முழிபெயர்ப்பு

முழிபெயர்ப்பு
இரா.முருகன்

’மொழிபெயர்ப்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது. மூலப் படைப்பு தான் ஏதோ வீம்பு பிடித்து அதோடு இணங்க மறுக்கிறது’ என்று ஸ்பானிஷ் மொழி இலக்கிய மேதை போர்ஹே கிண்டலாகச் சொன்னாராம். அவருக்கு மொழி பெயர்ப்பாளர்கள் மேல் என்ன கோபமோ. ஆனாலும், எல்லோரும் ஒத்துக் கொள்வது ஒன்று உண்டு – நல்ல மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் காணாமல் போகிறார். மோசமான மொழிபெயர்ப்பில் மூல நூலாசிரியர் காணாமல் போய் விடுகிறார்.

நான் மொழிபெயர்ப்புப் புத்தகம் ஒன்றைப் படித்து அந்த அனுபவத்தில் முற்றிலும் கரைந்து போனது, நாற்பது வருடம் முன் நடந்தது. அது, சோவியத் யூனியலிருந்து மிர் பதிப்பகம் வெளியிட்ட இயற்பியல் நூலான, யா.பெரெல்மான் எழுதிய ‘பொழுதுபோக்கு பௌதிகம்’ படித்தபோதுதான். கெட்டியான கருப்பு அட்டை, தரமான வழவழப்புக் காகிதம், படங்கள், இவற்றோடு சோவியத் புத்தகங்களுக்கே உரிய அச்சு மை வாடை. இதெல்லாம் கிடக்கட்டும். கதை கூட இல்லை அது. பாடப் புத்தகத்தில் இடம்பெறும் பிசிக்ஸ் தான். ஆனால் எழுதிய, மொழிபெயர்த்த நேர்த்தியில் கதையை விட சுவாரசியமாகிப் போய் புத்தகத்தைக் கீழே வைக்காமல் படிக்க வைத்தது. விலையும் ஆகக் குறைவு. மூன்றே ரூபாய்.

‘பொழுதுபோக்கு பௌதிகம்’ படித்து இத்தனை வருடம் ஆனாலும், இன்னும் அதன் பகுதிகள் மனதில் பசுமையாக நினைவு இருக்கின்றன. படித்த கதையும் கவிதையும் கூட அவ்வளவு ஆழமாக மனதில் பதியவில்லை. 1936-இல் ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கியவர் காலஞ்சென்ற பூரணம் விசுவநாதனின் சகோதரர் பூ.சோமசுந்தரம்.

ரஷ்யப் புத்தகம் இப்படி மொழிபெயர்ப்பில் மனம் கவர்ந்தால், அவசர மொழிபெயர்ப்பாக வேறு இந்திய மொழியில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான கதைப் புத்தகங்கள் எரிச்சலூட்டிய அனுபவமும் உண்டு. வேற்று மொழியும் சரியாகப் பரிச்சயம் இல்லாமல், புனைவும் புரியாமல், தமிழும் தடவலாக வரும் மொழிபெயர்ப்புகள் எடுத்த எடுப்பிலேயே அந்நியத் தன்மையை அனுபவப்படுத்தி, மேலே படித்துப் போக முடியாமல் செய்து விடும். அது மொழிபெயர்ப்பு இல்லை. பாடாய்ப் படுத்தும் முழிபெயர்ப்பு.

நல்ல மொழிபெயர்ப்பை வாசிக்கும் அனுபவத்திற்குச் சற்றும் குறையாத சுவாரசியம் கொண்டது மொழிபெயர்க்கும் அனுபவமும். அண்மையில் மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான என்.எஸ்.மாதவன் எழுதிய நாவலான ’லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள்’ நாவலைத் தமிழில் ’பீரங்கிப் பாடல்கள்’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்தேன். புத்தலை இலக்கியம். மெல்ல அசைந்தும் வேகமாகப் பாய்ந்தும் கதையிலிருந்து சமையல் குறிப்புக்குத் தாவியும், சவிட்டு நாடகமாகவும், குந்தன் லான் சைகால் பாடிய பழைய இந்திப் படப் பாடலாக உருமாறியும் பிரவகிக்கும் மொழிநடை.

ஜாக்கிரதையாக மொழிபெயர்த்தபோது எடுத்த எடுப்பிலேயே ‘அச்சுக்குத்து பிள்ளமார் மச்சுவாவில் வந்நு’ என்று கொச்சி, எரணாகுளத்துக் கடலும் காயலும் மணத்தது. ஒரு வழியாக அது ‘அம்மை குத்துகிறவர்கள் படகில் வந்தார்கள்’ ஆனது. நூலை முழுவதுமாக தமிழுக்கு மடைமாற்ற, நான் படித்த மலையாளப் புத்தகங்கள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, சினிமா மலையாளம் கைகொடுத்தது. மாதவனும் உதவினார்.

என்றாலும் ஓர் அடிப்படைச் சிக்கல். பிரான்சிஸ் பரஞ்ஞு. மலையாளத்தில் இருந்து இதை எப்படித் தமிழாக்க? பிரான்சிஸ் சொன்னான் என்றா பிரான்சிஸ் சொன்னார் என்றா? இப்படி நூறு கதாபாத்திரங்கள். இவர்களில் யாரை மரியாதையோடு அர் விகுதி தந்து குறிப்பிட வேண்டும்? ஒரு வழியாக அதைச் செய்து முடித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது பழைய மலையாளச் சொற்களைத் தமிழாக்கும் அடுத்த சோதனை. கிருஷ்ண துளசி என்றால் என்ன? மாதவனையே சரண்டைந்தேன். ”அது ஒண்ணும் இல்லே சார், நம்ம புதினா தான்”, என்றார் அவர். கதைக்கு நடுவில் தம் பிரியாணி சேர்மானங்கள், செய்முறை எல்லாம் தமிழில் மொழி மாற்றிச் சமையல் குறிப்பையும் ருசித்து மொழிபெயர்க்க, பிரியாணி சாப்பிட்ட மனநிறைவு.

அவ்வப்போது தம் பிரியாணியாகவும், பால் பாயசமாகவும் மொழிபெயர்க்க நல்ல பிறமொழிப் புத்தகங்களை அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அருளட்டும்.

அந்திமழை பிப்ரவரி 2019 இதழில் பிரசுரமானது

குறுநல்வாடை 3

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன