கொஞ்சம் மரபு – கொஞ்சம் புதிது 26 ஜூன் 2019

சின்னச் சின்ன சந்தோஷங்களில்
இதுவும் உண்டெனக்கு –
பழைய தீபாவளி மலர்களை
பக்கம் பக்கமாய்ப் புரட்டுவது
காகிதப் புத்தகம் கிடைப்பது அரிது
டிஜிட்டல் இதழ்களே நமக்கு விதித்தது,

நாற்பதுகளின் புத்தகம் கிட்டினால்
காலயந்திரம் கிடைத்த மகிழ்ச்சி;
நானில்லா பழையதோர் ஆண்டுக்கு
ஓசையின்றி சென்று வரலாம்.

எல்லா தெய்வமும் வந்திருந்து
பஞ்சவர்ணமும் தேசலாய்ப் பூசி
நிற்பர் சாய்ந்து முன்னட்டையில்
இன்னும் யாரும் அமரவில்லை.

பாகவதர் ஹரிதாஸ் வருதென்றும்
சின்னப்பா ஜெகதலப்ரதாபன் ரிலீஸென்றும்
தீபாவளி வாழ்த்தோடு விளம்பரங்கள்;
திண்தோள் மான்கண்ணி ராஜகுமாரி
புன்சிரித் திளமை மதர்த்து நிற்கிறார்.
உற்று நோக்கி உன்மத்தமாகிப்
பார்த்துக் கிளர்ந்தோர்
எத்தனை பேரோ.

சின்னப்பா விரும்பி அணிவதென்று
சட்டைத் துணிக்கு சிபார்சு
சுதேசியில்லை மில்துணி மல்துணி
காந்தி சொல்மீறி யார் வாங்கினரோ.

தீபாவளி மலர்க் கதையிலெல்லாம்
கோலம் போட்ட வாசல்தோறும்
குதிரை வண்டி நிறுத்தி
தலைதீபாவளி மாப்பிள்ளைகள்
இறங்கி முடியலை.
தீபாவளிக்கு வைரமோதிரம்
போடலையென்று கோபித்துப் போனவர்
மூன்றாம் பக்கம் திரும்பி வருவார்
மகிழ்ச்சியாக முடித்து வைக்க
தீபாவளி மலர்க் கதையாச்சே.

ஆபீசுகளில் அரைத்தூக்கம்
போடுகிறவர்கள் சம்மர் கிராப் வைத்து
வேட்டியும் ஓவர் கோட்டும் தரித்து
துணுக்குப் படத்தில் தும்முகிறார்கள்.
எதிர்ப் பக்க விளம்பரம்
ஆபீஸர் மூக்குத்தூள்.

கருப்பு வெள்ளை புகைப்படங்களில்
கம்பி மத்தாப்பு கொளுத்திச் சிரிக்கும்
குழந்தைப் பெண்கள் இன்றுமிருந்தால்
எண்பத்தைந்து வயது ஏறக்குறைய.

கந்தபுராணக் கதையொன்று
மஞ்சள் சிவப்பில் சர்வமும் துலங்க;
கந்தன் பார்க்கக் கண்ணன் சாயலில்
கண்ணனை இங்கே பார்த்தவர் யாரோ.

எண்பது வருடம் முந்திய ஓர்தினம்
பண்டிகை விருந்து புதுத்துணி உடுத்தி
கையில் எடுத்துப் புத்தகம் பிரித்து
காகிதம் முகர்ந்தவர் நினைவுக்கு வந்தனம்.

நடையானந்தா
26.06.2019
————————————————————

வாரமொரு நாள்தனில் வாய்க்கும் விடுமுறை
சாரமில்லா ரெண்டுகால் ஜீவன்கள் – பாரோம்
மயமெங்கும் வெள்ளைத்தோல் மற்றாங்கே வேணாம்
உயிர்க்காட்சி பூங்கா அடைப்பு

மெம்ஃபிஸ் உயிர்க்காட்சிப் பூங்கா 1950

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன