இது அதிவேகத் தகவல் பரிமாற்றங்களின் நூற்றாண்டு. வாசிப்பு வசப்பட்ட வாசகர்கள் பெருகும் நூற்றாண்டு இது. இந்த நூற்றாண்டின் வாசகர்கள் புத்தகம் வாங்குவதை வீண் செலவாகக் கருதாதவர்கள். நல்ல நூல்களைத் தேடிப் படிக்க, அவை பற்றிய தகவல்களைப் பரிமாற, சமூக ஊடகங்களைத் தீவிரமாகக் கைக்கொள்கிற வாசகர் வட்டம் இது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் வாசகர்களுக்கு புத்தகங்கள் தாம் பிரச்சனை. குடும்ப உறவால் பிணைக்கப்பட்ட இருபது முப்பது பேர் சேர்ந்து வாழ்ந்த கூட்டுக் குடும்பங்கள் போன நூற்றாண்டின் தொடக்கத்தில் வழக்கொழிந்து போக, இப்போது கணவன், மனைவி, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் இடம் பெறும் சின்னஞ்சிறு குடும்பங்கள் பெருகி வளர்கின்றன. வசிப்பிடம், நாலு மாடிக் கட்டடங்களில் இருந்து, பலமாடிக் குடியிருப்புகளில், எழுநூறு சதுர அடி – இரண்டு படுக்கை அறை இடத்தில் அமைந்த ஃப்ளாட்கள் ஆகக் குறுகி விட்டது. புத்தகம் வாங்கி, படித்த பிறகு சேர்த்து வைத்து, போற்றிப் பாதுகாக்க இடம் இல்லை. இதுதான் பெரும்பாலும் மத்திய வகுப்பு வாசகர்களின் முக்கிய பிரச்சனை.
அதிகாலையில் இருந்து இரவு வெகு நேரம் வரை தொழில், பணி நிமித்தம் ஓடித் திரிந்து உழைக்கும் சமுதாயம் இது. புத்தகங்களை விரும்பினாலும் தினம் நேரம் ஒதுக்கி, கையோடு எடுத்துப் போய் படிக்க நேரம் கிடைக்காதவர்கள் இன்றைய தலைமுறையினர். வாசகர்கள் எதிர்ப்படும் மற்றொரு பிரச்சனை இது.
வாசகர்களின் பிரச்சனைகள் இவை என்றால், வாசகர்களாக இருந்து, நாமும் எழுதலாமே என்று வாசிப்பின் மூலம் படைப்பாக்க உந்துதல் பெற்று எழுது வரும் அறிமுக எழுத்தாளர்களின் பிரச்சனை, அறிமுகமாவது தான். பதிப்பாளர்கள் புதுமுக எழுத்தாளர்களின் நூல்களைப் பிரசுரிக்கத் தயங்குகிறார்கள். பதிப்பித்தால் விற்குமா என்ற அடிப்படை சந்தை வணிக, பொருளாதாரப் பிரச்சனை இது. பதிப்பிக்காமல் அறிமுக எழுத்தாளர் எப்படி அனுபவப்பட்ட எழுத்தாளர் ஆக முடியும்?
அறிமுக எழுத்தாளர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை என்றால், எழுதிப் பெயர் வாங்கிய எழுத்தாளர்களுக்கு இன்னொரு மாதிரி பிரச்சனை. எழுதி முடித்த புத்தகத்தை எந்தப் பதிப்பாளர் விரைவில் வெளிவருமாறு பிரசுரிப்பார்? எழுதிப் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கான ராயல்டி பணம் எவ்வளவு இன்னும் கிடைக்க வேண்டி, நிலுவையில் இருக்கிறது? எப்போது கிடைக்கும்? இல்லை, கிடைக்கவே கிடைக்காதா? தமிழ்ச் சூழலில் கடைசிக் கேள்வி தான் பரவலானது.
வாசகர்கள், அறிமுக எழுத்தாளர்கள், அனுபவப்பட்ட எழுத்தாளர்கள் என்ற இந்த மூன்று தரப்பினருக்குமான பிரச்சனைகளைக் களைவதில் எழுத்தாளரே பதிப்பிக்கும் கிண்டில் மின்நூல் பதிப்பு விடை காண்கிறது.
எழுதியதை .docx கோப்பாக அமேசன் தளத்தில் இட்டு எளிய செயல்முறை மூலம் அதற்கான மேலட்டையை வடிவமைத்து, விலை வைத்து, எழுத்தாளரே வெளியிட்டு விடலாம். எழுத எடுக்கும் நேரம் தான் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி. பதிப்பிக்க ஆகக் குறைவான நேரம் தான் செலவாகும். அமேசன் தளத்தில் கிண்டில் புத்தகம் வெளி வந்ததும், விற்பனைக்கு உடனே உலகெங்கும் அமேசன் மூலம் கிடைப்பதாக வழி செய்தால், விற்க விற்க, எழுத்தாளரின் இந்திய வங்கிக் கணக்கில் ராயல்டி வரவு தொடங்கி விடும்.
அமேசனில் மின்நூல் பதிப்பிக்க வேண்டிய விவரங்கள் அமேசன் இணையத் தளத்தில் உண்டு. எளிய கையேடுகளாகவும் இவை இணையத்தில் கிடைக்கும் – பெரும்பாலும் இலவசமாகத் தரவிறக்கிக் கொண்டு படிக்கலாம்.
எடுத்துக்காட்டாக அமேசன் தளத்தில்:
விற்றால் மட்டும் இல்லை ராயல்டி. புத்தகத்தை அமேசனில் ‘இரவல் வாங்கி’ வாசிக்கிற வாசகர்கள் நிறைய உண்டு. இப்படியான வாசிப்பும், படித்த, பக்கக் கணக்கை வைத்து எழுத்தாளருக்கு ராயல்டியை சம்பாதித்துத் தரும்.
இன்னொரு நம்ப முடியாத, ஆனால் உண்மைச் செய்தி – அதிக பட்சம் 70% வரை ராயல்டி கிடைக்க வாய்ப்பு உண்டு.
வேண்டுமானால் அச்சுப் புத்தகமாகவும் வெளியிட்டுக் கொள்ள உதவி செய்ய அமேசனை நாடலாம்.
மின்நூல் என்பதால் ஆயிரம் புத்தகங்களை ஒரு ப்ளாஷ் ட்ரைவிலோ, மடிக் கணினியிலோ, மொபைல் தொலைபேசியிலோ சேமித்து வைத்து வேண்டும்போது படிக்கலாம். இதற்கான கிண்டில் மென்பொருள் இலவசமாகக் கிட்டுகிறது.
கிண்டில் மின்பதிப்பு, எழுதி அனுபவப்பட்ட எழுத்தாளர்களுக்கும், எழுத ஆர்வமாக இருக்கும் நல்வாசகர் – அறிமுக எழுத்தாளர் நண்பர்களுக்கும், வாசக அன்பர்களுக்கும் பெரும்பயன் விளைவிப்பதாகும்.
என் நூல்கள் அச்சுப் பதிப்பாகவும், கிண்டில் மின்நூல் பதிப்பாகவும் என் பதிப்பாளரால் வெளியிடப்படுகின்றன. தற்போது, நான் எழுதிய, மிகப் பெரிய 800 பக்கம் கான்வாஸில் கதை நடக்கும் என் ‘விஸ்வரூபம்’ நாவலை – அரசூர் புதினங்கள் வரிசையில் இரண்டாவது இது – ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இது நிறைவேறியதும் முதலில் இது கிண்டில் மின்நூலாகும்.
நூல் பதிப்பிக்க, படிக்க, கிண்டிலுக்கு வருக.
அமேசன் KDP Pen to Publish 2018’ போட்டி
********************************************
எழுத்தாளர் நண்பர்களுக்கும், எழுதுவதில் ஆர்வம் மிக்க வாசக அன்பர்களுக்கும் என் வேண்டுகோள்.
அமேசன் KDP Pen to Publish 2018’ போட்டியில் கலந்து கொண்டு, உங்களுடைய இதுவரை பிரசுரமாகாத படைப்புகளைப் பிரசுரிக்க அன்புடன் கோருகிறேன். தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளுக்குமாக ரூ. பதினைந்து லட்சத்துக்கு மேற்பட்ட பரிசுகள் காத்திருக்கின்றன.
இந்தச் சுட்டியில் சொடுக்கி விவரம் அறிக
தமிழ்ச் சுட்டி
எழுத்து வலிமையுள்ள படைப்புகள் கலந்து கொள்ளட்டும்.
தகுதி படைத்தவை வெற்றி பெறட்டும்.