ஓர் இலக்கிய அல்லது கலைப் படைப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றதற்கு மாற்றும்போது எழும் சவால்கள் சுவாரசியமானவை. நாவலை நாடகமாக்குவது குறித்து இது.
என் ’தியூப்ளே வீதி’ நாவலில் ஒரு அத்தியாயத்தில் வரும் முக்கியமான பத்தி :
//
சுவர்க்கோழிகள் கூக்குரல் எழுப்பி ஊரைக் கூட்ட முற்பட, அமேலி என்னைத் தழுவினாள். அவள் முகத்தில் எதையோ வெற்றி கொண்ட சந்தோஷம் படிந்து பரிசுத்தத்தின் நிரந்தரச் சாயலை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. துடிக்கும் அவள் உதட்டில், என்னைச் சிறையெடுத்த அழகான கண் இமைகளில், சின்னஞ்சிறு மரு முளைவிட்ட கன்னத்தில், வியர்வை துளிக்கும் நெற்றியில் நெருப்பாக முத்தமிட்டேன். நொடிகள் காலமற்ற வெளியில் நிலைத்து நிற்க, ஈர்ப்பும், பயமும், எதிர்பார்ப்பும் கரைந்து கலந்து ஆசை நுரைத்துப் பொங்கி வெள்ளமாகப் பெருக, உடல்களே தோணிகளாக ஓட்டி விளையாடலானோம். கைகள், இது விலக்கபட்டது என்ற பேதம் கடந்து அரவங்களாக எங்கும் நெளிந்து அரவமின்றி ஊர்ந்தன. ‘விளக்கை அணைச்சுடு’ என்றாள் அமீலி. நான் எழ, திரும்பத் தழுவி, இருக்கட்டும் என்றாள். உடுப்புகள் விடை பெற முனைந்த வினாடியில் வெளியே அழைப்பு மணி. பதறி விலகினோம்
//
இந்தக் காட்சியைத் திரைப்படத்துக்கு எழுதும்போது ஓரளவுக்கு எழுத்தைக் காட்சியாக்குவது சாத்தியமே. Angle on என்று குறித்து சில முக்கியமான விஷுவல்கள், ஒற்றை வரி வசனம் என்று நாவலுக்குள்ளே இருந்தே எடுத்துக் காட்சி அமைத்து விடலாம் தான்.
நிச்சயமாக இதை மேடையில் நிகழ்த்த முடியாது. Edinbrough Fringe விழா நிகழ்வாக நான் பார்த்த சில ஆங்கில நாடகங்கள் மேடையில் சகலமானதையும் கிட்டத்தட்ட நிகழ்த்திக் காட்டியதைக் கண்டிருக்கிறேன். நாடகமா அல்லது லைவ் ஷோவா என்று சந்தேகம் வரும் அந்த நிகழ்வுகள் அதிர்ச்சி மதிப்பை அதிகமாக்குகின்றன என்பதன்றி எந்தச் செறிவையும் தருவதில்லை தான்.
நம் மேடையில் மேலே குறிப்பிடும் இந்தப் பகுதியை ஒரே வரியில் சித்தரித்து விட்டு சிரமமின்றி அடுத்த காட்சிக்குப் போகலாம்.
அது ‘மேடையில் மெல்ல இருள் சூழ, திரை’
கொஞ்சம் வித்தியாசமாக முயன்றேன். எப்படியா? எழுதி முடித்துச் சொல்கிறேன்