நெம்பர் 40, ரெட்டைத் தெரு புத்தகத்திலிருந்து
பதினேழு
நவராத்திரி முடிந்து விஜயதசமி காலையில் பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்துக் கட்டாயத்தின் பேரில் படித்துக் கொண்டிருக்கும்போது ரெட்டைத் தெருவில் போகிற ஒவ்வொரு லாரியும் கவனத்தை ஈர்க்கும். ஊருக்குள் போவதால் மெதுவாகப் போகிற அவற்றில் ஒன்று மட்டும் ஊர்ந்தபடி வரும். அது தென்பட்ட நாலு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், தெருவில் இருக்கப்பட்ட ஏழிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பையன்கள் கூட்டம் ரங்கன் வாத்தியார் வீட்டு வாசலில் கூடிவிடும்.
ரங்கன் வாத்தியாரைப் பள்ளிக்கூடத்தில் பார்த்ததைவிட, தீபாவளிக்காக வீட்டுத் திண்ணையை ஒட்டிப் பட்டாசுக்கடை வைத்து நாலு திசையிலும் சிப்பந்திகளை ஏவிக்கொண்டு மும்முரமாக வியாபாரம் செய்துவந்த கோலத்தில் தான் நினைவிருக்கிறது. தீபாவளிவரை தினசரி விளையாடக்கூடப் போவதில்லை. சாயந்திரம் தொடங்கி ராத்திரி ஒன்பது வரை வாத்தியாருடைய தீபாவளிப் பட்டாசுக்கடையின் கவுரவ உத்தியோகஸ்தர்கள் நாங்கள்தான். ஒரு பைசா ஊதியம் கூட எதிர்பார்க்காமல், பட்டாசுக் குவியலுக்குப் பக்கத்தில் நின்று, எண்ணிக் கொடுத்து, எடுத்துக் கொடுத்து, பொட்டலம் கட்டித் தருகிற வேலையில் இருக்கும் சந்தோஷத்துக்காக ரங்கவிலாஸ் பட்டாசுக்கடை வாலண்டியர் தேர்வுக்கு எக்கச்சக்கமான போட்டி. வீட்டில் முணுமுணுப்பு எழுந்தால் கண்டுக்கவே கூடாது.
ஒவ்வொரு வருடமும் கடை தொடங்குவதற்கு முன்னால் சில பிரத்தியேக சடங்குகள் நிறைவேற்றப்படும். வழக்கமான பிள்ளையார் படம், ஊதுவத்தி, பூ, பழுப்புச் சர்க்கரை நைவேத்தியத்தோடு ஏட்டையா ஆராதனை என்ற ஒரு நிகழ்ச்சியும் உண்டு. நாலு சிவப்பு வாளியில் உடையார் ஊருணிக் கரையிலிருந்து வாரி வந்த மணல், ஊருணித் தண்ணீர் இதெல்லாம் கடை வாசலில், திண்ணைக்கு இரண்டு பக்கத்திலும் போட்ட பெஞ்சுகளில் பிரதிஷ்டை செய்யப்படும். சுற்றி அவசரமாக ஒரு பந்தல் உயரும். வாத்தியார் வீட்டுக் கூடத்துத் தூணில் சுளகு, முறம், கோட் ஸ்டாண்ட் கோஷ்டிக்கு இடையே கூம்பு வடிவ தீயணைப்பு சாதனம் ஒன்று மாட்டி இருக்கும். பாஷை புரியாத நாட்டில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்ட அந்நியன் போல பரிதாபமாக நிற்கிற அது திண்ணைக்கு இஷ்ட மித்ர பந்துக்களான பட்டாசு, மணல் வகையறாக்களோடு இடம் பெயர்ந்து மூங்கில் கொட்டகைத் தூணைக் கம்பீரமாக அலங்கரிக்கும்.
இந்த ஏற்பாடெல்லாம் முடிந்தபிறகு போலீஷ் ஸ்டேஷனிலிருந்து ஏட்டையா சைக்கிளில் வந்திறங்குவார். எங்களைப் போல அவரும் அரை டிராயர் தான் போட்டிருப்பார். “என்ன, பட்டாசுக் கடை போடறாப்பிலேயா சார்?” என்று விசாரித்தபடி பெஞ்சில் தண்ணீர் வாளிக்குப் பக்கமாக தொடுக்கினாற்போல் உட்கார்வார். முண்டாசா தொப்பியா என்று குழம்ப வைக்கும் தன் தலைக் கவசத்தைக் கழற்றி மடியில் வைப்பார். டிரவுசர் பாக்கெட்டிலிருந்து பொடிக்கறையோடு கைக்குட்டையை எடுத்து வழுக்கைத்தலை நடுவில் வியர்வையை அழுத்தத் துடைப்பார். பட்டாசுக் கடை தான் போடறோம். மூக்குப் பொடி விக்கறதுக்கா இப்படி வாளியில் மணல், ஊருணித் தண்ணி, தீயணைப்பு சாதனம் எல்லாம்?
மணலை முகர்ந்து பார்த்து, உள்ளங்கையில் எடுத்த தண்ணீரை உத்தேசமாக நாலடி முன்னால் தெளித்து, தீயணைப்பு சாதனம் மேல் கிறுக்கிய சர்ட்டிபிகேட்டை சிரத்தையாகப் படித்தபடி அவர் காத்திருக்க, ரங்கன் வாத்தியார் ஒரு பழைய கவரை அவர் கையில் தருவார். அதைக் காக்கிச் சட்டைப் பையில் திணித்தபடி சைக்கிளில் ஏறுகிறதோடு ஏட்டையா ஆராதனை முடியும். இந்த கவர் தருகிற சடங்கை நாலு நாள் முன்னால் நவராத்திரி நேரத்தில் கொலுவுக்குக் கூப்பிட்டுப் பாட்டுப் பாடச் சொல்லி தெருப் பெண்களுக்கு சுண்டல், ரவிக்கைத் துணி தருகிற நேரத்திலேயே வாத்தியார் முடித்திருக்கலாம். ஏட்டையாவுக்குப் பாடத் தெரியுமா என்று தெரியவில்லை.
கொலுப்படி மாதிரியே ரங்கன் வாத்தியார் வீட்டுத் திண்ணையில் நாலைந்து மரப்படி வைத்து சாம்பிள் வெடிக் கட்டும் மத்தாப்பும் அங்கே நிறுத்தி வைக்கப்படும். மேல் வரிசையில் வெள்ளி நிறத்தில் மின்னும் கம்பி மத்தாப்பு, அடுத்து அங்கங்கே வெள்ளிப் பொறுக்கு தட்டிய ஸ்பெஷல் மத்தாப்பு. முதலாவதைக் கொளுத்தினால் குளுமையாக இருட்டுக்கு அழகைக் கொடுத்தபடி பூச்சிதறும். மற்றது பல வர்ணத்தில் ஆடம்பரமாக சினிமா வில்லி போல் சிரிக்கும். மத்தாப்பு அடைத்த அட்டை டப்பா மேலே ஒட்டிய படத்தில் சினிமா நடிகை சாயலில் ஒரு பெண் மத்தாப்பைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டிருப்பாள். போன வாரம் ஜெயராம் தியேட்டரில் பார்த்த ‘வல்லவன் ஒருவன்’ படத்தில், ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ என்று ஜெயசங்கரை மயக்க நடனமாடும் விஜயலலிதா போல் மத்தாப்புப் பெண் வெகு சிக்கனமாக உடுத்தியிருப்பாள்.
வரிவரியாகக் கோடுபோட்டு நாலாக மடித்த மண்புழு போல் சாட்டை, அரை இஞ்ச் விட்டத்தில் ஆரம்பித்து தோசைக்கல் சைஸ் வரை வட்ட வட்டமாகச் சுருண்ட தரைச் சக்கரம், எங்கே எப்படி வைத்துக் கொளுத்தினாலும் உய்ங்ங்ங்ங் என்று வீராப்பாகக் கிளம்பி மிகச் சரியாக ரேடியோ ரிப்பேர்காரர் வீட்டுத் திண்ணையில் போய் விழும் ஏரோப்ளேன் (ரேடியோக்காரர் அப்புறம் வால்வ் ரிப்பேரான ரேடியோ போல் அரைமணி நேரம் கொரகொரப்பார்), காலி பாட்டிலில் நிறுத்தி தீவைத்தால் சில சமயம் ஆகாயத்துக்கு எழும்பி மற்றபடி தரையோடு ஊர்ந்து சிவன் கோயிலுக்குள் பிரதோஷ தீபாரதனை பார்க்க நுழையும் ராக்கெட், கொளுத்தினால் குப்பென்ற வாடையோடு கருப்பாக நீளும் பாம்பு மாத்திரை என்று மரப்படிகள் நிரம்பி இருக்கும்.
கீழ் இரண்டு படியிலும் அனைவருக்கும் பிரியமான பட்டாசுகள். ஒற்றைவெடிகளை மாலையாகக் கோர்த்த சரங்கள் கொண்ட பெரிய பாக்கெட்டுகளில் தில்லி செங்கோட்டை படம் தவறாமல் இடம் பெறும். காதைக் கிட்டத்தட்ட செவிடாக்கும் ஆட்டம் பாம் அட்டைப் பெட்டியில் தொங்கு மீசையோடு பட்டாளக்காரர்கள் போர்முனையில் இலக்கின்றி சுட்டுக் கொண்டிருப்பார்கள். கடைத் தூணில் பொம்மைத் துப்பாக்கிகள் சணலில் தொங்கும். அவற்றில் வைத்து வெடிக்க கேப் அம்பாரமாகப் பக்கத்தில் அடுக்கியிருக்கும். கைக்கு அடக்கமான குருவி வெடி ஐந்து ஐந்தாகச் சுற்றிய கண்ணாடிப் பேப்பர் மேல் இந்தி நடிகர் ஷம்மிகபூர் அல்லது ஒரு குரங்கு அல்லது இரண்டுமே அச்சடித்திருக்கும். குரங்கு கன கம்பீரமாக இருக்கும்.
வாடிக்கையாளர்களை வரவேற்பது, தேர்ந்த விற்பனையாளர்களாக கடைச் சரக்குகளின் மகத்துவத்தை விளக்குவது, பட்டாசு எடுத்துத் தருவது, குண்டுராஜு போட்ட பில்லை திரும்ப சரிபார்ப்பது (நிச்சயம் நாலு தப்பாவது இருக்கும்) இப்படி ரங்கன் வாத்தியார் செய்ய வேண்டியதில் பாதியை நாங்களே கவனித்துக்கொள்ள, அவர் கடமையே கண்ணாகக் கல்லாவில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டு பெரிய தொகை பில்லை மட்டும் இன்னொரு தடவை சரிபார்ப்பார். ரங்கன் வாத்தியார் வீட்டம்மா அவ்வப்போது சீடை, முறுக்கு, நவராத்திரிக்கு வாங்கி மீந்த கடலைப்பொரி, நீர்க்கக் கரைத்த ஒண்டிப்பிலி பிராண்ட் நன்னாரி சர்பத் என்று விநியோகித்து வியாபாரத்தை விருத்தி செய்யும் உதவியாளர்களை ஊக்குவிப்பார்.
‘பிரபல ஹாலிவுட் அழகி மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சல்ஸ் ஓட்டலில் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை’ செய்தி வெளியான பழைய தினசரியைக் கத்தரித்துச் செய்த காகிதப் பையில் பட்டாசுகளை வைத்து வாடிக்கையாளர்களுக்குத் தரும்போது இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். அதே செய்திப் பக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் யாரோ ஒரு நெல்சன் மண்டேலாவை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்த செய்தியும் பார்த்த நினைவிருக்கிறது. இந்த நாற்பத்தைந்து வருடத்தில் மர்லின் மன்றோ யாரோவாக மாறி, நெல்சல் மண்டேலா சிறைக்கு வெளியிலும் வெளிச்சத்துக்கும் வந்து பிரபலமாவார் என்று அப்போது தெரியாது. நடக்கப் போவது தெரிந்தால் வாழ்க்கையில் என்ன உற்சாகம் பாக்கி இருக்கும்?
(கிழக்கு பதிப்பகம் வெளியீடு – தகவல்கள் கீழே குறிப்பிட்ட இணையத்தள முகவரியில்)
http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=nov&itemid=883