ரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்

நீல பத்மநாபனின் புதிய கவிதைத் தொகுதி ‘சாயங்கால மேகங்கள்’

விருட்சம் பதிப்பு

திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் –

வெளியீட்டு விழா 23 ஜூலை 2019 செவ்வாய்க்கிழமை

மலையாளத்தில் எழுதப்பட்டு நீல.பத்மநாபன் தமிழாக்கம் செய்த நூல் இது. இரு மொழியிலும் ஒரே தலைப்பு தான்.

நூல் மலையாளத்திலும் தமிழிலும் வெளியாகியுள்ளது

‘சாயங்கால மேகங்கள்’ – நீல பத்மநாபனின் கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய ‘ரசனைக் குறிப்பு’ –

//
முதுமை ஒரு மனநிலை. அது உருவத்தை மாற்றுகிறது. நடையைத் தளர்த்தி, குரலைச் சிதைத்து, கைகளை நடுங்கச் செய்து, கண்களையும் காதுகளையும் பழுது படுத்தி ஆளுமையைக் கேலிச் சித்திரமாக்குகிறது.

வயோதிகத்தைப் பற்றி நுணுக்கமாக கதைக்க தன் மத்திய வயதுகளில் ஷேக்ஸ்பியர், லியர் அரசனையும், கிளஸ்டர் பிரபுவையும் ‘கிங் லியர்’ நாடகத்தில் படைத்தார். இந்தக் கதாபாத்திரங்களுக்கு முதுமை கொண்டு தரும் இயல்பான அவசங்களோடு, புனைவின் கூறாக மற்ற துன்பங்களையும் அனுபவிக்க அளித்து ஓர் அதீத துன்பியல் வாழ்க்கையை மேடையில் நாடகமாக நிகழச் செய்தார்.

’என்னைத் தயை செய்து எள்ளி நகையாடாதீர்.
எண்பதும் அதற்கு மேலும் வயதான அறிவிலி நான்’

என்று முதுமை தரும் சுய பச்சாதாபத்தில் லியரை அமிழ வைக்கிறார் ஷேக்ஸ்பியர்.

போன நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞரான டைலான் தோமஸ், முதியவரான தன் தந்தை நோய்வாய்ப்பட்டு அனுபவித்த வாதனைகளைக் கடந்து முதுமைத் துயருக்கும் சாவுக்கும் அஞ்சாமல் வாழ்வை முன்னெடுத்துப் போகச் சொல்லிக் கவிதை செய்தார்

’இருண்ட நல்லிரவுக்குள் இதம்பதமாகப் போகாதே.
நாள் முடியும்போது முதுமை உத்வேகத்தோடு ஒளிரட்டும்.
மங்கி வரும் ஒளியை எதிர்கொண்டு
ஆவேசமாக, ஆவேசமாக முன்னேறு’.

தமிழில் முதுமையை நோயாகக் கருதி, அதைப் பழித்தல் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. ‘பயனில் மூப்பின் பல்சான்றோரே’ என்று நரிவெறுத்தலையார் சான்றோர்களை ‘பயனில்லாத முதுமை எய்தியவர்களே’ என விளிக்கும் புறநானூற்றுச் செய்யுள் உதாரணம். ’கெண்டை மீன்முள் போன்ற நரைமுடியும், கன்னத்தில் சுருங்கிய தோலும்’ உடையவர்களே என்று முதியவர்களை body shaming செய்வதும் இப்பாடலே.

எல்லோருக்குமா முதுமை கொடிது என்றால் எல்லோருக்கும் இல்லை தான். ஆனால் வயோதிகத்தில் காலடி எடுத்து வைக்கும்போது பொதுவான ஒரு பயம் தொடர்ந்து வருகிறது. அது சாவு பயம்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வார், ‘நாம் இறப்பு பற்றிய பயத்தில் இருக்கிறோம்; வாழ்ந்து கொண்டிருப்பதில்லை என்பதனால்’. சாவு எல்லோரையும் பாதிக்கிறது. சாவு நம்மிடம் இருந்து நாம் சேர்த்த செல்வத்தை, நாம் கட்டியமைத்த உயிரினுமினிய குடும்பத்தை, அன்பைப் பொழியும் சுற்றத்தை, தேடியடைந்த நம் நல்ல நண்பர்களை என்றென்றுக்குமாகப் பிரித்து விடுகிறது. இந்த இழப்பு குறித்து வெகுவாக அஞ்சுகிறோம். நம் சாவை விட, நமக்கு மிக்க நெருக்கமானவர்களின் இறப்பு பற்றி நாம் அதிகம் பயப்படுகிறோம்.

தன் முதுமையில் இருந்து, இறப்பு பற்றிய தனக்கேயான பயங்களில் இருந்து விட்டு விலகி நின்று அந்த பயங்களையும், நோவுகளையும், மானசீகமான சித்ரவதைகளையும், வாதனைகளையும் பற்றி நுணுக்கமாகப் பதிவு செய்ய எவ்வளவு படைப்பாளிகளுக்கு வாய்த்திருக்கிறது?

தமிழ் அறிஞரும் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைத்த முன்னோடியுமான திரு.வி.க தோத்திரப் பாடல்களைத் தொடர்ந்து எழுதித் தன் முதுமையை எதிர்கொண்டார். அந்தப் பாடல்களை சுய நையாண்டியாக ‘முதுமை உளறல்’ என்று தலைப்பிட்டு நூலாகவும் வெளியிட்டார் அவர்.

தமிழின் உன்னதப் படைப்பாளியான நீல.பத்மநாபனின் இந்த நூல் வயோதிகத்தை வாழ்க்கையின் மேல் மெல்ல வந்து கவியும் சாயங்கால மேகங்களாக நோக்குகிறது. பெய்து தீர்க்கப் போவதாக வேடிக்கை காட்டிப் பின்வாங்கித் திரும்பவும் திரண்டு வரும் கொண்டல் அது.

வாழ்க்கையை நேசிக்கும் இந்தப் படைப்பாளி ‘கிளரொளி இளமை’யை உற்சாகமாக எதிர்கொண்டு கடந்ததுபோல் முதுமையையும் தன்னிலிருந்து தன்னை அகற்றி நிறுத்திப் பார்த்துப் பதிவு செய்தபடி முன்னே செல்கிறார்.

நகுலன் இவருடைய படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுவது போல், ‘படிமம் மூலமும் இல்லாமலும் வெற்றிகரமாக இயங்கும் கவிதைகள் இவை’. முதுமையை சாயங்கால மேகங்களாக உருவகித்தாலும், நேரடியாக இறைவனைப் பார்த்து, ’வியாதி பயம் விட்ட பாடில்லையே, என்ன செய்வேன் வாசுதேவா’ என்று புன்சிரிப்போடு அங்கலாய்த்தாலும் இந்தக் கவிதைகள் அவற்றுக்கேயான புனைவு-அபுனைவு வெளியில் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்து அலாதியான வாசிப்பு அனுபவத்தை வழங்கத் தவறுவதே இல்லை.

ஒரு காலத்தில் கை வராதா என
எட்டாக் கனியாய் ஆசைப்பட்டவை
கை எட்டும் தொலைவில் வந்து கண் சிமிட்டியும்
கைப்பற்ற தோன்றாத விரக்தி நிலை.

என்று அவர் சித்தரிக்கும் முதுமை எல்லோருக்கும் வரும். அந்த விரக்தி ‘வீழ்ந்து விடுவேன் என்று நினைத்தாயா’ வகை, கனிந்த வைராக்கியமாகிறது கவிமனம் நிகழ்த்தும் வேதியியல் மாற்றத்தால் –

யாசிப்பது கீழான இறைஞ்சல்…
எது தகுதியோ அதைச் செய்…
இல்லையேல் உலக நன்மையை வழங்கு…
இதெல்லாம் கூட தேவையா…?

முதுமை ஓர் ஆளுமையைப் பற்றிப் படர்ந்து மேலேறும்போது, சாவு பற்றிய மனக் குறுகுறுப்பு எழுகிறது முதலில் என்பதைச் சொல்லும் வரிகள் இவை –

சினிமா விளம்பரங்களில் நடிகர் நடிகைகளின்
கவர்ச்சிபடங்களுக்குப் பின்னர்
கவனத்தைக் கவரும்
ஆங்காங்கே தென்படும்
சின்னச் சின்ன புகைப்படங்கள்
நீத்தோன் நினைவு முகங்கள்..
பார்ப்பதில் ஒரு குறுகுறுப்பு…

முதுமை, சாவு பற்றிய பயத்தை அடுத்து ஏற்படுத்த, முதுமையின் அவசங்கள் அநாயாச மரணத்தை எதிர்பார்க்க வைக்கின்றன. இறப்பு குறித்த அச்சத்தை இந்த எதிர்பார்ப்பு அகற்றுமா என்றால் இல்லைதான். எனினும் மனதில் எழும் வைராக்கியம் அந்த பயத்தை விலகி நிற்க வைக்கிறது.

பயத்தாலும் சாவாய்
பயப்படாவிடிலும் சாவாய்
பயந்து செத்தால்
காத்துநிற்கும் பந்து மித்திர சத்துருக்களுக்கு தொல்லை
பயப்படாமல் செத்தால்
வாழ்கிறவர்க்கும் ஆத்மாவுக்கும்
சாந்தி

இது மனிதர்கள் வசிக்கும் கான்க்ரீட் காடுகளை விட்டு நீங்கித் தனிமையில் பயிலும் யோகமில்லை. சகலமான உயிர்களோடும் கூட இங்கேயே இருந்து கர்மயோகம் பழகியபடி, சக மனிதர்கள் மேல் இயல்பான நேயம் மனதில் நிறைய, வாழ்க்கை எனும் ஜீவநதியோடு செல்லுதல் ஆகும். நீல பத்மநாபன் கவிதையில் இது வாழ்க்கை என்ற மருதத்திலும் பாலையிலும் சக பயணியாக வரும் வாழ்க்கைத் துணையோடு பரிமாறிக் கொள்ளும் பேரன்பாகிறது. கவிஞர் நம்பிக்கை துறந்த சூனியவாதி அல்லர். நேசம் நம்பிக்கையாகலாம்.

விமோசனம் வராதா என
ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும்
வேளையிலல்லவா உதயகிரியில் மெல்ல உயர்ந்து
ஊர்த்திறங்கி அருகில் வந்து குளிர் தென்றலாய்
இதழ் பதித்து துயிலெழுப்பியிருக்கிறாய்…!

அந்த நேசம் எல்லையில்லாது எங்கும் நிறையும் ஏக பரம்பொருள் மேல் வைத்த இறையன்பாக நீட்சி பெறுகிறது. அறிமுகமற்ற சக மனிதர்கள், சக ஜீவராசிகளின் மேல் பிரவகிக்கும் நேயமாகிறது அடுத்து.

தனி பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் வேறு வேண்டுமா…?
முன்னால் நின்ற ஒரு சிலரில்
ஒரு முகம் முன்பு எப்போதோ
கண்டு மறந்தது போல் ஒரு மாயத் தோற்றம்…
ஒரு குறு நகை அரும்புகிறதா…
நீண்ட அவர் கரத்துடன் தன் கரமும்
ஸ்பரிசித்து திரும்பியதும்
நெஞ்சில் நிறையும் நிம்மதி…

துயரங்களையும், பயங்களையும், வாதனைகளையும் கடந்த இந்த ஆசுவாசத்தையும் நிம்மதியையும் ஆழ்ந்த வாசிப்பில் நமக்கீயும் இந்தக் கவிதைகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன