதிரியார், தன் பாதிரி உடையையும், ஜபமாலையையும் எடுத்து வைத்துவிட்டு பாதிரியாருக்கான நடைமுறை என்ற கோல்போஸ்டுக்கு வெளியே சாமான்ய மனிதனாக வந்து தாதாவை அடித்து நொறுக்கி, ஊரிலிருந்து விரட்டுகிறார். இந்தக் கதையும் வருடக் கணக்காக மனதில் ஊறி இருந்து, எழுத்துத் தடை நீங்கிய பிறகு கதையானது. கேரள சாகித்ய அகாதமி சிறுகதை விருதும், முட்டத்து வர்க்கி விருதும் பெற்ற கதை இது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இளைய தலைமுறைக் கலைஞர்களான கல்லூரி மாணவர்களால் நாடகமாகவும் நிகழ்த்தப்பட்டது.

பிரச்சனை இந்தக் கதை மலையாளப் பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டபோது எழுந்தது. என்னதான் அறத்தை நிலைநிறுத்தச் செயல்பட்டாலும், ஒரு பாதிரி இறைநம்பிக்கை இன்றி வன்முறைக்குத் தீர்வு பதில் வன்முறை என்று நடந்து கொள்ளலாமா, பாதிரி உடுப்பையும், ஜபமாலையையும் அகற்றினால் தான் அறம் ஜெயிக்குமா என்றெல்லாம் சில கேள்விகள் எழுந்தன. தாதாவை ஒரு முஸ்லீம் ஆகக் காட்டியதற்கும் சில எதிர்ப்புகள். கதையின் மைய நிகழ்வில் இருந்தும், அது விவாதிக்கும் கதைப் பொருள், சூழலிலிருந்தும் நிறைய விலகி நின்று எழுப்பப்படும் விவாதங்களின் அபத்தத்தைச் சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது அப்போது.

குமுதம் தீராநதி – மே 2018 இதழில் பிரசுரமானது
(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன