எமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்

”தீபாவளிக்கு துணி எடுக்க லோன் வாங்க, இருபதம்சத் திட்டத்திலே எந்த அம்சம் சரிப்படும்?”

நிருபர் அக்கறையாக விசாரித்தார்.

“அது ஐந்தம்சத் திட்டத்திலே இல்லே வரும்? குடும்பக் கட்டுப்பாடு”.

கேஷியர் கருப்பையா சீரியஸாகச் சொன்னார்.

“குடும்பத்தைக் கட்டுப்படுத்தினா, லோனே தேவை இல்லையே”, என்றார் மேனேஜர்.

எமர்ஜென்சி அறிவித்தபின் வரும் இரண்டாவது தீபாவளி இது.

சின்னக் கரடி என்று பெயர் கொண்ட சிங்கம்புலி சைக்கிளில் வந்து பேங்க் எதிரே கால் ஊன்றி நின்றபடி மெகஃபோனில் கூவினார்:

“வங்கிகள் வாங்கிகளாக இருக்கக் கூடாது, வழங்கிகளாக இருக்க வேண்டும்”.

“வேண்டும், வேண்டும்”. கூடவே சைக்கிள்களில் வந்த நாலைந்து பேர் சேர்ந்து கூவிக் கைதட்டினார்கள். எல்லோர் சைக்கிளிலும் பிரதமர் படம் ஒட்டிய தட்டி, ஹேண்டில்பாரில் சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது.

“ஜனநாயகம் தழைக்க வேண்டும்”. சத்தம் குறைத்து அடுத்த கூவல்.

“வேண்டும், வேண்டும்”, லேசான கைதட்டல் ஒலி.

“எல்லா அதிகாரமும் மக்களுக்கே”, அவர் வாய்க்குள் சொல்லிக் கொண்டார். யாரும் ஆதரித்து முழங்கவில்லை.

சிங்கம்புலி பால்பண்ணையில் கணக்கு எழுதி ஓய்வு பெற்றவர். அவ்வப்போது ஏதாவது கூட்டம் என்று கிளம்பி விடுவார்.

”‘பிரசார சைக்கிள் பேரணி தம்பி இது’

என்னிடம் அந்த ஐந்து சைக்கிள் பேரணியைக் காட்டிச் சொன்னார். நல்லதுங்க என்றேன். அது எமெர்ஜென்சி எதிர்ப்பு சைக்கிள் பேரணி என்று நாம் பொருள் கொள்ள வேண்டும் என்பது சிங்கம்புலியின் விருப்பம். அதற்கு பேரணியைப் பார்த்துக் கொண்டு நிற்கும் நண்பர்கள் ஒரு தடவை உரக்கக் கைதட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

நான் மறக்காமல் கைதட்டியதோடு இல்லாமல் தட்டுங்க சார் என்று மேனேஜரையும் விஷயம் புரியாமல் கைதட்ட வைத்ததில் சிங்கம்புலிக்கு ஒரே சந்தேஷம்.

”நாளை சாயந்திரம் கண்டனி நாவன்னா ஆனா துக்க தினம் மீட்டிங் இருக்கு வந்துடுங்க”, என்றபடி கிளம்பிப் போனார் அவர்.

ஒன்றை மட்டும் சொல்லியே ஆக வேண்டும். சிங்கம்புலிக்கும் ஜெபர்சனுக்கும் அவ்வளவாக ஒத்துப் போனதில்லை. இவர் காவி அணிந்து வலம் போனால், அவர் சிவப்புத் துண்டு போட்டு இடம் போவார். காவியும் சிவப்பும் சந்தித்துக் கொள்வதும் அபூர்வம் தான். எமர்ஜென்சி நேரத்தில் அது அறவே இல்லை.

இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை சிங்கம்புலியும் இன்னும் சில நண்பர்களும் பட்டையாக வீபுதி, குங்குமம் அணிந்து காவித் துண்டோடு துக்கதினம் கொண்டாடுவார்கள். மறைந்தவரின் ஆத்மா நல்ல கதிக்குப் போகப் பிரார்த்தனை செய்வார்கள்.

யாராவது எங்கேயாவது சமீபத்தில் இறந்திருந்தால் அவர்களுக்கான துக்கதினம் என்று எளிய லாஜிக் இதன் பின்னணியில் உண்டு.

ஆகஸ்டில் பின்னணிப் பாடகர் முகேஷ் இறந்ததற்காகத் துக்கம் அனுஷ்டித்தார்கள். செப்டம்பரில், மராத்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பில் தமிழர்களிடையே பிரபலமானவருமான வி.எஸ்,கண்டேகர் மறைவுக்கு அடுத்த துக்கம் காத்தார்கள்.

இதெல்லாம் ஒரு சாக்கு தான் என்றும் அவர்கள் துக்கம் கொண்டாடியது இன்னும் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் எமர்ஜென்சிக்காகத்தான் என்றும் அவர்கள் அவ்வப்போது அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு காதில் கிசுகிசுப்பார்கள்.

காண்டேகர் துக்க தினக் கூட்டம் என்று அறிவித்து விவேகானந்தா ஆரம்பப் பள்ளியில் ஏழெட்டு பெஞ்சுகளை இழுத்துப் போட்டு மூன்றாம் கிளாஸ், நான்காம் வகுப்புக்கு நடுவே இருந்த ஸ்கிரீன்களை நகர்த்தி விட்டு இடம் ஏற்பாடு செய்து கூட்டம் நடத்தினார் சிங்கம்புலி. கூட்டத்தில் எத்தனை பேர் காண்டேகர் கதைகளைப் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

“போத்தி, நீங்க காண்டேகர் பத்தி பேசுங்க முதல்லே”. அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். எனக்கு காண்டேகர் என்ற பெயர் மட்டும்தான் தெரியும். அவர் எழுதிய எந்த நாவலும் படித்ததில்லை. இதைச் சொன்னேன்.

“அதுனாலே என்ன, துக்கம் பொதுவானதுதானே, எல்லோருக்கும் புரியும். நீங்க பேசுங்க. கூட்டுப் பிரார்த்தனை செய்யறபோது நீங்க ப்ரேயரைப் படிங்க, அது போதும்”, என்றார் சிங்கம்புலி.

“இன்னிக்கு மூக்குக் கண்ணாடி போட்டுட்டு வரலே, போட்டுக்கிட்டு வந்து இன்னொரு நாள் படிச்சு துக்கம் அனுஷ்டிக்கறேன்”, என்று சொல்லிவிட்டேன்.

அவர் சம்மதித்து, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பொத்தாம்பொதுவாக காண்டேகரின் எழுத்து எப்படி ஆத்மாவைத் தொடுகிறது என்று விலாவாரியாக விவரித்துச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

நடுநடுவே நம் துக்கத்துக்கும் துயரத்துக்கும் யார் காரணம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று முழங்கினார். அது மறைமுகமான எமர்ஜென்சி எதிர்ப்பு என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டுமாம். அவரும். அப்போதெல்லாம் கை தட்டச் சொல்லி எனக்குக் கண்காட்டினார். .

சோனியான என் கைதட்டு சத்தம் போதாமல் சிங்கம்புலி உடனே பாட்டுப் படிப்பதில் இறங்கினார்.

“மகான் காண்டேகர் பெயர் சொல்லுவோம், மாண்புறு சிந்தனை வழிசெல்லுவோம்”.

இந்தப் பாட்டை அவர் கென்னடி, கோல்வால்கர், டால்ஸ்டாய், பட்டினத்தார், தாயுமானவர் என்று பலருக்கும் நினைவு அஞ்சலி செலுத்தும்போது பெயரை மட்டும் அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி மாற்றி சத்தம் போட்டு பாடிப் பழக்கப்படுத்தியிருக்கிறார்.

அவர் குரல் காத்திரமாக இருப்பதால் யார் பெயரில் இப்படி இரங்கல் பாட்டு பாடினாலும் முடிக்கும்போது பலத்த கைதட்டு வரும்.

“கண்ணை மூடிட்டுக் கேட்டா அப்படியே சீயாழி கோவிந்தராஜன் அசரீரி பாடற மாதிரி இருக்கு”.

என் பின்னால் இருந்த ஜவுளிக்கடை காசியாப்பிள்ளை நெகிழ்ந்து போய் என் தோளில் தட்டினார். பின்னால் திரும்பிப் பார்க்க, கண்களில் கண்ணீர் திரள, போயிட்டாரே என்று கையை அசைத்துக் காட்டினார். காண்டேகர் மட்டும் பார்த்திருந்தால் ஏன் உயிரை விட்டோம் என்று அவரும் காசியாப்பிள்ளையோடு கூடச் சேர்ந்து ஒரு பாட்டம் அழுதிருப்பார்.

முகேஷ் துக்கதினத்தன்று ’மகான் முகேஷின் பெயர் சொல்லுவோம்’, ’சிற்பி முகேஷ் பெயர் சொல்லும் பொழுதிலே’ என்று துக்க கானங்களைப் பாடி அடுத்து இன்னும் கூடுதல் துக்க அனுஷ்டானம் என்று எமர்ஜென்சி பாட்டை எல்லாம் வரிசையாகப் பாட ஆரம்பித்தார் சிங்கம்புலி.

சேர்ந்திசை என்று சர்க்கார் திட்டத்துக்கும் எமர்ஜென்சிக்கும் ஆதரவாகத் தாளம் மாற்றிப் போட்டு இசையமைத்து கூட்டமாக இளைஞர்களும் இளம் கன்னியரும் பாடிய பாடல்கள் அவை. தினம் கவர்மெண்ட் ரேடியோவில் அவற்றைச் சதா கேட்டுக் கேட்டு அலுத்துப் போனாலும் வக்கீல் குமாஸ்தா நாராயணனுக்கு மலமிளக்கி மருந்து அவைதான்.

“யூரல் மலைகளின் சாரல் மழையில்”ன்னு உச்ச ஸ்தாயிலே பாடறதைக் கேட்டா எங்கே எங்கேன்னு வயிறு கலகலன்னு வழி விட்டுடுது தம்பி”.

நாராயணன் வாங்கிய புது டிரான்சிஸ்டர் அவருக்கு பர்கோலாக்ஸ் ஆகத்தான் பெரும்பாலும் பயன்பட்டது.

‘இது தாமசவர கமனா கூடப் பாடும். ஆனா எனக்கு கேட்க பொறுமை இல்லே” என்றார் என்னிடம். தாமசவர கமனா இல்லேங்க என்றேன். அது தெலுங்கு, உங்களுக்குத் தெரியாது தம்பி என்று என்னை அடக்கி விட்டார்.

முகேஷ் நினைவுக் கூட்டத்தில் நானும் பாடுவேன் என்று உட்கார்ந்து விட்டார். நல்ல வேளையாக இருபதம்சத் திட்டப் பாடல்களை சிங்கம்புலி இசைக்கத் தொடங்கியதும் வயிற்றைக் கையால் பிசைந்தபடி அவசரமாக எழுந்து போனார் நாராயணன். எமர்ஜென்சி கீதங்களுக்கு என்ன எல்லாம் உபயோகம்!

ஆபீசுக்கு எதிரே டாக்டர் வீட்டு வாசலில் சத்தமான லட்சுமி வெடி வெடிக்க ஆரம்பித்தபோதுதான் தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

நிருபர் ’அடுத்த வாரம் அரசாங்க தீபாவளி கொண்டாட்டம், கலெக்டர் ஊருக்கு வருகிறார்’ என்று சுபச் செய்தி அறிவித்தார். கலெக்டர் என்ன தான் ஆருயிர் நண்பன் என்றாலும், வந்து போகும்போது அந்த லோன், இந்த லோன் என்று புள்ளிவிவரம் தரச் சொல்லிக் கழுத்தறுப்பார்கள்.

எல்லா லோனும் ஏறுமுகமாக எப்போதும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத எமர்ஜென்சி நிபந்தனை.

ஆபீஸ் வேலையோடு இந்த அரசாங்க வேலையும் செய்வது கட்டாயம். தீபாவளியன்றைக்கு மீட்டிங்க் வைத்து வீட்டில் இருக்க முடியாமல் செய்யப் போகிறார்களே என்று கவலையோடு மேனேஜரைப் பார்த்தேன்.

அவரும் அதே நினைப்பு மனதில் ஓடவோ என்னமோ, ‘நான் தீபாவளிக்கு முந்தின நாள் சகலை வீட்டுக்கு விருந்தாடப் போறேன். பிள்ளையார்பட்டி பயணம்’ என்று என்னை தொந்தரவு படுத்த வேண்டாம் என்று மறைமுகமாகத் தெரிவித்தார்.

நானும் ஊருக்குக் கிளம்பலாமா என்று யோசித்தபோது நிருபர் சொன்னார்:

“தீபாவளிக்கு ரெண்டு நாள் முந்தியே அரசாங்கக் கொண்டாட்டம். கலெக்டர் பேச்சு, ரிபோர்ட், விவாதம் எல்லாம் வேணாம். முடிஞ்சா கலை நிகழ்ச்சி, அனாதைக் குழந்தைகளுக்கு உடை, ஸ்வீட் அன்பளிப்பு, அவங்களோடு கூட பட்டாசு வெடிக்கறது இப்படி நடத்தணும்னு சொல்லிட்டார்”.

நான் மோகனகிருஷ்ணனை நன்றியோடு நினைத்துக் கொண்டேன்.

ஆபீசுக்கு கிழக்கில் இருக்கும் வீடுகளிலும் தீபம் ஏற்றி வைத்து கனமான ஐப்பசி இருட்டை அழகாக விலக்கிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. தெரு முழுக்க விளக்கு வெளிச்சம் பரவ, பேங்க் மட்டும் மூடப்பட்டு இருட்டில் கிடந்தது. குடியிருக்கும் தெருவில் பேங்க் வைத்திருப்பதன் அபத்தத்தைத் தான் நாங்கள் உணர்ந்து கொண்டிருந்தோம். யாருக்காக வங்கியோ அவர்கள் நடுவில் அது நடப்பது நல்லது தானே என்று இன்னொரு மனசு சொன்னது.

மேனேஜர் மாடியேறிப் போய்விட்டார். நிருபர் நேற்று ஏதோ விருந்தில் ஜிலேபி சாப்பிட்ட வைபவத்தை ரசனையோடு சொல்லிக் கொண்டு போக, எதையோ செய்யாமல் மறந்து போனதாகத் தோன்றத் தொடங்கியது.

ஆபீஸ் வேலையில் ஏதாவது பாக்கி இருக்கிறதா? இல்லை. ஜெனரல் லெட்ஜர் ஒரே ஸ்ட்ரோக்கில் டாலி ஆகி இரண்டு மணி நேரமாகிறது. ஏதாவது வாங்க நினைத்து மறந்து விட்டதா? எது மறந்தாலும் மதுரை போகும்போது நினைவு வந்து விடுவது வாடிக்கை. நாளை சனிக்கிழமை என்பதால் பகலுக்கு மேல் அங்கே தான். வேறே என்ன?

சட்டென்று நினைவு வந்தது. கல்லூரிப் பேராசிரியர் கணேசபாண்டியனின் புத்தகம்.

அது உடனடியாகத் தேவைப்படுகிறது. அவருடைய புத்தகம் தான் அது. எனக்குப் படிக்கக் கொடுத்திருந்தார். ப்ரன்ஸ் கஃப்கா எழுதிய குறுநாவல்களின் தொகுப்பு. மெடமார்ஃபசிஸ் என்ற பிரபலமான குறுநாவல் அதில் ஒன்று. தூங்கி எழுந்த க்ரிகர் சமோஸா ஒரு பெரிய பூச்சியாக மாறும் சர்ரியலிசக் கதை அது.

நீங்க படிக்க வேண்டிய எழுத்தாளர்களிலே ஒருத்தர் கஃப்கா என்று சொல்லி என்னிடம் கொடுத்திருந்தார். ஆபீசுக்கு வந்தபோது பணம் வாங்கக் காத்திருக்கும் நேரத்தில் படிக்க என்று எப்போதும் ஏதாவது புத்தகத்தைக் கொண்டு வருவார் அவர். சிரத்தையாகப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு அவரிடம் விசாரிக்க, கஃப்கா கதைத் தொகுதி என்னிடம்.

நான் வாங்கி எடுத்துப்போய் மெடமார்ஃபசிஸ் மட்டும் முழுவதாகப் படித்தேன். லோன் அப்ளிகேஷன் பார்க்கும் மும்முரத்தில் மற்றதைப் படிக்க நேரம் கிடைக்கவில்லை. இந்த இரண்டு மாதத்தில் மட்டும் நான்கு லோன் மேளாக்கள் என்பதால் ஓடிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம்.

சரி, கணேசபாண்டியன் கேஷ் வாங்கக் காத்திருக்கும்போது படிக்கிற மாதிரி நாம் லோன் அப்ளிகேஷனோடு மேளாவுக்குப் போகிறபோது கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தால் முடித்து விடலாமே. பையத் தின்னால் பனையும் தின்னாம் என்று பழஞ்சொல் இருக்கிறதே. இப்படி நினைப்போடு கஃப்காவைக் கூடவே எடுத்துப் போனேன்.

போன இடங்களில் வேறு கூடுதல் வேலை ஏதாவது மாட்டியது. ’ஜவந்திப் பூ மாலை வேண்டாம் அமைச்சருக்கு மல்லிகை மாலை போடலாம். போய் மாற்றிக்கிட்டு வாங்க’. இப்படி ஒரு கோரிக்கை எனக்கு விடப்பட்டது. அமைச்சர் என்ன கல்யாணம் முடிந்து விருந்தாடவா வருகிறார் மல்லிகைப் பூவைக் கையில் சுற்றிக்கொண்டு டான்ஸ் பார்க்கக் கிளம்பிவிட்டாரா? சர்க்கார் விழாவில் மல்லிகை மணத்தால் சரிப்படுமா?

நான் வல்லடியாகப் பேச அதுவும் சரிதான் என்று ஆர்.டி.ஓ விட்டுக் கொடுத்தார். ஜவ்வந்தி மாலையோடு அமைச்சர் உட்கார்ந்திருந்ததைப் பார்க்க சாதனை செய்து முடித்த பெருமை எனக்கு. அசையாமல் கண்ணையும் மூடியபடி உட்கார்ந்திருந்தது உயிரில்லாத மாதிரித் தெரிந்தாலும்,, அந்த மஞ்சள் மாலை அழகு தான்.

கஃப்கா எல்லாம் அப்புறம் படிக்கலாம். இது அல்லவோ முக்கியம் என்று தினசரிக் கடமைகளில் மூழ்கியது தொடர்ந்தது.

ஜெபர்சன் அப்படியான ஒரு பரபரப்பான மாலைப் பொழுதில் என்னைப் பார்க்க வந்தபோது, இது என்ன மாதிரி புத்தகம் தோழர் என்று கேட்டார். சொன்னேன்.

“என்னது, மனுஷன் பூச்சி ஆகிடுவானா? விட்டலாச்சாரியார் சினிமாவிலே சகலமானவங்களையும் ஆடு, மாடு , கழுதைன்னு இண்டர்வெல்லுக்கு முந்தி மாறுவாங்க. குட்டிச்சாத்தான் வேலை இங்கிலீஷிலும் உண்டா என்ன?”

நான் அவரை உட்கார்த்தி வைத்து பத்து நிமிடம் சர்ரியலிசம் என்றால் என்ன என்று வகுப்பு எடுத்தேன்.

”சர்ரியலிசம், பேண்டஸி, மேஜிக்கல் ரியலிசம் இப்படியானவை இலக்கிய உத்திகள் என்று அறியப்படும்” என்று ஆரம்பித்ததுமே அவர் உறங்கிப் போய்விட்டார்.

ஆனாலும் தளராமல், என் கையில் இருந்த கஃப்காவை வாங்கிக் கொண்டார்.

“நான் ஒரு வாட்டி இதை படிச்சுப் பார்க்கறேன். அது என்ன சர்ரியலிசம்னு தெரியுதான்னு வந்து சொல்லறேன். கம்யூனிசமே இன்னும் முழுக்கப் பிடிபடலே. இந்த இசம் எல்லாம் எப்போ தெரிஞ்சு வச்சுப்பேனோ”, என்றார்.

அவர் மெடமார்ஃபஸிஸ் புத்தகத்தோடு பெருமிதமாக நடந்து வெங்கு பரோட்டா கடைக்குப் போக, அங்கே சந்நியாசி கம்யூனிஸ்ட் ஒருத்தரைப் பற்றிப் பேச்சு நடந்ததாக அப்புறம் தெரிவித்தார்.

சம்ஸ்கிருதத்தில் ஈடுபாடுள்ள சந்நியாசியாகத் துறவு பூண்டு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குப் போனவராம் அவர். கேரளத்தில் திருத்தல்வாதிகளுக்குத் தலைவர் என்று தோழர் சொல்ல, வெங்கு வெகுண்டான் :

“அது எப்படி எங்களைத் திருத்தல்வாதின்னு சொல்லலாம். உங்க எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை போட்டு எடுத்துக்கிட்டது நாங்க தான். திருத்தி இருந்தா உங்க உசிரை இல்லே எடுத்து விட்டிருக்கணும்”.

இப்படி ஆக்ரோஷமாகச் சொன்னானாம் வெங்கு. சாப்பிடாமலேயே பரோட்டா கடையிலிருந்து வெளியே போகத் திரும்பியதாகவும் அதற்குள் சண்டை எல்லாம் தீர்ந்து திரும்ப தோழர் தோழர் என்று நட்பு பழையபடி எட்டிப் பார்த்ததாகவும் சொன்னார் ஜெபர்சன்.

சண்டை மும்முரத்தில் புத்தகத்தை பரோட்டா ஸ்டாலில் ஏதோ ஒரு டேபிளில் விட்டுவிட்டு வேட்டியைத் திருத்திக் கட்டிக் கொண்டிருக்கிறார் அவர். சமாதானமானபோது புத்தகத்தைக் காணோமாம்.

அப்புறம் தெரிய வந்தது, சாப்பிட வந்த யாரோ அதை எடுத்துப் போய் திரும்பிக் கொண்டு வந்து கொடுக்கச் சோம்பல் பட்டு காந்தி வீதியில் நாலு தெருக்குழாய் சேர்ந்து இருக்கும் பொது இடத்தில் ஓரமாக இருந்த உலர்ந்த மேடையில் வைத்து விட்டுப் போய்விட்டார்கள்.

அந்தப் புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்த ரிக்ஷாக்காரர் ராஜு இதைச் சொன்னார். நான் மறுபடி ஜெபர்சனுக்கு அதைக் கொடுத்தேன்.

அப்படி கஃப்கா ஜெபர்சன் வாத்தியாரோடு நாட்டுக்கோட்டைக்கு சவாரி விட்டு இரண்டு மாதமாகி விட்டது. அதற்கு அப்புறம் ஒரு வாரம் போல தினமும் அவரிடம் எத்தனை பக்கம் கஃப்கா படித்தீங்க என்று நான் கேட்பதும் இதோ, புரட்சி வந்ததும் ஆரம்பிச்சுட வேண்டியதுதான், சுபாஷ் சந்திரபோஸ் திரும்பி வந்ததும் படிக்கப் போறேன் என்று ஏசுவின் மறு வரவு தவிர மற்ற எல்லா எதிர்பார்ப்பையும் அவர் சொல்வதும் வழக்கமாகப் போனது.

மறு வரவு மேல் அவருக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. ”மறுமுறை ஏசு வரலாம். ஆனால் இங்கே இருக்கற அநியாயத்தைத் தாங்க முடியாம திரும்பிப் போயிடுவார்”, என்பார் வாத்தியார். எப்படியோ கஃப்கா அவருக்கு வசப்படாமல் நாட்கள் நகர, நானும் விசாரிப்பதை நிறுத்தி வேறு வேலையில் கவனம் செலுத்தப் போனேன்.

இரண்டு நாள் முன் ஆபீசில் இருக்கும்போது புரபசர் கணேசபாண்டியன் தேடி வந்தார். மதுரையில் ஒரு சிம்போசியம் அடுத்த வாரம் இருக்கிறதாம். இலக்கியக் கூறுகள் பற்றியாம் அது. அது என்ன விஷயம் என்று கேட்க ஆசைதான் ஆனால் ஆபீஸ் நேரத்தில் இலக்கியம் பேச, அதுவும் எமர்ஜென்சி காலத்தில் அப்படிப் பொழுது போக்க மனம் ஒத்துழைக்கவில்லை.

விஷயம் என்ன என்றால், புரபசர் சார் அந்தக் கூட்டத்தில் கஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் பற்றி எல்லாம் பேச இருக்கிறாராம். மெடமார்பசிஸ் புத்தகம் இல்லாமல் நிகழ்த்த வேண்டிய உரையைத் தயாரிக்க முடியாதுதான். சோதனைக்கு, ஜெபர்சன் ஒரு வாரமாக வரவேயில்லை.

கணேசபாண்டியன் இன்னொரு முறை தேடிக்கொண்டு வருவதற்குள் ஜெபர்சனிடம் இருந்து புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதைத் தான் மறந்து போனேன். இப்போது நினைவு வர, உடனே போகத் தூண்டுதல்.

“அப்புறம் நாட்டு நடப்பு எப்படி?” நிருபர் கேட்டார். அவருக்குத் தெரியாமல் என்ன நடந்திருக்கப் போகிறது?

“காந்தி ஜெயந்தியன்னிக்கு காந்தியோட சீடர் கிருபளானியை காந்தி சமாதியிலே வச்சு அரஸ்ட் பண்ணினதைப் பற்றி என்ன நினைக்கறீங்க?”

“அது எதுக்கு போத்தி சார். நல்லதா வேறே ஏதாவது சொல்லுங்க”

“நடக்கட்டும், சொல்றேன்.. இப்ப என்ன செஞ்சுட்டிருக்கீங்க?”

அவர் கடலைக்கடையில் வாங்கிய காகிதக் கூம்பிலிருந்து சுவாரசியமாக நிலக்கடலை எடுத்துக் கொறித்துக் கொண்டிருந்தார். “தீபாவளி ஜவுளி எடுக்கப் போகலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்” என்றபடி கூம்பை என்னிடம் நீட்டினார் அவர்.

“அதுக்கு லோன் வேணும்னீங்களே”.

“அது சும்மா மேனேஜரை கலாட்டா பண்ணறதுக்கு. நான் வருஷம் பிறந்ததுமே தீபாவளி, பொங்கல் செலவுக்காக ரிகரிங் டெபாசிட்லே சேமிக்க ஆரம்பிச்சுடுவேன்” என்றார் அந்த விவரமான மனுஷர்.

“அப்போ உங்களுக்குக் கவலை இல்லே. இன்னிக்கு துணி எடுக்காம, நாளைக்கே எடுத்துக்குங்க. இப்போ என்னோட வாங்க”.

பெருமாள் கோவில் தெருவில் போகும்போது புகையும் பட்டாசு வாடையுமாக முன்பனிக்கால ராத்திரி கவிய ஆரம்பித்ததும் ஒரு அழகாகத்தான் இருந்தது. அந்த வேதியியல் பொருள் எல்லாம் சுவாசிக்கக் கூடாதவை என்று டாக்டர் சொல்வார். ஆனால் புதுத்துணி, முறுக்கு சுட எடுத்த சுட்ட எண்ணெய், தீபாவளி மலர் மணத்தோடு பட்டாசு வாடையும் சேர்ந்தது தானே தீபாவளி வாசனை?

ரிடையர்டு ஹெட்மாஸ்டர் தோத்தாத்திரி ஐயங்கார் குழந்தை மாதிரி குதூகலத்தோடு சரவெடி கொளுத்திப் போட்டு ஓடி வந்தது ஸ்கூட்டரை நோக்கி. ப்ரேக் பிடித்து நிறுத்தினேன். அவரை நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு நாளும் இத்தனை மகிழ்ச்சியோடு பார்த்ததில்லை.

“என்னப்பா, ஆபீஸ் வேலையா கிளம்பிட்டியா?” அவர் கையில் வெடி கொளுத்த வைத்திருந்த மட்டிப்பால் ஊதுவத்தியை என் புறங்கையில் சுடும் தூரத்தில் பிடித்தபடி பொக்கைவாய்ச் சிரிப்பைச் சிந்தினார்.

காந்திவீதியில் திரும்ப, ஒரே இரைச்சலாக வர்த்தக ஒலிபரப்பு. அது இந்த ஊருக்கு மட்டுமே உண்டான சிறப்பு. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னால் ஊரில் இருக்கும் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் எல்லாரும் திரௌபதை அம்மன் கோவிலில் ஆளுக்கொரு கும்பிடு போட்டுவிட்டு ஒரு கூட்டம் போடுவார்கள்.

தீபாவளிக்காக லோக்கல் கடைகள், டீக்கடை, ஹோட்டல், ஜவுளிக்கடை, பேன்ஸி ஸ்டோர் இப்படி ஒரு கடை விடாமல் விளம்பரம் செய்யக் கட்டணம் வசூலிப்பார்கள். மொத்தம் ஆறு சவுண்ட் சர்வீஸ்கள் ஊரில் உண்டு. காலை ஒன்பது மணியில் இருந்து ஏதாவது சவுண்ட் சர்வீஸில் இருந்து ராத்திரி ஒன்பது வரை விளம்பரங்களை சினிமா கானங்களோடு சிலோன் ரேடியோ ஸ்டைலில் ஒலிபரப்புவார்கள்.

ஒவ்வொருவருக்கும் ரெண்டு மணி நேரம் தினசரி ஒலிபரப்பக் கிடைக்கும். அது திங்களன்று காலை ஒன்பதிலிருந்து பதினொன்று என்றால் செவ்வாயன்று வேறு நேரமாக இருக்கும்.

இந்தத் தொடர் ஒலிபரப்புக்காக விளம்பரம் வாங்குவது, எழுதுவது, ஒலிபரப்புவது என்று சகலமானதற்கும் ஒற்றுமையாக வேலை பிரித்துக் கொள்ளத்தான் திரௌபதை அம்மன் கோவில் மீட்டிங். விளம்பரக் கட்டணம் வசூலானதையும் தீபாவளி இனாமாகக் கடைகள் தரும் பணத்தையும் பிரித்துக் கொள்ளவும் இந்தக் கூட்டம் உதவும்.

கடைகள் மட்டுமில்லாமல், நுட வைத்தியசாலை, பசுமாடு கன்று ஈன காளையை அடுத்து விடும் சேவை, எலக்ட்ரீஷியன் இப்படியான இனங்களிலும் விளம்பரங்கள் காதில் விழும்.

இப்போது ராஜா சவுண்ட் சர்வீஸ் உச்ச சத்தத்தில் வெங்கடேசா காப்பித்தூள் நயம் பீப்ரி கொட்டை வறுத்து அரைத்து என்று சாங்கோபாங்கமாக காப்பிப்பொடி விற்கும் கடைக்கு விளம்பரம் தந்து கொண்டிருக்கிறது.

நாலைந்து விளம்பரம் ஒரு கொத்தாக ஒலிபரப்பி முடிந்து ஏதாவது சினிமாப்பாட்டு வரும். போன வருடம் எலந்தப் பழம் தினசரி நூறு தடவை கேட்கக் கிடைத்ததாக ஆபீசில் பழநி சொன்னார். இந்த வருடமும் அதைப் போட்டால் கேட்கத் தடை இல்லை என்றார் அவர்.

திடீரென்று எமர்ஜென்சி பாட்டு ராஜா சவுண்ட் சர்வீஸில் இருந்து ஒலிபரப்பானது.

” கள்ளக் கடத்தல் முதலை எல்லாம் உள்ளே பதுங்குறான்”.

கடைத்தெருவின் சத்தத்தை மீறி கவர்மெண்ட் சங்கீதம் ஒலித்தது.

தீபாவளி, பொங்கல் எல்லாம் இனிமேல் புறங்கழுத்தில் சர்க்கார் உஷ்ண மூச்சு விட்டபடி பார்த்துக் கொண்டிருக்கத்தான் நடக்கும் போல.

”பத்து வருசக் கணக்கை எழுதிப்
பட்டியல் நீட்டுகிறோம்”

எனக்கு அந்தப் பாட்டைக் கேட்கவே உடம்பே பற்றி எரிகிற மாதிரி இருந்தது. எதையும் கவனிக்காமல் வண்டியை ஓட்டிப் போனேன்.

நிருபரைப் பின்னால் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுவதில் ஒரு சௌகரியம். அசந்து மறந்து கூட ஒரு வினாடி கண்மூட விட மாட்டார். ஏதாவது ஊர்க்கதை பேசிக்கொண்டு வருவார்.

வண்டி ஊர் எல்லையைக் கடந்து நாட்டுக்கோட்டைக்குப் போகும் பாதையில் திரும்ப, அவர் என் காதுப்பக்கம் குனிந்து கௌரிஸ்வரா மெடிக்கல்ஸில் கோடாப்ரீன் வாங்கப் போனதைச் சொல்லிக் கொண்டு வந்தார் –

“ரெண்டே ரெண்டு வாங்கிட்டு வான்னு பையனை அனுப்பிச்சா ரெண்டு அட்டை வாங்கிட்டு வந்து நிக்கறான். அத்தனை வச்சுக்கிட்டு என்ன பண்ண? சரி, இன்னும் ஒரு வருஷம் ராவணன் மாதிரி எட்டு தலை இருந்தாலும் தலைவலி, கொடச்சல்னு வந்தா சமாளிச்சு கடத்திடலாம்னு வச்சுக்குங்க. அட, இவன் தான் சின்னப்பய கேக்கறான் விஷயம் தெரியாம. மருந்துக்கடை வச்சிருக்கற அளகேசன் செட்டியாருக்கு தெரிய வேணாமா? என்னமோ போங்க”. ராவணின் பாக்கி ரெண்டு தலை எங்கே போச்சு என்று தெரியவில்லை. கேட்டால் அனுமார் வாலாக அடுத்த கதை வந்துவிடும்.

வண்டியைக் கப்பி ரோட்டில் திருப்பினேன். மேடு பள்ளத்தோடு சாலை போட்ட சுவடே இல்லாமல், இன்னும் ரெண்டு கிலோமீட்டர் இப்படித்தான் ரோடு இருக்கும்.

“மாவட்ட கல்வி அதிகாரி பெண்ஜாதிக்கு நாட்டு வைத்தியர் கிட்டே தான் பெரும்பாடு நிக்க மருந்து வாங்கிக் கொடுத்தேன். வைத்தியன் நம்ம ஆளுங்க யாரும் இல்லே பாத்துக்குங்க. ஆந்திராவிலே இருந்து கிளம்பி வருஷம் முச்சூடும் இந்தியா பூரா கையிலே கோலும் மருந்துமா வர்றவங்க. பார்த்திருப்பீங்களே. சல்லிசு விலை. ஆனா நல்லா கேக்கும். அந்தம்மா தீண்டலே நின்னு போச்சு பாத்துக்குங்க”.

“ஐயே, அதை பாக்க வேறே செய்யணுமாம் தேனம்மே”

ஊருக்குச் சற்று வெளியே, அடைத்து வைத்த ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த இளம் பெண்கள் அவர் சொன்னதைக் கேட்டு அடக்க முடியாமல் கலகலவென்று சிரித்தபோது தர்மசங்கடமாகப் போனது. நகைக்கும் இளம்பெண்கள் வந்த ரம்மியமான இரவுப் பொழுது அது.

”ரிபோர்ட்டர் சார், கொஞ்சம் பேசாம வாங்க” என்று வேண்டுகோள் விடுக்க, அவர் வெள்ளைப் படுதல் மருந்து என்று அடுத்து ஆரம்பிப்பதற்கு முன் நல்ல வேளையாக ஜெபர்சன் வாத்தியார் குடியிருந்த தெரு வந்துவிட்டது. வண்டியை நிறுத்தி இறங்கினோம்.

”இங்கே எல்லாம் தீபாவளி கொண்டாட்டமே இல்லே பாருங்க” என்றார் பெருங்குரலில் நிருபர்.

“அப்படி இல்லே, இன்னும் ஏழெட்டு நாள் இருக்கே தீபாவளிக்கு. ஊர்னு இருந்தா பண்டிகை கொண்டாடாம இருப்பாங்களா என்ன?”

நான் கேட்டபடி எந்த வீடென்று தெரியாமல் நின்றேன். ராத்திரி ஏழரைக்கே எல்லா வீட்டிலும் கதவடைத்திருந்தது. தெருவில் அலைந்து திரிந்த சோனியான நாய்கள் உக்கிரமாகக் குரைக்கத் தொடங்கின. ஸ்கூட்டரைப் பார்த்துத்தான் அதிக பட்சம் குரைப்பு இருந்தது தெரிந்தது.

நிருபர் கையில் எப்போதும் சுமந்து போகும் லெதர் பையை அச்சுறுத்தும்படியாக வீசி ஓஓவென்று முழங்க, நாலு கால் பாய்ச்சலில் அவை ஓடி மறைந்தன.

”லெதர் பையைப் பார்த்தாலே பயம் அதுங்களுக்கு”.

நிருபர் பெருமையாகச் சொன்னார். உள்ளே என்ன வச்சிருக்கீங்க என்று கேட்க நினைத்தேன். வேண்டாம். அதற்குள் பிரதமர் படம் இருப்பதாகச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. நான் என்னை அறியாமல் ஏதாவது எமர்ஜென்சி எதிர்ப்பாகச் சொல்லி வைப்பேன். வம்பே வேண்டாம். வாய்க்குப் பூட்டுப் போட்டேன்.

நாங்கள் நின்ற வீட்டு வாசல்களில் ஒன்றில் மட்டும் மாடத்தில் சிலுவை வடிவத்தில் கலர் பல்ப் மின்னி மின்னி அணைந்து கொண்டிருந்தது. இது ஜெபர்சன் வாத்தியார் வீடாக இருக்கலாம்.

நாவல் 1975
இரா.முருகன்
கிழக்கு பதிப்பக வெளியீடாக வர உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன