சாயாக்கடையில் தேவிகா என்று பேசி நிற்கும் இளைஞர் கூட்டம் ஏலக் கடைக்கு இடம் மாறும்

ராத்திரியில் லாரி வந்து நிற்க
இந்திக் குரல்கள் உரக்கக் கேட்டால்
டில்லி பகதூர் ஏலக்கடை
எல்லா வருடமும் வருவதுபோல்
எங்கள் தெருவுக்கு வந்தாச்சு
நாளை காண நிறையக் கிடைக்கும்
விட்ட இடத்தில் உறக்கம் தொடர்வோம்

சொல்லி வைத்தாற்போல் ஏலக்கடை
வருடம் தோறும் வருவது எங்கள்
அரைப் பரீட்சை டிசம்பரில் முடித்து
விடுமுறை விட்ட நாட்களில் இருக்கும்.

ஏலக் கடையில் எழுதும் கணக்கும்
இந்தி நம்பராம் நம்போல் இல்லை
தலையில் நீலத் தலைப்பாகை வைத்த
நானா என்னும் பெரியவர் சொன்னார்
நானா தானாம் கடை முதலாளி
இந்தி எண்களோ என்ன கணக்கோ
ஏலக்கடை இருக்கும் நேரம் மட்டும்
இந்தியை சகிப்போம் அப்புறம் ஒழிகதான்.

ஆறடி உயரமாய் லாலா வந்து
என்னடா பசங்களா சௌக்கியம்தானா
என்று விசாரிக்க ஏலக்கடை மேல்
சொந்த பந்தம்போல் பிரியம் உதிக்கும்
எல்லா மொழியும் லாலா பேசுவார்
ஏலக்கடையில் எல்லோர் மூச்சும்
இந்தியில் எனினும் தமிழும் தெரியும்.

ரோஸ்கலர் மஞ்சள் ஆரஞ்சென்று
சின்னச் சின்ன நோட்டீஸ் கொடுத்து
டமடம என்று முரசு முழங்கி
நடந்த படிக்கு லாலா பாடுவார்
மேரா ஜூத்தா ஹை ஜப்பானி
இதுவும் இந்திதான் போனால் போகுது.

ராத்திரி ஏழுக்கு ஏலம் ஆரம்பம்
அறிவிப்பு சொன்னாலும் ஏழுமணிக்கு
நண்டுசிண்டு கூட்டம்தான் நிற்கும்
ஏழரை ஆகும் பெரிசுகள் வந்திட.

ஊருணிக்கரை ஏறும் வழியில்
சாயாக்கடை வாசலை ஒட்டி
தேவிகா என்று பேசி நிற்கும்
இளைஞர் கூட்டம் இன்னும் சிலநாள்
ஏலக் கடைக்கு இடம் மாறும்.

முன்சீப் கோர்ட் அமீனா தஃப்த்ரி
சப்கோர்ட் நாசர் சிரஸ்ததார் என
கோர்ட் உத்தியோகம் பார்க்கும்
சிப்பந்திகள் என்.ஜி.ஓக்கள் கூட்டம்.
வக்கீல் குமஸ்தரும் வருவதுண்டு
மத்திய அரசு ஊழியர் சைக்கிளில்
இருந்தபடிக்கே ஏலம் கேட்பர்.

சட்டைத்துணி புடவை அடுக்குப் பாத்திரம்
இங்க் பாட்டில் ஊசிகள் கடியாரம் ரூல்தடி
பேனாக் கத்தி கப்பும் சாசரும்
வெங்கலப் பானை சிப்பல் தட்டு
ஏலக் கடையில் மணியடித்து
அதிகத் தொகைக்கு ஏலம் கேட்ட
கண்ணாடிக் காரரும் நீலச் சட்டைக்காரரும்
கழுத்தில் மஃப்ளர் சுற்றிய நபரும்
உசரமாக ஓரத்தில் நிற்கும் அண்ணாச்சியும்
வாங்கிக் கொண்டு கூட்டத்தில் கலக்க
ராத்திரி பத்து கடைகட்டும் நேரம்.

நல்ல சில்க் புடவை பாருங்க
இருநூறுக்குக் குறையாதென்று
ஏலம் தொடங்கினார் பத்து ரூபாய்
தொடக்கம் வைத்து.
ரேடியோ ரிப்பேர் ராஜன் கேட்டது
இருபது ரூபாய் ஏலக்காரர்
இருபது என்று மும்முறை சொல்லி
ஏதோ நினைவில் மணியும் அடித்தார்
ஏலக்கடை விதிகள் படிக்கு ஏலம் வென்று
ராஜன் வாங்கினார் புடவை இருபதுக்கு
லாட்டரி அடிச்சது சிநேகிதர் சொன்னார்.

ராஜன் சடுதியில் கோகிலாவை
திருமணம் செய்தார்; அம்மா ஓர்தினம்
புடவை அவளுக்கு பிடிச்சுதா கேட்டாள்
சாயம் போச்சு மாமி தெரிந்திருந்தால்
அவசரக் கல்யாணம்
தவிர்த்திருப்பேன் ராஜன் சிரித்தார்
ஏலக்கடை அடுத்து வந்தபோது
ஏலம் கேட்க ராஜன் வரலை
வீட்டில் குழந்தை சுமந்தபடிக்கு
வாசலில் நின்றார் வேடிக்கை பார்த்து.
——————————————————

நாள்முழுதும் கோக்குடிப்போம் பார்லியுண்டு பல்துலக்கி
காளையரும் கன்னியரும் சந்திக்க – சாலை;
நடக்குதுவா நம்ஸ்ட்ராண்டில் நல்லபடம் போவோம்
கடற்படை ’தாவருது காண்

1934 இரவில் நியூயார்க்
ஒளிரும் விளம்பரங்கள் – ஸ்க்விப் பற்பசை, கோகோகோலா, ஸ்ட்ராண்ட் தியேட்டரில் குளோரியா ஸ்டூவர்ட் கதாநாயகியாக நடித்த ‘Here Comes the Navy’, வாக்கர் பார்லி (ரை)

குளோரியா ஸ்டூவர்டுக்கு இதற்கப்புறம் 60 வருடம் கழித்து ‘டைடானிக்’ படத்தில் 101 வயது மூதாட்டியாக நடித்ததற்கு ஆஸ்கார் விருதுக்குப் பரிசீலனைப் பட்டியலில் இடம் கிடைத்தது.

’தா வருது – இதோ வருது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன