பண்டொரு காலம் கற்கண்டாக
ஊருணி தளும்பும் ஆரஞ்சு நீருண்டு
அவ்வளவாகப் பழையதல்லாத
அனுமர் கோவில் கரையிலுண்டு
சில்லென்ற காற்றில் மேகங்கள் ஏறி
சின்னக் குயில்கள் பாடுவது கேட்கும்.
கோவில் பின்னால் நந்தவனத்தில்
துளசி மணக்கும்; மடைப்பள்ளிக்குள்
வடைக்கு எண்ணெய் காயும் வாசனை.
எந்தக் காலமோ யாரோ எங்கோ
சொல்லின் செல்வன் நைஷ்டிக பிரம்மன்
அனுமரை ஆக்கினர் பட்சணக் கடவுள்
அதிலிருந்து ஆராதனைக்கு
எடுப்பது வடைகள் மாலையில் தொடுத்து;
லட்டு உருண்டையும் சிலநாள் படைப்பர்.
புளிக்காத தயிர்சோறு திராட்சையிட்டு
நிவேதித்து யாரோ போனது கண்டேன்
முறுக்குகளையும் சடம்பில் தொடுத்து
படைக்கலாம் என்றான் மாருதிராவ்
ராயரின் பிள்ளை என் பள்ளித் தோழன் .
காரமான சிறு வடைகள் போல
தயிர் சாதமும் தட்டையும் முறுக்கும்
சாமிக்கு இஷ்டமா? எல்லாம்
மாருதி சொன்னால் சரிதான்.
ஊருணிநீர் குடத்தில் சுமந்து
தமக்குள் ஏதோ பகடி பகர்ந்து
குடத்தொடு இருகை கூப்பி வணங்கி
சிரித்து மகளிர் கோவில் கடப்பர்
தலையில் மண்குடம் வைத்த தாயம்மா
ஒருநாளும் உடைந்து சிதறாது
கைகள் கூப்பி வேகம் நடப்பாள்.
ஊருணிக்கரை தெற்கு வசத்தில்
பிரசவ ஆஸ்பத்திரி என் பிறந்த இடம்
‘ஆஸ்பத்திரி பீத்துணியை
ஊருணியில் அலசாதே’ கூவியபடிக்கு
அழகம்மா வாட்ச் உமன் அவ்வப்போது
ஊருணிக் கரையில் உலவி நடப்பாள்.
அருகில் அனுமர்க்கும் அசுத்தம் ஆகாது.
ஊருணி வரண்டு வெய்யிலில் காய
அனுமன் கோவில் படிகளில் நின்று
வெட்டவெளியில் பொத்தான் அவிழ்க்கும்
யாரையோ பார்த்து ராயர் இரைகிறார் –
‘வேணாம் வேணாம் குடிநீர் ஊருணி
நாளைக்கு மழைவந்தா தேக்கி வைக்கணும்’.
கெட்ட பயல்கள் கிண்டலாய் நோக்கி
ராயரை நாயோடு போகச் சொல்லி
ஊருணிக்குள் உடம்பு காட்டினர்.
அனுமர் கேட்பார், ராயர் சொல்கிறார்.
நேற்று சூட்டிய வடைகளைப் பிரித்து
உதிர்ந்து விடாமல் தின்னக் கொடுக்கிறார்
உள்ளங்கையில் ஊர்ந்த சிற்றெறும்பு ஓட்டி
அழகம்மா போயாச்சு தெரியுமா என்கிறார்
இல்லை என்கிறேன் மென்றபடிக்கு.
மாருதி லெட்டரே போடுவதில்லையாம்
வடைகள் போதும் எழுந்து கிளம்பினேன்
நீர்நிலை காணா வெறுமைக் கரையில்
சஞ்சீவிமலை தோளில் சுமந்து
தொலைவில் பார்த்து அனுமர் நிற்கிறார்.
01.07.2019
——————————————
நாலைந்து பேர்நடக்க நல்ல நடைபாதை
ஓலமிட்டு கோச்சுவர ஓர்நொடியில் – சாலையாகும்
சீமாட்டி சஞ்சரிக்கும் சீர்மிகுகார் நிற்கட்டும்
காமாட்சி தம்பிவண்டி காண்
Life in Moments @historyinmoment
Paris 1920s