கச்சேரிக்குப் போனவன் கதை

 

குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி

திரும்பிப் பார்த்தால் தீபாவளி முடிந்து, ஓசைப்படாமல் கார்த்திகையும் கடந்து போகும். அப்புறம் குளிரக் குளிர இன்னொரு மார்கழி பிறந்துவிடும். பொதுவாக மார்கழி-டிசம்பரில் நம்ம சென்னை ரெண்டு விதமான குழுக்களாகப் பிரிவு செய்யப்படுகிறது. ஒரு கோஷ்டி கருப்பு வேட்டி, சட்டை, கழுத்தில் துளசிமாலையோடு ‘சரணம் அய்யப்பா’ என்று உரக்க விளித்து ஆலப்புழை எக்ஸ்பிரஸ் அல்லது யாத்ரா டிராவல்ஸ் பஸ்ஸில் மலையாள பூமிக்கு விசிட் அடிக்கக் காத்திருப்பது. இது கிட்டத்தட்ட ஆம்பளைங்க சமாசாரம். மற்றதில் மகளிர் அணியும் உண்டு. வைர மூக்குத்தி, பட்டுப் புடவை, வாக்கிங் ஸ்டிக், ஸ்வெட்டர், சால்வை, மூக்கடைப்பு நிவாரண இன்ஹேலர் சகிதம் சங்கீத சபாவுக்குப் படையெடுப்பதில் இவர்கள் மும்முரமானவர்கள். தைப்பொங்கல் நேரத்தில் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி மலையேறும் முதல் கோஷ்டி சாமிகள் கூட சாத்வீகமானவர்கள். ரெண்டாவது படைதான் பயங்கரவாதிகள் நிறைந்தது. ‘நேற்றைக்கு சண்டே ஆச்சே. பரபரன்னு காலையிலே பத்தரைக்கு ஹைதரபாத் சகோதரிகளை க்ளோஸ் பண்ணிட்டு, பகல்லே சுதா ரகுநாதனை ஃபினிஷ் பண்ணிட்டு, சாயந்திரம் உன்னிகிருஷ்ணனை முடிச்சேன் . ஏழு மணிக்கு ஒ.எஸ்.தியாகராஜன் மாட்டினார். நடுவிலே மினி ஹால்லே ஒரு ஜூனியர், பாவம்.’.

ஒரு மப்ளர்காரர் அடுக்குத் தும்மல் ஆசாமியிடம் உரக்கச் சொல்லியபடி சபா படி ஏறுவதைப் பார்க்க வெலவெலத்துப் போனது. சாயந்திரம் அங்கே கச்சேரி அருணா சாயிராம் என்று அறிவிப்பு. அவரைக் காப்பாற்றக் கடவுளிடம் அவசரமாக அப்ளிகேஷன் போட்டபடி நானும் டிக்கெட் க்யூவில் கலந்தேன். ஜனவரி ஒண்ணு தள்ளுபடி விற்பனைக்கு நிற்கிற வரிசையை விட நீளமானது இது. ஹவுஸ்புல்.

‘வேணும்னா மேடையிலே உக்கார்ந்து கேளுங்க சார்’. நட்பாகச் சொன்னாள் கவுண்டர் கன்யகை. அதுக்கும் டிக்கெட். ஆயிரம் பேர் தங்களை சீரிய இசை ரசிகர்களாக பாவித்து முன்னால் உட்கார்ந்து பாடகியைக் கண்கொட்டாமல் பார்த்தபடி இருப்பார்கள். மூக்கில் அரித்தால் கூட சொரிந்து கொள்ள முடியாமல் அருகே நாம். அவங்களுக்கு வென்னீர் கூஜா தூக்கி வந்த போஸில் மேடையில் குந்தி இருந்து இசையை ரசிக்கணும். அதுக்கெல்லாம் நமக்கு ஞானம் போதாது,

கச்சேரி ஆரம்பித்ததும் சடசடவென்று கைப்பையைத் திறந்து சிலர் நோட்புத்தகத்தையும் பென்சில் பேனாவையும் எடுத்து மடியில் பரத்தி வைத்துக் கொள்வார்கள். பாடுகிறவரின் ஆலாபனை தொடங்கிய மாத்திரத்தில் பரபரவென்று தாள்கள் அரை இருட்டில் புரட்டப்படும். டிராபிக் போலீஸ்காரர் ஓவர் ஸ்பீடாகக் கடந்து போகிற வாகனங்களின் நம்பரை நோட் பண்ணுகிற அவசரத்தில் அப்புறம் ஏதோ நோட்புக்கில் எழுதிக் கொள்வார்கள். பக்கத்தில் இருப்பவரிடம் இந்தக் குறிப்புகள் இருட்டில் பரிமாறி அவ்வப்போது சரிபார்க்கப்படும். என்னதான் எழுதிவைப்பார்கள் அந்த ரகசிய குறிப்பேட்டில்? கூடவே ஏன் மர்மப் புன்னகை?

ஒரு சங்கீத சபாவில் வித்துவான் ஏதோ ராகத்தை விரிவாகப் பாடிக் கொண்டிருக்க எனக்கு இடப் பக்கம் இருந்தவர் முன்னால் குனிந்து என் வலக்கை ஆசாமியிடம் கண் காட்டி சமிக்ஞை செய்தார். ஊஹும், இல்லை என்று பதில் சைகை காட்டினார் இவர். மௌனமான ஏதோ சங்கீத சர்ச்சைக்கு இடையூறாக நான் நந்தி போல் நடுவில் உட்கார்ந்திருக்கும் அவமானத்தில் கூனிக் குறுகி சீட்டில் ஒட்டிக் கொண்டிருக்க, வலக்கையார் வெளியே போய் வந்து கிசுகிசுத்தார் – ‘சொன்னேனே, சபா கேண்டீன்லே வாழைக்காய் பஜ்ஜி, ரவாகேசரி தான்’.

சென்னை நகரத்துக்கும் இந்துஸ்தானி சங்கீதத்துக்கும் தாயாதி பங்காளி உறவு. கூட்டம் அலைமோதும். ‘இதான் கிரானா கரானா சங்கீத பாணியா? வாஹ், ஆஹிர் பைரவி’. இப்படி கண்டக்டட் டூரில் தாஜ்மஹாலைப் பார்க்க ஆக்ரா போகிற டூரிஸ்ட்கள் போல் எட்டி நின்று பார்த்துக் கேட்டு நாலு கிளாப்ஸ் உதிர்த்துவிட்டு அகாதமிக்கு வெளியே ஆட்டோ பிடிக்க நின்று அடுத்து கைதட்டுவார்கள். பண்டிட்டுக்கு பதிலாக ஓதுவார் தேவாரம் பாடினால்? காலி அரங்கமே மிஞ்சும்.

ரசிகர் படை இப்படி என்றால் வித்வான்கள் இன்னொரு ரகம். தப்பித் தவறித் தமிழ்ப் பாட்டு பாடினாலும் இடைவேளைக்கு அப்புறம் அவசர அவசரமாக இரண்டு தெலுங்கு கீர்த்தனங்களுக்கு நடுவே செருகி விடுவார்கள். போனனல் போகிறது என்று ஐந்து நிமிஷம் பாரதியாரும், இன்னொரு ஐந்து நிமிஷம் கோபால கிருஷ்ண பாரதியும் கீர்த்தனமாக வெளியே வந்து விழுவதுண்டு. ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’ என்று தேஷ் ராக மெட்டில் கூட பாரதிதாசன் உள்ளே வரக்கூடாது.

‘கச்சேரியில் மெல்லிசை பாடினால் தப்பில்லை. டப்பாங்குத்து நிச்சயம் பாடமாட்டேன்.’ இசைக்கலைஞர் ஒருத்தர் அண்மையில் அறிவித்தார். அவர் கஸலும் கர்னாடக சங்கீதமுமாக உருகட்டும். ‘உப்புக் கருவாடு ஊறவச்ச சோறு’ வேறு யாராவது போடாமலா போய்விடுவார்கள்?

(கடந்த வாரம் குங்குமத்தில் வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன