எஞ்சினியரும் எலும்பும்

 

கல்கி பத்தி – டிஜிட்டல் கேண்டீன்-28

ஆட்டோ ரிக்ஷாவும் தொழில்நுட்பமும் புகுந்து புறப்படாத இடம் இல்லை. தெக்கத்தி பூமியில் நுட வைத்தியசாலையும் வடக்குத் தமிழகத்தில் புத்தூர் மாவுக் கட்டுமாக பரம்பரை எலும்பு முறிவு சிகிச்சை சக்கைப்போடு போடுகிறது. இதற்கு சவால் விடும் அலோபதியின் ஆர்த்தோபீடிக் சிகிச்சை முறைக்குத் தற்போது டெக்னானஜியின் துணையும் கிடைத்திருக்கிறது. ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. எஞ்சினியர்கள் செயற்கையாக எலும்பை உருவாக்கி விட்டார்கள்.

முழுக்கப் பழுதடைந்து போனது, புற்று நோயால பாதிக்கப்பட்டது, இயல்பிலேயே குறைபாடு என்று ஏதோ ஒரு காரணத்துக்காக சிலருக்கு எலும்பை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியிருக்கும். நீக்கிய எலும்புக்கு பதிலாக அதன் இடத்தில் செயற்கையாக உருவாக்கிய எலும்பைப் பொருத்த பல வருடங்களாக மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை முழு வெற்றி அடையவில்லை. காரணம், எலும்பு என்னும் அதிசய உறுப்பு கெட்டிப்பட்டு இறுகிப் போன கால்சியம் திடப்பொருளாக நீண்டு மிக மெல்லிய தசைகளிலும் வலிமையான தசைநார்களிலும் முடிவது. கெட்டியான எலும்பைச் செயற்கையாக உருவாக்கினாலும் உடலின் மற்ற பகுதிகளோடு அது இசைவாகக் கலக்க தசைநார்களை உருவாக்க முடியாமல் போகும் என்பதால் செயற்கை எலும்பு இதுவரை டாக்டர் வீட்டு நாய்க்குட்டி விளையாடத்தான் பிரயோஜனமானது. இப்போது தொழில்நுட்பம் முன்னேறியதால் ஆராய்ச்சிப் பட்டறையில் வார்த்தெடுத்த எலும்பை பாதுகாப்பாக மனித உடலில் பதிக்க சாத்தியம் அதிகம்.

மாஞ்செடிக்குப் பதியன் போடுகிற மாதிரி லாவகமாக எலும்பை உருவாக்குகிறார்கள். இதற்கென்றே உண்டாக்கிய பாலிமர் செயற்கை இழையை வைத்து எலும்புத் திசுக்களின் கூடாரம் முதலில் ஏற்படுத்தப்படுகிறது. வளர்திறன் கொண்ட இந்தக் கூடாரத்தின் மேல் ஜெனெக்ஸ்-2 என்ற மரபணு சங்கேதத்தைப் பதிக்கும் பூச்சு ஒன்று படர விடப்படுகிறது. எலும்புத் திசுவின் ஒரு ஓரத்தில் அதிகமாகவும் மற்ற ஓரத்தில் குறைவாகவும் படரும் பூச்சு இது. இதன் காரணமாக, முழுவளர்ச்சி அடையும்போது செயற்கை எலும்பு ஒரு பகுதியில் கெட்டிப்பட்டும் மறுகோடியில் தசைநார் வளர வாய்ப்பாக மென்மையாகவும் உருவெடுக்கிறது. இயற்கையில் மனித உடலில் அமைகிற எல்லா எலும்பும் இந்தத் தன்மை கொண்டவை. எனவே அதே போன்ற குணாதிசயமுள்ள செயற்கை எலும்பு பொருத்தப்படும் போது மனித உடம்பு மறுப்பு சொல்லாமல் அதை உள்ளே ஏற்றுக்கொண்டு, மற்றவையோடு இசைந்து வளர வைக்க வாய்ப்பு அதிகமாகிறது.

இந்தச் செயற்கை எலும்பு வளர்ச்சி ஆராய்ச்சி முழுப்பயன் தர இன்னும் கொஞ்ச நாள் பிடிக்கும். அதுவரை டெக்னாலஜி சும்மா கையைக் காலைக் கட்டிக் கொண்டு உட்காராமல், உலோக எலும்பு வடிவில் உதவி செய்ய ஓடி வருகிறது. உதாரணமாக, எலும்புப் புற்றுநோய் வந்த காரணத்தால் சில சின்னஞ்சிறு குழந்தைகளின் கையிலோ காலிலோ, நோய் பாதித்த எலும்பின் பகுதியை வெட்டி அகற்ற வேண்டிய கொடுமை இத்தனை நாள் இருந்தது. தற்போதோ, வெட்டி எடுத்த எலும்புத் துண்டுக்குப் பதிலாக உலோகத்தில் உருவாக்கிய ப்ரோஸ்தட்டிக் எலும்பு பொருத்த முடியும். குழந்தை வளர வளர, அவ்வப்போது அறுவை சிகிச்சை மூலம் இந்த உலோக எலும்புத் துண்டையும் இழுத்து நீட்டி ‘வளர’ வைக்க முடியும். மிகு ஒலி (ultra sound) மற்றும் விரிவடையும் பிளாஸ்டிக் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உலோக எலும்புத் துண்டை நீட்ட இதுவரை முயற்சி எடுக்கப்பட்டது. இப்படி நீட்டப்பட்ட எலும்பைத் தசையோடு ஒட்ட வைக்க ஸ்பெஷல் சிமிட்டி உபயோகப்படுத்துவது வழக்கம். கடைவாய்ப் பல்லில் குழி விழுந்து பிராணன் போகும் வலி எடுக்கும்போது, பல் டாக்டர் ‘சிமிண்ட்’ வைத்து அடைப்பாரே, அப்படியானது தான் இந்த எலும்பு ஒட்டு சிமிட்டியும். ஆனாலும், எலும்பு சிமிண்ட் சாதுவாக இல்லாது போனது துரதிர்ஷ்டம். இருக்கப்பட்ட திசுக்களை நாசமாக்கி, முதலுக்கே மோசம் செய்யக் கூடியது இது.

சிமிண்டே வேண்டாம் என்று முடிவெடுத்த மருத்துவ வல்லுனர்கள், வேறு ஏதாவது உதவி செய்யமுடியுமா, கொஞ்சம் பாருங்க சார் என்று தொழில்நுட்பப் பங்காளிகளைக் கேட்டார்கள். இழுங்க என்றார்கள் எஞ்சினியர்கள். அதாவது உலோக எலும்பில் அழுத்தத்தைச் செலுத்தி பத்திரமாகப் பிடித்து இழுத்தால் அது நீளலாம். உலோக எலும்புத் துண்டை உருவாக்கும்போதே அதில் இழுக்க இழுக்க நீளும் ஸ்பிரிங் அமைப்பைப் பொருத்தி விடுவதால் இதை நிறைவேற முடிகிறது. செயற்கை எலும்பு பொருத்திய காலில் சின்னஞ்சிறு டெலஸ்கோப்பை நுழைத்து அதன் மூலம் சரியான நீளத்துக்கு இந்த ஸ்பிரிங் எலும்பை இழுத்தால் போதும். குழந்தை வளரவளர அவ்வப்போது எலும்பு நீட்டப்பட்டு, ஆப்பரேஷன் செய்யப்படாத இன்னொரு காலுக்கு சரிசமமாக இந்தக் காலும் வளர்வதால், ஓடவும் சாடவும் பிரச்சனையே இல்லை. இப்படி எலும்பு நீட்டிய ஒரு சிறுவன் அடுத்த நாளே நீச்சல் குளத்தில் டைவ் அடித்து விளையாட வந்துவிட்டதில் அவனைவிட டாக்டர்களுக்குத் தான் சந்தோஷம் அதிகமாம். எலும்பில் வேண்டுமானால் செயற்கை இருக்கலாம். மகிழ்ச்சி எப்போதும் அசல்தான்.

(கடந்த வாரம் கல்கியில் வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன