இன்று ஐப்பசி மாதம் சஷ்டி. என் தந்தையார் திரு.என்.எஸ்.ராமசாமி ஐயர் 1997-ல் காலமான தினம். என் வாசிப்பையும், எழுத்தையும் ஊக்குவித்த அப்பா நினைவில் கண் கலங்குகிறேன்.
இந்தக் கதை ‘அம்பி’யில் வரும் அம்பி அவர்தான். 1920-களில் நிகழ்வது இது
’இரா.முருகன் கதைகள்’ பெருந்தொகுப்பில் இருந்து –
————————————————————————————-
இரா.முருகன் சிறுகதை : அம்பி
அம்பியைக் கடைசியாகத்தான் சேர்த்துக் கொண்டார்கள். மூன்று பேராகப் போக வேண்டாம் என்று சேஷப்பா சொன்னதாலேயே அவனுக்கு வரமுடிந்தது.
‘இதுக்கென்ன மூணும் நாலும் .. ஆயுசு பூரா நாள் நட்சத்திரம் பாத்து என்ன வாழ்ந்தது.. ‘
அப்பா முணுமுணுத்தது சேஷப்பாவுக்குச் சரியாகக் கேட்கவில்லை.
‘என்னடா நாகா ? செத்தெ எரெஞ்சு சொல்லேன். சொல்ல மாட்டான். ஒக மாட ஒக பாணம் தான் இவனுக்கு .. பாணம் ஏது .. கட்டைப் பேனாதான். என்னடா அம்பி சிரிக்கிறே ? உங்கப்பனைப் பத்திப் பேசினா உனக்குச் சிரிப்பு வருதா ? ‘
அம்பி அப்பாவைப் பார்த்தான். கோபித்துக் கொள்வாரோ ? நேற்றிலிருந்து சுமுகமாக இல்லை அப்பா. வழக்கமாகக் கைக்குடி போகிறபோது முந்தினநாள் ராத்திரியே சொல்லி வைத்துத் தயார்ப்படுத்தி, விடியற்காலையில் தூக்கம் கலைவதற்கு முன்னாலேயே எழுப்பிக் குளிக்க வைத்துக் கூட்டிப் போகிறவர் அவர்.
‘அக்காவைப் பார்த்துட்டு வரலாம் வாடா .. ‘
நேற்றுப் பூரா அப்பாவின் அழைப்புக்காகக் காத்திருந்தான் அம்பி. நேற்றுக் காலையில் ஐயணையிடம் வண்டியைச் சரிப்படுத்தி வைக்கச் சொன்னபோதே தெரிந்து விட்டது இன்று பயணம் நிச்சயம் என்று. ஆனாலும் அப்பா கூப்பிடவில்லை. வழக்கத்துக்கு விரோதமாகப் பெரியப்பாவைக் கூட்டிக்கொண்டு போகப் போகிறார் என்றும் தெரியவந்தது. சாயந்திரம் அழுது அடம் பிடித்துப் பார்த்தும் பிரயோஜனமில்லை. அப்பா அதட்டினதுதான் மிச்சம்.
காலையில் எல்லோருக்கும் முன்னால் எழுந்து ஐயணையிடமும் சொல்லிப் பார்த்தான். இவன் சம்மதித்தாலாவது ஏதாவது நடக்காதா என்று நப்பாசை. பெரியப்பா சேஷய்யர் வக்கீலாகவும் அப்பா வக்கீல் குமாஸ்தாவாகவுமாகப் பெரிய உத்யோகம் பார்க்கிறார்கள். என்ன பிரயோஜனம் ? இரட்டை மாட்டு வண்டி ஓட்டத் தெரியுமோ ? அதற்கு ஐயணை வேண்டும். அவனைக் கூட்டிக் கொண்டு வரக் கொட்டகுடித் தெருவுக்கு அம்பிதான் போகவேண்டும்.
‘என்ன அம்பி ஐயரே பள்ளிக்கூடம் கிடையாதா இன்னைக்கு ? ‘
‘ஞாயித்துக் கிழமை எல்லாம் பள்ளிக்கூடம் வைப்பாங்களா என்ன ? ‘
‘உங்களை வக்கீலய்யா திண்ணைப் பள்ளிக்கூடத்திலே போட்டிருந்தாத் தெரியும். ஒரு நாளாவது ரஜா உண்டா ? என் பொழப்பு மாதிரித்தான். ‘
‘நானும் கைக்குடிக்கு வர்றேன் ஐயணை ‘
‘வக்கீலய்யா வரச்சொன்னா ராஜா மாதிரி வண்டியிலே வாங்க. ‘
‘நீ சொன்னாச் சரிம்பார் பெரியப்பா. ‘
ஐயணை அசையவில்லை.
‘சொல்றியா, இல்ல வந்தேமாதரம்னு கத்தட்டா ? போலீஸ்கார நாயுடு வீட்டிலே கேக்கிற மாதிரிக் கத்துவேன். அவர் வந்து நின்னா நீதான் கத்தச் சொன்னதாச் சொல்வேன். ‘
‘ஐயரே, ஏன் பாடாப் படுத்தறீங்க ? நீங்க என்ன வேணும்னாலும் கத்துங்க. நாயுடு காதுலே தொளசி அடச்சுக்கிட்டுப் பெருமா கோவிலுக்குப் போறதைப் பார்த்தேனே. ‘
‘அவர் திரும்பி வரும்போது கத்துவேன். வந்தே மாதரம். வந்தே மாதரம். ‘
சேஷப்பா வெளியே வந்தபோது அவர் காதில் வழக்கம்போல் அரைகுறையாகத்தான் விழுந்தது.
‘என்னடா அம்பி, காலம்பற பிடிச்சுக் கத்திண்டு இருக்கே ? ‘
‘வந்தே மாதரம் .. வந்தே மாதரம் .. ‘
‘இரையாதேடா .. காதுலேதான் விழறதே.. அரண்மனை வாசல் பக்கம் ஏதாவது கூட்டம்னு தமுக்கு அடிச்சுண்டு போறானா ? பல்லுக்கூடத் தேய்க்காம என்னடா வந்தேமாதரம் ? ‘
‘கைக்குடிக்கு நானும் வருவேன். வந்தே மாதரம்.. வருவேன் .. வந்தே மாதரம்.. ‘
‘சரி சரி வா .. நாகா, இவனையும் கூட்டிண்டு போகலாம். மூணு பேரா இருக்கோம் பாரு. ‘.
அம்பிக்கு வண்டியில் ஏறின போது சந்தோஷமாக இருந்தது. இன்னும் இரண்டு மூன்று மணி நேரம் வழி வேடிக்கை எல்லாம் பார்த்துக்கொண்டு போகலாம். ஊருக்கு வெளியே பச்சை வயலும், பனந்தோப்பும், தரிசும், குளத்தில் மிதக்கும் தாமரைப் பூவும் ..
‘எங்க அக்கா ஊருக்குப் போறேன் ‘. வழியில் யாராவது கூடப்படிக்கிற பையன்கள் நடந்து போனால் கூப்பிட்டுக் கத்திப் பொறாமைப்பட வைக்கலாம். இதுவே பஸ்ஸாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். சொல்லி வைத்துவிட்டால், காலையில் வீட்டு வாசலில் நிறுத்தி ‘பாம் பாம் ‘ என்று முழக்கிக் காத்திருந்து கூட்டிப் போவார்கள். கட்டைப் பலகை ஆசனமும், இன்னும் வரவேண்டியவர்கள் வீட்டில் எல்லாம் நின்று நிதானித்துப் போகிறதும்தான் கொஞ்சம் கஷ்டம். ஆனால் கைக்குடிக்கெல்லாம் பஸ் போகாது.
கைக்குடி குக்கிராமம். அக்கா வீடு கூட மண் சுவரும், மண் தரையுமாகத்தான் இருக்கும். வீட்டுக்குப் பக்கத்தில் போகும்போதே சாணிவாடை மூக்கைத் துளைக்கும்.
‘எல்லாராத்திலேயும் வீட்டுக்குப் பின்னாலே தொழுவம் இருக்கும். இவாத்திலே தொழுவத்திலே மிஞ்சினது போக ஓரமா வீடு பண்ணி இருக்கா.. ‘ சேஷப்பா அடிக்கடி சொல்வார்.
‘ஏண்டி தங்கம் .. உங்காத்துலே காலம்பற ஆகாரம் எதுவும் பண்ணுவியோ ? ‘
அக்கா இங்கே வந்திருக்கும்போது கொஞ்சம் கிண்டலாகக் கேட்பார்.
‘பண்ணுவேன் பெரியப்பா. பழையதுதான். தொழுவம் அலம்பிப் பாத்திரம் தேய்ச்சதுக்கு அப்புறம் சாப்பிடுவேன். ‘
‘சாப்பிட்டுட்டு ? ‘
‘வரட்டி தட்டணும். தண்ணி எறச்சு வைக்கணும். குளிக்கணும். ‘
‘அப்புறம் மாட்டுக்கு வைக்கோல் போடணும். மாடு கறக்கனும். சாணி அள்ளணும். கையைக் கொண்டாடி குழந்தே.. பூ மாதிரி இருந்த கை. சாணி நாத்தம் அடிக்கறது பாரு.. நகத்துலே எல்லாம் அழுக்கு ஏறி.. ‘
‘எங்கே அடிக்கறது ? கட்சிக்காரன் கொண்டு வந்து தந்தான்னு குடுத்தேளே சீமைச் சோப்பு .. அதைத் தேச்சுன்னா குளிச்சேன். ‘
‘கூட ஏதாவது தேச்சுண்டியோ ? ‘
‘சீயக்காய்ப்பொடி .. எண்ணெய் போக வேண்டாமா ? ‘
‘கெட்டது குடி போ .. சோப்புப் போட்டுண்டு சீயக்காயையும் அரப்பையும் மேலே அப்பிண்டு குளிச்சா வாசனை இப்படித்தன் போகும். உன் தம்பி உன் கிட்டே சொல்லலியா ? ‘
‘அவனா ? மொதல்லே அந்த விதேசிச் சோப்பைத் தலையை சுத்தித் தூக்கி எறி .. அப்பத்தான் பேசுவேங்கிறான். அதெல்லாம் பழகிண்டா சுதந்திரம் வந்த அப்புறம் கஷ்டமாப் போகுமாம் .. ‘
‘தம்பி வேணுமா, வாசனைச் சோப்பு வேணுமான்னு தீர்மானிச்சுக்கோ .. ‘
அக்கா சோப்பைப் பெட்டியோடு கொண்டு வந்து பெரியப்பா மேஜையில் கேஸ் கட்டுகள் மேல் வைத்துவிட்டுப் போய்விட்டாள். ‘எங்க அம்பி சொன்னாச் சரியாத்தான் இருக்கும். ‘
ஊர் எல்லை நெருங்கிக் கொண்டிருந்தது. பிள்ளைவயல் காளி கோயில் பக்கம் வந்தபோது பெரியப்பா வண்டியை நிறுத்தச் சொன்னார்.
‘அம்பி வாடா .. நாகா, நீ இங்கே இருந்தே கும்பிடு. உன் வாதக் காலை வச்சுண்டு ஏறி இறங்கிக் கஷ்டப்பட வேண்டாம். ‘
வேலிகாத்தான் செடிகளில் துணி சிக்காமலும், தரையெல்லாம் படர்ந்து கிடந்த சப்பாத்திக் கள்ளியையும் நெருஞ்சி முள்ளையும் மிதிக்காமலும் கவனமாக நடந்து போனார்கள்.
‘வேண்டிக்கோடா அம்பி .. இன்னமேலாவது நம்மாத்திலே எல்லாம் நல்லதவே நடக்கணும்னு .. ‘
பெரியப்பா குரல் தழதழத்தது.
நல்ல காரியம் எல்லாம் நடக்கட்டும். நடக்க வேண்டியதுதான். பட்சணம் கிடைக்கும். உடுக்கப் புதிய சட்டையும், வேட்டியும். வேட்டி வேண்டாம். கிழித்துக் கட்டிக்கொண்டாலும் தரையில் புரளும். அவிழ்ந்துபோய் மானத்தை வாங்கும். மதுரையில் தையல்காரர்கள் கால்சராய் தைத்துத் தருகிறார்களாம். வாங்கித் தரச்சொல்லலாம்.
‘சீக்கிரம் வாடா அம்பி. வெய்யில் ஏற ஆரம்பிச்சாச்சு .. ‘
குங்குமப் பரணியிலிருந்து குங்குமத்தை அள்ளிக் கையில் இடுக்கிக்கொண்டு பெரியப்பாவை அவசரமாகப் பின் தொடர்ந்தான்.
‘அப்பா, சாமி குங்குமம். ‘
‘நான் இன்னும் குளிக்கலேடா. ‘
அப்பா எங்கேயோ வெறித்துக்கொண்டு சொன்னார்.
அம்பிக்கு ஆச்சரியமாக இருந்தது. விடியற்காலையில் முதல் ஆளாக உடைய சேர்வார் ஊருணியில் குளித்துவிட்டு வீபுதி மணக்க வருகிற அப்பாவா இது ? என்ன ஆயிற்று இவருக்கு ?
வண்டி ஆடி ஆடிப் போய்க் கொண்டிருந்தது. ஐயணை புகையிலைக் கட்டையை மென்றுகொண்டு அரைக்கண் மூடி நிஷ்டையில் இருக்கிற முனிவர்போல் வண்டிக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். ‘ஹேய் .. ஹேய்.. ‘ என்று அவ்வப்போது மாடுகளை விரட்டுவதிலிருந்து அவன் தூங்கவில்லை என்று தெரிந்தது.
யாரும் எதுவும் பேசவில்லை. பசித்தது. வழியில் எதுவும் சாப்பிடக் கிடைக்காது. எப்பொழுது கைக்குடிக்குக் கிளம்பினாலும், ஓமப்பொடி, காராபூந்தி, பூவன்பழம் என்று ஏதாவது கொண்டு வருவார்கள். இப்பொழுது அப்பாவும் பெரியப்பாவும் கையை வீசிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் பசிக்கவில்லை. அம்பியை நினைக்க வேண்டாமா ?
கைக்குடி போனதும் சாப்பாடு தயாராக இருக்கும் என்று தோன்றியது. ஒவ்வொரு தடவையும் போவதற்கு முன்னால் யாரிடமாவது இரண்டு நாள் முன்னதாகவே சேதி சொல்லி அனுப்பிவிடுவார்கள். கட்சிக்காரர்கள் யாராவது அந்தப் பக்கம் போய் வந்து கொண்டிருப்பார்கள்.
பெரியப்பா சன்னத்து வாங்கி வக்கீல் தொழில் செய்ய ஆரம்பித்ததிலிருந்து இந்தச் சுற்று வட்டாரத்தில் ஐம்பது மைல் தூரம் என்ன வழக்கு வியாஜ்யமாக இருந்தாலும் முதலில் சேஷய்யரைப் போய்ப் பார்க்கத்தான் தீர்மானிப்பார்கள் என்று அப்பா பெருமையோடு சொல்லிக் கொள்வார்.
ஆனால் அப்பா என்னமோ லக்ஷ்மண ராயரிடம்தான் குமாஸ்தாவாக இருக்கிறார். தினம் பொழுது விடிந்து அம்பி பள்ளிக்கூடம் கிளம்புவதற்கு முன்னே அப்பா தகரப் பெட்டியில் பழுப்பு ஏறிக்கொண்டிருக்கும் கேஸ் கட்டுகளைத் தூக்கி வைத்துக்கொண்டு கிளம்பி விடுவார்.
அவர் கால் எப்போதும் வீங்கியே இருக்கும். ‘கெளட் ‘ என்றோ என்னமோ பெரியப்பா இங்கிலீஷில் சொல்வார். அவர் நிறையப் படித்திருக்கிறார். அப்பாதான் தேர்ட் பார்ம் தாண்டவில்லை. ஆனாலும் பெரியப்பாவைப் பார்க்க வருகிறதுக்குக் குறையாமல் கட்சிக்காரர்கள் கூட்டம் அப்பாவையும் தேடிவரும் என்பதில் அம்பிக்குக் கொஞ்சம் பெருமைதான்.
‘ராயருக்கு லா பாயிண்ட் எடுத்துக் கொடுக்கறதே குமாஸ்தா அய்யர்தான் .. ‘ என்று வயதான கட்சிக்காரர்கள் சிலாகித்துப் பேசிக் கேட்டிருக்கிறான்.
‘அம்பி, நீயாவது படிச்சுப் பெரிய பார் அட் லா ஆகணும்பா. மெட்றாஸிலோ கல்கத்தாவிலேயோ எங்கே வேணுமானாலும் படிக்க வைக்கிறேன் .. படிச்சுப் பெரியவனா வர்றியா ? ‘
அப்பா வாஞ்சையோடு அவன் தலையைத் தடவியபடி கேட்பார்.
‘அதுக்குள்ளே சுதந்திரம் வந்திடுமாப்பா ? ‘
‘இவனுக்குக் காந்தி பைத்தியம் பலமாவே பிடிச்சிருக்கு. படிச்சு முன்னுக்கு வரணும்னு நான் சொல்லிண்டிருக்கேன் .. நீ கொடி பிடிச்சுண்டு தெருத்தெருவா அலைய வழி பாக்கறியேடா. ‘
‘பார் அட் லா ஆயிட்டுக் கொடி புடிச்சுண்டு போக முடியுமா அப்பா ? ‘
‘கதர்ச்சட்டையே போட்டுண்டு கோர்ட்டுக்குப் போகலாம். அதுக்குள்ளே உலகமே மாறினாலும் ஆச்சரியமில்லைடா. ‘
அப்பாவுக்கும் காந்தி மீது அபிமானம்தான். யாருக்குத்தான் இல்லை ? அம்பி அக்காவிடம் சொல்லி, ‘மஹாத்மாவுக்கு ஜே ‘ என்றும் ‘வந்தேமாதரம் ‘ என்று காங்கிரஸ் கொடி போட்டு வெள்ளைத் துணியில் ஊசிவேலை செய்துதரச் சொன்னான். அக்காவுக்கு இதெல்லாம் புரியாது. இருந்தாலும், அம்பி காகிதத்தில் படம் வரைந்து காட்டியபடிக்கு இரண்டே நாளில் பின்னிக்கொடுத்து விட்டாள். ‘குழந்தை கை பேசறதடா.. ‘ பெரியப்பா துணியைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு சொல்லி மாய்ந்து போனார்.
கல்யாணம் முடிந்து அக்கா ஊருக்குக் கிளம்பியபோது அத்தை கேட்டாள் – ‘ஏண்டா அம்பி, உங்க அக்காவுக்கு நீ ஒண்ணும் தரல்லியாடா ? ‘
நிறைய நேரம் யோசித்து அந்த ஊசிவேலை செய்த துணியையே அக்காவும் அத்திம்பேரும் கிளம்புகிற நேரத்திலே ஓடிப்போய்க் கொடுத்தான். அத்திம்பேர் குடுமியை முடிந்து கொண்டே வாங்கிக்கொள்ளக் கை நீட்டினார். இவர் இதிலே மூக்குச் சிந்தி வச்சாலும் வைப்பார் என்று தோன்ற அம்பி அக்காவிடம் கையைப்பிடித்து அதைக் கொடுத்தான்.
‘என்னடா இது கொடியெல்லாம் போட்டு ? காரைக்குடியிலே வாங்கினதா ‘
அத்திம்பேர் கேட்டார். அவருக்குப் பழக்கமில்லாததாக எதைப் பார்த்தாலும் அது காரைக்குடியில் வாங்கினதாகத்தான் இருக்கும் என்று ஒரு தீர்மானமான நினைப்பு.
‘அக்கா போட்டது. குரோஷா வேலை .. ‘
‘ஊசி வச்சு இழுத்து இழுத்துத் தையல் இலை தைக்கிற மாதிரித் தைப்பாளே அதுதானே .. எனக்குத் தெரியும்டா பயலே. ‘
அவருக்குத் தெரிந்த உலகம் மாடு கன்றுகளும், தையல் இலை தைக்கிறதும், துண்டை புடவை முந்தானை போலத் தோளுக்குக் குறுக்காகப் போட்டுக்கொண்டு சாணி மணக்கிற வாசல் திண்ணையில் வாயில் புகையிலை அடக்கிக் கொண்டு ஊர்க்கதை பேசுகிறதும்தான்.
‘மாப்பிள்ளை என்னவா இருக்கார் வக்கீலய்யா ? ‘
கட்சிக்காரர் யாரோ பெரியப்பாவைக் கேட்டார்.
‘சுகஜீவனம் தான். நிலம், நீச்சு, மாடு, கன்னுன்னு நல்ல வசதியான குடும்பம். ‘
‘குழந்தே நாலு எழுத்து படிச்சுருக்கே .. அங்கே சரிப்பட்டு வருமா ? ‘
‘என்ன பண்றது கருப்பையா ? வேறே ஜாதகம் ஒண்ணும் பாந்தமா அமையலே. இவ போற முகூர்த்தம் அவ்ன இன்னும் நன்னா வந்துட மாட்டானா ? நம்ம குழந்தை தொட்டது பொன்னாத் துலங்காதோ ? ராசியான கைன்னா அவ கை ‘
பெரியப்பாதான் எத்தனை பெருமையாகச் சொல்லிக் கொள்வார். அவருக்குக் குழந்தை கிடையாது. இல்லாவிட்டால் என்ன ? அம்பியும், அக்காவும் தான் அவருக்கு உயிர். அதிலும் அக்கா .. அவர் அகராதியில் குழந்தை என்றால் அக்கா மட்டும்தான்.
வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது. கப்பி ரோடிலிருந்து விலகிக் குண்டும் குழியுமாக இருந்த பாதையில் வண்டி திரும்பியபோது அம்பி சின்னத் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டான். வெய்யில் ஏறி விட்டிருந்தது. கழுத்துப் பக்கம் வியர்வையைத் துடைத்துக் கொண்டான். பசி. தாகம் வேறு.
ஆயிற்று, இந்தக் கோவில் பக்கம் திரும்பினால் அக்கா வீடுதான். கழுத்தை எக்கிப் பார்த்தான்.
திண்ணையில் நான்கைந்து பேராகக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அத்திம்பேர் வாயில் புகையிலையை அடக்கிக் கொண்டு ‘ஒட்டகம் ‘ என்று சொல்ல ஆரம்பிப்பது போல் வாயைக் குவித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். இவர்களைப் பார்த்ததும் பேச்சு நின்றது.
‘வெய்யிலுக்கு முன்னாலேயே கிளம்பியும் வந்து சேர்றதுக்கு நாழியாயிடுத்து .. ‘
பெரியப்பா யாரோ கோபித்துக் கொண்டதற்கு நைச்சியமாகச் சமாதானம் சொல்கிறவராக மெல்லிய குரலில் சொன்னார்.
அத்திம்பேர் எல்லோரையும் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தார். அவர் பார்வை அம்பியின் மேல் விழுந்தபோது, வழக்கம் போல் ‘என்னடா பயலே, சுதந்திரம் எந்த ஊர்ப்பக்கம் வந்துண்டு இருக்கு ? ‘ என்று கேட்கவில்லை.
‘வாங்கோ. ‘
அத்திம்பேரின் அப்பா மேல்துண்டால் வியர்வையைத் துடைத்துக் கொண்டு நடந்தார். அம்பியும் அப்பாவும் அவர் பின்னல் போனார்கள். வீபுதியும் வியர்வையுமாகக் குழப்பமான வாசனை அவரிடம்.
தணிந்த ரேழி நிலைப்படி. அப்பா தலையைக் குனிந்து வந்தார். பெரியப்பா பட்டென்று இடித்துக்கொண்டு தலையைத் தடவியபடி உள்ளே வந்தார்.
‘அந்தப் பெட்டிதான். எல்லாத்தையும் அப்படியே எடுத்து வச்சிருக்கு. திறந்து பாக்கறேளா ? .. எங்களுக்குத்தான் கொடுத்து வைக்கலே .. புடவை, பாத்திரம் எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்கோ .. இதோ ராக்கொடி, மூக்குத்தி … அந்தக் குத்து விளக்கை எடுத்து வச்சுட்டியாடி .. சாமி மேடை மேலே இருந்ததே .. வெள்ளித் தட்டு .. கும்பா .. ‘
அப்பா திடாரென்று அழ ஆரம்பித்தார்.
‘அம்மா .. என் அம்மா .. ‘
‘அழாதேடா நாகா .. நடந்தது நடந்தாச்சு .. பூவும் பொட்டுமாப் போய்ச் சேர்ந்திருக்காடா நம்ம குழந்தை .. குழந்தை இல்லேடா .. அம்பாள்டா .. நமக்கெல்லாம் குலதெய்வம்டா .. அழாதேடா .. அழாதே .. ‘
அடக்க முடியாமல் பெரியப்பாவும் அழ ஆரம்பித்தார்.
ஐயணை கொஞ்சம் தயங்கி நின்று விட்டு உள்ளே நுழைந்து பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டான். உரிமையோடு அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டு தடதடவென்று வெளியே நடந்தான். துண்டால் வாயைப் பொத்திக்கொண்டு பெரியப்பா கூடப் போனார்.
‘கொஞ்சம் தண்ணி வேணும் .. ‘
அம்பி கேட்டான்.
யாரோ கொண்டு வந்து கொடுத்தார்கள். அம்பி இயந்திரமாகக் குடித்தன்.
லேசாக உப்புக் கரிக்கிற மாதிரி இருந்தது. கிணற்றுத் தண்ணீர். வீட்டுக்குப் பின்னால் தொழுவத்தை ஒட்டிய கிணறு. பெரியதாக, கைப்பிடிச் சுவர் இல்லாமல் ஆவென்று வாயைப் பிளந்து கொண்டு. சாதம் சமைக்க, அடுப்பு மெழுக, கூளம் கலக்க, சந்தியாவந்தனம் செய்யப் பஞ்சபாத்திரத்தில் நிரப்பி வைக்க, தொழுவம் அலம்பிவிட, மாடுகளும் மனுஷர்களும் குளிக்க, விடியற்காலை இருட்டில் அக்கா கால் தடுமாறி விழுந்து உயிரை விட … எல்லாவற்றுக்கும் ஒரே கிணறுதான் இருக்கிறது.
‘இன்னும் தண்ணி வேணுமா ? ‘
‘வேண்டாம். ‘
வண்டி திரும்பிக் கொண்டிருந்தது. காற்று ஓய்ந்துபோன பகற்பொழுதில் அப்பாவும் பெரியப்பாவும் குரலெடுத்து அழுது கொண்டிருந்தார்கள். அப்பா பெட்டியைச் செல்லமாக அணைத்துக் கொண்டிருந்தார். பச்சை பெயிண்ட் அடித்துப் பூப்போட்ட அழகான டிரங்க் பெட்டி.
ஒரு பள்ளத்தில் வண்டி திரும்பப் பெட்டி ஒரு பக்கமாக நழுவித் திறந்து கொண்டது. உள்ளே இருந்து ஏதோ வெளியே சரிந்தது. வெள்ளைத் துணி. வந்தேமாதரமும், கொடியும் போட்ட துணி. கீழே ஏதோ அப்பி இருந்தது. சாணிக்கையால் தொட்ட மாதிரித் தடம்.
‘அக்கா .. ‘
அம்பியின் குரல் திடாரென்று உயர்ந்து வெட்டவெளியில் சுற்றிச் சிதறி ஒன்றுமில்லாமல் போகப் பாதை வெறிச்சோடி நீண்டது.