‘ஏதோ ஒரு பக்கம்’ பத்தி
எழுத்தாளனாக இருப்பதில் ஒரு சௌகரியம். இலக்கியம் சம்பந்தமாக எந்த நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் அநேகமாக சம்மன் இல்லாமல் ஆஜராகி விடலாம். அதுவும் வேற்று நாட்டில், குறிப்பாக ஸ்காட்லாந்து என்றால் கேட்கவே வேண்டாம்.
ஸ்காட்லாந்தில் வெய்யில் காலம் ஆரம்பிக்கும்போது அந்தப் பிரதேசமே விழாக் கோலம் பூண்டுவிடும். ஒரே நாளில் பத்து இடத்தில் நாடக விழா, இன்னொரு நாலு தியேட்டரில் கலைப் படங்கள், நாலைந்து மேடைகளில் சாஸ்திரிய, பாப் இசை நிகழ்ச்சிகள். போதாக்குறைக்கு, இருக்கப்பட்ட பூங்காவை எல்லாம் வளைத்து எழுப்பிய அரங்குகளில் இலக்கிய விழா, புத்தகச் சந்தை என்று அமர்க்களப்படும்.
இப்படியான ஒரு கோடைகாலம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். ‘சண்டே அப்சர்வர்’ பத்திரிகையை அசமஞ்சமாகப் புரட்டிக் கொண்டிருந்தேன். ‘எழுத்தாளர் சந்திப்பு – கட்டணம் பத்து பவுண்ட் மட்டும்’. கண்ணை ஈர்த்த ஒரு விளம்பரத்தின் த்லைப்பு இது. அட, காசு கொடுத்து எழுத்தாளரைப் பார்க்கணுமா?
நம் ஊரில் ஒரே நாளில் பக்கத்துப் பக்கத்து அரங்குகளில் எழுத்தாளர் சந்திப்பு, நடிகர் சந்திப்பு, விளையாட்டு வீரர் சந்திப்பு நடக்கிறதுன்னு வச்சுக்கலாம். இதில் எந்த இடத்தில் கூட்ட நெரிசல் இல்லாமல் மின்விசிறிக்குக் கீழே ஹாயாக கால் நீட்டி சாய்ந்து உட்கார்ந்து ஓய்வெடுக்க முடியும் என்று எல்லோருக்குமே தெரியும். எடின்பரோ விஷயம் தலைகீழே. கட்டணம் செலுத்தி ஒரு எழுத்தாளரை சந்திக்க, ‘எனக்கு ஒரு டிக்கெட், எங்க அண்ணனுக்கு ஒண்ணு, தம்பிக்கு அரை டிக்கெட் ப்ளீஸ்’ என்று க்யூவில் அலைமோதுகிற நிலைமை.
நான் சந்திக்கக் கிளம்பியது அமீனட்டா போர்னா என்ற இளம் பெண் எழுத்தாளரை. நாவல் – சிறுகதைத் தொகுப்பு என்று இரண்டு வகையிலும் இடம் பெறக்கூடிய புத்தகங்களை எழுதியவர். சியரா லியோன் நாட்டில் பிறந்து, லண்டனில் தொலைக்காட்சி தயாரிப்பாளராக, எழுத்தாளராக வாழ்க்கை நடத்தும் ஆப்பிரிக்கப் பெண். ஒரு ஸ்காட்லாந்துக்காரரைக் காதல் திருமணம் செய்துகொண்டதால் எடின்பரோ மருமகளும் கூட. ஆப்பிரிக்க மொழியாகிய டெம்னே தாய்மொழி. ஆனாலும் பேச்சும் எழுத்தும் முழுக்க ஆங்கிலத்தில்.
அதற்கு முந்திய நாள் அதாவது சனிக்கிழமை ராத்திரி தான் எடின்பரோ திரைப்பட விழாவில் ஒரு படம் பார்த்தேன். சியரா லியோன் நாட்டில் குழுக்களுக்கு இடையே நடக்கும் வன்முறையில் அப்பாவி மக்கள் கை, கால் இழந்து மூளியாகி நடமாடிக் கொண்டிருக்கும் அவலம் மனம் பதைக்க வைக்கும் ஆவணப் படமாக விரிந்தது அது. சின்னக் குழந்தையைக் கூட விடாமல் கையைத் துண்டித்து அநாதையாக அலையவிட்ட கொடியவர்கள் அந்த நாட்டில் ஜனநாயகம் வருவதை முழுமூச்சாக எதிர்க்கிறார்கள். கல்வியும் பொருளும் இல்லாத சாமானியர்கள் நடைப்பிணமாக அடிமை சேவகம் செய்கிற நிலைமை. அந்த சியரா லியோன் நாட்டு எழுத்தாளரை நேரில் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று தீர்மானித்தேன்.
அவை நிறைந்த காட்சியாக அமீனட்டா ஆரம்பித்திருந்தார். நான் போய்ச் சேர்வதற்குள், ‘அனுமதிச் சீட்டு விற்றுத் தீர்ந்தாச்சு’ – புத்தகச் சந்தை நடக்கிற பூங்கா வாசல் கூண்டுக்கிளி இனிமையாகக் கூவி அறிவித்தாள். ‘புண்ணியமாப் போறது. ஓரமா ஒண்டிக்கிட்டாவது நிக்கறேன். ஒரு சீட்டு கொடு’. நான் மன்றாட, அவள் சாவகாசமாகப் பூர்வோத்திரம் விசாரிக்க ஆரம்பித்தாள். என்னத்தைச் சொல்ல? விலாவாரியாகத் தொடங்கி, சட்டென்று எடிட் செய்து, ‘உலகத்திலேயே ஆதிமொழிகளில் ஒன்று. இன்னும் உலகம் முழுக்க ஏகப்பட்ட மில்லியன் மக்கள் அந்த மொழியில் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் என்று கேட்டிருக்கிறாயா பெண்ணே? தமிழ் எழுத்தாளன் நான்”. கொஞ்சம் சுய தம்பட்டத்தை ஓங்கி அடித்தேன். அமீனட்டாவை சந்திக்க, செய்யலாம்தான்.
‘என்ன, எழுத்தாளரா நீங்க?’ கூண்டுக்கிளி பரபரப்போடு வெளியே வந்தது. ‘ஏன் முன்னாடியே சொல்லலே? என் கூட வாங்க’. என் கையை வலுவாகப் பற்றி இழுத்துக் கொண்டு அவள் உள்ளே ஓடினாள். ‘டிக்கட் காசு?’ ‘துட்டு எதுவும் வேணாம்’. அழகான வெள்ளைக்காரக் கன்யகை இழுத்த இழுப்புக்கு நான் ஓடுகிற காட்சியைக் கண்டு மகிழ நல்லவேளை என் வீட்டுக்காரி அங்கே இல்லை.
முதல் வரிசையில் இடம் கிடைத்தது. ‘சியரா லியோன் இனப் படுகொலைக் கொடுமை பற்றி நேற்று ஒரு டாக்குமெண்டரி பார்த்தேன்’. மைக் என்னிடம் வந்தபோது பேச்சை ஆரம்பித்தேன். ‘ஆமா, பிரான்ஸ் தூதர் படச் சுருளை மறைத்து எடுத்துவந்து வெளியிட உதவி புரிந்தார்’. அமீனட்டா சிரித்தார். சிரிப்புக்கு உள்ளே கொஞ்சம் சோகம் எட்டிப் பார்த்தது. ‘இனப் படுகொலையில் எல்லாம் இழந்து, போதாக்குறைக்குக் கையும் காலும் கூடத் துண்டிக்கப்பட்டு சாதாரண மக்கள் அங்கே துன்பப் படுகிறார்கள். நீங்க இங்கே என்ன செய்யறீங்க மேடம்?’ என் கேள்வி அவரைக் கோபப்படுத்தவில்லை. அமைதியாகச் சொன்னார் – ‘அவர்களுக்கு நான் கொடுக்கக் கூடிய ஆதரவு என் எழுத்து, நான் தயாரிக்கும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் தான். இரண்டு வருடம் முன் அங்கேயும் இயங்கிக் கொண்டிருந்தேன். என் அப்பாவை இழந்தபோது பிரிட்டனுக்குத் தப்பித்து வரவேண்டிய சூழ்நிலை’. அமீனட்டா கண் கலங்கினார் துடைத்தபடி தொடர்ந்தார். ‘அப்பா அங்கே மினிஸ்டராக இருந்தார். மாபியா அவரைத் தூக்கில் போட்டுட்டாங்க’. சொந்த சோகத்தைக் கனமாகச் சுமந்து நடைபோடும் அந்தப் பெண்ணை அதற்கு அப்புறம் நான் கேள்வி ஏதும் கேட்கவில்லை.
அமீனட்டா ‘முன்னோர் கற்கள்’ என்ற தன் புதிய புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை வாசித்தார். கிராமம். பள்ளிக்கூட வாத்தியாரை கடுதாசி எழுதச் சொல்லி முன்னால் உட்கார்கிற கல்வி அறிவில்லாத ஊர் மக்கள். கடிதத்தில் உதவி கேட்டு யார் யாருக்கோ கோரிக்கை. அவர்கள் குடும்பம் நல்லா இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார்கள். கைநாட்டு பதித்து அனுப்பிவிட்டு பதிலுக்காக, கூடவே கொஞ்சம் பணத்துக்காகக் காத்திருக்கிறார்கள். அப்புறம் கணவனால், புகுந்த வீட்டாரால் கொடுமைப் படுத்தப்படும் பெண்கள். கட்டியவனால் துரத்திவிடப்பட்டு அபலையாக அலைகிறவர்கள். வாழ்க்கையில் துயரம், பசி பட்டினி தவிற வேது எதுவும் அறியாதவர்கள். குழந்தைகளைப் பெற்று வளர்க்க உயிரும் தருபவர்கள். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கனமான துக்கம்.
‘அமீனட்டா, இவங்க எல்லோரையும் நான் சந்திச்சிருக்கேன். தமிழ்நாட்டு கிராமத்துக்கும் ஆப்பிரிக்க கிராமத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை’. அவரைக் கூட்டத்துக்கு அப்புறம் தனியாகச் சந்தித்தபோது கூறினேன். ‘நீங்களும் நானும் ஒரே ரத்தம் தான். இந்திய வாழ்க்கையைப் பற்றி எனக்கும் தெரியும்’. அமீனட்டா என் கையை இதமாகப் பற்றிக் கொண்டு நெகிழ்வோடு சொன்னார்.
ஒரு சின்ன ஆச்சரியம். அமீனட்டாவுக்குத் தமிழ் மொழி பற்றித் தெரிந்திருக்கிறது. அவருக்குப் பரிச்சயமான முதல் தமிழ் எழுத்தாளர் நான் இல்லை. அவர் திரு முத்துலிங்கம். ஐக்கிய நாடுகள் அமைப்பில் அதிகாரியாக சியரா லியோனில் இருந்தபோது அங்கே அமைச்சராக இருந்து கொலையுண்ட அமீனட்டாவின் தந்தையோடு முத்துலிங்கம் சாருக்கு பரிச்சயம் உண்டாம். உலகம் சிறியது. சுகமோ, துக்கமோ பங்கு போட மொழி கடந்து படைப்பாளிகள் எங்கும் உண்டு.
கையில் வைத்திருந்த தமிழ்ப் புதுக்கவிதை மொழிபெயர்ப்பை அமீனட்டாவிடம் அன்பளிப்பாகக் கொடுத்தேன். தன் ‘முன்னோர் கற்கள்’ நாவலை எனக்குப் பரிசளித்தார் அவர். ரெண்டும் ஏதோ விதத்தில் ஒரே மாதிரி என்று இருவருக்குமே தெரியும். அடுத்த முறை சந்திக்கும்போது அமீனட்டாவோடு பேச நிறைய விஷயம் பாக்கி இருக்கிறது.
இருவாட்சி வெளியீடான ‘வானவில் கூட்டம்’ கிடைத்தது. உலகத் தமிழர் கதைகள் என்ற துணைத் தலைப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து வெற்றிபெற, புத்தகத்தைப் புரட்டினேன். கண்ணில் பட்ட கதை சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் ‘நாலே கால் டாலர்’. தீபாவளி வாழ்த்து அட்டை வாங்க சூப்பர் மார்க்கெட்டு படி ஏறி, கை மறதியாகக் காசு கொடுக்காமல் நடக்கிற மத்திய வர்க்கத் தமிழ்ப் பெண். இந்த மறதி சிங்கப்பூர் ஜூரோங் போலீஸ் ஸ்டேஷனில் அவளை அடைக்கிறதில் போய் முடிகிறது. லாக் அப்பின் வாடையும், சக பெண்கைதிகளின் சித்தரிப்பும் செதுக்கி வைத்த மாதிரி வந்து விழ, ஃபர்ஸ்ட் பெர்சனில் கதையை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் ஜெயந்தி. துல்லியமான பெண் மொழிக்கு இன்னொரு உதாரணம்.
சுவாரசியமான மற்றக் கதைகள் பற்றி சாவகாசமாக.
(யுகமாயினி – அக்டோபர் 2008)