ஜோல்னாப் பைகளின்
காலம் முடிந்ததாம்
யார் சொன்னார்?
ஃபூகோ என்றும் காஃப்கா என்றும்
போர்ஹே என்றும் சிமன் தெ புவாவென்றும்
ஃப்ரான்ஸ்வா சாகன் என்றும்
சிமமண்டெ என்கோஸி அடிசெ என்றும்
தெரிய வேண்டிய பெயர்களை எல்லாம்
சரியான உச்சரிப்பில்
கற்றுக் கொடுத்தது என்
ஜோல்னாப் பைதான்.
ழானர் என்றும் ழீன்பால் சாத்ரெ என்றும்
ழான் கொக்தொ என்றும்
வெற்றிலை சீவல் குதப்பிய வாயொடு
சொல்வது போல பேசச் சொன்னதும்
சத்தியமாக ஜோல்னாப் பைதான்.
அப்பத்தா என்பதுபோல் ரெபதொ*** என்று
எடுத்துவிடவும் அதுதான் சொன்னது.
என் ஜோல்னாப்பை
போதலீர் போதையில்
அலைந்தது கொஞ்சநாள்
குஞ்ஞுண்ணி மாஸ்டர் குறுங்கவிதை
சச்சிதானந்தன், அருண் கொலட்கர்
கவிதை எல்லாம் கடந்து வந்து
நிகனொர் பர்ரா எதிர்கவிதை சில நாள்
நம்பூதிரி ஃபலிதமும் தெரிந்து கொண்டது.
பாப்லோ நெருடா புத்தகம் சுமந்து
மெத்தக் களைத்த பைக்குள் ஓர்நாள்
ஹென்றி மில்லரை அடைத்து வைக்க
வார் இற்று இறந்தது ஜோல்னாப்பை.
இன்னொன்று கிடைக்கும் வரை
இலக்கியக் கூட்டம் போவதொழிந்தேன்.
கச்சேரிகளுக்குப் போகும்போது
இலக்கிய விசாரம் கொஞ்சம் நிறுத்தி
இசை விமர்சகரானது
என் ஜோல்னாப்பை.
கிரகபேதமும், கவுண்டர்பாயிண்டும்,
ஔடவ ஔடவ ராகமும் சிந்தித்தபடி
பாட்டைக் கோட்டை விட்டது பாவம்.
நோம் சோம்ஸ்கி சென்னை வந்தார்
பொதுக் கூட்டம் போய்ப்பார்
ஜோல்னாப்பை சொல்லப் புறப்பட்டேன்.
அவை நிறைந்ததால் அனுமதி இல்லை
வாசலில் நின்று சோம்ஸ்கியைக் கேட்க
இன்னும் பலபைகள் அங்கே நின்றன.
எல்லாப் பையிலும் அலுப்பு தெரிந்தது.
உண்மைதான், இலக்கியக் கூட்டமோ
இயற்பியல் தத்துவ விளக்கமோ, இன்று
ஜோல்னாப்பைகள் குறைவுதான் வருவது
பைகள் கொடுத்த அறிவை எல்லாம்
விக்கிபீடியா வேகம் தருவதால்
வீட்டிலிருந்தே அறிவுஜீவியாய்
வேடம் கட்ட முடிந்தது காணீர்.
என்றாலும், ஜோல்னாப் பைகளின்
காலம் ஏன் முடியணும்?
எதேதோ இருக்கும்போது,
ஜோல்னாபை தொங்கவிட
இடம் கிடைக்காதா உலகில்?
*** ரெபதொ – repertoire
27.06.2019
——————————————
தேடி வரிவிதிக்க அட்டாடர்க் அன்றில்லை
கோடி செலவழித்து தான்வளர்ப்பார் – வாடாமல்
பீடியொண்ணு பத்தவைக்க தீப்பிடிச்சு பாடியானார்
தாடி தடுக்கி விழுந்து
அடாடர்க் – துருக்கி அதிபராக இருந்த கமால் அடாடர்க்
பாடியானார் – உயிர்போக body ஆனார்
Lost in History @LovepaidLove Jan 26
The longest beard in history, 1867. The man died by breaking his neck after stepping on his own beard.