பிரபஞ்சன் காலமானார்.
புதுவை எனக்கு இனி நான் நடமாடிய தியூப்ளே வீதியாகவும், ரங்கப்பிள்ளை தெருவாகவும், படித்த தாகூர் கலைக் கல்லூரியாகவும், நடந்த குயில் தோப்பாகவும், சைக்கிள் ஓட்டிப் போன சித்தாந்தசாமி திருக்கோவிலாகவும், மணக்குள விநாயகர் கோவிலாகவும், சான் பால் தேவாலயமாகவும் மட்டும் இருக்கும். அன்பு நண்பர் பிரபஞ்சன் இனி அங்கே இல்லை. அவர் நினைவுகள் மட்டும் மிஞ்சும்.
கடைசியாக அவரை ஞானக்கூத்தன் இறுதிச் சடங்கு நேரத்தில் சந்தித்தேன். அடைத்த ஒரு வீட்டுக் கதவுக்கு வெளியே உட்கார்ந்து அதுவும் இதுவும் பேசிக் கொண்டிருந்தபோது புதுவை நகரம் பேச்சில் தாராளமாக வந்து போனது. புதுவையின் அற்புதமான கதைக்காரர் அவர்.
நான் கல்லூரியில் படிக்கும்போது கண்ணதாசன் இலக்கிய இதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. பார்க்கவும், படிக்கவும் நல்ல இதழ் அது. அமுதோனின் லே அவுட் இன்றைக்கு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அதில் வந்த பிரபஞ்சனின் ‘மீன்’ சிறுகதையைப் படித்து விட்டுத்தான் நான் அவர் எழுத்துக்கு ரசிகனானேன். பின் நண்பரானது வெகுநாள் கழித்து.
வானம் வசப்படும் வாசிப்பில் ஏற்படுத்திய ஆனந்த களிப்பு – excitement – வெகு சில எழுத்துகளைப் படிக்கும்போது மட்டும் அபூர்வமாக வருவது.
எனக்கு ஒரு ரசிகர் விருப்பம் உண்டு. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1940-களில் பிறந்த இரண்டு சிறப்பு மிக்க எழுத்தாளர்கள் உண்டு – புதுவைத் தமிழரான பிரபஞ்சனும், மாஹே மலையாளியான முகுந்தனும். வானம் வசப்படும், மானுடம் வெல்லும் என்று பிரபஞ்சனின் சாதனை நாவல் பட்டியல் சுவடு பதித்துப் போகும் போது, மய்யழிப் புழயுடெ தீரத்தில், தெய்வத்தின்றெ விக்ருதிகள் என்று முகுந்தனின் நாவல் அடையாளம் நீளும்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்கும்! புதுவையிலும், மாஹேயிலும், பிரான்ஸிலும் நிகழும் அந்த நாவலின் அத்தியாயங்கள் நிகழுமிடத்தைப் பொறுத்து தமிழிலோ மலையாளத்திலோ எழுதப்படும். எழுதி முடித்தபிறகு தமிழ் அத்தியாயங்கள் மலையாளத்திலும், மலையாள அத்தியாயங்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்படும். இரண்டு மொழிகளுக்கும் ஒரு புது நாவல் கிடைக்கும்.
இதை பிரபஞ்சனிடம் பேசினேன். நடக்குமா என்கிற மாதிரி புன்சிரித்தார். சந்தித்து திரும்பவும் அதைப் பற்றிப் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நினைப்பு மட்டும் தான் இனி.
பிரபஞ்சனுக்கு அஞ்சலி. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.