மதுரை – ‘வாழ்ந்து போதீரே’ நாவலில்
விடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும், காற்றில் அடர்த்தியாகக் கலந்த, இன்னும் தொடுக்கப்படாத ஜவ்வந்திப் பூக்களின் குளிர்ந்த நறுமணமும், ஒற்றைக் கெட்டாகப் பிடித்து உயர்த்திக் குளிர்ந்த தண்ணீர் தெளித்துத் தாழ வைக்கும் கொடிக்கால் வெற்றிலையின் கல்யாண வைபவ மணமும், பூக்கூடைகளில் இருந்து எடுக்கப்படக் காத்திருக்கும் கரும்பச்சை மரிக்கொழுந்து வாசனையும், குதிரை வண்டிகளில் விரித்த துணிக்குக் கீழே சன்னமாகப் பரத்திய காய்ந்த புல்லின் கூர்மையான வாடையும், குதிரைச் சாணம் தெறித்துச் சிதறி உலர்ந்த தெருக்களின் புதுத் தார் வாடையும், புழுதி அடங்கக் குளிரக் குளிர நீர் தெளித்துத் தூசி அடங்கும் வீட்டு வாசல் மண்ணின் நெகிழ வைக்கும் கந்தமுமாகக் காலை நேர மதுரை கொச்சு தெரிசாவையும் முசாபரையும் வரவேற்றது.
ஒன்றும் இரண்டுமாக வாழைத் தாரும் இலையும் வாழைப் பூவும் ஏற்றி வருகிற டெம்போ வேன்களும், கருவாடு ஏற்றிப் போகும் காளைமாட்டு வண்டிகளும் கப்பி ரோடுகளில் தட்டுப்பட ஆரம்பித்த நேரம். பூவந்தி பூவந்தி என்று சொல்லியபடி பஸ் ஏஜண்டுகள் இடுப்பில் அழுந்தச் சொறிந்து கொண்டு சுற்றி வர, கசங்கிய காக்கி உடுப்பு அணிந்த க்ரூ கட் தலைமுடி டிரைவர்கள் டீக்கடைகளில் அரைச் செம்பு தண்ணீரில் வாய் கொப்பளித்து, சூடான டீக்காகக் காத்திருக்கிறார்கள். அம்பாசடர் கார்களில் எர்ஸ்கின் பொது மருத்துவ மனையில் வந்து இறங்கும் டாக்டர்கள் பில்டர் காப்பி வாங்க ஆர்டர்லிகளைத் துரத்தியபடி ஆஸ்பத்திரி மாடிப் படி ஏறுகிறார்கள். அவசரமாகக் கண் விழித்து ஆஸ்பத்திரி மாடி வளைவில் ஓடிக் குதிக்கும் குரங்குக் குட்டியை பாதுகாப்பான இடத்துக்குக் கை சுண்டி விரட்டியபடி பதனீர் வியாபாரிகள் சத்தமிடுகிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து குதிரை வண்டிகளிலும் சைக்கிள் ரிக்ஷாக்களிலும் வெளிவரும் வடக்கத்திய யாத்திரீகர்கள் உரக்க இந்தி பேசினால் சகலருக்கும் புரியும் என்ற நினைப்பில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். மாசி வீதிகளில் தங்கும் இடம் தேடி அவர்களைச் சுமந்து போகும் வண்டிகள் நகர்கின்றன. சௌராஷ்டிர பக்த ஜன சபை என்று பதாகை உயர்த்திப் பிடித்து கெச்சலான, சி்வந்த இரண்டு நபர்கள் முன்னால் நடக்க, மிருதங்கத்தை ஓங்கித் தட்டியபடி ஒரு பெண்ணும், கைத்தாளம் போட்டபடி சிவத்த இன்னும் பல ஆண்கள், பெண்களும் வேகமாக நடந்தபடி திருப்புகழ் சந்தம் அலைஅலையாக உயரப் பாடிப் போகிறார்கள்.
அமுதம் ஊறு சொலாகிய தோகையர்
பொருளுளாரை எனாணையுனா ணையென
இந்துஸ்தானி சங்கீதம் போல் இல்லாமல் இங்கிலீஷ் நோட் போல விரசாக வார்த்தைக்கு வார்த்தை ஏறி இறங்கிக் குதித்துப் போகிற சங்கீதம் கொச்சு தெரிசாவின் மனதைக் கௌவி இழுக்கிறது. இது என்ன மொழி? இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்? எப்படி இதை இயற்றினார்கள்? எப்படி இந்தப் பாடலைப் பிழையில்லாமல் பாடக் கற்றுக் கொண்டார்கள்?
கொச்சு தெரிசா மெய்மறந்து பார்த்து நிற்க அவர்கள் பதாகையும், குதித்து வரும் தாளமும் கைத்தட்டும் ஓங்கிய குரல்களுமாகக் கடந்து போனார்கள்.
உள்ளே போய் வந்து பிரகாரம் சுற்றும் நேரத்தில் பொலபொலவென்று பொழுது புலர்ந்திருந்தது. மேற்குக் கோபுர வாசலுக்கு அருகே தாம்புக் கயற்றில் கட்டியிருந்த நரியைப் பார்த்துச் சற்றே நின்றார்கள் அவர்கள்.
ஒரு நரியை இவ்வளவு அருகே பார்த்தது இங்கே தான் என்றாள் கொச்சு தெரிசா. கால்டர்டேலில் திடிரென்று குன்றுப் பிரதேசத்தில் இருந்து கிளம்பி வந்து, கடைத்தெருவில் குறுக்கே ஓடி அங்காடிக்குள் புகுந்து பிக்விக் சாப்பாட்டுக் கடை வாசலோடு வெளியேறும் நரி எங்கே போய் மறையும் என்று யாருக்கும் தெரியாது. அதில் சிரத்தை எடுத்துக் கொள்வதும் இல்லை.
இந்தத் தேடுதலும் நரிப் பாய்ச்சலாகப் போய்விடுமோ? முசாபர் சொல்கிறபடி, எதற்காகத் தேட வேணும்? எதைத் தேட வேணும்? ஏன்?
கொச்சு தெரிசாவுக்குத் தெரியவில்லை. ஆனால் மனதுக்குள் ஏதோ, யாரோ, ஒன்று பலவானவர்களாக ஆணும் பெண்ணுமாக அவ்வப்போது குரலாக, காட்சியாக வெளிப்பட்டு அவளை இங்கே சுற்றிவர வைக்கிற ஒரு சிறு கூட்டமோ, கனவில் பிரம்மாண்டமாக வெளிப்பட்டு ஓலைச் சிலுவைகளை உயர்த்திப் பிடித்தபடி கல்லறைத் திருநாளுக்குப் போகிற ஊர்வலமோ, மேல்தோல் சிவத்த இந்தப் பாட்டுக் குழுவின் உயிரை உருக்கும் சங்கீதமோ ஏதோ ஒன்று அல்லது எல்லாமும் அவளைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.
நரி முகத்தில் முழிச்சா நாள் நல்லா இருக்கும்.
பக்கத்தில் வந்த வயதான ஒருவர் சுத்தமான இந்தியில் கொச்சு தெரிசாவிடம் சொல்லிக் கடந்து போனார். அப்படியானால் அந்த விலங்கை விலைக்கு வாங்கிப் போக முடியுமா என்று முசாபர் ஆர்வத்தோடு விசாரிக்க, அவர் ஓங்கிச் சிரித்துச் சொன்னார் –
இன்னிக்கு நரியைப் பரியாக்கிய உற்சவம். முடிஞ்சதும் காட்டுலே கொண்டு போய் விட்டுடுவாங்க. இதை வாங்கி வீட்டுலே கட்டறதும், ஓணானைத் தூக்கி அரைக்கட்டுலே விட்டுக்கறதும் ஒண்ணு.
அவர் சொன்னது புரியாவிட்டாலும் சொல்லிச் சிரித்தது கொச்சு தெரிசாவுக்குப் பிடித்திருந்தது.