கோவிந்த் நிஹலானி @ சென்னை

 

‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப்

எல்லாப் பக்கத்திலிருந்துன் விஸ்தாரமாகத் தோண்டித் துளைத்து அங்கங்கே தேசலான பழைய தார்த் தடம் தெரிய பரிதாபமாகக் கிடக்கிற திருமலைப் பிள்ளை சாலை. பெருந்தலைவர் காமராஜ் அவர் வீட்டு வாசலில் கருப்புப் பளிங்குச் சிலையாக நின்று ‘இதெல்லாம் என்னங்கறேன்’ என்கிற போஸில் இடுப்பில் கைவைத்து எல்லா அமர்க்களத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் தள்ளி நான். காரை எப்படியோ ஓரம் கட்டி நிறுத்திவிட்டு மொபைல் ஃபோனைக் காதில் ஒட்டி வைத்தபடி தெரு இரைச்சலை மீறிப் பேசிக் கொண்டிருக்கிறேன்.

கோவிந்த், நான் உங்க கட்டிட வாசல்லே தான் நிக்கறேன். கறுப்புச் சட்டை.

நான் முதல் மாடி ஜன்னல் பக்கம் நிக்கறேன். தலையைத் தூக்கிப் பாருங்க இரா.இராவாகிய நான் முதல் மாடியைக் கவனித்துப் பார்க்க, துணி உலர்த்திக் கொண்டிருந்த குஜராத்திக் கிழவியம்மா முந்தானையை அவசரமாக சரிசெய்து கொள்கிறாள். காலம் கெட்டுக் கிடக்கு. வயசானாலும் பாதுகாப்பு இல்லாத பட்டிணம் இது.

நான் நிமிர்ந்து நாலு மாடியும் தேட, தோளில் தட்டு. திரும்பிப் பார்க்கிறேன். கோவிந்த் நிஹலானி.

நான் சொன்ன நூடெக் நாராயணா பில்டிங் அங்கே இருக்கு.

கையை கிழக்கில் காட்டுகிறார். நான் எதிர்ப்பக்கமாக கோவிந்தா மஞ்சளில் இன்னொரு நூடெக் நாராயணாவை காட்டுகிறேன். ஒன்றுக்கு ரெண்டு தடியர்கள் வாசலில் நின்று வெறிப்பதைப் பார்த்த மாடி வீட்டுப் பாட்டித்தள்ளை ஆண்பிள்ளைகளை கூப்பிடவோ என்னமோ வீட்டுக்குள் அவசரமாகப் போகிறாள்.

எங்க ஊர்லே எங்க பேட்டையிலே என்ன பண்றீங்க?

கோவிந்த் கையைப் பற்றிக் குலுக்குகிறேன்.

‘அனிமேஷன் படம் பண்ணிட்டு இருக்கேன். இதிலே எக்ஸ்பர்ட் ஆன ஸ்டூடியோ இங்கே தான் இருக்கு. தெரியாதா?’

சொந்தப் பேட்டையில் அவ்வப்போது வாக்கிங் போகிற தெருவிலே இப்படி ரெண்டு நாராயணா கட்டிடத்தையே தெரியலை. அனிமேஷனாவது மத்ததாவது.

இரா உங்க ஊர்லே என்ன ஒரே தெருவிலே பக்கத்துப் பக்கத்துலே ஒரே பெயர்லே ரெண்டு கட்டிடம்? போஸ்ட்மேனுக்கு குழப்பம் வராதா?

கோவிந்த் நிஹலானி காரில் உட்கார்ந்தபடி விசாரிக்கிறார். யார் சார் இந்தக் காலத்துலே கடுதாசி எழுதி தபால் பெட்டியிலே போட்டு அனுப்பிக் காத்திருக்காங்க? அந்தக் குஜராத்தி இன்னிக்கு சாயந்திரம் சூரத்திலே இருக்கற பேத்திக்கு எழுதுவாங்களோ என்னமோ? மெட்ராஸ் வரும்போது போன் பண்ணிடு. முன்னாவை காரோடு ஏர் போர்ட்டுக்கு அனுப்பிடறேன். தனியா வந்துடாதே.

தி நகர் தெருக்களின் நெரிசல் காட்சிகளை, தூசுப் படலத்தை, வருடம் முழுக்க கட்டியாகிற மேம்பாலத்தை எல்லாம் சுவாரசியமாகக் கவனித்தபடி வருகிறார் கோவிந்த். பிரம்மாண்டமான தயாரிப்பான ஆட்டன்பரோவின் காந்தி ஆங்கிலப் படத்துக்கு செகண்ட் யூனிட் டைரக்டராகப் பணியாற்றி, ஷ்யாம் பெனகலின் வலதுகையாக அவர் இயக்கிய அருமையான படங்களில் காமிராவை இயக்கி, வரிசையாகத் திரைக் காவியங்களைப் படைத்து சர்வதேசப் புகழ் பெற்ற இயக்குனர் என்ற பந்தாவும் முறுக்கும் சற்றும் இல்லாமல், தில்லி இந்தியும் மும்பை ஆங்கிலமுமாக நட்போடு அரட்டை அடிக்கும் ஒரு பஞ்சாபிக்காரர். தில்லியில் என் கூட வேலை பார்த்த பலரை நினைவுபடுத்தும் உச்சரிப்பு வேறு வெகு அந்நியோன்யமாக உணர வைக்கிறது.

எங்கே சாப்பிடப் போறோம் இரா? கேட்கிறார். சொல்கிறேன்.

கிரிக்கெட் கிளப்பா? கிரிக்கெட் விளையாடுவியா என்ன?

நான் இல்லே. என் பிள்ளைதான் ஸ்டேட் டீமில் இருக்கான். இந்து பத்திரிகையிலே என் பெயர் தமிழ் எழுத்தாளன்னு ஒரு தடவை வந்திருக்கு. அவன் பெயர் கிட்டத்தட்ட ஐம்பது தடவை வந்தாச்சு இதுக்குள்ளே.

ஆனாலும் எம்.சி.சி கிளப்பில் எங்கள் மதியச் சாப்பாடுக்கு ஏற்பாடு செய்தது அவன் இல்லை. நண்பர் ராம்நாராயண். என் அன்புக்குரிய பத்திரிகையாளர் கௌரி ரரம்நாராயணின் கணவராக அறிமுகமாகி இப்போது அரசூர் வம்சம் நாவலின் ஆங்கிலப் பதிப்பாசிரியராக நெருக்கமானவர்.

கௌரியும் நானும் அருண் கொலாட்கரின் கவிதைக்கு ரசிகர்கள் என்பதை கோவிந்திடம் சொல்கிறேன். கொலாட்கர் பற்றிய கௌரியின் ‘கருப்புக் குதிரை’ நாடகம் பற்றிப் பேச்சு கடந்து போகிறது. கொலாட்கரின் ஜெஜூரி, காலாகோடா கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து விட்டு புத்தகமாக்க அனுமதிக்காக மூணு வருடமாக அலைகிற அவஸ்தையை விவரிக்கிறேன்.

திலீப் சித்ரே மூலம் முயற்சி செய்யேம்பா என்கிறார் கோவிந்த். செஞ்சுட்டேன். அவரும் பதில் போடமாட்டேங்கிறார். இண்டர்நெட்டில் அவர் பிளாக்லே படிச்சேன். பைபோலார் டிஸ்ஸார்டரால ரொம்ப கஷ்டப்படறாராம். பாவம்.

திலீப் நல்ல கவிஞர். அவர் மகன் போபால் விஷவாயு விபத்தாலே பாதிச்சு மரணமடைஞ்சது அவரை நிறையவே பாதிச்சிருக்கு.

தலையை மௌனமாகக் குலுக்குகிறார். பேச்சை கொஞ்சம் போல் மாற்றுகிறேன்.

திலீப் சித்ரேயோட சக்ர வியூகம் கவிதையை உங்க அர்த் சத்யா படத்துலே பொருத்தமான இடத்திலே உபயோகிச்சிருக்கீங்களே. முடிவிலும் அது வர்றது இன்னும் ரொம்ப அற்புதமா இருக்கும்.

கோவிந்த் முழுக் கவிதையையும் சொல்கிறார்.அர்த் சத்யா நடிகர்கள் பற்றி பேச்சு நீள்கிறது. ஓம்பூரி, அம்ரீஷ்பூரி, ஸ்மிதா பட்டீல். அவ்வப்போது தட்டுப்படும் நசிருத்தீன் ஷா. கோவிந்த் நிஹலானியின் பார்ட்டி படத்திலும் ஸ்மிதா தவிர கிட்டத்தட்ட இதே நடிகர் பட்டியல் தான். அதிலும் நசிருத்தீன் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் அமானுஷ்யமாக ஒரு நிமிடம் திரையில் வந்துபோவார். நாக்கு அறுக்கப்பட்டு இறப்பை நோக்கி நடக்கும் பொதுநலத் தொண்டரும் கவிஞருமான அவர் பாத்திரத்தைச் சுற்றித்தான் பார்ட்டி படத்தின் கதை சுழல்கிறது.

அம்ரீஷ் பூரியோடு தனக்கு இருந்த நெருக்கமான நட்பைப் பற்றிய நினைவில் ஆழ்கிறார் கோவிந்த்.

பார்ட்டி படத்துலே அவருக்கு எல்லாத்தையும் மௌனமாகப் பார்க்கிற ஒரு பார்வையாளர் காரக்டர் தான் கொடுத்தேன். பார்ட்டி கதாசிரியரும் நாடக எழுத்தாளருமான மகேஷ் எல்குஞ்ச்வர் அவர் கிட்டே அதிலே வர்ற எழுத்தாளர் பாத்திரம் பற்றிச் சொல்லியிருந்தாராம். எனக்கு அந்த கேரக்டர் கொடுத்தாத்தான் நடிக்க வருவேன்னு அடம் பிடிச்சுப் பார்த்தார் அம்ரீஷ்.

அப்புறம்?

மனோஹர் சிங் அதைப் பண்றார்னு ஏற்கனவே முடிவு பண்ணியாச்சு. நீங்க இதிலே தான் நடிச்சாகணும். மாட்டேன்னு சொன்னீங்களோ, உங்க படத்தை மாலை போட்டு மாட்டி நீங்க இல்லாமலேயே நடிக்க வைச்சு படத்தை நகர்த்திடுவேன். இப்படி உரிமையோடு பயமுறுத்தினேன். உடனே சரின்னுட்டார்.

அடக்க முடியாமல் சிரிக்கிறார்.

எல்குஞ்ச்வரோட பாபுலர் டிராமா வாதே சிராபந்தியை நீங்க ஏன் திரைப்படமாக்கலே?

அது மராத்தி நாடகம் ஆச்சே. பாத்திருக்கியா இரா?

இந்தியிலே புலந்தின்னு பெயர் வைச்சு மொழிபெயர்த்து விஜயா மேத்தா தூர்தர்ஷனுக்காகச் செஞ்சாங்க. அதுவே இம்ப்ரசிவ் ஆக இருந்தது.

ஆமா என்கிறார் கோவிந்த் கொஞ்சம் வருத்தத்தோடு. வாதே சிராபந்தியை சினிமாவாக்க முயற்சி எடுத்தது அரைகுறையா முடிஞ்சு போச்சு.

லோர்காவின் நாடகமான ஹவுஸ் ஓஃப் பெர்னார்டா ஆல்பாவை, ருக்மாவதி கி ஹவேலி என்று இந்திப் படமாகச் செய்த அனுபவம் பற்றி விசாரிக்கிறேன். லோர்கா எழுதிய கடைசி நாடகம். குடும்பத் தலைவன் இறந்ததற்காக முழுக் குடும்பத்தையே ஒரு வருடம் துக்கம் அனுஷ்டிக்க வைக்கும் ஒரு பொசசிவ் ஆன குடும்பத் தலைவி பற்றிய இந்த ஸ்பானிஷ் படைப்பை இந்தி சினிமா ஆக்குவதற்கு எந்த கஷ்டமும் படவில்லை என்கிறார் கோவிந்த். ஒரு ஆண் நடிகர் கூட இல்லாமல் முழுக்கப் பெண்களே நடித்து எடுக்கப்பட்ட படம் அது.

ஆனாலும் நாடகத்தை படமாக்குவது சவால்தான் என்று மெல்லச் சொல்கிறார். ஏற்கனவே ஒரு கண்ணோட்டமும் அதுக்கான காட்சியமைப்புமாக கொஞ்சம் இறுகிப் போயிருப்பதாலா என்று கேட்கிறேன்.

நாடகத்தை ப்ரேக் ஓப்பன் செய்து சினிமாடிக் ஆகத் திறப்பதில் இருக்கும் சவால் பற்றி விளக்குகிறார். அண்ணா மேம்பாலத்தை ஒட்டி டிராபிக் ஜாமில் வண்டி மெல்ல முன்னேற நான் அவர் பேச்சில் ஆழ்ந்து போயிருக்கிறேன்.

மஞ்சுளா பத்மனாபனின் நாடகத்தை ஸ்டேஜிலேயே காமிரா வச்சு ஷீட் பண்ணினேன்.

புரசீனியம் தியேட்டரை காமிராவில் அடைச்சா கொஞ்சம் இரட்டைப் பரிமாணம் தட்டுப் படாதா என்று கேட்கிறேன். லைட்டிங்கும் செயற்கையாக இருக்குமில்லையோ. காமிராவை முன்னூற்று அறுபது டிகிரி சுழல வைச்சா ப்ராப்ளம் சால்வ்ட் என்று சிரிக்கிறார் கோவிந்த். அப்படித்தானா?

நாவலைப் படமாக்கும்போது அதை ஓப்பன் செய்வது எளிது. என் கண்ணோட்டத்தோடு ஒத்துப் போன எழுத்தாளராக இருக்கணும். அவ்வளவுதான்.

மகா ஸ்வேதாதேவி நக்சல்பாரி இயக்கம் பற்றி எழுதின நாவலை ஹஸார் சௌராஸி கி மா என்று கோவிந்த சிறப்பாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார். மகா ஸ்வேதாதேவி மெகா சிடுசிடு டைப்புனு தமிழ்லே சீனியர் ரைட்டர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க எப்படி சமாளிச்சீங்க என்று கேட்கிறேன்.

நானா? நாவலை அவங்க முடிச்ச இடம் எனக்கு இசைவாக இல்லை. இன்னும் ஒரு அத்தியாயம் எழுத முடியுமான்னு கேட்டேன். உடனே சரின்னதோடு இல்லாம, ராத்திரி பனிரெண்டு மணிக்கு கல்கத்தாவிலே இருந்து ஃபோன் பண்றாங்க. அந்த புது அத்தியாயத்தை நிறுத்தி நிதானமா தொலைபேசியிலேயே வாசிச்சுக் காட்டி பிடிச்சுருக்கான்னு கேட்டாங்க. பிரமாதமா வந்திருக்குன்னேன்.

பீஷ்ம சஹானியின் இந்தி நாவலான தமஸ் கோவிந்த் நிஹலானி கைவண்ணத்தில் தூர்தர்ஷன் சீரியலாக வந்தபோது ராத்திரி கண்விழித்துப் பார்த்த எண்பதுகளை உரக்க நினைவு படுத்திக்கொள்கிறேன். பலரையும் பாதித்த டெலிஃபிலிம் அது என்கிறார் கோவிந்த். சீக்கியப் பெண்கள் குருத்வாரா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முன் சர்பரோஸ் கி தமன்னா என்று உருக்கமாகப் பாடும் காட்சி நினைவுக்கு வருகிறது. பாட்டை மிகக் குறைவாகவே தன் படைப்புகளில் பயன்படுத்துகிறவர் கோவிந்த்.

அந்தக் காட்சி சஹானியின் இன்னொரு சிறுகதையை ஸ்கிரிப்டில் இணைத்து எடுக்கப்பட்டது என்கிறார் கோவிந்த்.

தமஸ் டிவிடியாக வெளியாக வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிடுகிறேன். இப்போதைக்கு முடியாது இரா. விடீயோ டேப் என்ன ஆச்சுன்னு தெரியலை.

தூரதர்ஷன் மெத்தனம்? எம்.சி.சி நெருங்கிக் கொண்டிருக்கிறது கார் ஜன்னல் வழியே தெரிகிறது.

காந்தி படத்துக்கு செகண்ட் யூனிட் காமிரா இயக்கினது எப்படியான அனுபவம்?

எனக்கு அது ஒண்ணும் பெரிசாத் தெரியலை. தெரியுமா இரா? படத்திலே வர்ற காந்தி இறுதி ஊர்வலம் முழுக்க நான் எடுத்தது தான். காமிராமேன் திடீர்னு லண்டன் திரும்ப வேண்டிப் போனதால் நடந்தது அது. உழைச்சது வீண் போகாமல் திரையிலே அந்தக் காட்சி எல்லாம் எனக்குத் திருப்தியாக வந்திருந்தது.

கார்த்தியின் பருத்திவீரனை சிலாகித்தபடி எம்சிசியில் என்னோடு நுழைந்தார்.

தசாவதாரம் பாத்துட்டீங்களா கோவிந்த்?

கமல் அடுத்த வாரம் மும்பையில் ஏற்பாடு பண்ணிக் கூப்பிட்டிருக்கார். நல்லா வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்.

பார்த்திருப்பார். அடுத்த மாதம் சென்னை வரும்போது விசாரிக்க வேண்டும்.

(வார்த்தை – அக்டோபர் 08)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன