புதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்

ஜன்னல் சீட்டை நான் எடுத்துக்கலாமா? கேட்டபடி பக்கத்தில் நின்றவரைப் பார்த்து விட்டு அடுத்த சீட்டுக்கு மாறி உட்கார்ந்தான் ராகவன்.

விமானம் கிளம்பப் போகிறதால் பாதுகாப்பு பட்டியை அணிந்து கொள்ளச் சொல்லி அறிவிப்பு வர, அவசரமாக ஜன்னல் சீட்டில் விழுந்தார் வந்தவர். அவர் சட்டைப் பையில் இருந்து நழுவிய கார்டை எடுத்துப் பார்த்தான் ராகவன். எஸ்.எஸ்.சித்தர். அப்படின்னா?

”ஷேப் ஷிஃப்டர் சித்தர். நினைச்ச மாதிரி உரு மாறுவேன்”. மூலிகை பற்பசை வாசனையோடு சிரித்தார். புரியலே என்றான் ராகவன்.

அவன் பார்த்தபடி இருக்க, ஜன்னல் சீட்டில் அவர் ஒரு வினாடியில் பிங்க் கலர் கரடி பொம்மையானார். அடுத்து ஒரு கிலோ சுவிஸ் சாக்லெட் ஆகி டப்பா திறந்து சீட்டில் கிடந்தார். தொடர்ந்து சிம்பன்ஸி குரங்காகி சும்மா உட்கார்ந்திருக்க, சேஃப்டி பெல்ட் போட்டுக்கணும் என்று கண்டித்து விட்டு ஏர் ஹோஸ்டஸ் முன்னால் போனாள்.

அவர் மறுபடி சித்தரானபோது விமானம் ரன்வேயில் ஓட ஆரம்பித்திருந்தது. இவ்வளவு துருதுருப்பான மாயாவியை ட்விட்டரில் ஃபோட்டோ போட்டால் பத்து பேர் லைக் பண்ணுவார்கள் என்றுபட ராகவன் மொபைலை குச்சியில் வைத்து முன்னால் நீட்டினான். செல்ஃபிக்கு அட்டகாசமாக போஸ் கொடுத்தார். க்ளிக் ஆன படத்தில் அவர் அமிதாப் பச்சனாக ஆகியிருந்தார்.

எங்கேயோ சீஃப் எக்ஸிக்யூட்டிவ் ஆக உத்தியோகத்தில் இருப்பதாகச் சொன்னார் சித்தர். தான் சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியன் என்றான் ராகவன். பாதுஷா ராகவன் தானே என்று கேட்டார் அவர். எப்படித் தெரியும்? ராகவன் ஆச்சரியத்தோடு பார்த்தான்.

”முந்தாநாள் விடிஞ்சதிலேருந்து என்ன நடந்துது, நினைவு இருக்கா”?

சித்தர் கேட்டபடி அவன் சட்டைப் பாக்கெட்டில் துருத்திக் கொண்டிருந்த மொபைல் ஃபோனை உரிமையோடு எடுத்து நீட்ட, சின்னதாக அதன் திரை உயிர்பெற்று அங்கே அவன். கனவு கண்டபடி ராகவன் உறங்கிக் கொண்டிருந்தான் மொபைல் திரையில்.

ராகவனின் அந்தக் கனவில் உருளை வைத்த பீரங்கி வண்டிகளில் பெரிய பாதுஷாக்கள் தலை குப்புற தொந்தியைத் தள்ளிக்கொண்டு கிடக்க, இழுத்துப் போகப்பட்டன. வெளுத்த சர்க்கரைப் பாகு உலர்ந்து மேற்புறத்தில் திடமாகப் பரவி இருக்க, மெத்தென்று மைதாவும், நெய்யும், பாதாம்பருப்பும், முந்திரியுமாக இனிப்புப் பூரணம் கீழ்த்தளத்தில் காத்திரமாக அடர்ந்து நிற்கும் இனிப்புகள் அவை. பீரங்கி வண்டிகளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தபோது ராகவனுக்கு விழிப்பு தட்டியது. அது முந்தாநாள் காலை.

ஒரு வாரமாகத்தான் இந்தப் பாதுஷா வண்டிக் கனவுகள் துரத்துகின்றன. இது எவ்வளவோ தேவலை. அதற்கு முன் தூக்கமே சரியாக வராது. வந்தாலும் பள்ளத்தாக்குகளில் தள்ளி விடப்படும் கனவுகள் உடனே விழித்துக் கொள்ளச் செய்யும். தூக்கம் விழித்த சிவந்த கண்களோடு ஆபீஸ் போகும்போது பின்னால் இருந்து யாரோ அங்கே தள்ளிவிடப் பின் தொடர்வதாக மனதில் வரும். அந்தப் பள்ளத்தாக்குகளில் எப்போதும் பழைய செய்தித்தாள் விரித்து கல்லுக் கல்லாகப் பாதுஷா அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.

பாதுஷா. ஒரு உணவுப் பதார்த்தத்தோடு ராகவனின் வாழ்க்கை இறுகப் பிணைக்கப்பட்டது ஒரு ஞாயிறன்று.

வெய்யிலும் இல்லாமல் மழையும் பெய்யாமல் காற்றும் வீசாது போன மந்தமான ஞாயிற்றுக்கிழமை பகல் அது.
அந்தப் பகலில் ராகவனின் அப்பா, நாலாயிர திவ்யப் பிரபந்தம் படிக்க எடுத்தவர் சாப்பிட்ட அசதியில் தூங்கிப் போய்விட்டார். இல்லாவிட்டால் ராகவன் அம்மாவுக்கு ‘தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்’ என்று பாசுரம் சொல்லிக் கொடுத்திருப்பார். அவரை ராகவனின் அம்மா இறுகக் கட்டித் தழுவி உறங்கியதில் அவர் தலைமாட்டில் இருந்த பாசுரப் புத்தகம் நழுவி, கட்டிலுக்குக் கீழே நூலாம்படைக்குள் விழுந்து கிடந்தது.

பிற்பகல் மூணரை மணியளவில் தூக்கம் கலைந்து ராகவனின் அப்பாவும் அம்மாவும் எழுந்தபோது வேறே செய்ய வேண்டியது எதுவும் இல்லாமல் அவர் தன் ஓட்டலில் இருந்து கொண்டு வந்த பாதுஷாவை அவளுக்கு ஊட்டினார்.,

டிவியில் தூர்தர்ஷன் மட்டும் இருந்து, ஞாயிறு மாலையில் சினிமாப்படம் போட்ட காலம் அது. அன்றைக்கு ஒரு பாடாவதிப் படம் வரும் என்று தெரிந்துகொள்ள, தூரதர்ஷன் நல்லதம்பி கடந்த வாரமே படத்தின் பெயரைச் சொல்லி விட்டார். சாயந்திரம் சினிமா பார்க்க உட்கார வேண்டும் என்றால் சீக்கிரமே ராத்திரிக்கு வத்தல் குழம்பு, சுட்ட அப்பளமும், சாதமும் தயாரிக்க வேண்டும். சினிமா பார்க்கவில்லை என்பதால் நேரம் நிறைய இருக்கவே ராகவனின் அம்மா, அப்பா சாவகாசமாக அவனை ஞாயிறு நாலரை டு ஆறு ராகு காலத்துக்கு முன்னால் பாதுஷா மணக்க மணக்க உருவாக்கினார்கள்.

எனினும் ராகவன் முதல் பாதுஷா சாப்பிட்டது அவன் நடக்க ஆரம்பித்ததற்கு முன்னால் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவன் தவழ்ந்தபோது பல் முளைத்திருக்காது. இனிப்பு, துவர்ப்பு, காரம், புளிப்பு என்று சாப்பிடுவதைப் பகுத்து ருசிக்க நாக்கு பழக்கப்பட்டிருக்காது.

ஒரு வயதில் தள்ளாடி நடந்தபோது அவன் சாப்பிட்ட முதல் பாதுஷாவை அவன் அம்மா நினைவு வைத்திருந்தாள்.

”தீபாவளிக்கு நம்ம ஓட்டல்லே பண்ணி மீந்த பாதுஷாவை, எறும்பு வருதுன்னு பீங்கான் கிண்ணத்துக்குள்ளே போட்டு சமையல் கட்டு ஸ்டூல்லே வச்சிருந்தேன். சத்தமே போடாம அம்மணக் குண்டி தொம்மணக்கான்னு உள்ளே வந்து கையிலே எடுத்து கடிக்கத் தெரியாம முழிச்சிண்டிருந்தே. கடி, கடின்னு நாலு தடவை சொன்னதும் கடிச்சு ஒரு கஷணம் தின்னே. அன்னிக்கு ஆரம்பிச்ச பாதுஷா பித்தம் விடுவேனான்னு உன்னோட சேர்ந்துடுத்து”.

ஓட்டல்கார வீடு என்பதால் ராகவன் சாப்பிட பாதுஷாவுக்குப் பஞ்சமே இல்லை. ராகவன் அப்பா நடத்திய பரோடா ஆனந்தபவானில், புதன்கிழமை சாயந்திரம் ஸ்பெஷல் ஸ்வீட், பாதுஷா. ராகவன் அப்பா காங்கிரஸ் அனுதாபி. பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கதர் அணிந்து ஓட்டல் கல்லாவில் உட்கார்வார். கதரோடு தான் ஞாயிறு பிற்பகல் வீட்டில் பெண்டாட்டியோடு சிற்றின்பம் அனுபவிக்கத் தொடங்குவார். அப்புறம் கதர் தனி, அவர் தனியாகி விடுவதுண்டு. நேரு பக்தர் என்பதால் ஆனந்த பவான் என்று நேருவின் வீட்டுப் பெயரை சைவ ஓட்டலுக்கு வைத்தவர் பரோடாவைச் சேர்த்துக் கொண்டது ஏன் என்று அவருக்கே நினைவில்லை.

புதன்கிழமை ஸ்வீட் மாஸ்டர் செய்து தாம்பாளம் தாம்பாளமாக அடுக்கும் பாதுஷா பரபரப்பாக விற்பனை ஆகும். ஒரு தட்டு, சுமார் முப்பது பாதுஷா வீட்டுக்கு அனுப்பி வைப்பார். ஒரே பிள்ளை ராகவனின் பாதுஷாப் பைத்தியத்துக்கு அவர் அளிக்கும் வாராந்திரக் காணிக்கை அது. அதுவும் போதாமல் ஓட்டலுக்கு சாயந்திர நேரம் போய் கல்லாவில் உட்கார்ந்து உதவி செய்வதாக விற்பனைக்கு வைத்த பாதுஷா மலையின் உயரம், கொள்ளளவு என்று இரண்டு பரிமாணத்திலும் திடமாகக் குறைக்க ராகவன் மேற்கொண்ட உழைப்பும் குறிப்பிடப்பட வேண்டியது.

படிப்பு முடித்து வேலைக்குப் போகும்போதுதான் பெரிய பிரச்சனை ஆரம்பித்தது. அவன் வேலைக்குச் சேர்ந்த கம்பெனிப் பிரிவில் பகலில் எல்லா ஊழியர்களும் சேர்ந்திருந்துதான் சாப்பிடுகிற வழக்கம். நாலு அடுக்கிலும் பாதுஷா அடைத்து வரும் இவனுடைய டப்பா தினம் பறிபோய், காய்ந்து போன தோசையும், குண்டு குண்டாக இட்லியும், எண்ணெய் மினுக்கும் புளியஞ்சாதமும் ராகவனோடு பகிர்ந்து கொள்ளப்பட, பட்டினியாகவே பல பகல்கள் போயின.

எப்படியோ வீட்டுக்குப் பக்கத்து ஆபீஸுக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் அவன். இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் எப்போது இறக்கக் கூடும் என்று ஆக்சுவரி கணக்கு போட சாப்ட்வேர் உருவாக்கும் அலுவலகம் அது. அங்கே பகல் உணவுக்கு வீட்டுக்கு வரும் சௌகரியத்தில் பாதுஷாவும் அடக்கம்.
கல்யாணத்திலும் ஏதாவது கஷ்டம் ஏற்படலாம் என்று எதிர்பார்த்து பிரம்மசாரியாகவே காலம் தள்ள ராகவன் முடிவு செய்திருந்தது பெண்ணைப் பார்த்ததும் உடனடியாக மாற்றிக்கொள்ளப் பட்டது. நேர்த்தியாகச் செய்து ரெப்ரிஜிட்டேடரில் குளிர்வித்த புஷ்டியான பாதுஷா போல தோன்றினாள் அவள். முதல் ராத்திரி படுக்கையில், அரைமணி நேரத்துக்கு முந்தி செய்த பாதுஷாபோல சூடும் இனிப்புமாக இதமாகக் கூடிக் கலந்த வனப்பு அவளுடையது.

கல்யாண விருந்துக்கு வேறே ஸ்வீட் போட வேண்டாம் என்று சொல்லி பாதுஷா வெள்ளம் புரண்டோட வழிசெய்தான் ராகவன். தாலி கட்டிய பிற்பாடு சொந்த பந்தத்தில் விருந்தாடப் போவது, தேன் நிலவு, குலதெய்வம் கும்பிடுவது என்று போன வாரம் வரை அவனால் திட்டமிட முடிந்த பாதுஷா தினங்களாகவே ஒரு மாதம் போனது. ஒரு வாரம் சாப்பிடும் வகையில் மூன்று கிலோ பாதுஷாவோடு தேன் நிலவுக்கு கொடைக்கானல் போனவன் அவன் மட்டுமாகத்தான் இருக்கும். ஸ்டாக் தீர்ந்து போய்விடும் என்று மதுரையில் இன்னும் இரண்டு கிலோ பாதுஷா நாகப்பட்டிணம் நெய்மிட்டாய்க் கடையில் வாங்கிக் கொண்டு கோடைக்கானல் குளிரை அனுபவித்தார்கள் தம்பதியர். அசட்டுத் தித்திப்பு முதல் மிக அதிகம் இனிப்பு வரையான அத்தனை வெர்ஷன் பாதுஷாவும் அவளுக்கும் ஒரு மாதிரி பழக்கமானது.

”இவ்வளவு ஸ்வீட் சாப்பிடக் கூடாது”, என்று மட்டும் செல்லமாக ஒரு தடவை கண்டித்தாள் அவள். இன்னொரு தடவை சொல்ல நேரமில்லாமல் வேறே என்னென்னவோ புதுசு புதுசாக மனசையும் உடம்பையும் கவர்ந்து போனது.

திரும்ப வேலைக்குப் போக ஆரம்பிப்பதற்குள் தொலைபேசி மூலமும் ஈமெயிலிலும் அவனுக்கு ஆபீஸில் இருந்து தாக்கீது வந்து சேர்ந்தது. ஒரு மாதத்துக்கு அவனை தலைமை அலுவலகத்தில் சாஃப்ட்வேர் டெஸ்டிங் செய்யச் சொல்லி உத்தரவு. எப்படியாவது தினசரி பகல் ஆட்டோ பிடித்து வீடு வந்து சாப்பிட்டுப் போகலாம் என்று அவன் நினைத்திருக்க, அவள் நினைப்பு வேறு மாதிரி.

முந்தாநாள் அவன் ஆபீஸ் கிளம்பத் தயாராக, பார்த்துப் பார்த்து செய்த பிஸிபேளா சாதம், எலுமிச்சை சாதம், கெட்டித் தயிர் விட்டுப் பிசைந்த தயிர் சாதம் என்று லஞ்ச் பேக்கில் பிக்னிக் மெனுவே வைத்திருந்தாள் அவள். அப்பளம், ஊறுகாய், நேந்திரங்காய் வறுவல், மிதுக்க வத்தல் என்று பக்க வாத்தியங்கள் வேறே. கூடவே ஒரு பிளாஸ்டிக் பையில் ரெண்டு பாதுஷாவும் மைசூர்பாக்கும் ஜாங்கிரியும் வைத்து ரப்பர் பாண்ட் போட்டிருந்தாள்.

ஆபீஸ் கிளம்புகிற அவசரத்தில் கால் மாற்றி ஷூ போட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்தில் வந்து வலது கால் ஷூவை இடது காலில் போட முயற்சி செய்வதின் சிரமங்கள் பற்றி அவள் பேச, ராகவன் குறுக்கிட்டுக் கேட்டான் –

”அதென்ன அங்கே பெரிசா மூட்டை வச்சிருக்கே”?

”உங்க லஞ்ச் பேக் தான்”.

”ஒரு அறுபது பாதுஷா இருக்குமா”?

”அது ரெண்டே ரெண்டு தான்”.

”மீதி எல்லாம்”?

அவள் சிரத்தையாக, ”இதுவே ஜாஸ்தி. ஆபீஸ் முழுக்கவா கொடுக்கப் போறீங்க?”, என்று புரியாமல் பேச, முதல்தடவையாக புதுப்பெண்டாட்டி மேல் அல்பமான பாதுஷா விஷயமாக கோபம் வந்தது. ரெண்டு பாதுஷா தானா?

லஞ்ச் பை வேண்டாமென்று நிராகரித்து, வீம்போடு வெறுங்கையை வீசிப் படி இறங்கிப் போனவன் என்ன நினைத்தோ திரும்ப வந்தான். அவள் அழுது தரையில் படர்ந்து கிடந்து துன்பப்பட்டபடி இருப்பாள் என்று நினைப்பு பலமாகக் கவிய அவன் வந்தபோது சோபாவில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து காலை டெலிவிஷனில் பேய் பிசாசுகள் ரெட்டை அர்த்த காமெடி பண்ணும் சினிமா பார்க்க ஆரம்பித்திருந்தாள் அவள்.

”ஆபீஸ் போகலியா”? பேய் டூயட்டை சத்தம் குறைத்தபடி அவள் கேட்டாள்.

”இன்னிக்கும் லீவு எடுத்திட்டு ஒரேயடியா நாளைக்கு ஜாயின் பண்ணிக்கறேன். இப்போ வெளியே போகலாம், கிளம்பு”.

அவனோடு வெளியே கிளம்பினாள் அவள். சினிமா, ஷாப்பிங் என்று சுவாரசியமாக நேரம் போனது. மதியம் சாப்பிடலாம் என்று ஓட்டலுக்குப் போனதும் அடுத்த பிரச்சனை. என்னதான் ஃபைவ் ஸ்டார் ஓட்டலாக இருந்தாலும், இந்திய இனிப்பு ஸ்டாக் செய்து வைத்துக்கொள்ள மாட்டார்களா என்ன? மாட்டார்கள் போலிருக்கிறது.

கத்துக்குட்டிகள் செய்ய ஆரம்பித்து பாதியில் நிறுத்தி, சர்க்கரைப் பாகைக் குழைத்து மேலே முழுக்காட்டி மரப்பாச்சி மரப்பாச்சியாகப் பிடித்து வைத்த மைதாமாவு ரூபங்களை வங்காளி ஸ்வீட் என்று ஒரு சாரருக்கும் ஒரியா ஸ்வீட் என்று இன்னொரு கூட்டத்துக்கும், ஆழ்நிலை தியான ஸ்வீட் என்று வெளிநாட்டு ஏமாளிக் கும்பலுக்கும் ஒரே நேரத்தில் விற்றுக் கொண்டிருந்த டை கட்டிய ஓட்டல் சூபர்வைசரிடம் கம்ப்ளெயிண்ட் புத்தகம் கொண்டு வரச் சொன்னான் ராகவன்.

பாதுஷா இல்லாமல் என்ன தலைமுடிக்கு ஓட்டல் அதுவும் ஐந்து நட்சத்திர பெயர்ப்பலகை போட்டுக்கொண்டு நடத்தணும்?

அவன் புகார் எழுதப் போகும்முன் ஒரு வெயிட்டர் அடுத்த தெருவிலே மிட்டாய்க்கடை இருக்கு என்று சூபர்வைசருக்கு காதுக்குள் சொல்ல, சதித்திட்டம் உருவானதை ராகவன் சத்தமின்றிக் கவனித்தான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் எதிர்பார்த்தபடி ஒரு கிலோ பாதுஷா ராகவன் டேபிளுக்கு வந்து, மிட்டாய்க்கடை விலையை விட நாலு மடங்கு விலை வைத்து பரிமாறப்பட்டது. கொஞ்சம் இனிப்பு அதிகமாக இருந்தாலும், டால்டா வாசனை எழுந்தாலும் அந்த பாதுஷா பொக்கிஷத்தை சுவைத்து ருசித்து அவன் தின்ன, பக்கத்திலேயே ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவை தனியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

ப்ளாஷ்பேக் முடிந்து மொபைல் திரை இருள, அதை ராகவன் கையிலிருந்து பிடுங்கி அவன் சட்டை பாக்கெட்டில் போட்டபடி அடுத்த ஜன்னல் சீட் சித்தர் என்ற உரு மாறும் மாயாவி, ராகவனைப் பார்த்துச் சொன்னார்–

‘ஓட்டல்லே உங்களுக்கு அடுத்த மேஜையிலே இருந்து, நீ பாதுஷாவை உலகம் முடியப் போறதுங்கற அவசரத்தோட முழுங்கிட்டிருந்ததை கவனிச்சேன்”.

”நீங்களா? அடுத்த டேபிள்லே வெள்ளைக்காரங்க ரெண்டு பேர் இருந்தாங்க. ஒருத்தர் தாடி வச்சுக்கிட்டு சக்கர நாற்காலியிலே இருந்த வயசன். இன்னொண்ணு லேடி”, ராகவன் அவசரமாகச் சொன்னான்.

“அது நான் தான். லேடி யார்னு தெரியலே. உன்னைக் கவனிச்சிட்டிருந்தேன்”.

“ஏன் அப்படி செய்யணும்? என்னை கண்காணிக்கச் சொல்லி போலீஸ் நடவடிக்கையா இல்லே அமெரிக்க உளவுத்துறை தேடுதா என்னை? ஆஃப்டர் ஆல் பாதுஷா, அதை சாப்பிட்டா தப்பா? அதுவும் ஒண்ணுக்கு நாலா விலை வச்சு ஃபைவ் ஸ்டார் ஓட்டல்லே கொண்டு வந்து தந்ததை”?

”கண்காணிக்க காவல்துறை உத்தரவு இல்லை. மேலே இருந்து வந்தது. எந்த மேலேன்னு கேட்காதே, நீ நினைச்சே பார்க்காத மேலே”. சித்தர் மொழிந்தார்.

”நன்றி. அதுதான் என்னை துரத்திக்கிட்டு ஃப்ளைட் ஏறிட்டீங்களா”?

சித்தர் பூடகமாகச் சிரித்து, இல்லை என்று தலையாட்டினார். பின்னே?

“நேற்று நீ ஆபீஸ் போன ப்ளாஷ் பேக்கை உன் மொபைல்லே பாரு”.

அவர் 4ஜி விளம்பரத்துக்குப் போனால் கொடி கட்டிப் பறந்து கொண்டிருப்பார் என்று நினைத்தான் ராகவன்.

நேற்று தலைமை அலுவலகத்தில் வெறுங்கையோடு போய்ச் சேர்ந்தபோது, அங்கே புது ஜெனரல் மேனேஜர் சிங்கப்பூரில் இருந்து மாற்றலாகி வந்திருந்தார். வந்ததுமே பரபரப்பாக ஊழியர்களைக் கூட்டி வைத்து, கொரில்லா படை அமைக்க வேண்டும் என்று மூன்றாம் உலக மகா யுத்தத்தை நடத்திச் செல்லும் பொறுப்பில் இருப்பவர் போல உணர்ச்சி ததும்பப் பேசினார் அவர். மும்பாயில் கம்பெனி கோடி ரூபாய்க்கு விற்று செயலாக்கம் செய்யப்பட்ட சூப்பர் மார்க்கெட் விற்பனை, சப்ளை செயின் மேனேஜ்மெண்டுக்கான கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொகுப்பு ஒரு வருடமாகியும் இன்னும் நின்று நிலைத்து குறையில்லாமல் இயங்கவில்லை. பத்து நபர் குழு ஒன்று மும்பைக்குச் சென்று எங்கெல்லாம் குறையோ அங்கெல்லாம் போய் உட்கார்ந்து கவனித்து குறை தீர்த்து இன்னும் ஒரு மாதத்தில் வெற்றிவாகை சூடி வரவேண்டும் என்று ஆணையிட்டார் அவர்.

எந்த பத்து பேர்? நான் தேர்ந்தெடுக்கிற பத்து பேர். மும்பை வரமாட்டேன் என்றால்? வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள். ஒரு பைசா தரமாட்டேன்.

கிராதகனாக முழங்கினார் ஜி.எம். கொத்தடிமைகள் மனதுக்குள் புலம்பியபடி இருக்க, அவர் பெயர் சொன்ன பத்து நபர்களில் ராகவனும் உண்டு. மற்ற ஒன்பது பேர் நேற்று ராத்திரியே மும்பை போய் இறங்கி விட்டார்கள். ராகவனுக்கு புதிதாகக் கல்யாணம் ஆனதால் நேற்று வீட்டில் ராத்தங்கி, காலையில் மும்பை போக அனுமதித்தார் ஜெனரல் மேனேஜர்.

சித்தர் அடுத்த சீட்டிலிருந்து கண்ணைக் குத்துவது போல் விரலை ராகவன் மொபைலைப் பார்த்துக் காட்ட நேற்றைய காட்சி வேகமாக ஓடி முடிந்தது.

“நீ இன்னிக்கு போகலாம்னு தீர்மானிச்ச ஜெனரல் மேனேஜர் யார் தெரியுமா”? அவர் கேட்டார். இந்த இருபது நிமிட நேரத்தில் எந்த மாதிரியான செய்தியை எதிர்பார்க்கலாம் என்று ராகவனுக்குப் புரிந்திருந்தது. எல்லாம் அவரே.

மேலிடத்து உத்தரவாம். ராகவனைத் தனியனாக்க மேலே இருந்து திட்டமாம். ஏன் என்று கேட்டான் அவன். அவர் பதில் சொல்வதற்குள், விமானியின் குரல் கரகரவென்று வழக்கம் போல் ஒலிக்க, தொடர்ந்து பதட்டமான அறிவிப்பு.

”சென்னைக்குத் திரும்பப் பறக்கிறோம். விமானத்தின் எஞ்சின்கள் பழுதாகி உள்ளன. இறங்குவதற்கு முன் எரிபொருள் தீரும்வரை வானில் சுற்றுவோம். பின் இறங்க முயற்சி செய்வோம். பத்திரமாகச் சென்னையில் இறங்கப் பிரார்த்தனை செய்யுங்கள்”. அழுகையும் கூக்குரலுமாக விமானம் ஆடியது. குதித்துக் குதித்துப் பறந்தது அது. எல்லோர் முகத்திலும் சாவு கவிந்திருந்தது.

”உங்க வேலைதானே இது? எனக்கு மட்டும்தானே இதெல்லாம் தோணுது”? ராகவன் படபடப்போடு கேட்க, சித்தர் இல்லை என்று தலையாட்டினார்.

“இது நான் செய்யறது இல்லை. தலைமைச் செயலகம். என்கிட்டேயே சொல்லல்லே. நானும் என்ன ஆகும்னு தெரியாமத்தான் இப்போ இருக்கேன்”.

சொல்லிவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு ஏதோ தொடர்ந்து முணுமுணுத்தார். பிரார்த்தனையா என்று கேட்டான் ராகவன்.

“இல்லை, எனக்கு ப்ரேயர் ஒண்ணும் தெரியாது. நான் இல்லாமல் போனா அடுத்த ஷேப் ஷிப்டர் சீஃப் எக்ஸிக்யூட்டிவ் சித்தராக யாரை சிபாரிசு பண்ணலாம்னு மனசுலே பெயர் குலுக்கிப் போட்டுட்டிருக்கேன்”.

அவர் குரல் கிரீச்சிட்டது. ஒரு சில்வண்டாக மாறியிருந்தார். இருந்த இடத்தில் சுழலும் வண்டு. அல்லது ரொம்ப இறுக்கத்தில் இருக்கும் ஒரு ஸ்க்ரூ. அது விட்டு விடுதலையாகி நின்றால் விமானமே பொலபொல என்று உதிர்ந்து விடும். ஏதோ ஒரு சக்தி அந்த ஸ்க்ரூவைக் கட்டி நிறுத்தி வைத்திருக்கிறது.

”உன்னை பாசுர தாசனாக ஆக்கத்தான் மேலே ப்ளான் போட்டாங்க. ஏதோ தப்பாகி பாதுஷா தாசன் ஆகியிருக்கே. விமானம் பறக்கற இந்த ஒண்ணரை மணி நேரத்துலே உனக்குள்ளே இருந்து பாதுஷாவை கெல்லி எடுத்துட்டு பாசுரம் ழுழுசுமா பதிஞ்சு வைக்கற வேலையை முடிக்க சீஃப் எக்ஸிக்யூட்டிவ் ஆன என்னை அனுப்பினாங்க. இப்போ நேரம் இல்லே அதுக்கு. வந்ததுக்கு பாதியாவது நேர் பண்றேன். பாதுஷா பைத்தியத்தை உன்கிட்டே இருந்து எடுத்துடறேன். இப்படி தின்னா உலகத்திலே உற்பத்தி பண்ற பாதுஷாவிலே எண்பது புள்ளி ஏழு ஐந்து சதவிகிதம் உனக்கே வேண்டி இருக்கும்”, மிக்கி மௌஸ் குரலில் துல்லியமான புள்ளிவிவரம் சொன்னார்.

மனம்போன போக்கில் ஒரு செய்தித்தாள், ஏர்லைன்ஸ் சாப்பாடு வைத்த வெள்ளிச்சுருள் பேக்கிங், கைக்குட்டை, நகம் வெட்டி, ஆரஞ்சு மிட்டாய், காதில் அடைக்கும் பஞ்சு, டாய்லெட் பேப்பர் என்று மாறி மாறி, எக்குத்தப்பாக எங்கோ எதுவோ பிடித்து இழுக்க அப்புறம் ஒரு சத்தமும் இல்லை.

சீஃப் பைலட் குரல் திரும்ப ஒலிபரப்பாகியது– ” பிரார்த்தனை பலித்து விட்டது. கோளாறு, தானே நிவர்த்தி ஆகிவிட்டது. இப்போது சென்னை விமானத் தளத்தில் பத்திரமாக இறங்கப் போகிறோம். பாதுகாப்புப் பட்டி அணிவீர்”.

ராகவன் இறங்க வரிசையில் ஊர்ந்தபோது பின்னாலேயே ஏர் ஹோஸ்டஸ் குரல் – ”சார், உங்க பேகேஜை சீட்டிலேயே விட்டுட்டுப் போறீங்களே”.

ஒரு பெரிய மஞ்சள் துணிப் பையை அடுத்த சீட்டிலிருந்து எடுத்து நீட்டினாள் அவள். அவள் தான் சித்தரா என்று பார்த்தான் ராகவன். அவள் அவள்தான்.

“இங்கே ஒருத்தர் இருந்தாரே”, ஜன்னல் சீட்டைக் காட்டிக் கேட்டான் அவன்.

“நீங்கதான் இருந்தீங்க”.

நன்றி சொல்லி பையை வாங்கிக் கொண்டான். நெய் மணத்த அந்தப் துணிப்பைக்குள் என்ன இருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.

இரா.முருகன்

தி இந்து தமிழ் திசை சித்திரை மலர் 2019-ல் பிரசுரம் ஆனது (ஏப்ரல் 2019)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன