பந்து – 1
கோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரேஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது.
விளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தில், வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி, ரொமாரியோ கோல் போஸ்ட்டை அதிரடித்த அந்த உக்ரன் கோலை, லேசில் மறக்க முடியுமா?
ஓராயிரம் தடவை மாப்பு சோதிக்கிறேன். இதுதான் என்னிடத்தில் ஒரு சங்கடம். சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டுக் கால்பந்தைத் துரத்தி ஓடுவது.
”பந்துகளி.. சதா நினைப்பும் பேச்சும் அதல்லாதே வேறே என்ன உண்டு? மரமன் கன்வென்ஷனுக்குப் போக லீவு இல்லை. மரடோனாவோ வல்ல வேறே தெண்டியோ கோல் அடிக்கிறானாம். தெருவிலே போற கிளவன்மாரெ கூட்டி வச்சு சோறும் கறியும் விளம்பிக் கொடுத்துப் பக்கத்தில் இருத்தி, நடு ராத்திரிக்கு டி.வி. காண வேண்டியது. பின்னே நாளெ பகல்லே சுகமாயிட்டு ஒரு உறக்கம். நரகம் தான் உங்களுக்கு. சர்வ நிச்சயமாயிட்டு”.
தீனி மேசையில் வைத்துச் சோறு பரிமாறிக்கொண்டே ஏலிக்குட்டி உதிர்த்ததில் நான் நிறையக் குறைத்து வங்காளியில் கோஷ் பாபுவிடம் சொன்னபோது, அவர் மீன் முள்ளைத் துப்பியபடி கேட்டார்:
“தோமஸே, இந்த மரமன் கன்வென்ஷன் தான் என்ன?”
// கதையின் இந்தப் பகுதி பற்றிய குறிப்புகள்
[ என் ‘பந்து’ சிறுகதை இப்படித் தொடங்குகிறது.FIFA 1994 USA பந்தயங்களில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பிரேஸிலுக்கும் ஸ்வீடனுக்கும் இடையே நடந்த நேரம் தான் கதைக்குப் பின்புலம்.
மனதுக்குள் அந்த மேட்சை மறுபடி கண்டு களித்து, சந்தோஷமாக எழுதிய கதை இது. முக்கியமாக ஆட்டம் தொடங்கி எண்பதாவது நிமிடத்தில் பிரேஸில் விளையாட்டு வீரர் ரொமாரியோ தன் சகா ஜார்ஜின்ஹோ கடத்தி விட்ட பந்தைத் தலையில் வாங்கி முட்டி கோல் போட்டு ஜெயித்ததை எப்படி மறக்க முடியும்!
ரொமாரியோ இப்போது பிரேஸிலில் பிரபலமான அரசியல்வாதி. மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் ஜெயித்து, கட்சி மாறி, ரியோ டி ஜெனரோ மாநிலக் கட்சித் தலைவராக இருக்கிறார். மாநில கவர்னர் ஆக வாய்ப்பு உண்டாம்.
ஜார்ஜின்ஹோ ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்தவர். தான் பிறந்த சேரிப் பகுதியின் முன்னேற்றத்துக்கு சேவை செய்து வருகிறார். பிரேஸிலின் புகழ்பெற்ற வாஸ்கோ ட காமா கால்பந்தாட்ட அணியின் நிர்வாகியாக இருக்கிறார்.
கோஷ்பாபு சாயலில் , மூலக்கச்ச வேட்டி அணிந்த வங்காளிப் பெரியவரை, புதுதில்லி பெங்காலி மார்க்கெட் ஸ்வீட் ஸ்டால் ஒன்றில் ரஸகுல்லாவும் மிஷ்டி தஹியும் வாங்கப் போனபோது பரிச்சயப்படுத்திக் கொண்டேன். அது 1980-களில். முதல்வர் ஜோதிபாசு மேலும், பிலே, கரிஞ்ச்சோ போன்ற கால்பந்தாட்ட லெஜண்ட்கள் மேலும் அன்பும் மதிப்பும் வைத்திருந்தவர் அவர்.
பந்து, குங்குமம் இதழில் வெளியானது. இந்தியா டுடே (மலையாளம்) நண்பர் சுந்தர்தாஸ் இதை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். கலாகௌமுதியில் அல்லது சிந்தாவில் அது வெளியானதாக நினைவு ]
Photo credit of Romario – Wiki
//
’இரா.முருகன் கதைகள்’ (கிழக்கு பதிப்பகம்) பெருந்தொகுப்பில் இடம்பெற்ற கதை இது
Annotated Short Story ‘Pandhu’ – Era.Murukan continues……