வாதினி தீபாவளி மலரில் வந்திருக்கும் சிறுகதை – ‘மூடல் மஞ்சு’
தியூப்ளே வீதி நாவலில் ஓர் அத்தியாயமாக வைத்திருந்து, மையக் கதையோட்டத்தோடு இசைந்து வரச் சற்று கடினமாக இருந்ததால், இங்கே சிறுகதை ஆனது.
மூடல் மஞ்சு இரா.முருகன்
மஞ்சுபாஷிணி. அது அவளுடைய சொந்தப் பெயர். மஞ்சுளா. இது வீட்டில் கூப்பிடும் பெயர். நாங்கள் வைத்தது. மஞ்சப் பாப்பா. அலுத்துப்போய் வேறே என்ன மாதிரி வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அஜந்தா தியேட்டருக்கு ஒரு புது மலையாள சினிமா வந்து சேர்ந்தது. ‘மூடல் மஞ்சு’.
சரியாகச் சொன்னால் மூடல் மஞ்ஞு. ஜலதோஷம் பிடித்த குரலில் சொன்னால் கரெக்டாக வரும். தியேட்டர் வாசலில் சைக்கிளை நிறுத்தி உட்கார்ந்தபடியே ஆளாளுக்கு ரெண்டு தடவை மூடல் மஞ்ஞு என்று சொல்லிப் பார்த்தோம். அடக்க ஒடுக்கமாக முந்தானையை இழுத்துப் போர்த்தி நடக்கிற நம்ம ஊர் பேரழகி மஞ்சு, மூடல் மஞ்சு. ரொம்ப சரியான பொருத்தம்.
பிரேம் நசீர் படம். எல்லா சினிமாவிலும் அவர் தான் மலையாளத்தில் ஏகபோக ஹீரோ. ஹீரோயினி? வேறே யார்? எல்லோருக்கும் பிரியப்பட்ட ஷீலா சேச்சி தான். சேச்சியை சினிமாவில் மூடல் மஞ்சுவாக்குவது சரியாக வருமோ என்று என் தோழன் வைத்தே என்ற வைத்தீஸ்வரன் சந்தேகத்தைக் கிளப்பினான். செம்மீன் கருத்தம்மாவாகவும், கள்ளி செல்லம்மாவுமாக சேச்சியைப் பார்த்து பழக்கப்பட்ட கண்கள், மூடிப் போர்த்தினால் ரசிக்குமா?
வைத்தே கேட்க, எல்லாம் தெரிந்த மாதிரி ஃப்ரான்ஸ்வா பதில் சொன்னான். – முந்தானை என்ற சமாசாரமே அங்கே கிடையாதே. புடவை உடுத்தினால் தானே அது இருக்கும்?
மலையாள ரியலிச சினிமாவில் எல்லாம் சேச்சி கிராமத்துப் பெண்ணாக வருவது வழக்கம். ‘கரிமுகில் காட்டிலே, ரஜனிதன் வீட்டிலே கனகாம்பரங்கள் வாடி, கடத்து வள்ளம் யாத்ரயாயி, கரையில் நீ மாத்ரமாயி’ என்று நடு ராத்திரிக்கு பிரேம் நசீர் தோணியில் உட்கார்ந்து ஹரிக்கேன் லாந்தர் வெளிச்சத்தில் பாடிக் கொண்டு போனால், உடனே நல்ல உறக்கம் கலைந்து ஷீலா சேச்சி எழுந்து வந்து துக்கப்பட்டு வெளுத்த முண்டும் எடுப்பான கருப்பு ப்ளவுஸுமாக பழைய படகு, மீன்வலை, வீட்டு மண்சுவர், திம்சுகட்டை, கோமாவில் இருக்கும் அடுத்த வீட்டுப் பாட்டி இப்படி எதிலாவது சாய்ந்து ஒயிலாக நிற்பார். நெஞ்சு விம்மித் தாழ, அந்தக் கவர்ச்சியை தீவிரமாக்கி தியேட்டரே பெருமூச்சு விடச் செய்வது தான் கேரள வழக்கம்.
”சேச்சியே மூடல் மஞ்சுவாக திரையில் வர ஆசைப்பட்டாலும், கேமரா கோபித்துக் கொண்டு ஆஃப் ஆகி விடுமே”, என்றான் வைத்தே.
“மூடல் மஞ்ஞு அப்படீன்னா மலையாளத்திலே மூடுபனின்னு அர்த்தம்”. நான் டைட்டிலுக்கு சப்டைட்டில் போட்டாலும் யாரும் லட்சியம் செய்யவில்லை.
எப்படியோ எங்க ஊர் மஞ்சு, மூடல் மஞ்சுவானதற்கு சினிமா காரணம்.
மூடல் மஞ்சு. கம்பளிப்பூச்சி பட்டுப்பூச்சி ஆகத் தன்மேல் பிசின் சுற்றி வைத்துக் கொண்டது போல சேலையால் இறுக்க மார்பைச் சுற்றித் தோள் பக்கம் முந்தானையாக வழிய விட்டிருப்பாள் மஞ்சு. ஒன்றுக்கு இரண்டாக உறையைச் சுற்றி வரும் பாரீஸ் சாக்லெட்க்கு நல்ல உதாரணம். எங்கள் மஞ்சு. உன்னதமான அழகி. கல்லூரியிலேயே பேரழகி. ஊரிலேயே மாநிலத்திலேயே இத்தனை அழகு வேறு யாரும் இல்லை. இன்றைக்குப் பூரா முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் எப்படி கரணமடித்தாலும் வேறு எதுவும் பார்க்க முடியாது. இழுத்து மூடிய மஞ்சுதான்.
எங்களது நண்பர் குழுவில் ஒன்பது பேர் உண்டு. ஆறு பையன்கள். மூன்று பெண்கள். ஆண் பெண் வேற்றுமை கடந்த நட்பு. நல்ல நட்பென்றால் கூட்டுக் கனவும் வரும். என்றாலும் கூட்டுறவுக் கனவில் அந்த மூன்று பெண்களும் சேர்த்தி இல்லை, வேறு யாரும் வராவிட்டால் கனவிலும் அவர்களே வருவதால்.
நாங்கள் எல்லாம் சேச்சி மேல் பெரும்பாலும், அதாவது யேசுதாஸ் குரலில் ப்ரேம் நசீர் ’கரிமுகில் காட்டிலே’ பாடாத நேரத்து ஷீலா சேச்சி மேல் வைத்தது ஒரு சகோதர வாஞ்சைதான். காதல் மற்றவை எல்லாம் சித்ராங்கி மேல்தான். போன வருடத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மார்க்கெட்டைப் பிடித்தவள். கட்டையாகக் குட்டையாக கப்கேக் போல லட்சணமான சித்ராங்கி மூக்கிலிருந்து பேச ஆரம்பித்தால் கிர்ரென்று ஒரு மயக்கம் வரும், லாஸ்பேட்டையிலிருந்து டவுனுக்கு, நெல் சாகுபடி செய்த வயல்களைக் கடந்து, வரப்பில் சைக்கிள் விட்டுப் போகும்போது வழியில் கள்ளுக்கடையில் தட்டுப்படும் கள்ளு வாடையை முகர்ந்தது போல அது.
போன ஜூன் மாதம் பட்டப்படிப்பு முதல் வருஷம் வகுப்பு ஆரம்பித்தபோது தான் மஞ்சுவை முதலில் பார்த்தோம். கிட்டத்தட்ட சித்ராங்கி உருவம். சித்ராங்கியை விட ஒருபிடி கூடுதல் உயரம். முத்து சில்க்ஸ் வாசல் கண்ணாடிப் பேழையில் சிக்கென்று புடவை அணிவித்து நிறுத்தியிருக்கும் ஜவுளிக்கடை பொம்மை மாதிரி தலையை நேர்த்தியாக வாரி இருந்தாள். கண் மை தீட்டியோ இல்லாமலோ, கூட்டம் கூட்டமாக எங்களை எல்லாம் விழுங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு தடவை சொல்லலாம். அழகி.
பக்கத்தில் கடந்து போய் ஓரக் கண்ணால் பார்த்தோம். தூரத்தில் நின்று பார்த்தோம். மாடியில் ப்ரொபசர் ஜான் கிரிகோரியின் ஷேக்ஸ்பியர் நாடகம் ’ஆஸ் யூ லைக் இட்’ வகுப்புக்குப் போகாமல் வாசலில் நின்றோம். நின்று கீழே பேராசிரியர்.கதிர்வேலுவின் ஒப்பிலக்கிய வகுப்புக்குள் நுழைந்த மஞ்சுவைப் பார்த்தோம். மேலே இருந்து, ஓரமாக வலப்பக்கம், இடது பக்கம் மட்டும், பின்னால் இருந்து ஒரு அபூர்வ கோணத்தில் இப்படி எந்த மாதிரிப் பார்த்தாலும் அவளுடைய நெஞ்சில் விளிம்பு கட்டி ஏதும் தெரியவில்லை. மற்றப் பெண்கள் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி, ஒரிஜினல் என்று நம்ப வைத்து நிமிர்ந்து நடப்பார்களே, அது மாதிரி இல்லை. எந்தப் பார்வை அம்பும் துளைக்க முடியாத கற்கோட்டை அது.
இப்படி சித்ராங்கி மேல் ஒருதலைக் காதலோடு மூடல் மஞ்சுவும் கனவுக் கன்னியாகிப் போனாள். ஒரு தடவை, ஒரே ஒரு தடவை மட்டும் சாதாரணமாக வந்துவிட்டுப் போனால் போதும். நாங்கள் நல்ல பிள்ளை ஆகிவிடுவோம். இன்ப ஊகங்களுக்கு இடமளித்தது என்று சாண்டில்யன் சரித்திரக் கதையில் வருவது போல் தேடிக் கொண்டே இருக்கமாட்டோம்.
மஞ்சுவின் அப்பா ப்ரான்ஸ் கடற்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று குயில் தோப்பில் பங்களா வீடு கட்டிக் குடி இருக்கிறார் என்று ஒரே உபரித் தகவல் அவளைப் பற்றித் தெரிந்தது. கட்டை குட்டையாக ஐந்தரை அடிக்கும் கீழே உயரமான மஞ்சு அப்பா – மஞ்சப்பா- நாங்கள் என் சி சியில் ரைபிளைத் தூக்கிக் கொண்டு வரிசையாகப் போனபோது அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு எங்களோடு பூரி கிழங்கு சாப்பிட்டார்.
சொல்ல மறந்து விட்டேனே, காலேஜில் பலரும் என் சி சி.ஏர்போர்ஸ். நாங்கள் முப்பது பேர் மட்டும் நேவி. ’ஒரே ஒரு வருஷம் இருங்க, அப்புறம் என்.சி.சி ஏர்போர்ஸ் சேரலாம்’ என்று நைச்சியம் செய்தார் பிரின்சிபால். என் சி சி ஆபீசர் உஷாராணி மேடம் நல்ல கேடட்களாக இருந்தால் தில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெற ஏற்பாடு செய்வதாக ஆசை வேறு காட்டினார்.
வெள்ளை கலர் டிரவுசர், தட்டையான வெள்ளை தொப்பி இதெல்லாம் நேவி என் சி சி. கட்டாந்தரையிலே நீச்சல் அடிக்கச் சொல்லுவாங்க பாரு என்று பயமுறுத்தினான் ப்ரான்ஸ்வா. ஆனால் அப்படி ஏதும் ஆகவில்லை.
காலேஜ் முடிந்து ஒரு நாள் சாயந்திரம் பஸ்ஸில் வீடு போகிறோம். முன் வரிசையில் மூடல் மஞ்சு தன் அத்யந்த சிநேகிதகளான லக்ஷ்மி பட்டத்ரிபாட், ஹரிதா லிங்கப்பா, நதி நாயுடு போன்ற கடமுட பெயர் மெல்லியலார்களோடு கூடு திரும்பும் நேரம்.
சாயந்திரம் கடைசி வகுப்பில் நம்ம மரை கழண்ட ராமநாதன் என்ற அழ அழ ராமு இலக்கியத்தால் எல்லோரையும் இம்ப்ரஸ் பண்ண, சிலபஸுக்கு ரொம்பவே வெளியே போய் புதுக்கவிதை என்று ஆரம்பித்து பொழுதெப்போ விடியும், பூவெப்போ மலரும், பவமெப்போ ஓயும் என்று வெய்யிலுக்கு உகந்ததல்லாத கவிதை எதையோ உற்சாகமாக விளக்கம் எல்லாம் சொல்லி எங்கள் இருப்பிடத்தில் குச்சி வைத்துக் குத்தி உள்ளே அனுப்ப முயன்றபடி இருக்க நாங்கள் மூடல் மஞ்சு, சித்ராங்கி கூட்டுக் கனவிலிருந்தோம்.
பஸ்ஸில் அதைச் சொல்லி பொழுதெப்போ விடியும், பூவெப்போ மலரும் என்று வீராஸ் என்ற வீராஸ் கந்தசாமி கையை வெண்பா பாடுகிற மாதிரி அசைக்க, எல்லோரும் பொழுதெப்போ விடியும் பூவெப்போ மலரும் என்று கூடவே பிச்சைக்காரன் கதறலாக கோஷ்டி கானம் இசைத்தோம். குப்புராஜ் மஞ்சுவைப் பார்த்தபடி, பொழுதெப்போ விடியும் பூவெப்போ மலரும், ரெண்டு காயெப்போ பழுக்கும் என்று இஷ்டத்துக்குத் தட்டிவிட, மஞ்சுவானவள் பஸ்ஸுக்குள் எச்சில் வராமல் காரி உமிழ்ந்து கைப்பையில் துப்பட்டா துணியை எடுத்து இன்னும் இறுக்கமாக மேலே போர்த்திக் கொண்டாள்.
இழுத்து மூடல் மஞ்சு, இறுக்கி மூடல் மஞ்சுவான அந்த ரேட்டில் போனால் அவள் வீட்டிலோ காலேஜிலோ இந்த கலாட்டாவை எல்லாம் பற்றி உடனே புகார் கொடுப்பாள் என்று எதிர்பார்த்து நாங்கள் குப்புராஜை தனியாக விட்டுவிட்டு அஜந்தா தியேட்டர் ஸ்டாப்பிலேயே இறங்கி விட்டோம்.
எப்படியோ இடைப்பட்ட நாட்களில் மூடல் மஞ்சு அமேலிக்கு சிநேகிதியானாள். அமேலிக்கு சிநேகிதி என்பதால் அவள் என் ப்ரியசகி கயலுக்கு சிநேகிதியாவது தவிர்க்கப்பட்டது.
அமேலி, ஒரு மழை ஓய்ந்த நாளில் பிற்பகல் வேளையில் தாவர இயல் வகுப்பை கட் பண்ணி விட்டு மூடல் மஞ்சுவை தன் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு விரைவதைப் பார்த்து பொழுதெப்போ விடியும் என்று அமுக்கமாக கோஷ்டி கானம் பாடினோம்.
அடுத்த நாள் மதியம் சாப்பிடும் நேரத்தில் அமேலி மூடல் மஞ்சுவோடு திரிந்து கொண்டிருந்த போது, போதலீர் கவிதைத் தொகுதி பிரான்ஸில் இருந்து வந்துவிட்டது என்று பொய் சொல்லி அவளை கேண்டீனுக்கு வரச் சொன்னோம். இந்த போதலீர் இருநூறு வருஷம் முந்திய பிரஞ்சுக் கவிஞர். புரட்சிக் கவிஞர். அமேலி அவர் கவிதை என்று சொல்லிச் சொல்லி, நான் போதலீர் என்று பெயர் சொன்னாலே கவிதை ஏதும் வாசிக்காமலேயே, கண் கிறங்க ரசிக்கக் கற்றுக் கொண்டேன். அவருடைய எல்லா கவிதைகளும் பிரஞ்சு, ஆங்கிலம் என்று இருமொழியில் அழகாக அச்சடித்த பதிப்பு கிடைக்குமா என்று அமேலி தேடிக் கொண்டிருக்கிறாள். அதை சாக்காக வைத்து அவளை ஈர்த்தோம். போதலீராவது, காதலீராவது சும்மா உடான்ஸ்.
”ஆமா, மஞ்சுவோட அவங்க வீட்டுக்கு போனேன். என்ன இப்போ”?
அமேலி, எடுத்ததுமே எகிறினாள். சகித்து, விசேஷம் எல்லாம் கொஞ்சம் போலவாவது சொல் சொல் பெண்ணே என்று முகவாய்க்கட்டையைப் பிடித்துக் கெஞ்சாத குறையாகக் கோரிக்கை விடுத்தோம். ஒரு நிமிஷத்திலே எவ்வளவு வருமோ அவ்வளவு தான் சொல்வேன் என்று வீம்பு. சரி சொல்லம்மா என்றோம். பெண்ணாச்சே, என்ன செய்ய ?
”ரொம்ப சின்ன வயசில் மஞ்சு மேல் பக்கத்து வீட்டில் யாரோ, இங்கில்லை, பிரான்சில் பிரஞ்சு கடற்படை குவார்டர்ஸில், வன்முறை பிரயோகித்தார்களாம். இல்லை, நீ நினைப்பது போல் இல்லை. அதை விட கொடூரம். விளையாட்டாக என்று சிகரெட்டால் மாரில் சுட்டிருக்கிறான் ஏதோ ஒரு பிரஞ்ச் நேவி ஆபீசர் கிராதகன். அவளுக்கு பேசக் கூட வராத, தத்தக்கா பித்தக்கா நடை நடந்து கொண்டிருந்த காலம். அப்போதிருந்து ஃபோபியாவாக மேலே பாதுகாக்க வேணும் என்று வெறியாகி ” ஒரு நிமிடம் முடிந்ததால் அந்தரத்தில் நிறுத்தி விட்டாள் மேற்கொண்டு சொல்லாமல்.
சரி, மஞ்சு வீட்டுக்கு விழுந்தடித்துக்கொண்டு ஏன் போனே? கேட்டதும் தோளில் சார்த்திய பூப்போட்ட லெதர் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் – போதலீர் கவிதைகள் பிரஞ்சிலும் இங்கிலீஷிலும் அச்சடித்த புத்தகம்.
அதற்கு அப்புறம், நாங்கள் யாருமே மஞ்சு பற்றி ஒன்றும் பேசவில்லை. முன்னால் இருந்தோ, பின்னால் இருந்தோ, ஓரமாக நின்றோ மஞ்சுவைச் சீண்டுவதை விட்டுவிட்டோம். நாங்கள் போகும்போது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் மஞ்சு அதை விட்டு எங்கள் ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்க்கத் தொடங்கினாள். அடுத்து எங்களைக் கடந்து போகும்போது அழகாக புன்சிரிப்பு பூத்தாள். நாங்கள் இரக்கத்தோடு அவளுக்குப் பதில் சிரிப்பு சிரித்தது எங்களுக்கே நன்றாகத் தெரியவில்லை. காமெடியாக ஆரம்பித்த சினிமாவில் விஜயகுமாரி வந்து பிழியப் பிழிய அழுதபடி காட்சி எல்லாம் கடந்து போகிற மாதிரி துக்கம்.
ஒருநாள் மஞ்சு கேட்டே விட்டாள். “நாம் எல்லாம் ஒரே காலேஜ். ஒரே ஊர். ஒரே மொழி. ஒரே வயசு. ஏன் என்னைப் பார்த்தா, பிரேதம் கடந்து போகிறபோது தொப்பியைக் கையில் வைத்தபடி அஞ்சலி செய்யிற ப்ரஞ்ச் கான்ஸ்டபிள் போல துக்கம் அனுஷ்டிக்கிறீங்க?”
ஒருத்தர் இன்னொருத்தரைப் பார்த்தபடி ஒரு நிமிஷம் நின்றோம், அப்புறம் போட்டு உடைத்து விட்டோம். கண்ணில் நிறைந்த கண்ணீருமாக அவளைப் பார்க்க, கலகலவென்று சிரித்தாள் மஞ்சு.
“அமேலியும் நானும் போதலீர் கவிதைகளை உரக்கப் படித்து ரசித்துக் கொண்டிருந்தோமே தவிர வேறே எதுவும் பேசவில்லையே.” என்றாள் மஞ்சு. “அப்புறம் அப்புறம் அப்புறம்” என்று வழக்கம்போல் பம்மினான் அந்த்வான்.
“அப்புறம் சப்பரம் தான்” என்று சிரித்தாள் மஞ்சு. சப்பரம் போன்ற, அதைவிடப் பெரிய தேர் போல அழகான பெண். அவள் சிரிக்கும்போது வேறெதுவும் புலன் விசாரணை செய்யாமல், சேர்ந்து சிரிப்பது நன்று என்பதால் நாங்களும் சிரித்து வைத்தோம். “அமேலியும் நானும் ப்ரஞ்ச் நாவல் எழுதிட்டிருக்கோம். அதுலே வர்ற சீன் அமேலி சொன்னது”, என்றாள் மஞ்சு.
ஆக, அமேலி சொன்ன மாதிரி கொடூரமான முன்கதை ஏதும் இல்லை என்று ஆறுதல். ஏன் இப்படி பொய் சொன்னாய் என்று ஐயங்கார் பேக்கரியில் கேக் வாங்கிக் கொடுத்து பக்கத்தில் இருத்தி அமேலியைக் கேட்டேன்.
“வேணும்னுதான். அப்படி என்னடா சான் பாக்கற வெறி? எத்தனை பார்க்க உத்தேசம்? ஒரு நூறு? ஆயிரம்? ஒரு மில்லியன்?” எகிறினாள்.
சான் –ன்னா என்னன்னு நீ சொல்றதைப் பொறுத்து. ஏழு கூட இருக்கலாம். இல்லே எண்ணூத்தி முப்பத்தொன்பது என்று விடாமல் கேட்டேன்
”முகரை. ஒத்தப்படையிலே எந்தப் பொண்ணுக்குடா அது அது யு மீன் அது” முகம் குங்குமமாகச் சிவந்து அவள் குழற விஷயம் அர்த்தமாச்சு. மார்பகத்துக்கான ப்ரஞ்ச் சொல், சான்.
உடனே சீரியஸ் ஆனேன். எல்லாரையும் மாதிரி உடுத்தி நடந்தா மஞ்சுவையும் அவளுடைய சான் சான் பத்தியும் யாரும் யோசிச்சிருக்கவே மாட்டோம். இப்படி மூடி மூடி வச்சுத்தான்.
”ஏன் மூடி வச்சா உடனே பார்த்தாகணுமா?” அமேலி வார்த்தையால் சுட்டாள்.
அமேலியின் காதுமடலை மென்மையாக வருடியபடி ஆண்குலத்தின் பொதுவான இழிசெயலுக்காக மன்னிப்பு கேட்டேன். இந்தச் செய்கையில் அவளுக்கு இருக்கும் பொய்க் கோபம், மெய்க்கோபம் எல்லாம் வடிந்து விடும் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். கயல் கண்ணில் படாத நேரத்தில் இது அரங்கேறும். இப்போதும் அரங்கேறியது என்று பார்த்தால் கையைத் தட்டிவிட்டு விட்டாள் பழிகாரி. ”நீ சான் சான் பார்க்க அலஞ்சு அலஞ்சு நாற்பது வயசு, ரெண்டு மாசம், ஏழு நாள்லே கண்ணுமுழி வெளியே வந்து விழுந்து சாகப் போறே” என்று சாபம் வேறே.
ஈதிப்படி இருக்க இதற்கு ரெண்டு நாள் கழித்து கெமிஸ்ட்ரி லாபரட்டரியில் டொப்பென்று ஏதோ சத்தமாக வெடித்துச் சிதறிய சத்தம். தொடர்ந்து, எல்லோரும் ஒரே நேரத்தில் பேசும் பரபரப்பான சூழ்நிலை. யாருக்கும் என்னவென்று புரியாமல் எல்லோரும் கெமிஸ்ட்ரி பக்கம் தலை சாய்ந்த நேரம். ”மயக்கம் போட்டுட்டாங்க மயக்கம் போட்டுட்டாங்க” என்று பிசிக்ஸ் அட்டெண்டர் லூர்துசாமி சொன்னார். யார் எப்படி என்ன ஆச்சு என்ற கேள்விகளுக்கு பதிலாக ஒரு பெரிய உருண்டையாக புகையிலையை உருட்டி வாயில் போட்டபடி கேதோட் ரே ட்யூபை வீட்டுக் கொல்லப் புறத்தில் கக்கூஸ் வாளி மாதிரி சர்வ சாதாரணமாக நகர்த்தி வைத்துக் கொண்டிருந்தார் அவர்.
அந்த்வான் செய்தி கொண்டு வந்தான். மஞ்சு கெமிஸ்ட்ரி ப்ராக்டிக்கலின் போது எதையோ சரியான அளவிலில்லாமல் எடுத்துக் காய்ச்ச குடுவை வெடித்ததாம். நல்ல வேளை அவள் மல்ட்டி லெவல் கவசம் மாதிரி மார்பில் சுற்றிச் சுற்றிச் சேலை அணிந்திருப்பதால் கண்ணாடி சில்லு வகையறா அவள் நெஞ்சில் மோதி அப்படியே திரும்பி விட, எல்லாம் சுபம்.
அவள் வீட்டுக்கு ஆஸ்தான ஜோசியரான மாம்பட்டு கிழார் இதை ஏற்கனவே கணித்துச் சொல்லியிருந்ததால் தான் மூடல் மஞ்சுவாக அவள் திரிந்து கொண்டிருந்தாளாம். இதுவும் அந்த்வான் சொன்னது.
அடுத்த வாரம் முதல் மூடல் மஞ்சுவைக் காணோம். காலேஜ் விடுமுறை என்பதால் அவளைக் கிட்டத்தட்ட மறந்தே போனோம். விடுமுறையில் ஒரு ராத்திரி ராஜசேகரன், மஞ்சுவுக்கு புற்றுநோய் முற்றி ஒரு மார்பை நீக்கி விட்டதாகச் சேதி கொண்டு வந்தான்.
இதற்காக வருந்திக் கொண்டிருந்தபோது, படிப்பு முடிந்து, எனக்கு தில்லியில் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் சுமாரான உத்தியோகம் கிடைத்தது. தில்லிக்கு ஊர் சுற்றிப் பார்க்க வந்த என் சகாக்கள் ராத்திரி குடித்தபோது மஞ்சு பற்றியும் பேசினார்கள். கல்கத்தாவில் இறுக்கமான சட்டையும் ஜீன்ஸுமாக எவனோ வங்காளியோடு மோட்டார் சைக்கிளில் மஞ்சு போய்க் கொண்டிருந்ததைப் பார்த்ததாக இன்னும் விடலைத்தனம் மாறாத இங்க்லீஷ் ட்யூட்டர் மாத்யு பொன்னானி சொன்னானாம். மகிழ்ச்சிதான். எனக்கு கல்கத்தா போய் அது உண்மைதானா என்று பார்த்து வர ஆசை. ஆனாலும் ஒரு ஜதை சான் சான் பார்க்க ரயில் டிக்கட், ட்ராம் டிக்கட், லாட்ஜில் போய்த் தங்க கட்டணம், சாப்பாட்டுச் செலவு இப்படி எல்லாம் செலவழிக்கணுமா என்று தோன்ற, வேண்டாம் என வைத்தேன்.
அடுத்த வருஷம் நான் காதல் செய்திருந்த கயல் என்ற கயல்விழியைக் கல்யாணம் செய்து, தில்லியில் குடித்தனம் வந்துவிட்டேன். அவளுக்கு நானும் எனக்கு அவளுமாக இருபத்தைந்து வருடங்கள் உருண்டோடிப் போயின,
ஏதோ உருப்படாத பேச்சு அவளோடு ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மஞ்சுவோடு அவள் வீட்டில் அமேலியும் தானும் போதலீர் கவிதைகளை ரசித்துக் கொண்டிருந்ததாகச் சொன்னாள். மூன்று பெண்களோ நான்கு ஆண்களோ சேர்ந்து உட்கார்ந்து பிரஞ்சு கவிதை பற்றிப் பேசினார்கள் என்று செய்தி வந்தால் உலகம் ஏன் இப்படித் தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்று கவலைப்பட வேண்டியிருக்கிறது. .
கடைசியில் ஒத்துக் கொண்டாள். போதலீர் மட்டும் இல்லையாம். மூன்று பெண்களும் மஞ்சு வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாததால் ஜின்னும் பியரும் சுகமாக அடித்துவிட்டு அரட்டையும் போட்டார்களாம்.
”மூடல் மஞ்சு ரகசியம் என்னன்னு நான் மஞ்சுவைக் கேட்டேன். உடனே சொல்லிட்டா”. கயல் கண்கள் மினுமினுக்கச் சொன்னாள்.
“என்ன அது?” நான் இருபது வயது குறைந்த ஆர்வத்தோடு காலேஜ் மாணவனாகக் கேட்டேன்..
“அது லேடீஸ் சமாசாரம். உனக்கு எதுக்கு? வயசா லட்சணமா இருடா”. கயல் மரியாதையோடு என்னிடம் சொன்னாள். அவள் சொன்னால் அப்பீல் ஏது?
(நிறைவு)