நேற்று வந்த கடிதம் ஒன்று
சில கடிதங்கள் எவ்வளவு personal ஆக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் கலாப்ரியா, கல்யாண்ஜி வண்ணதாசன், அவருடைய தந்தையார் பெரியவர் தி.க.சி, முன்றில் மா.அரங்கநாதன் எழுதிய கடிதங்களும், ஆசான் சுஜாதாவின் மின்னஞ்சல், குறுங்கடிதங்களும் இந்த வகையில் வருபவை.
கலாப்ரியாவிடமிருந்து நேற்று வந்த கடிதம் இது.
அவர் சொன்னது என் மகன் விஷயத்தில் பலித்திருக்கிறது. மற்றதைக் காலம் தான் சொல்ல வேணும்.
இரா.மு
——————————————————————————————————–
dear murukan
இன்னும் பத்து மாதத்தில் பணி ஒய்வு பெறப் போகும் நேரத்தில் வங்கியில் அதிகாரி பதவிக்கு இண்டர் வியூ வந்தது. கிடைச்ச வரை லபம் போய்த்தான் பார்ப்போமே என்று பழைய ‘வங்கிப் பயிற்சிக் கல்லூரியின் புத்தகக்ங்கள் சின்னச் சின்ன கை வெளியீடுகள்hand outs)களை யெல்லாம் தேடிப் பிடித்த போது.. 92-ல் வெளிவ்ந்த IOBIAN ஐ ஓ பி யின் வீட்டிதழ்(home magazine) ஒன்று கிடைத்தது. இது எதற்கு இங்கே இருக்கிறது என்ற படி புரட்டினேன். பதினாறு வருஷத்துக்கு முந்திய R.Murugan, Officer CPPD., எழுதிய கதை ஒன்று வெளி வந்திருந்தது… வெறுங்காவல் என்ற கதை ஆஃபிஸில் நன்றாகப் படிக்க முடியவில்லை என்று வீட்டிற்கு எடுத்து வந்தது.. அப்படியே மேசை அலமாரியில் ஒளிந்திருக்கிறது…
நேர்முகத் தேர்வாவது ஒன்றாவது..கதையில் மூழ்கி விட்டேன்..இப்படித்தான் நடக்கும்… வீட்டை ஒதுங்க வைக்கிறேன் பேர்வழி என்று (இந்த வார்த்தைகளெல்லாம் அந்தக் கால குமுதம் விகடன் ஸ்டைல் கோமதி சாமிநாதன்..போன்ற எழுத்து ஸ்டைல்..) உட்கார்ந்தால் ஏதாவது நல்ல கடிதம் கிடைக்கும் அல்லது புத்த்கம் கிடைக்கும்.. அவ்வளவுதான் அதைப் படிப்பதிலேயே நேரம் கழிந்து விடும் அப்புறம் திரும்பவும் குப்பைகளை அப்படியே அடைச்சு வச்சிர வேண்டியதுதான்..(குப்பையா பொக்கிஷம்ல்லா அது..
சமீபத்தில் வீட்டிற்கு வந்த என் மருமகன் சொன்னார் மாமா நீங்க ஒருமணி நேரம் தள்ளீப் போயிருங்க இதைஎல்லாம் கழிச்சுக் கட்டி பரணில் ஒன்றுமே இல்லாமல் செஞ்சுடறேன் என்றார். கிட்டத்தட்ட முப்பத்தி எட்டு வருஷ சேகரிப்பை
போகிப் பண்டிகை சமாச்சாரமாக்கறதா.. ஐயா நீங்க தள்ளிப் போங்க என்று சொல்வதற்குள் மகளே சொல்லி விட்டாள்..ஐயோ அப்புறம் சாம்சன் & டிலைலா கதை மாதிரி எங்க அப்பா பலத்தி இழந்துடப் போறாரு என்றாள்)
.முருகன் கதை யும் பதினாறு வருஷத்துக்கு முந்திய “பால முருகன்” படமும்.. சூப்பரா இருந்துச்சு.(இது இன்றைய வாசகர் கடித பாஷை). கதையில் வருகிற ஃப்லாட் வீட்டிற்கு நானும் ரவி சுப்ரமணியனும் போன போது . முருகனின் பையன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான் வீடிற்குள். அவனுக்கு முழுமையான கிரிக்கெட் செட் வாங்கிக் கொடுத்திருந்தார் அவன் வீட்டையே அதகளப் படுத்திக் கொண்டிருந்தான் முருகன் கண்டு கொள்ளவே இல்லை…எனக்கு முருகனும் ரவியும் பேசுவது கவனத்திலெயே இல்லை..பையனையே பார்த்துக் கொண்டிருந்தேன். ..அவ்வளவு சுதந்திரம் நம்ம வீட்டில் கொடுப்பமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..அவன் இப்பொது பெரிய பையனாக வளர்ந்திருப்பான் ஒரு முதிர்ந்த கிரிக்கெட் வீரனாய் மாறி இருப்பான்.. முருகன் சிறந்த எழுத்தாளனாகியிருப்பது மாதிரி…
கலாப்ரியா
****************************************
என் அன்புக்குரிய க்லாப்ரியா
மழை பெய்து ஓய்ந்த ஒரு காலைப் பொழுதில் உங்கள் கடிதத்தைப் படிக்கிறேன். மழை மனதில் பிறப்பித்த குளிர்ச்சி தொடர்கிறது. ஈ-மெயிலையும் இதமான இண்லண்ட் லெட்டர் வாசனையோடு எழுதக் கூடியவர் நீங்கள், நீங்கதான்.
கல்யாண்ஜி ஈ மெயில் அட்ரெஸ் இருந்தா அவரோடயும் இப்படிப் பேசலாம். பாருங்க, முகவரி மட்டும் போதாது, ஈமெயிலும் இருந்தாத்தான் கடிதம் எழுதக் கை போகுது. போஸ்ட் ஆபீஸ் பக்கம் போய் பல வருஷமாச்சு.
சென்னை வந்தா வீட்டுக்கு வாங்க. வீடு மாறிட்டேன். மொபைல்லே கூப்பிடுங்க, வழி சொல்றேன். வாயிலே இருக்கு வழிங்கறீங்களா? அதுவும் சரிதான்.
உங்க கடிதத்தை உரிமையோடு என் இணையத் தளத்தில் பிரசுரம் செஞ்சிருக்கேன்.
என் மகன் இப்போ தமிழ்நாடு மாநிலக் குழுவில் விளையாடறான். சீக்கிரம் ரஞ்சி, 20-20 எல்லாம் ஆடணும்னு கனவு. இஞ்சினியரிங் முதல் வருடம் படிக்கிறான். .
உங்களுக்கு மருமகன் வந்த நல்ல சேதி இப்பத்தான் முதல் முறையா உங்க கடிதம் மூலம் தெரிஞ்சுது. ரொமப ரொம்ப ரொம்ப சந்தோஷம் கலாப்ரியா. வண்ணதாசன் மக கல்யாண நேரத்திலே அவரையும் தி.க.சி சாரையும் வீட்டுலே பார்த்து (மேற்கு மாம்பலம்) ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தென். ஆச்சு, பத்து வ்ருஷத்துக்கு முந்திய சங்கதி. அப்புறம் நானும் வண்ணதாசனும் சேர்ந்து சென்னை ரேடியோவிலே ஒரு பேட்டி. அதுக்கும் முன்பும், அப்புறமும், பேட்டியின் போதும் அவர் ரொம்ப சுவாரசியமா, அந்நியோன்யமாப் பேசிட்டு இருந்தார். வண்ணதாசன் பேசி அப்பத்தான் பார்த்தேன்!
அன்புடன்
இரா.மு
****************************************
அன்பு மிக்க முருகன்,
வணக்கம்.நீங்க சொன்ன மாதிரி இந்த குறுஞ்செய்திகளின் உலகில் இன்லண்ட் லெட்டர் வாசனை அபூர்வம்தான்…ஆறு நாட்களுக்குப் பின் காலையில் நடை பழகிக் கொண்டிருந்த போது உங்கள் கைப்பேசி..
உங்களுடன் பேசி முடித்ததும், யாரோ வழிப்போக்கர்கள் காரை நிறுத்தி எங்கேயாவது அருகே காலைக் கடனை கழிக்க வழியிருக்கா என்று கேட்டார்கள்.. சற்றுச் சேய்மையில் இருந்த காசு கொடுத்து உபயோகிக்கும் சுகாதார வளாகத்திற்கு ஆற்றுப் படுத்தினேன்…
போய்த்திரும்பும் போது காரில் வந்த ஒரு பெண்’ வளாகம் அருகே நின்றபடி நன்றியோடு பார்த்தாள்,,பாரம் இனிதே கழிந்த ஆசுவாசம் முகத்தில் புன்னகையை பரவ விட்டிருந்தது…எல்லாமே ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் நடந்து விட்டது…
எனக்கே அந்த ஆற்றுப் படுத்தும் யோசனை திடீரென்று உதித்தது.தான்.உங்கள் அழைப்பும் இந்த நிகழ்வும் மனதை இன்னும் லேசாக்கியது….
சாலையில் நடந்து விட்டு தெருவுக்குள் நுழைந்ததும்..தெருவின் சற்றே பெரிய விவசாயியின்(marginal farmer ?) வீட்டு முன்னால்.. பத்துப் பேர் போல நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்…காதில் விழுந்தது,”சார்வாள் குளத்துக்கு தண்ணி வருதாமே நாத்தங்காலை உழுது போட்டிருவோமான்னு யோசனை கேக்க வந்தோம்…”
இதுவும் குறுஞ்செய்தி போல சிறிய அகராதிக்குள் அடங்கி விடுகிற கிராம வாழ்வுதான். ஆனால் எவ்வளவு விஸ்தாரமான அர்த்தங்கள் கொண்டது…பிரமிளின் கவிதை நினைவுக்கு வருகிறது
“மழை வராதா
என்றேங்கி
அண்ணாந்த கண்கள்
கண்டு கொண்டன
வானம்
எல்லை இல்லாதது”
அன்புடன்
கலாப்ரியா
(18.10.2008 சனிக்கிழமை)
**********************************************
வண்ணதாசன் கடிதம் (18.10.2008 சனிக்கிழமை)
அன்புமிக்க முருகன்,
வணக்கம்.
குட்டப்பன் கார்னர் ஷாப்பில்தானே நானும் சாயா குடிக்கிறேன்.
கவனிக்கவில்லையா? உங்களுக்கு பேச்சு சுவாரஸ்யம். நான்
கடைக்கு வருவது கூட சாயா குடிக்க அல்ல. உங்கள் பேச்சுக்
கேட்கத்தான்.
அன்புடன்,
கல்யாணி.சி.
நன்றி கல்யாணி அண்ணன். இரா.மு