விடுமுறை நாள் குறிப்புகள்
இன்னிக்கு எங்கேயும் சுத்தக் கிளம்பிட வேண்டாம். ஏற்கனவே கொல்கத்தா ப்ளைட் இறங்கத் தெரியாமல் காலைச் சுளுக்கிண்டு வந்து சேர்ந்திருக்கீங்க. எனக்கு ஆபீஸ் லீவு. நான் ஒரு துரும்பையும் நகரத்தப் போறதில்லை. உங்களுக்கும் லீவு தானே? சும்மா விவித்பாரதி கேட்டுட்டு இருங்க. இல்லே லாப்டாப்பை மடியிலே வச்சுக் கொஞ்சிண்டு கிடங்க. சரஸ்வதி பூஜை. அதையும் இதையும் படிக்கறதை எல்லாம் சாவகாசமாக நாளைக்கு வச்சுக்கலாம்.
சரி, சாப்பாடு?
அதது தானே வந்துடும். உங்களுக்கு என்ன கவலை?
இன்றைக்கு எழுத வேண்டும். படிக்காவிட்டாலும் எழுத நிறைய இருக்கிறது. மர்மயோகி ஒரு சுவாரசியமான கதையைக் கோடு போட்டுக் காட்டி, வாரக் கடைசியில் நிறைய விவாதித்து, மின்னஞ்சலில் ஸ்னாப்ஷாட் அனுப்பி வைத்து, தொடரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டிருக்கிறார். சீக்கிரம் முடித்தாக வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.
மூன்று விரல் 2009 நாவல் தொடர்ச்சியை டிஜிட்டல் காண்டீன் முடித்து ஓர் இடைவெளி விட்டு ஆரம்பிக்க வேண்டும். The subject is all the more relevant now. இப்போதே எழுதத் தொடங்கினால் சீக்கிரம் தொடராக வெளிவரச் சரியாக இருக்கும்.
விஸ்வரூபம் இன்னும் இரண்டு அத்தியாயமாவது ராத்திரிக்குள் எழுதியே ஆக வேண்டும். முழு உழைப்பையும் சட்டமாகக் கேட்டு வாங்குகிற படைப்பு அது. குங்குமம் பத்தி ரிலாக்ஸ்ட் ஆக ஒரு அரைமணி நேரம் கிடைத்தால் எழுதிவிடலாம். இல்லை, அதை ஞாயிறன்று வைத்துக் கொள்ளலாம். குங்குமம் ஆசிரியர் வள்ளிதாசனிடம் இன்னும் நாலு வாரத்துக்கு மேட்டர் கொடுத்தாச்சு.
சாயந்திரம் க்ரேஸி க்ரியேஷன்சின் முக்கிய நடிகராக விளங்கிய வெங்கட் நல நிதிக்காக சாக்லெட் க்ருஷ்ணா. மாது பாலாஜி டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறார். மோகனுக்காக, பாலாஜிக்காக, கோபிக்காக, முக்கியமாக வெங்கட்டுக்காகப் போகவேண்டும். மணிரத்தினத்துக்கு அபிமான நடிகரான ‘நெட்டை’ வெங்கட் சினிமாவில் அசத்தலாக ஒரு ரவுண்ட் வருவார் என்ற எதிர்பார்ப்புகள் பொய்யாக இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது கொடுமை. அவருடைய ரீனல் பெய்லியர் சீக்கிரம் சக்சஸ்புல் ஆக குணமாகட்டும். என் காலும் தான்.