அந்திமழை மே 2018 இதழில் பிரசுரமானது
வாடகை வீடு இரா.முருகன்
ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில், குரோவ் ஸ்ட்ரீட் என்ற தோப்புத் தெருவுக்கு டாக்ஸி பிடித்துப் போய்ச் சேர்ந்தேன். ஒரு பனிக்கால சனிக்கிழமை காலை நேரம் அது. நான் குடக்கூலிக்குப் பிடித்த வசிப்பிடம் தெருக்கோடியில் கருமை பூசிய சுவர்களோடு நின்று கொண்டிருந்தது. தோப்புத் தெரு, ஏன் எடின்பரோவே கருத்த கல் கட்டிடங்களின் ஊர். நூறாண்டு முற்பட்ட என் இருப்பிடத்துக்கு அடுத்து ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் முதல்முதலாக நடித்த சர் ஷான் கானரியின் வீடு இருப்பதால் இந்த இடத்துக்கு மவுசு அதிகம் என்று வீட்டு ப்ரோக்கர் லிண்டா ஜான்சன் சொல்லியிருந்தாள். ஷான் கானரி எடின்பரோ வந்தால் என் வீட்டிலிருந்து அவருக்குக் கையாட்டலாம் என்றும் சொன்னாள். ஷானைக் காணோம்.
தோப்புத்தெரு வீட்டில் பிபிசி எனக்காகக் காத்திருந்தது. பிரிட்டனில் டெலிவிஷன் வைத்திருந்தால் அதற்கு லைசன்ஸ் எடுக்க வேண்டும். லைசன்ஸ் இல்லாமல் டிவி வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்து உரிமத் தொகையும் அபராதமும் வாங்க சர்க்கார் சானலான பிபிசிக்கு அதிகாரம் உண்டு. என் பெயருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் ஏன் இரண்டு வருடமாக டிவி லைசன்ஸ் எடுக்காமல் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கிறாய் என்று உருட்டி மிரட்டியிருந்தது பிபிசி. நான் ஸ்காட்லாந்து வந்ததே பத்து நாள் முன்புதான். என்னிடம் தொலைக்காட்சிப் பெட்டியும் இல்லை.
லிண்டாவுக்கு இந்த மிரட்டலை எடுத்துச் சொல்லத் தொலைபேசினால் ஆண்குரல் ஒன்று அசிங்கமாகத் திட்டியது. லிண்டா அடுத்து தொலைபேச வந்து அது அவள் சிநேகிதன் என்றாள். காதலித்துக்கொண்டிருக்கிறார்களாம். பிபிசி மிரட்டல் பற்றிச் சொன்னேன். வீட்டு விலாசத்தை என்பெயருக்கு மாற்றியிருப்பதால் தேசிய தகவல்பரப்பில் இருந்து தகவல் எடுத்து பிபிசி மிரட்டியிருக்கிறதாம். கண்டுக்காதே என்றாள் லிண்டா. முத்தச் சத்தம்.
வீட்டுக்கு வெளியே மூத்திர வாடை. பக்கத்து மதுக்கடையில் ராத்திரி முட்டக் குடித்த கனவான்கள் என் வாசலில் சிறுநீர் கழித்துப் போயிருக்கிறார்கள். வாளியில் தண்ணீரோடு வாசலுக்கு வந்து ஊற்றிக் கழுவ முனைந்தபோது கதவு சாத்திக் கொண்டது. சாவி உள்ளே இருக்கிறது என்பது அப்போதுதான் நினைவு வந்தது.
நல்லவேளை என் மொபைல் தொலைபேசி சட்டைப்பையில். திரும்ப லிண்டாவுக்குத் தொலைபேசினேன். கலவி செய்யப் போகச் சொன்னான் அவளுடைய சிநேகிதன். லிண்டா லகரியில் மிதந்தபடி திரும்ப அழைத்தாள்.
“வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் வெளிமுற்றம் இருக்கு இல்லியா? அங்கே நாலு தொட்டியிலே பூச்செடி வச்சிருக்கும். ஊசி மாதிரி இலை இருக்கற செடி வலது பக்கம் இருந்து ரெண்டாவது தொட்டி. அந்தத். தொட்டி மணலுக்குள்ளே கைவிட்டுப் பார். இன்னொரு சாவி இருக்கும்”.
இருந்தது. எடுத்துத் திறந்து வீட்டுக்குள்ளே போனதும் மொபைல் அழைத்தது. லிண்டாதான். உள்ளே போயாச்சு என்று நன்றியோடு தெரிவித்தேன்.
”உங்க ஊர்லே காலை நேரம் காதலிக்க மாட்டீங்களா?” அவள் கேட்டாள்.
”சனிக்கிழமை காலையிலே மட்டும் மாட்டோம்”.
அப்புறம் பேச்சு இல்லை.