New : மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – பகுதி 3

ஜூன் 2018 குமுதம் தீராநதி இதழில் வெளியான பகுதியில் இருந்து

இரா.முருகன் : உங்களுடைய இந்த அனைத்துச் சிறுகதைகளைப் பற்றியும் ஒற்றை வாக்கியத்தில் சொன்னால், மலையாள, ஏன் இந்திய இலக்கியத்தில் சிறுகதை என்ற வடிவம் நசிந்து தேயும் காலகட்டத்தில் அதற்குப் புத்துயிர் ஊட்ட வந்தவை இவை. பத்தாண்டு எழுதாமல் இருந்து எழுத வந்தபோது கதையாடலிலும் கதைக் கருவிலும் ஏற்பட்ட மாற்றம் உங்களை மட்டும் பாதிக்கவில்லை, ஒரு மொழியின் இலக்கியத்தையே பாதித்திருக்கிறது. உங்கள் எழுத்தை விரும்பி வாசிக்கும் வாசகர்கள் பலர் உண்டு. நீங்கள் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் யார்?

என்.எஸ்.மாதவன் : ஜேம்ஸ் ஜாய்ஸ். அவருடைய நினைவோடை நாவல் யுலீசஸ் மற்றும் அயர்லாந்து தலைநகராமான டப்ளினை கதைக்களமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பான டப்ளினர்ஸ் இவை நான் அவ்வப்போது மறுவாசிப்பு செய்யும் நூல்களில் சில. காப்காவின் மெடமார்பசிஸ், தி ட்ரயல் போன்ற படைப்புகளும் அப்படியே. எழுத்தாளன் தன் எழுத்து விலைபோகுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை; அது நல்ல எழுத்து என்றால் சந்தை அவனைத் தேடி வரும் என்பதற்கு காப்காவும் அவருடைய எழுத்துகள் இன்னும் பிரசுரமாவதும், கொண்டாடாப்படுவதும் நல்ல உதாரணம்.
மலையாளத்தில் ஒ.வி.விஜயன் படைப்புகள் என்னைக் கவர்ந்து நெஞ்சில் நிறைந்தவை.

இரா.முருகன் : ஆங்கிலத்திலும் இலக்கிய விமர்சனம், புத்தக அறிமுகம் என்று நிறைய எழுதுகிறீர்கள். நீங்கள் மலையாளத்தில் பத்திரிகையில் எழுதும் நுணுக்கமும் சுவாரசியமும் கூடிய கால்பந்தாட்ட விமர்சனங்களை நான் உங்கள் கதைகளைப் படிக்கும் ஆர்வத்தோடு படிக்கிறேன். நீங்கள் இளம் பிராயத்தில் ஒரு துடிப்பான கால்பந்தாட்ட வீரராக இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

என்.எஸ்.மாதவன் (சிரிக்கிறார்). இல்லை, நான் பள்ளிப் பருவத்தில் விளையாடியது குறைவு. நிறைய கால்பந்தாட்டப் பந்தயங்களைப் பார்த்திருக்கிறேன். தில்லியில் 1982-ல் ஆசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது கலர் டெலிவிஷனும் அறிமுகமானது. அதுவரை இல்லாத அளவு வண்ணத்தில் ஒளிபரப்பான மேட்ச்கள் அனைத்தையும் நான் ஆர்வத்தோடு பார்த்தேன். அவற்றைப் பற்றி எழுதத் தொடங்கியதும் அப்போதுதான்.

இரா.முருகன் : எந்த மொழியில் எழுத விருப்பம் அதிகம், மலையாளத்திலா, ஆங்கிலத்திலா?

என்.எஸ்.மாதவன் : புனைகதை மலையாளத்தில் எழுத விரும்புகிறேன். மண்ணை, இடம் சார்ந்த உணர்வுகளை, மண்ணின் மக்களை, அவர்கள் பேச்சுவழக்கை அப்படியே சித்தரிக்கத் தாய்மொழி தான் பொருத்தம். தாய்மொழி என்றாலும் அது பேச்சிலும் எழுத்திலும் பழகி வர வேண்டும். உயிர்த்து இருக்க வேண்டும். ஸ்பெயின் நாட்டில் புழங்கும் மொழிகள் பற்றி ஒரு செய்தி நினைவு வருகிறது. அங்கே சர்வாதிகாரி ப்ராங்கோ காலத்தில் ஸ்பானிஷ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோடு, ஸ்பெயினில் ஒரு பிரதேசமான – தற்பொழுது தனி நாடாகப் பரிணமித்துள்ளது – காடலோனியாவின் மக்கள் பேசும் காடலோனிய மொழி முற்றிலுமாக நிராகரிக்கப் பட்டது. ஒரு காடலோனிய தலைமுறையே அந்த மொழியைப் பேசாமல், எழுதாமல், கற்காமல் ஸ்பானிஷ் மொழி பேசி வளர்ந்தது. அவர்களின் அடுத்த தலைமுறை தானே விரும்பி காடலோனியன் மொழியை அரவணைத்துக் கற்றுக் கொண்டது. பேசவும், எழுதவும் தொடங்கியது. அங்கே காடலோனிய மொழி தாய்மொழி இல்லை. பிள்ளைமொழிதான். இலக்கியமும் கலையுமாக அது இன்னொரு தலைமுறை தொட்டுத் தாய்மொழியாகலாம்.

இரா.முருகன் : மலையாள இலக்கிய உலகத்தில் நிறைய விருதுகள் இருப்பதைப் பார்க்கிறேன். எழுத்துக்கு அங்கீகாரமும் கௌரவமும் தரும் பண்பாடு இது என்று தோன்றுகிறது. யாராவது எழுத்தாளரோ கவிஞரோ மறைந்தால், அவர் பெயரில் ஒரு புது விருது அறிவிக்கப்படுகிறது. இன்னொரு படைப்பாளி கௌரவிக்கப் படுகிறார். விருது கலாசாரம் பற்றி..

என்.எஸ்.மாதவன் : உண்மைதான். படைப்புக்கு அங்கீகாரம், கௌரவம் செய்தல், விருது வழங்குதல் எல்லாம் நல்ல காரியம் தான். ஆனால், இதோடு கூடவே, ஹீரோ ஒர்ஷிப் – விதந்தோதி வழிபடல் மலையாள இலக்கிய உலகில் உண்டு. தமிழில் இருக்குமா என்று தெரியாது. வைக்கம் முகம்மது பஷீரை அவருடைய படைப்புகளை விடவும் அதிகமாகப் போற்றி வழிபடுவதைக் காணலாம். அவர் இரண்டாண்டு சுற்றித் திரிந்து வந்த பயணத்தை ஒரு ஆன்மீக யாத்திரையாக மாற்றி அவரை அபூர்வமான அனுபவங்கள் வாய்த்தவராகக் கிட்டத்தட்ட அமானுஷ்ய தளத்துக்கு உயர்த்தியது ஓர் உதாரணம்.

இரா.முருகன் : உங்கள் நாவல் லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள். பெயரே வித்தியாசமாக இருக்கிறதே.

என்.எஸ்.மாதவன் : இது பச்சை மலையாளத் தலைப்பு தான். லந்தன் என்பது ஒலாந்தர். அதாவது ஹாலந்து நாட்டினர். இவர்கள் டச்சுக்காரர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். கேரளக் கரையோரம் டச்சுக்காரர்கள் வணிகம் செய்ய வந்து நாடு பிடித்தார்கள். அப்படியான ஒரு தீவில் தற்காப்புக்காகவும், பாதுகாவலாகவும் அவர்கள் ஏற்படுத்தியது ஒரு பீரங்கித் தொகுதியை. ஆங்கிலத்தில் அது பாட்டரி BATTERY எனப்படும். மலையாளத்தில் பத்தேரி. ஆக, ஊர்ப்பெயர் லந்தன்பத்தேரி. அங்கே மாதாகோவிலில் பாடப்படும் பிரார்த்தனைக் கீதம் லிட்டனி LITANY. அது மலையாளத்தில் லுத்தினிய என்று வழங்கப்படும். எல்லாம் சேர்த்து ’லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ தலைப்பாகிறது. அந்த மண்ணை, மக்களைப் பற்றிப் பேசும் நாவல் இது. எரணாகுளம், கொச்சி பிரதேசத்தில் இந்தத் தீவுப் பிரதேசம் ஒரு கற்பனை நிலமாகக் கதைக் களன் அமைத்திருக்கிறது.

இரா.முருகன் : இந்த நாவல் நிகழும் காலம் 1950-களில் தொடங்கி 1960-கள் மத்தியப் பாகம் வரை. அந்தக் காலகட்டத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் ஏதும் உண்டா?

என்.எஸ்.மாதவன். நிச்சயமாக. அது என் குழந்தைப் பருவம் தொடங்கி நான் சிறுவனாக, இளைஞனாக வளர்ந்த காலம். கேரள அரசியல், இலக்கியம், சினிமா, நிகழ்கலை, உணவு என்று சகலமானதிலும் மாற்றம் ஏற்பட்ட காலம் அது. கொச்சி பகுதியில் வசிக்கும் எளிய மக்களான லத்தீன் கிறிஸ்துவர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் அந்தக் காலகட்டத்தை எழுத்தில் நிலைக்கச் செய்வதாக நாவல் அமையத் திட்டமிட்டேன்.

இரா.முருகன் : நாவலின் கதையமைப்பு பற்றிச் சற்றே கூறுங்களேன்

என்.எஸ்.மாதவன் : 1950-களில், சரியாகச் சொன்னால், 1951-ல் லந்தன்பத்தேரியில் பிறக்கும் ஜெசிகா என்ற பெண் குழந்தை – சிறுமி – பதின்ம வயதுப் பெண். அவளது பார்வையில் சொல்லப்படும் கதை இந்த நாவல். படகு கட்டும் வலிய ஆசாரிப் பணி செய்யும் பெருந்தச்சரான அவளுடைய தந்தை, எளிய விருப்பங்களோடு வாழும் அம்மா, பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் சமையல் கலைஞரான ஜெசிகாவின் பெரியப்பா, அவர் குடும்பம், ஜெசிகாவின் அண்டை அயலார், பள்ளி ஆசிரியர்கள், பாதிரியார், கல்லறை குழி வெட்டுகிறவர் என்று ஒரு இனக்குழு சமுதாயத்தின் கதையாக நாவல் விரிகிறது. இவர்கள் மட்டுமின்றி, காலத்தில் முன்னே பின்னே நகர்ந்து பதினாறாம் நூற்றாண்டில் கொச்சி பிரதேசத்தில் போர்ச்சுகீசியர்களும் அவர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்களும் வந்தது தொடங்கி 1950-களில் நிகழ்ந்த கேரள சமூக, அரசியல் மாற்றங்கள், மக்களை அதுவரை கவர்ந்த சவிட்டு நாடகம் போன்ற பாமரருக்கான நிகழ் கலை வடிவங்கள் சென்று தேய்ந்து இறும் சூழல், கத்தோலிக்கக் கோவில் சார்ந்த விழாக்கள், சடங்குகள் என்று ஒரு காலத்தின், சமூகத்தின் பிரதிபலிப்பாக நாவல் நடக்கிறது.

இரா.முருகன் : ஆமாம். அதை மலையாளத்திலிருந்து தமிழுக்கு அண்மையில் நான் மொழிபெயர்த்தபோது மலைத்துத்தான் போனேன். கிட்டத்தட்ட செயல் மறந்து வாழ்த்துதுமே மோமெண்ட். இந்தப் பெரும் நாவலை எழுதும் முன் நீங்கள் ஆயத்தமாகியது எப்படி என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

என்.எஸ்.மாதவன் : நாவலின் கதை மாந்தர்களான லத்தீன் கிறிஸ்துவ சமூகத்தோடு சிறிது காலமாவது வாழ்ந்து அதற்குப் பின் எழுதுவது என்ற தீர்மானத்தோடு எரணாகுளத்தில் ஒரு வீடு வாடகைக்குப் பிடித்துக் குடியேறினேன். அதற்கு முக்கியக் காரணம் அந்த மக்கள் பேசும் மொழியைக் கேட்டு, நானும் பேசி அதை நுணுக்கமாக நாவலில் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம்.

இதில் ஒரு சிக்கல் இருந்தது. நாவல் 1950 – 1960 களில் நிகழ்வது. இந்த மக்களின் பேச்சு மொழி அந்தக் கால மொழிநடையை விட்டு நிறைய விலகிப் போயிருந்தது. கூடவே வெகு அண்மைக்காலம் வரை இந்த மக்கள் அந்த வட்டார வழக்கைப் பேசுவதை அவமானமாகக் கருதியிருந்தார்கள். சினிமாவில் கொச்சி, எரணாகுளம் வட்டார மலையாளம் பேசி அது பிரபலமாகியது கடந்த சில வருடங்களில் தான். அந்த மக்களை வட்டார வழக்கில் பேசச் சொல்ல மிகவும் கஷ்டப்பட்டேன். அவர்களில் முதியவர்களைத் தேடிப் பிடித்து 1950-களில் அந்த வட்டார மொழி எப்படி வழங்கப்பட்டது என்பதை நினைவிலிருந்து அவர்களைப் பேசச் சொல்லி ஒலிப்பதிவு செய்து வைத்தேன்.

அந்தக் கால நாடகக் கலை வடிவமான சவிட்டு நாடகம் குறித்த தேடல் அடுத்து வந்தது. அவர்களில் வயதானவர்களுக்கு பெரும்பாலும் சவிட்டு நாடகத்தோடு பரிச்சயம் இருந்ததோடு நாடகப் பாட்டுகளும் மனப்பாடமாகத் தெரிந்திருந்தன. அவற்றைப் பாடச் சொல்லி ஒலிப்பதிவு செய்தேன். புத்தக உருவில் உள்ள சவிட்டு நாடகங்களை, அவற்றின் அபூர்வமான பழைய பிரதிகளைத் தேடி வாசித்தேன்.

முன் தலைமுறை எழுத்தாளர் போஞ்சிக்கர ராஃபியும் அவர் மனைவி சபீனா ராஃபியும் சவிட்டு நாடகத்துக்கு செய்த மாபெரும் தொண்டால் அது இன்னும் அங்கங்கே உயிர்த்திருப்பதோடு, வசனமும் பாடல்களுமாக நாடகப் பிரதிகளும் அவர்கள் பதிப்பித்த புத்தகங்களாகக் கிடைக்கின்றன. சவிட்டு நாடகம் பற்றி ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவை தமிழில் இயற்றப்பட்டவை. லத்தீன் மொழியின் வடிவமான பிட்ஜின் கலந்த தமிழ் அது.

தமிழகக் கடலோர மாவட்டங்களிலிருந்து மலையாளக் கரைக்கு வந்த இந்த நாடகங்களை கேரளம் இருகரம் நீட்டி வரவேற்றுத் தனதாக்கிக் கொண்டது. தமிழ் நாடக வாத்தியார்களான அண்ணாவிகள் கொச்சி, எரணாகுளம் பகுதியில் ஈடுபாடு உள்ள எளிய மக்களுக்கு இவற்றைப் பாடி ஆடக் கற்பித்து சவிட்டு நாடகம் தமிழகத்தை விடவும் அதிகமாக இங்கே செழிக்கவும், அதன் ஆயுள் குறுகிய வடிவத்திலேனும் நீடித்து இருக்கவும் வழி வகுத்தார்கள்.

ஆக, லத்தீன் கிறிஸ்துவர்களின் பேச்சுமொழி, சவிட்டு நாடகம் என்று இரண்டு முக்கியக் காரணிகள் நாவலுக்கு வலுவாக அடித்தளம் அமைத்தன. கொச்சி பகுதியின் சமூக வரலாறு, டச்சு, போர்ச்சுகீஸ் ஆக்கிரமிப்பு வரலாறு, ஆங்கிலேயர்கள் வந்தது, போன நூற்றாண்டின் சமூக நிகழ்வுகளான வைசூரி தாக்குதல், அம்மை குத்துதல், பிரியாணியும், மசாலா தோசையும், மசாலா கடலையும், மக்ரோனியும் கேரளத்தில் அறிமுகமாகியது என்று மற்ற சமூகவியல் சார்ந்த சரித்திரமும் படித்தறிந்தேன். அந்தக்காலச் சமையல் குறிப்புகளையும் சேகரித்தேன். வானொலி வந்ததும், வீடுகளுக்குப் பெருமளவில் மின்சாரம் வந்ததும், பல தினப் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கியதும் அந்தக் காலத்தில் தான். கதையில் அதெல்லாம் இடம் பெற வேண்டுமென நினைவில் குறித்துக் கொண்டேன்.

கேரளத்தில் முதல் கம்யூனிஸ்ட் அரசாக, தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஈ.எம்.எஸ் நம்பூத்ரிபாட்டின் அமைச்சரவை பதவிக்கு வந்தது, அதை அகற்ற காங்கிரஸும், மதவாத, இனவாத அமைப்புகளும் நடத்திய விமோசன சமரம், கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது, கேரள காங்கிரஸ் உதயம் என்று கேரள அரசியல் வரலாறோடு, இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு, நேரு நிராசையடைந்து மரணம், சாஸ்திரி தொடக்கத்தில் கிண்டல் செய்யப்பட்டு, பாகிஸ்தானோடு யுத்தத்தில் வெற்றி பெற்ற பின்னர் கொண்டாடப்பட்டது என்று தேச வரலாற்றையும் மறுவாசிப்பு செய்தேன்..

பைங்கிளி சாகித்யம் என்ற வெகுஜன எழுத்து, இலக்கியமான எழுத்து என்று மலையாளப் புனைகதையின் இரண்டு சுவடுகளும் நீட்சியடைந்து வளர்ந்து தடம் பதித்துப்போன வரலாற்றையும், வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிப் போயிருந்த மலையாள, தமிழ் சினிமா, சினிமா கானங்கள் பற்றியும் தேவையான தகவல்களையும் சேகரித்தேன். கதாபிரசங்கம் போன்ற அப்போது பரவலாக நிகழ்த்தப்பட்ட கலை வடிவத்தையும் விட முடியவில்லை. இந்த அடித்தளத்தோடு நாவல் எழுத அமர்ந்தேன்.

(தொடரும்)

ஜூன் 2018 குமுதம் தீராநதி மாத இதழில் வெளிவந்த பகுதி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன