This story is from the anthology இரா.முருகன் கதைகள்
உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி FIFA 2018 (Russia) சிறப்புப் பதிவு
பந்து இரா.முருகன்
———————–
கோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரேஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது.
விளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தி, வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி, ரொமாரியோ கோல் போஸ்ட்டை அதிரடித்த அந்த உக்ரன் கோலை, லேசில் மறக்க முடியுமா?
ஓராயிரம் தடவை மாப்பு சோதிக்கிறேன். இதுதான் என்னிடத்தில் ஒரு சங்கடம். சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டுக் கால்பந்தைத் துரத்தி ஓடுவது.
”பந்துகளி.. சதா நினைப்பும் பேச்சும் அதல்லாதே வேறே என்ன உண்டு? மரமன் கன்வென்ஷனுக்குப் போக லீவு இல்லை. மரடோனாவோ வல்ல வேறே தெண்டியோ கோல் அடிக்கிறானாம். தெருவிலே போற கிளவன்மாரெ கூட்டி வச்சு சோறும் கறியும் விளம்பிக் கொடுத்துப் பக்கத்தில் இருத்தி, நடு ராத்திரிக்கு டி.வி. காண வேண்டியது. பின்னே நாளெ பகல்லே சுகமாயிட்டு ஒரு உறக்கம். நரகம் தான் உங்களுக்கு. சர்வ நிச்சயமாயிட்டு”.
தீனி மேசையில் வைத்துச் சோறு பரிமாறிக்கொண்டே ஏலிக்குட்டி உதிர்த்ததில் நான் நிறையக் குறைத்து வங்காளியில் கோஷ் பாபுவிடம் சொன்னபோது, அவர் மீன் முள்ளைத் துப்பியபடி கேட்டார்:
“தோமஸே, இந்த மரமன் கன்வென்ஷன் தான் என்ன?”
நாங்கள், அதாவது தோமஸ் வர்க்கீஸான நானும், ஏலிக்குட்டி என்ற என் வீட்டுக்காரி எலிசபெத்தும் சுரியானிகள். அதாவது சிரியன் கிறிஸ்துவ மதம். வருஷம் ஒரு தடவை கேரளத்தில் ரன்னி பக்கம் மரமன்னில் மார்பப்பா என்ற எங்கள் மதகுரு மாநாடு கூட்டி, நாடு வாழவும், ஜனங்கள் கர்த்தரை விசுவசித்து சுபிட்சமாக இருக்கவும் ஆசீர்வதிக்கிற வழக்கம்.
இந்த மரமன் கன்வென்ஷனுக்கு ஒரு தடவை கூடப் போகாததாலோ என்னவோ எங்களுக்கு இன்னும் புத்திரபாக்கியம் வாய்க்கவில்லை என்று ஏலிக்குட்டியின் அப்பச்சனும் என் பிரியமான மாமனாருமான மத்தாயி என்ற மட்டாஞ்சேரி மாத்யூ அபிப்பிராயப்பட்டாலும், என் தீவிரமான கால்பந்தாட்ட வெறியைப் பற்றி இதுவரை ஒரு குறைச்சலும் பட்டதில்லை.
ஆனால், இந்த ஏலிக்குட்டியின் விஷயம் வேறே..
”பந்து விளையாட்டு பார்க்கறீங்க, சரி. அதுக்கு இப்படி பெங்காலி ஸ்வீட் கடையில் அழுக்குத் துணியில் பால் வடிகட்டித் தொங்கவிட்டு மலாய் எடுக்கற மனுஷரைத்தான் துணைக்குக் கூப்பிடணுமா? வயசும் அந்தஸ்தும் தாண்டியா சிநேகம்?”
கை கழுவப்போனபோது அவள் கேட்க, நான் பதிலாகச் சொன்னது, “மிளகூட்டானில் உப்பு அதிகம்”.
இந்த தில்லி மாநகரில் சலவை இயந்திரமும், கலர் டெலிவிஷனும் மற்றதும் விற்கிறதான கம்பெனியில், சுமாரான சம்பளம் தருகிறார்கள் என்று உள்ளூர் கெல்ட்ரான் உத்தியோகத்தை உதறி, கட்டியவளோடு புறப்பட்டு வந்தவன் நான். எந்தக் காலத்திலோ கல்கத்தாவிலிருந்து கிளம்பி வந்து இங்கே பெங்காலி மார்க்கெட் மிட்டாய்க் கடையில் சகலமுமான எடுபிடியாக இருப்பவர் கோஷ் பாபு என்ற அறுபது வயதைத் தொட்ட ரொபீந்தர் கோஷ்.
இரண்டு பேரையும் ஒரே நேர்கோட்டில் இணைத்தது கால்பந்து.
கன்னாட்பிளேஸ் நடைபாதையில் தூசிதட்டி வாங்கிய, கால் பந்தாட்டம் பற்றிய ஒரு பழைய புத்தகத்தைக் கக்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு ஸ்வீட் ஸ்டால் படியேறிய ஒரு புண்ணிய நிமிஷம், மண் ஜாடியில் ரசகுல்லா நிறைத்துக் கொண்டிருந்த கோஷ் பாபு கண்ணில் நான் பட, ஆரம்பமானது இந்த சிநேகம்.
”பாபு மோஷாய் .. இதென்ன அதிசயமாக பீலே படத்தோடு கரிஞ்ச்சா படமும் இந்தப் புத்தக அட்டையில்? கால் வளைந்தவன் என்றாலும் புள்ளிக்காரன் நல்ல ஓட்டமும் சாட்டமும் ஆனவன் இல்லையோ?”
நான் அவரை உற்றுப் பார்த்தேன். ஒவ்வொரு வங்காளிக்குள்ளும் ஒரு கால்பந்தாட்ட ரசிகன் ப்ளஸ் கால்பந்தாட்ட பக்தன் ப்ளஸ் காளி உபாசகன் ப்ளஸ் ‘ஜொல்புஷ்ப்’, அதாவது தண்ணீர்ப் பூவான மீன் பிரியன் உண்டு. நெடுநெடுவென்று கருத்து மெலிந்து வைக்கம் முகம்மது பஷீர் ஸ்டைல் வழுக்கையும், மீசையும் சிரிப்புமாக விசாரிக்கும் இந்த வயசன் வங்காளியும் விதிவிலக்கு இல்லை.
ரஸகுல்லாவும், சந்தேஷும், மிஷ்டி தஹியும் பிடித்துப் போனது. அப்புறம் கோஷ் பாபுவும். இந்த தோமஸ் வர்க்கீஸ் அடுத்து மிட்டாய்க் கடையில் அடிக்கடி ஆஜர்.
“நான் தான் சதா வருகிறேன். நீங்க ஒரு தடவை வீட்டுக்கு வரணும்”.
விலாசத்தை ஞாபகம் வைத்துக் கொண்டு, உலகக் கோப்பை கால்பந்து ராத்திரியில் பெங்காலி மார்க்கெட்டிலிருந்து வந்திருந்தார் கோஷ் பாபு.
மேற்படி விவரமெல்லாம் தந்தி பாஷையில் நான் ஏலிக்குட்டியிடம் சொல்லிக் கொண்டிருக்க, அலம்பிய கையை மூலக் கச்ச வேட்டியில் துடைத்துக் கொண்டு முன்னறைக்குப் போன கோஷ் பாபு விநயத்துடன் கேட்டார் :
“தோமஸே .. தண்ணி வேணும் நிறைய..”. மிளகூட்டான் செய்கிற வேலை. எனக்கே தாகம் தான்.
வெந்நீர் சருவத்தில் பாதி சைஸுக்கு ஏலிக்குட்டி நிறைத்துக் கொடுத்த பித்தளைப் பாத்திரத்தோடு நான் முன்னறைக்குப் போக, ஏலிக்குட்டி படுக்கை அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள்.
கோஷ் பாபு குவளை குவளையாகத் தண்ணீர் குடிக்கலானார். நான் படுக்கையறைப் பக்கம் மெல்ல நகர்ந்து போய்த் திரும்பி வந்தபோது, டி.வியில் யாரோ பூரண சோகமாக சாரங்கி வாசிக்கிற காட்சி.
”தோமஸ் என்ன திடீரென்று காணாமல் போனது?”
கோஷ் பாபு டீப்பாயில் கிடந்த ‘கலா கௌமுதி’ பத்திரிகையைத் தலைகீழாகப் பிடித்து விசிறிக் கொண்டே விசாரித்தார்.
எப்படிச் சொல்ல.. நான் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரப் படுபாவி கால்ரா. என்ன ஒரு பெயர்! இரண்டு பாத்ரூம்களில் ஒன்றில் அவனுடைய பழைய டூத் ப்ரஷ், பெண்டாட்டியின் உள்பாவாடை, மாமியாரின் பல்செட் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் போட்டுப் பூட்டி சாவியை எடுத்துப் போனதால், படுக்கையறைக்கு உள்ளே இருக்கும் பாத்ரூமைத்தான் உபயோகிக்க வேண்டிய கட்டாயம்.
கடியாரத்தைப் பார்த்தேன். விளையாட்டு ஆரம்பிக்க இன்னும் நிறைய நேரம் இருந்தது. கோதுமை அமோக விளைச்சலுக்கு வீரிய வித்து கண்டுபிடித்ததைப் பற்றி டி.வியில் அந்த அகால நேர்த்தில் விவரமான டாக்குமெண்டரி காட்டிக் கொண்டிருக்க, சனியனை அணைத்து விட்டு, ஏர் கூலரை ஆன் செய்து, கோஷ் பாபு பக்கத்தில் உட்கார்ந்தேன்.
”பாபு, உலகக் கோப்பைப் பக்கமெல்லாம், நம்முடைய புண்ணிய பூமி, ஹமாரா தேஷ், அவர் ஓன் இண்டியா எட்டிக்கூடப் பார்க்கவில்லையே, ஏன்?”
கோஷ் பாபு வாயைக் கிண்டினேன். பேசாவிட்டால் தூக்கம் வந்துவிடும்.
“தோமஸே, உமக்குத் தெரியுமோ? ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுலே நம்மூர் டீம் செலக்ட் ஆனது. ஆனா பாரும், நிதி நிலைமை சரியில்லேன்னு அனுப்பலே. ஃபைனல்ஸ்லே பிரேஸிலும் உருகுவேயும் மோதின அந்த வருஷம் தான்
நான் மோகன்பாகன் டீமில் செண்டர் ஃபார்வர்டா விளையாடினேன்”.
மறுபடி தண்ணீர் குடித்தபடி படு உற்சாகமாக கோஷ் பாபு சொல்ல, நான் சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.
ஒரு வருஷப் பழக்கத்தில் நான் கோஷ் பாபுவிடம் கவனித்த கெட்ட பழக்கம் இதுதான். சந்தடி சாக்கில் இப்படிச் சரடு விடுவது.
தோமஸ் வர்க்கீஸ் சாது. சத்தியவான். கால் பந்தாட்ட பிராந்து பிடித்தவன். வங்காளிகள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவன். அது கொண்டு, கோஷ் பாபு சொல்கிற சகலமானதையும் நம்ப முடியாது என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறவன். சரிதானே?
“வர்க்கியேட்டா, ஒன்னு வரணும் உள்ளே”.
ஏலிக்குட்டி படுக்கை அறையிலிருந்து அன்பொழுகக் கூப்பிட்டாள். நான் போய் நோக்க, அவள் நல்ல நிறமுள்ள மேக்சிக்கு மாறியிருந்தாள். முந்தின வாரம் தான் கரோல்பாக்கில் வாங்கி வந்தது. நைட்லாம்ப் வெளிச்சத்தில் நல்ல வசீகரமான இருப்பு அது.
மேட்ச் ஆரம்பிக்க ஒரு மணி நேரம் ஆகும். அது வரைக்கும் ஏலிக்குட்டியை மடியில் ஏற்றி வைத்துக் கொண்டு காலதேச வர்த்தமானங்கள் சொல்லி இருந்து … எல்லாம் கூடி வந்தால் அடுத்த மாதம் தபால் அட்டையில் அப்பச்சனுக்கு சந்தோஷ சமாசாரம் எழுதிப் போடலாம்.
வழியில்லை. வெளியே கோஷ் பாபு.
நான் யோசனையில் இருக்க, ஏலிக்குட்டி படு ஸ்டைலாகச் சொன்னாள் : ”மிஸ்டர் தோமஸ் .. என் ப்ரியப்பட்ட ஹஸ்பெண்ட் .. என்ன மேக்ஸி என்று வாங்கி கொடுத்தீர்? பாரும் இதன் லட்சணத்தை ..”
அவள் எழுந்து நிற்க, தொடைப் பக்கம் விபரீதமான கிழிசல்.
“அங்கே என்ன நோட்டம் வேண்டியிருக்கு? ஒரு உடுதுணி வாங்கித் தர யோக்யதை இல்லை. சொல்லத்தான் கூப்பிட்டது. போய் மேட்ச் பாரும். சாயா உண்டாக்கி மேஜையில் வச்சிருக்கேன். தூக்கம் விழித்து, தேச சேவையல்லவோ செய்ய உத்தேசம். ரசகுல்லா மாஸ்டருக்கும் ஊற்றிக் கொடுங்க… போங்க”.
ஏலிக்குட்டியின் தொடையழகை சாவகாசமாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானத்தோடு, பிளாஸ்க்கைத் தோளின் குறுக்கே நம்பூத்ரி பூணூல் போல மாட்டிக்கொண்டு முன்னறையில் மீண்டும் பிரவேசிக்க, ‘ஃபுட்பால் புள்ளிவிவரங்கள்’ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் கோஷ் பாபு.
”தோமஸே, ஆஃப் சைட் கோல் என்று தீர்மானிக்க எத்தனை எதிராளி ஆட்டக் காரர்கள் நிற்க வேண்டும்? இதில் படித்துச் சொல்லும்”. கோஷ் பாபு கேட்க, நான் சாயாவை ஊற்றிக் கொடுத்தேன். எனக்கே சரியாகத் தெரியாத விவகாரம் அது. புத்தகத்தைப் புரட்டப் பொறுமையும் இல்லை.
”ஆப்சைட் கிடக்கட்டும். சேம்சைட் கோல் போட்டவனுக்குக் கொலம்பியாவில் வந்த கதிகேட்டைப் பார்த்தீர்களா?”
பேச்சை மாற்றினேன். பத்து நாள் முன்னால் தான் அமெரிக்காவுக்கு எதிரான மேட்சில் சேம்சைட் கோல் அடித்த கொலம்பியாக்காரன் எஸ்கோபாரை மெஷின்கன் வைத்து நிதானமாகச் சுட்டுப் பரலோகத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பியிருந்தார்கள் புண்ணியவான்கள்.
ஸ்லோ மோஷனில் சாயா குடித்தபடி, லத்தீன் அமெர்க்க கால்பந்து விளையாட்டின் கலையம்சங்கள், மாஃபியா, தோகோ மரடோனாவை அபினோ வேறே சமாசாரமோ உருட்டி விழுங்கியதாக, விளையாட விடாமல் விரட்டி அடித்தது, எண்பத்தாறாம் வருடம் பிரேஸில்கார மிட் ஃபீல்டரும், கேப்டனுமான சாக்ரட்டீஸ் அடித்த கத்தரிக்கோல் உதை விவரம், இத்தாலிய கோச் அரிகோ சாச்சியின் வியூக அமைப்பு என்று கலந்து கட்டி கோஷ் பாபு பேசிக்கொண்டே போக, எப்போது தூங்கிப் போனேன் என்று தெரியாது.
ஏலிக்குட்டியின் வடிவான தங்கை கிரேசிக்குட்டியோடு கால் பந்து மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓடுவதாகக் கனவு கண்டு சடாரென்று விழித்துக் கொண்டபோது, ஃப்ரீ கிக்கில் ரொமாரியோ இடது காலால் சவட்டிய பந்தை ஸ்வீடன் கோல் கீப்பர் தடியன் செல்லமாகப் பிடித்து இடுப்பிலே குழந்தை போல் இருத்திக் கொண்டிருந்தான்.
“இப்பத்தான் ஆரம்பிச்சது”, கோஷ் பாபு சொல்லியபடி நெளிந்தார்.
“தோமஸே, இங்கே ..”
அவர் தொடர்ந்து ஏதோ சொல்ல வாயெடுக்க, பெபட்டோ வளைத்து அனுப்பிய பந்தை ஜின்ஹோ என்ற கழுவேறி கோல் அடிக்கிறேன் பேர்வழி என்று கோல் போஸ்டுக்கு அரையடி உயரே தூக்கி அடித்துத் தொலைக்க, நான் ஒரு பச்சை மலையாள வசவை உதிர்த்தேன்.
”அவன் அவசரம் அவனுக்கு..” கோஷ் பாபு சொன்னபடி மறுபடி நெளிந்தார்.
ஆட்டம் தொடங்கி அறுபத்தொண்ணாவது நிமிஷம் என்று டி.வியில் கடியாரம் காட்டிக் கொண்டிருந்தது. பெனால்டி ஏரியா வெளியே இருந்து, சின்ஹோவோ வேறே யாரோ உதைத்துக் கடத்திய பந்து, எதிராளி கோல்கீப்பர் ரவேலியின் நெஞ்சில் பட்டுத் தெறிக்க, என் வீட்டு வாசலில் ஏதோ களேபரமான கூச்சல்.
வாசலுக்கு வந்தேன். தெருக்கோடியில் சின்னதாக ஒரு கூட்டம். என்னவென்று தெரியாவிட்டால் தலை வெடித்து விடும். போனேன்.
கோடி வீட்டு சர்தார்ஜி வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை யாரோ கிளப்பிக் கொண்டு போகப் பார்த்தானாம். ஒரு உதையில் கிளம்புகிற வண்டியா அது? ஏகதேசம் நூறு தடவையாவது தினசரி சர்தாரும் சர்தாரிணியும் மாறி மாறி உதை காணிக்கை வைத்து. வலுவான கால்கள். .. சர்தாரிணிக்கு.. வேண்டாம்.
“அவளுக்கு கால்வலி. நானும் தூங்கலே. வாசலுக்கு வந்து பார்த்தா..”.
சர்தார்ஜி நீட்டி முழக்கிக் கொண்டிருக்க, நான் சகலரையும் சபித்தபடி திரும்ப நடந்தேன். பிரேஸிலோ.. ஸ்வீடனோ.. யாரானாலும் ஐந்து நிமிடம் கழித்து கோல் அடிக்கட்டும். ஒன்றும் குடி முழுகி விடாது.
முழுகித்தான் விட்டது என்பதுபோல் வீட்டில் படுக்கையறைக் கதவைத் திறந்தபடி நெருப்புப் பார்வையோடு ஏலிக்குட்டி.
சாடி, படுக்கையறைக்குள் போய்க் கதவை மூட, அவள் இரைந்தாள்.
‘எங்கே தொலஞ்சு போனீங்க? நான் கண்ணு முழிச்சுப் பார்த்தா அந்தக் கிளவன் பெட் ரூமுக்குள்ளே வந்துட்டுத் திரும்பிப் போய்ட்டிருக்கான். எத்தனை நேரம் பார்த்தானோ.. எவ்வளவு பார்த்தானோ.. நீங்க வாங்கிக் கொடுத்த மாக்சிக்கு இலை தழையை இடுப்பைச் சுத்திக் கட்டிக்கறது கூட மேல்..”
சூடேறிப் போனேன். கால் பந்தும், ரொமாரியோவும், ராயும், பெபட்டோவும், எல்லாத் தீவட்டித் தடியன்களும் நாசமாகப் போகட்டும். அடுப்படியில் கிண்டிக் கிளறி அல்வா செய்கிறவன் எல்லாம் நடு ராத்திரியில் தர்ம தரிசனம் பண்ணவா ஏலிக்குட்டியை நான் கட்டியது?
கதவை உதைத்துக் கொண்டு திறந்து வெளியே வந்தேன்.
சோபாவில் சம்மணம் இட்டு உட்கார்ந்து, ஸ்வீடன் கேப்டனை ரெஃப்ரி வெளியே அனுப்புவதைப் பார்த்துக் கொண்டிருந்த கோஷ் பாபு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.
“என்ன ஆச்சு இங்கே?”
என் குரலின் உஷ்ணம் என் நாக்கையே சுட்டது.
நின்ற கோலத்தில் ஏலிக்குட்டி, வந்த கோலத்தில் நான். கோஷ் பாபு ஏதோ சொல்ல வாயெடுத்து இரண்டு கையையும் எடுத்துக் கும்பிட்டபடி படி இறங்கிப் போனார்.
வீட்டுக்கு மேற்கே திடலோரமாகக் குத்த வைத்து ஐந்து நிமிஷம் போல் அற்ப சங்கை தீர்த்து விட்டுச் சைக்கிளைத் தள்ளியபடி அவர் மெல்ல நடந்துபோக, உள்ளே ரொமாரியோ கோல் போட்ட எண்பதாவது நிமிஷம்.
அந்த செமி ஃபைனலிலும் அப்புறம் இத்தாலிக்கு எதிரான ஃபைனலிலும் பிரேஸில் தான் கெலித்தது. சுவாரசியமில்லாத ஃபைனல். எக்ஸ்ட்ரா நேரமும் முடிந்து, பெனால்ட்டி கிக் சவட்டலில் வந்த கோல்கள்.
ஏலிக்குட்டியும் சேம்சைட் கோல் போட்டாள்.
“நான் தான் தூக்கக் கலக்கத்திலே ஏதோ சொன்னா, உங்க புத்தி எங்கே போனது? மூத்திரம் ஒழிக்க பாத்ரூம் தேடி அவர் வந்திருக்கலாம் இல்லியா?”
இருக்கலாம் தான். உப்பு கூடிய மிளகூட்டான். டம்ளர் டம்ளராகத் தண்ணீரும், அதே தரத்தில் சாயாவும் மாந்தி, நீர் முட்டிய வயசான மனுஷன்.
வீடு தேடி வந்த விருந்தாளிக்கு, சிறுநீர் கழிக்கிறதான அடிப்படை வசதி தேவைப்படுமா என்று கூட விசாரிக்காது பழியும் சுமத்திய துஷ்டன் தோமஸ் வர்க்கீஸான நான்… அப்புறம் எத்தனை தேடியும் கோஷ் பாபு கண்ணில் படவில்லை.
போன வருஷத்து கன்வென்ஷனுக்கு நானும் ஏலிக்குட்டியும் மரமன் போயிருந்தோம். வழக்கமான பட்டியலோடு கோஷ் பாபு சுகமாகவும், சமாதானமாகவும் ஜீவித்திருக்க பிரார்த்தனை செய்தோம். எங்களை மன்னிக்கச் சொல்லியும்.
கொஞ்ச நாளாக ஏலிக்குட்டி வயிற்றில் ஒரு கால்பந்தாட்டக்காரன் வலுவாக உதைத்தபடி கிடக்கிறான்.
மைதானத்தில் இறங்கும்போது அவன் பெயர் ரொபீந்தர் என்பதாக இருக்கலாம்.
இரா.முருகன்
‘இரா.முருகன் கதைகள்’ பெருந்தொகுப்பில் இருந்து – கிழக்கு பதிப்பகம் வெளியீடு
‘