லெட்டர் உண்டா கிருஷ்ணரே யாராவது போஸ்ட்மேனைக் கேட்டால் எப்பவும் ஒரே பதில் – எழுதிட்டு இருக்காங்க

ஞானம் தேடி வேறெங்கும் போகாமல்
பள்ளி வாசலில் தடுத்தாட்கொண்டது
வழக்கம் போல் போஸ்ட்மேன்
சின்னி கிருஷ்ணன் தான்.

பள்ளிக்கூட வாசலில் பார்த்து
சைக்கிளைக் குறுக்கே நிறுத்தி
லெட்டர் இருக்குது வாங்கிக்க என்றார்
வீட்டு வாசலில் கடிதம் தருவது தவிர
விருப்பமான சர்வீஸ் ஆக
வந்த கடிதம் தருவது இங்கெலாம் –
கொல்லைக் கதவைத் தட்டி
திருச்செந்தூர் இலைவீபுதி பிரசாத கவர்
தெருமுனையில் நிறுத்தி
யாரோ போய்ச்சேர்ந்த கருப்பு தபாலட்டை
லைபிரரிக்குள் துரத்தி வந்து
அடுத்த மாதம் அத்தங்காள் கல்யாண அழைப்பு
மதுரை பஸ்பிடிக்க ஓடும்போது
மங்களம் பேத்தி காதுகுத்து கார்ட்
புதிதாய்ப் பள்ளி வாசலில் கடிதம்.

அஞ்சல் பிரித்தால் பத்திரிகை ஒன்று
கலைமகள் தானா அனுப்பி வைத்தது
யாரோ எவரோ எங்கே இருந்தோ
எங்கள் வீட்டுக்கு கலைமகள் அனுப்ப
யாருக்கு கரிசனம் உறையைப் பார்த்தேன்
எமக்குத்தான் அது முகவரி சரிதான்.

வந்தது கலைமகள் இல்லை
அந்தப் பகலில் தீபம் என்றொரு
இலக்கிய இதழ் பரிச்சயமானது
சின்னி கிருஷ்ணன் மூலம்தான்
கல்கத்தாவில் இருந்து அப்பா
சந்தா அனுப்பி வந்த தீபம்
அப்புறம் பத்தாண்டில்
படிக்கவும் எழுதப் பாசறையும் ஆனது.

ஜீவஒளி கர்த்தரின் ராஜ்ஜியம்
சுவிசேஷப் பாடம் கத்தை கத்தையாய்
கடிதம் வந்திட என்னைத் தவிர்த்து
பாட்டியிடம் போய் நேரடியாக
சின்னி கிருஷ்ணன் டெலிவரி தந்தார்
பள்ளிப்பிள்ளைக்கு என்னாத்துக்கு
அனுப்பணும் இதெல்லாம் கேளுங்க
மூக்கு நுழைத்தார் தர்ம தேவன்போல்.

பெத்தலஹேம் போன ஜோசப் யார்மகன்
லாசரஸ் பார்னபாஸ் யாரிவர் எழுது
ஆபேல் சகோதரன் பெயர் என்ன
இப்படிக் கேள்விகள் பதிலெழுத உதவ
கைவசம் அனுப்பிய இலவச புத்தகம்
எல்லாப் பசங்களும் எழுதி அனுப்பி
மாதக் கடைசியில் சர்ட்டிபிகேட் வரும்
நித்யானுசந்தானம் என்ற பெயரில்
சின்னப் புத்தகம் பரிசு சேர்த்து
இஷ்டமிருந்தால் இலவசமாக
பைபிளும் அனுப்புவர் பார்சல் செய்து
கையெழுத்திட்டுக் கடிதம் வருவதுண்டு –
’தேவ ஊழியம் செய்ய வாரீர்’ – போகமுடியலை
பாட்டியின் தடையுத்தரவு அமலுக்கு வர
அஞ்சல் செலவுக்குச் சேமித்து வைக்க
அஞ்சுபைசா பத்து பைசா காசுகள் கிட்டாது
ஜீவஒளியைப் பாதியில் விட்டேன்
சின்னி கிருஷ்ணன் புண்ணியம் கட்டினார்.

தில்லியில் தூதரகம் உள்ள
நாடுகள் எல்லாம் வெறும் பெயரெழுதி
சாணக்யாபுரியென விலாசம் தந்து
போஸ்ட் கார்ட் போட்டால்
போய்ச் சேர்ந்த உடனே
வண்டி வண்டியாய் வர்ணம் மிகுந்த
புத்தகம் அனுப்புவர் கேட்டபடிக்கு
அத்தனையும் சுமந்து சின்னி கிருஷ்ணன்
சைக்கிள் அலைபாயும் திட்டுவார் எம்மை
காங்கோ நியூஸாம் ஹங்கேரி போஸ்ட்டாம்
குண்டி துடைக்க காகிதம் அனுப்பறார்
என்னால் ஆகாது கழுதைபோல் சுமக்க
தெருவில் போடுவேன் பொறுக்கிட்டுப் போங்கடா.
என்றாலும் ஒவ்வொரு அஞ்சலும்
கையில் கொடுத்து பேசிப் போவார்
அவர்தான் எங்கள் சின்னி கிருஷ்ணன்.

வேலையில் நான் சேர்ந்த பின்னர்
தலைமுடி குறைக்க ட்ரிம்மர் என்ற
விநோதக் கருவியை பெங்களூரில்
ஆர்டர் கொடுத்து விபிபியில்
வந்ததும் சைக்கிளில் கொண்டுவந்தார்
சின்னி கிருஷ்ணன் அவசரமாக.
பணம் அடைத்து பார்சல் வாங்கி
பிரிக்க அருகே அமர்ந்து
செய்முறை விளக்கம் கேட்டார்
அவர் முடியை வெட்ட யோசித்து
என் தலைமேலே ட்ரிம்மர் நகர்த்த
பாதித் தலைமுடி கொழிந்து விழுந்தது
காசு தண்டம் சின்னி கிருஷ்ணன் சிரித்தார்
வேலாயுதம் கடையில் தினத்தந்தி ராணி
வாசிக்கத் தந்து கத்தரித்தனுப்புவார்
காசும் கம்மி நேரமும் போகும்
இந்த சனியன் எதுக்கு வாங்கினே
இடித்து உரைத்தார் எம்தபால் காரர்.

ஐம்பது வருடம் முந்தைய போஸ்ட்மேன்
சின்னி கிருஷ்ணன் விவரணை இது
இன்றைக்கிருந்தால் கௌரி அம்மா போல்
நூறு தொட்டிருப்பார் மேலும் தொடுவார்
கௌரி அம்மா கேரளத் தலைவர்.

லெட்டர் உண்டா கிருஷ்ணரே
யாராவது போஸ்ட்மேனைக் கேட்டால்
எப்பவும் ஒரே பதில் –
எழுதிட்டு இருக்காங்க.

இல்லை என்ற வார்த்தை தவிர்த்த
சின்னி கிருஷ்ணனை மறந்தோரில்லை.

07.07.2019
———————————————————

பாதி குடைந்தபின் பார்த்திருக்க காட்சிவைத்தல்
சாதனையா மற்றுயிர்க்கு வாதனையே – மீதம்
சிரமறுத்தல் போல சிறிதுமில்லை நேயம்
மரமறுத்தல் பாவம் மற

Weird History‏ @WeirdHistoryPix

California Lumberjacks, 1915

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன