புதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்

இந்து தமிழ் திசை – பொங்கல் மலர் 2020 சிறப்பு வெளியீட்டில் வெளியாகியிருக்கும் என் சிறுகதை ‘பொடி’ – முழு வடிவம்
———————————————————————
பொடி

ஆபீஸில் திடீரென்று லீவு விட்டார்கள். இங்கிலீஷ் மண்ணுக்கும் பாரதபூமிக்கும் சகல சௌபாக்கியமும், ஜெயமும், மேழிச் செல்வமும், கோழி இறைச்சியும் தட்டாமல் கிடைத்தபடி இருக்க வழி செய்த விக்டோரியா சக்ரவர்த்தினியும், அவர்தம் மணாளர் ஆல்பர்ட் அரசரும் சந்தோஷமாக இருந்த நாள் இது. விக்டோரியா சக்கரவர்த்தினி பூவுலகில் அவதரித்த ஜன்ம தினம். ரெண்டு பேரும் இப்போது ஜீவித்திருக்கவில்லை. என்றாலும், அவர்களின் பேரன் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி எந்தக் குறையுமின்றி அரசாண்டு வரும் பொற்காலம் இந்த 1932-ஆம் வருஷம். அவர் கைகாட்டியபடி, சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தில் விக்டோரியா ஜெயந்தி தினக் கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கின்றன.

ஆக, இன்றைக்கு மே 24-ந் தேதி செவ்வாய்க்கிழமை சுபதினமாக விடிந்தது. விடுமுறை என்று தில்லியிலும் கல்கத்தாவிலும் நேற்றைக்கு சாயந்திரமே அறிவித்து விட்டாலும், ஆந்திராவில் மழை, புயல் காரணம் தந்தி, டெலிபோன் கனெக்ஷன் இல்லாமல் போனதால் மதறாஸுக்கு தகவல் அனுப்ப முடியாமல், ரயில்வே ஃபோனில் இன்றைக்கு ஒன்பதரை மணியோடு சேதி வந்து சேர்ந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உத்தியோகஸ்தர்கள் அங்கே தீப்பிடித்த மாதிரி இடத்தைக் காலி செய்து விடுமுறையைக் கொண்டாட ட்ராம் பிடித்து, குதிரை வண்டி பிடித்து, நடந்து, ஓடி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். உடனுக்குடன் தந்தி அடிக்கப்பட்டு எல்லா ஜில்லா, கஸ்பா, பஞ்சாயத்து ஆபீஸ்களுக்கும் சந்தோஷமாக பூட்டு மாட்டி உத்யோகஸ்தர்கள் நடுப்பகலுக்கு முன் வீடு போய் சுடுசாதம் சாப்பிட வாய்த்தது. பகல் உறக்கமும் அவர்களில் பலருக்கும் ப்ராப்தியானது.

ராமோஜி இந்த ஆபீஸ் லீவு பாக்கியம் பெற எல்லா விதத்திலும் தகுதியானவன் தான். கோட்டையில் துரைத்தனத்து அதிகாரிகளுக்கு வீட்டு சேவகர்களான தோட்டக்காரன், சமையல்காரன், பரிமாறுகிறவன், பங்கா இழுப்பவன், சப்ராஸி என்ற எடுபிடி சேவகன் இப்படியான பேர்வழிகளுக்கு சம்பளமாக ராஜதானி செலவு செய்யும் கணக்கை ஏழெட்டு பேரேட்டில் எழுதி அறிவிக்கும் வேலை ராமோஜிக்கு. அதையெல்லாம் மூடி வைத்து பெட்டி கேஷ் என்ற சில்லரை செலவினத்துக்கான ராஜாங்கப் பணமான ஒரு ரூபாய் ஆறரையணாவை சரி பார்த்து ஏழு பூட்டு பூட்டி இரும்புப் பெட்டியில் வைத்து அந்த இரும்புப் பெட்டியின் சாவியை அரைஞாண்கொடியில் மாட்டித் தொங்க வீடு போகலாம் என்று பார்த்தால் புதுப் பெண்டாட்டி ரத்னாபாய்க்கு மூக்குப்பொடி வாங்க வேண்டிப் போனது.

ராமோஜிக்கு கெட்ட பழக்கமேதும் இல்லை. வருஷம் ஒரு தடவை அவனுடைய சுவர்க்கவாசி பிதா அப்பாஜி என்ற பப்புராவுக்கு திதி திவசம் பஞ்சாங்கக்காரரை வைத்துக் கொடுப்பான். அவர் சாப்பிட்டுப் போனதும் அப்பாஜியை பிரீதிப்படுத்த அவருக்கு உகந்ததாக ஊகித்திருந்த உறையூர் சுருட்டைப் பற்ற வைத்து சமர்ப்பயாமி சமர்ப்பயாமி என்று இருமலுக்கு நடுவே நாலு தடவை ஊதி சொர்க்கத்துக்கு சுருட்டுப் புகை கடத்துவான். அஃதல்லாமல் பீடி, சுருட்டு என்று ராமோஜி எதுவும் பழகவில்லை.

இப்படி புகையிலை அண்டாத வண்ணார்ப்பேட்டை ராமோஜி வீட்டில் மூக்குப்பொடியாக அது நுழைந்ததாம். அதுவும் கிளிபோல் அழகிய ரத்னா பாய் மூலம். சம்ஸ்கிருதமும், தமிழும், கொஞ்சம் இங்க்லீஷும் படித்த ரத்னா.

போன மாசம் ராமோஜிக்கும் மேற்படி ரத்னாவுக்கும் பந்து மித்ர ஜனங்கள் நாலு நாள் முன்னதாகவே வந்து தின்று தீர்த்து ஏப்பம் விட்டு பதிர்பேணியைக் கொண்டா என்று பந்தியில் காத்திருக்க, லட்டும் பாலுமாக இனிக்க இனிக்க பரிமாறி அந்த இனிப்போடு கூட தாலியும் கட்டிக் கல்யாணம் ஆனது.

ஆபீஸில் இருந்து புறப்பட்டு, இதெல்லாம் மனதில் மென்று கொண்டு ராமோஜி ப்ராட்வேயில் தன் ராலே சைக்கிளை மெதுவே ஓட்டிப் போனான்.

அப்போது வெங்கட நாயக்கர் ஓட்டி வந்த மைலாப்பூர் போகும் டிராமில் சைக்கிள் மோதப் போக, தவிர்த்து ராமோஜி அந்தாண்டை சாடினான். நாயக்கர் நல்ல வார்த்தை நாலு உதிர்த்துக் கடந்தார். ப்ராட்வே நெரிசலில் ரத்னாபாய் பற்றி யோசித்தபடி சைக்கிள் விடுவது முட்டாள்தனம் அன்றோ.

இந்த ட்ராம் வேண்டியும் இருக்கிறது. நடுத் தெருவில் தடதடவென்று இரும்பு யானை போல மெல்ல இதுகள் போகிறபோது மேலே மோதுவதை விட, தண்டவாளம் விட்டு இறங்கிக் கவிழ்ந்து விபத்து உண்டாக்குமோ என்று பயமெழுவதும் அதிகமாக இருக்கிறது ட்ராம் பாதைக்குப் பக்கமாக நடந்தோ சைக்கிள் விட்டுக்கொண்டோ போகிறவர்களுக்கு. அதுவும் ராமோஜி போல இருபத்தாறு இஞ்ச் உயர சைக்கிள் ஓட்டிப் போகிறவர்களுக்கு சதா பயமே.

ப்ராட்வே நெரிசலுக்கு சம்பந்தமே இல்லாமல் குறுக்குச் சாலில் கிடக்கும் ஒரு முதலித் தெருவில் வண்டியை விட்டான் ராமோஜி. இங்கே இவனாகத் தேடிப்போய் முட்டினால் தான் விபத்து. மனதில் பெண்டாட்டி சௌந்தர்யத்தை அசைபோட்டபடி இப்படி முற்பகலில் சைக்கிளில் போக சந்தர்ப்பம் பண்ணிக் கொடுத்த விக்டோரியா மகாராணிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னான். சொர்க்கத்தில் நிச்சயம் கொண்டாடுவார்கள் இன்றைக்கு. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ சுவர்க்கம் எல்லாம் மரத்தடுப்பு எடுத்து விட்டு ஒன்றாக இருக்கும். ராமோஜியின் சைக்கிள் பள்ளத்தில் இறங்கி மெல்லக் குலுங்கி ரதம் போல ஓட்டத்தை மெத்தென்று தொடர்ந்தது.

ராமோஜிக்கு பதினைந்து வயது நிறைந்தபோது அப்பாஜி வாங்கிக் கொடுத்த சைக்கிள் அது. வாங்கிக் கொடுத்த என்றால் புத்தம்புதுசு இல்லை. ஜிம்கானா கிளப் சிப்பந்தி ஷேக் அசன் சாகிபு மூலம் கிட்டியது. இங்கே வேலை வேண்டாம் என்று வைத்து இங்கிலாந்து திரும்பிய ஒரு துரை ஓட்டிக் களித்த சைக்கிள். துரை அபூர்வமாக ஓட்டியதால் பூ மாதிரி, துரைசானி போல், புத்தம் புதியதாக இருந்தது. பதினைந்து ரூபாய்க்கு தருவதாக ஒத்துக்கொண்டாலும் ஊர் போகிற களிப்பில் கடைசி நிமிஷத்தில் அதுவும் வேண்டாம் என்று சும்மாவே கொடுத்து விட்டுப் போனார் அந்த நல்ல மனசு துரை. அவருடைய பதவிக் காலத்தை பட்டணத்தில் வெள்ளைக்காரர்களின் சமாதிகளை சிறப்பாக நிர்வாகம் செய்கிறவராகக் கழித்ததாக அப்பாஜி சொல்வார்.

அப்பாஜி சொன்னது எல்லாம் அரைகுறைதான். வாய் வெற்றிலை பாக்கு மென்றபடி இருக்க, அபிநயமும் கண் உருட்டலும் சுழற்றலுமாக கதகளிகாரன் மாதிரி ஆ ஊ அம்ம் என்று பேசியவர் அவர். மரணப் படுக்கையில் மெல்வதற்கு தாம்பூலம் கிடைக்காவிட்டாலும் வாய் அதே படிக்கு குவிந்திருக்க, ரெண்டு தடவை உள்மூச்சு, ரெண்டு முறை வெளிமூச்சு விட்டபடி இறந்துபோனார் அப்பாஜி. அவர் காதில் கர்ண மந்திரம் சொல்ல வந்திருந்த ஸ்வஜாதி புரோகிதர், ராமோஜியிடம் அப்போது சொன்னது – ”அப்பாஜி சுருட்டு பிடிக்க ஆசையோட போனார். இனி திவசத்துக்கு சுருட்டு வாங்கிப் படைக்கறதோட அதைப் புகைக்கவும் செய்யணும்”.

அவருக்கென்ன சொல்லி விட்டுப் போய்விட்டார். ஜவுளிக்கடை, இரும்புக்கடை, மிளகாய் மண்டி வைத்து பணம் கொழிக்கும் பெரிய வீடுகளுக்கான புரோகிதர் அவர். கும்பகோணம், தஞ்சாவூர் இப்படி புரோகிதத்துக்காக ரயிலைப் பிடித்துப் போய்வந்து காசை எண்ண அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. ராமோஜியின் அப்பாஜியைக் கடைத்தேற்ற அப்புறம் தமிழ் பஞ்சாங்கக்கார ஐயர் தான் வந்தார்.

சுருட்டுப்புகை வாடையும், சம்திருப்தியும் சொர்க்கவாசி அப்பாஜிக்குக் கிட்ட, பஞ்சாங்கர் சுருட்டு பிடிக்க வேண்டும் என்று அப்பாஜியின் மனைவியும் ராமோஜியின் அம்மாவும் ஆன சக்குபாய் விரும்பியபோது சுருட்டு எல்லாம் தன் வைதீகமாகிய தொழிலுக்கு சரிப்படாது என்று பஞ்சாங்கக்காரர் மறுத்து விட்டார். ஆனாலும் அவர் திதி நடத்திவிட்டுப் போன பிறகு ராமோஜி சுருட்டு சமர்ப்பிப்பான். இந்த வருடம் அப்பாஜி திதி அடுத்த வாரம் வெள்ளியன்று வருகிறதாக வந்து சொல்லிப் போயிருக்கிறார் பஞ்சாங்கக்காரர். சுருட்டு வேண்டாம் என்றும், அவசியம் வேண்டும் என்றால் வெள்ளியிலாவது தங்கத்திலாவது சின்ன சுருட்டு போல் நகை ஆசாரியைக் கூப்பிட்டு செய்துவித்து அதைப் படைத்து விடலாம் என்று யோசனை சொல்லிப் போயிருக்கிறார். தங்கச் சுருட்டு அவருக்கு தட்சணையாக வேணுமாம்.

ஒரு நாயக்கர் தெரு முனையில் சைக்கிள் நின்றது. மிட்டாய்க் கடைக்குத் தானே சைக்கிள் வந்து சேர்ந்திருக்கிறது. வேலை கிடைத்ததில் இருந்து மாதாமாதம் சம்பள தினத்தன்று அல்வாவோ லட்டோ வாங்கிப் போய்ப் பழகி விட்டது ராமோஜிக்கும். அவனுக்கும் அம்மாவுக்கும் இங்கே வாங்கிப் போவது ஒரு வாரத்துக்கு மேலே வரும். இனி ரத்னா பாய்க்கும் சேர்த்து வாங்க வேண்டும். அவளுக்கு இனிப்போடு மூக்குப்பொடியும் தேவைப்படுகிறது.

மிட்டாய்க்கடையில் ஒரு பத்து நிமிடம் பெஞ்சில் உட்கார்ந்து சுதேசமித்திரன் படித்துக் கொண்டிருந்தால், சுடச்சுட புது அல்வா கிண்டி வந்து விடும் என்று ஆசை வார்த்தை காட்டி, கொறிக்க தேங்குழல் ஒன்றையும் இலவசமாகக் கொடுத்தார் மிட்டாய்க்கடை கிருஷ்ணராயர். சைக்கிளை கண்ணுக்கு நேர் படும்படி நிறுத்திவிட்டு, தேங்குழல் கடித்தபடி சுதேசமித்திரனை படிக்க ஆரம்பித்தான் ராமோஜி. ’பிரான்ஸ் ஜனாதிபதியை ரஷ்யாக்காரன் சுட்டான்’. கிடக்குது விடு. தானாகக் கிடைத்த லீவுநாளை இப்படி திராபையாக அல்வாக் கடை பெஞ்சில் கழிக்கணுமா இன்னும் பாதி நாள் கூட பாக்கி இல்லையே என்று மனம் கேட்க, அதற்கு நியாயம் சொல்வதற்குள் அல்வா வந்துவிட்டது.

தெருவோடு போகிற பயல் எவனோ சைக்கிளில் மணியை சத்தமாக அடித்து விளையாடினதைப் பார்க்கப் பொறுக்கவில்லை ராமோஜிக்கு. வீட்டுக்குள் புருஷன் பார்த்தபடி இருக்க, வாசலில் புதுப் பெண்டாட்டி நிற்க, தெருவோடு போகிற விஷமி கண்ட இடத்தில் தொட்டுத் தடவிவிட்டுப் போகிற அநியாயம் அது. கடைக்குள் இருந்து கத்த முடியாது. கையை மட்டும் நீட்டி ஒரு வினாடி ரௌத்ரம் காட்டினான் ராமோஜி. அது ஒரு சுக்கும் பிரயோஜனமில்லாதது.

அல்வா பையை முன்னால் தொங்கவிட்டபடி சைக்கிள் ஓட்டிப் போகும்போது அந்த வாசனை ஆகர்ஷித்து தெருநாய் ஒன்று சைக்கிளோடு கூடவே வாலை ஆட்டிக்கொண்டு ஓடி வந்தது. அதை விலக்கி ஓட்டுகிறேன் பேர்வழி என்று இப்படியும் அப்படியும் வண்டியைத் திரும்ப, திம்சுகட்டை போல ஒரு தெலுங்கச்சி, ”ஏன் என் பிருஷ்டத்தில் முட்டுகிறாய்? வேறே இடம் கிடைக்கலை என்றால் வால்டாக்ஸ் ரோடு சுவரில் போய் உன் கள்ளச்சாவியை முட்டு” என்று தெலுங்கு உச்சரிப்பில் தமிழில் சொல்ல, தெருவோடு போனவன் எல்லாம் ராமோஜி அவிழ்த்துப் போட்டு ஆடுகிறதை கண்டதுபோல் சிரித்துப் போனான்கள். சனியன் பிடித்த நாய் போன இடம் தெரியவில்லை. சைக்கிள் செயின் வேறே நழுவி வந்து கரகரவென்று சைக்கிள் நிற்க தெலுங்கச்சி நெருக்கத்தில் ராமோஜியைப் பார்த்து ”கிட்டப்பா மாதிரி ஷோக்கா இருக்கே” என்றாள். அவளும் அழகுதான். ஆனால் ரத்னாவைத் தவிர யாரையும் அப்படி நினைக்க மாட்டான் அவன். மூக்குப்பொடியும் அல்வாவும் வாங்கித் தந்து சரசமாட வேண்டியவள் அவள்.

செயின் மாட்டி சைக்கிளை அவன் கிளப்பியபோது கையெல்லாம் மசகு. இனி நேரே போய் இடது சந்தில் புகுந்தால், பொடிக்கடை வரும். புகுந்தான். எங்கே போனாலும் ரத்னாபாயும், முதல் ராத்திரியும் தான் மனசெல்லாம் .

சோபானம் சோபானம் என்று ராத்திரியில் நான்கைந்து குந்தாணி நடுவயசுப் பெண்மணிகள் அவனையும் ரத்னாவையும் காமிரா உள்ளில் விட்டு கதவை சாத்தி வாசலுக்கு அப்புறம் இருந்து சகிக்க முடியாத குரலில் எல்லா பாஷையிலும் சிருங்காரம் வழியும் பாட்டுபாட, ரத்னா அவனைப் பார்க்கவும் செய்யாமல் படுக்கைக்குக் கீழும் ஜன்னலிலும் அலமாரியில் அலாரம் கடியாரத்துக்குப் பின்னும் ஏதோ தேடிய மணியமாக இருந்தாள்.

“முதல் ராத்திரி அறையில் அலாரம் கடியாரம் எதுக்கு? யார் யோசனை அது?” ராமோஜி தன் புத்தம்புதுப் பெண்டாட்டி புஜத்தைப் பற்றியபடி அவள் கண்ணில் பார்த்து சோபான ராத்திரியில் முதலில் கேட்ட கேள்வி அதுதான்.

அவள் தலையாட்டிவிட்டு இன்னும் தீவிரமாகத் தேடத் துவங்க, ”ரத்னா பாயி, என் பிரிய சகி, என்னத்தை தேடுகிறாய்? கச்சையா? கீழே அணிகிற சமாசாரமா” என்று அவளது அந்தரங்கத்தைப் பற்றிய பேச்சில் ஈடுபட்டான். படுக்கைக்கு புதுப் பெண்டாட்டியைத் தயார் பண்ணும் விதம் இப்படித்தான் என்று அவன் வாசித்த ஒரு சிருங்கார வழிகாட்டி புத்தகத்தில் போட்டிருந்ததை அவன் கடைப்பிடிக்க, அவள் நாணித் தலைகுனிந்து அவன் நெஞ்சில் தலை வைத்து அணைத்துக் கொள்ளாமல், ”என் பொடி டப்பியை எங்கேயாவது பார்த்தீங்களா?” என்று கேட்டாள்.

பூவுலகில் கல்யாணமாகி முதல் ராத்திரி சேர்ந்திருக்க வந்த புருஷனை பொடி டப்பி விஷயமாக விசாரித்த முதல் பெண் ரத்னாபாயாக இருக்கும்.

அவனுடைய ஆரம்ப சந்தோஷம் ஆரம்ப ஆச்சரியமாக, ரத்னாபாய் தலையணைகளை குப்புறப் போட்டு, அவனை எழுந்திருக்கச் சொல்லி மெத்தையை இழுத்து, ஓரமாக நகர்த்திக் குடைந்தாள். “கிடைச்சுடுத்து” என்று ஆரவாரம் எழுப்பி, தரையில் மண்டிபோட்டு கட்டிலுக்குக் கீழே இருந்து தந்தத்தில் செய்த ஒரு சிறு பேழையை எடுத்தாள்,.ராமோஜி திகிலோடு பார்த்துக் கொண்டிருக்க, பேழையைத் திறந்து ஒரு சிட்டிகை தாராளமாக உள்ளே விரல் விட்டு அள்ளி மூக்கில் திணித்துக் கொண்டு ’ஐர்ர்ர்ர்ர்?’ என்று ஏதோ மொழியில் ராமோஜியை வினவினாள். அடுத்த நொடி அவனை இறுக்க அணைத்து படுக்கையில் தள்ளி கணக்கற்ற முத்தம் ஈந்து அவன் காதைக் கடித்தாள். மூக்குப்பொடி வாசனையோடு அவனுக்கு முதல் சுவர்க்கம் அனுபவப்பட்டது.

சுபமாக முடிந்த பிறகு தலையணைக்குக் கீழே இருந்து பேழையை எடுத்து பொடி போட்டுக் கொண்டு ஹர்ர்ர் என்று ராமோஜியிடம் சொல்லி பக்கத்தில் கிடந்த அவன் புது பட்டு வேஷ்டியில் மூக்கு சிந்தித் துடைத்துக் கொண்டாள்.

“கண்ணே, அதென்ன சோபான ராத்திரியில் பொடி போடுவது உங்க வீட்டுப் பழக்கமா? எங்க வீட்டில் அப்பா திவசத்துக்கு சுருட்டு குடிப்பது மாதிரி”.

அவன் கேட்க ரத்னா சட்டென்று எழுந்து உட்கார்ந்து அவன் கையைப் பற்றித் தன் கைகளுக்குள் வைத்தபடி, ”சுருட்டு குடிப்பீங்களா, நிஜமாகவா” என்றாள்.

விடிந்து பட்சிகள் சுகம் சுபம் என்று பாடி எழுப்பிக் கொண்டிருக்க இருவரும் நல்ல துயிலில் ஆழ்ந்தார்கள். உறங்குவதற்கு முன் ராமோஜி அவளுடைய அழகாக மார்பில் விழுந்து படிய தங்கச் சங்கிலி வாங்கிப் போடுவதாக சத்தியம் செய்ய, ” முதலில் ஆபீசர் மார்க் பட்டணம் பொடி ஒரு டப்பி வாங்கித் தருவீர்களா?” என்று கெஞ்சுகிற குரலில் அழகி யாசித்தாள்.

பொடி வாங்க இதோ போய்க்கொண்டிருக்கிறான் ராமோஜி. இங்கேதான் ஒரு செட்டித் தெருவில் கடை இருக்கிறது. அவன் ஒற்றைவாடையில் குஸ்திச் சண்டை எப்போதோ பார்க்கப் போனபோது பார்த்திருக்கிறான்.

மூக்குப்பொடி விற்கும் கடையில் என்ன என்று சொல்லி கேட்க வேண்டும்? யாருக்கு வாங்குகிறேன் என்று சொல்லியாக வேண்டுமா? அது எதற்கு? ராமோஜியைப் பார்த்தால் பொடி போடுகிறவன் மாதிரி தெரிகிறதா? சைக்கிள் ஓட்டியபடியே கடந்துபோன ஜவுளிக்கடை கண்ணாடி ஜன்னலில் தன்னைப் பார்த்தான். சட்டைப்பையில் துருத்திக்கொண்டிருந்த கைக்குட்டை சுத்த வெள்ளையாக மின்னியதைக் காண சந்தோஷமாக இருந்தது அவனுக்கு. வாழைப்பட்டை அல்லது சின்னப் பேழையாக பொடிடப்பி எல்லாம் இல்லாமல் சுத்தமான சட்டைப்பை இதுவரை அது.

உயர ஸ்டூல்களில் வரிசையாக உட்கார்ந்திருந்த கடை. வாசலில் சைக்கிளை வைத்துப் பூட்டி விட்டு ராமோஜி படி ஏறினான். பொடி விற்கிற கடை இவ்வளவு உயரமான படிக்கட்டுகளும், இத்தனை பேர் வேலை பார்க்கிறதுமாக ஏன் இருக்க வேண்டும் என்று அவனுக்குப் புரியவில்லை. பொடி மட்டும் வாங்கலாமா அல்லது அடுத்த வாரம் அப்பாஜியின் சிரார்த்தத்துக்காக ஒரு சுருட்டும் வாங்கி வைத்துக் கொள்ளலாமா? இந்தக் கேள்வி மனதில் எழ, ஒரு வினாடி வாசலிலேயே தயங்கி நின்றான். இவ்வளவு பெரிய கடையில் ஒற்றை சுருட்டு வேண்டுமென்று கேட்டால் அவர்களை, அவர்களுடைய பரபரப்பான வியாபாரத்தை எள்ளி நகையாடுவதாகாதா?

ஒரு சுருட்டு மட்டும் வாங்கி செல்வந்தர்கள் புகை பிடிப்பார்களோ? அவர்களுக்கானது என்று பத்து ரூபாய் விலை வைத்திருந்தால் அது ராமோஜிக்கு வேண்டாம். அப்பாஜி அந்த சுருட்டு இல்லாமலே சொர்க்கத்தில் சௌக்கியமாக இருக்கட்டும். சொர்க்கத்துக்குப் போனாலும் கீழே நிதி நிலைமையை அவரும் கொஞ்சம் கவனித்துப் பரிசீலிக்க வேணும்.

என்ன மாதிரி சுருட்டு வாங்குவது என்று தெரியாததால் அந்த வஸ்துவைக் கேட்க வேண்டாம் என்று தீர்மானித்தான் ராமோஜி. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது சிரார்த்தத்துக்கு. வீட்டுப் பக்கத்திலேயே ராவுத்தர் கடையில் மலிவு விலைக்கு சுருட்டு கிடைக்கலாம். கூடவே ஊர் வம்பும் கிட்டும். ரத்னாபாய் மூக்குப்பொடி போடுவது அதில் சேர்த்தியாக இருக்கக் கூடாது.

உள்ளே உயர ஸ்டூல்களில் உட்கார்ந்திருந்த ஊழியர்கள் கழுத்துப்பட்டி அணிந்திருந்தார்கள். எல்லாம் ஒரே மாதிரியான நீல டை என்பதால் அவற்றை நிறுவனமே அவர்களுக்கு அன்பளித்திருக்கலாம் என்று ராமோஜிக்குத் தோன்றியது. இவ்வளவு நாகரீகமாக உட்கார்ந்திருப்பவர்களிடம் பொடி என்று பேசத் தொடங்கினால் அச்சான்யமாக இருக்காதோ. இருந்து விட்டுப் போகட்டும். அவர்களுக்கு ஒய்யாரமாக வந்து உட்கார இல்லை உத்யோகமும் சம்பளமும். வருகிற போகிற சுப்பிணி, குண்டுணி, குப்புசாமி கேட்கிறது என்ன என்று செவி மடுத்து நாலு சல்லிக்கு வேணும் என்றாலும் எடுத்து மடித்துத் தருவது தான் வேலை. ராமோஜி ஒரு தகர டின் ஆபீசர்ஸ் மூக்குத் தூள் என்று சுதேசமித்திரன் விளம்பரத்தில் பார்த்த படிக்கு கேட்கப் போகிறான்.

எஸ் ப்ளீஸ் என்றபடி மூக்குக்கு இறங்கிய கண்ணாடியை மேலே இழுத்து விட்டுக்கொண்டு, ராமோஜியை கூர்ந்து பார்த்தார் ஒரு சிப்பந்தி. சர்க்கஸில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் பழகிய கரடி போல இருந்தார் அவர். இவனது பதிலை எதிர்பார்த்து உயரமான ஸ்டூலில் இருந்து குதிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யப் போகிறார்.

“ஒரு டின் ஆபீசர்ஸ மூக்குத்தூள் வேண்டும். பெரிய டின் இருக்கும் என்றால் அது சிலாக்கியமானது. சின்னது என்றாலும் விரோதமில்லை. தலைக்குள் குடைச்சல் ஏற்படும் நேரத்தில் பொடி எதில் வந்தால் என்ன? நாசிகா சூரணம் வாங்கிப் போடுவதைவிட வேறே உன்னதமான காரியம் உண்டோ?”

மனதில் சொல்லிப் பார்க்க, தடங்கல் இல்லாமல் வந்தது. கலகலப்பான குரலில், கனவான் தோரணைகளோடு அவன் பேசப் போகிறான்.

வாயைத் திறந்து, “மூக்குப்பொடி வேணும்” என்றான்.

ஸ்டூலில் இருந்து எழுந்த சிப்பந்தி ஒர் வினாடி திகைத்துப் போய் நின்றார். ராமோஜி உலகத்தில் உற்பத்தியான மூக்குப்பொடி எல்லாவற்றையும் ஏதோ வன்மத்துடன் வாங்கி எடுத்துப்போய் நாசமாக்க வந்திருக்கிறான் என்று தோன்றியிருக்கும் அவருக்கு.

”மன்னிக்க வேணும் ஐயா. இது கே அண்ட் கே கூஷன் ஹோமியோபதி மருந்துக் கடை. அந்தப் பக்கத்தில் கொஞ்சம் ஆயுர்வேதமும் உண்டு.”

ராமோஜிக்கு வெட்கமாகப் போனது. ஹோமியோபதி மருந்துக்கடையில் தான் வந்து புளிமூட்டை மாதிரி நின்று மூக்குப்பொடி வேணுமென்று கேட்டதை இந்த ஊழியர்கள் எல்லாம் ஸ்டூலை விட்டு இறங்கிக் கூட்டம் போட்டு வயிறு வலிக்கச் சிரித்துச் சிரித்துப் பேசித் தீர்ப்பார்கள் என்று தோன்றியது. உடனே திரும்பிவிடலாம். ஆனால் அது புத்தியின்மையை தானே பறைசாற்றியதாக ஆகிவிடும். வேண்டாம். அகஸ்மாத்தாக தவறான விலாசத்துக்கு வந்த கனவானாக அபிநயித்துப் பின் திரும்பலாம் என்று கருதி சைக்கிள் சாவியை முகவாயில் தேய்த்தபடி அவன் கேட்டான் –

“நான் பம்பாய்க்கு இடம் மாறி நிறைய காலம் ஆனதால் இங்கே வரும்போது எல்லாம் மாறி இருப்பதை மலைப்போடு பார்க்கிறேன்” என்றான்.

“அப்படியா? ஆனால், இங்கே எங்கள் கடை இருபது வருடமாக இதே இடத்தில் தான் இருக்கிறது” டைக்கார கட்டேலேபோவான் விடாமல் பிடித்தான். படவா, அவனை ஸ்டூலில் இருந்து கொட்டையில் உதைத்து விழுத்தாட்டி அவன் மூக்குக் கண்ணாடியை காலால் நொறுக்கி மேலே சிறுநீர் கழிக்க வேணும் என்று வெறி வந்தது ராமோஜிக்கு. கடைசி விஷயம் கடைக்குள் செய்யக் கூடியதில்லை என்பதால் அதை வாபஸ் வாங்கியபடி சிரித்தான் ராமோஜி.

ரத்னாபாயை அவளுடைய வழுவழுத்த தந்தக் கைகளை வருடி அருகே அழைத்து சுள்ளென்று காதில் சத்தம் எதிரொலிக்க கன்னத்தில் அறைய வேணும் என்று அடுத்த வெறி. எதுவும் செய்ய முடியாது. அடுத்த தெருவில் பொடிக்கடை இருக்கலாம். தேடிப் போவதே ராமோஜிக்கு விதிக்கப்பட்டது.

தேடிப் போனான். சரியான இடத்தில் படி ஏறினான். வாங்க வேண்டியதை வாங்கினான். வீட்டுக்குச் சைக்கிள் போய்ச் சேர்ந்தபோது ரத்னாபாய்க்கு ஒரே சந்தோஷம். சைக்கிளை அன்போடு வருடியபடி அவனைப் பார்த்தாள்.

“ஐயோ, எனக்கு மூக்குத்தூள் இல்லாம மூச்சு நின்னுடுமா, என்ன? சாயந்திரம் வரும்போது வாங்கிட்டு வந்திருக்கலாமே. பாவம், பாதி வேலையிலே ஓடி வந்து இப்படி” அவள் நன்றி பாராட்டிய மோஸ்தார் சிருங்காரத்தில் ஊறிய ஒன்று. அப்படியே அவள் மூக்கில் பொடியைத் திணித்து அவளைத் தூக்கிச் சுமந்து கட்டிலில் போட்டு நட்ட நடுப்பகலில் முதுகு வியர்த்து வழிய சுகம் கொண்டாட ஆசை வந்தது ராமோஜிக்கு. விக்டோரியா மகாராணிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னபடி அதேபடிக்கு நடந்து முடித்தது. ஒரு வாரத்துக்கான அல்வா முழுக்க ராமோஜி ஊட்ட ஒரே பகலில் தின்று முடித்தாள் ரத்னா பாய்.

குளித்து விட்டு சோறும் ரொட்டியும் சாப்பிட உட்காரும்போது மேஜை மேல் இன்னொரு பிரம்மாண்டமான பொடி டின் இருப்பதைப் பார்த்தான். குஜராத்தியில் எழுதிய பம்பாய் பிராண்ட். எங்கே இருந்து வந்தது இது?

“அப்பா இந்தப் பொடி தலைவலிக்காகப் போடுவது என்று வைத்தியன் சொல்படிக்கு இன்னும் ரெண்டு டப்பி, கிட்டத்தட்ட அடுத்த வருஷம் வரை வரும்படி எனக்குக் கொடுத்தனுப்பியிருக்கிறார். அதில் ஒண்ணை காலையில் எடுத்து வைத்தேன். உங்கம்மா ஒரு சிமிட்டி எடுத்துக்கறேன்னு கிட்டத்தட்ட அரை டப்பாவை காலி பண்ணியாச்சு” என்றாள் சிரித்தபடி.

“அம்மா எங்கே?” அவள் உள்ளறைக்குள் கை காட்ட அங்கே வாயில் ஈறு முழுக்க வர்ணம் அடித்த மாதிரி மூக்குத் தூளை ஈஷி, வாயைப் பிளந்தபடி விநோதமான போதையில் கிறங்கி அம்மா சக்குபாய் உறங்கிக் கிடந்தாள்.

“உங்க அப்பாவுக்கும் அடுத்த வாரம் சுருட்டு வேணாம். பொடி படைத்தால் போதும். நான் சாஸ்திரத்தை அலசி ஆராய்ந்து நம்ம ஸ்வஜாதி புரோகிதரிடம் சொல்லிவிட்டேன். காலையில் நீங்க ஆபீஸ் போன பிறகு வந்திருந்தார். பொடி தருவதானால், தானே அடுத்த வாரம் திவசத்துக்கு வந்து விடுகிறேன் என்றார். அவருக்கு சின்னதாக லண்டன் பொடி டப்பி ஒண்ணும் வேணுமாம்”.

ரத்னாபாய் முதுகில் அன்போடு தடவித் தட்டினான் ராமோஜி. முதுகு அங்கே இல்லை, ரொம்பக் கீழே இறங்கிட்டீங்க என்று பொய்க் கோபம் காட்டினாள் ரத்னாபாய். இன்னொரு தடவை ரமிக்கலாம் என்று தோன்றியது. அப்படியே ஆகட்டும் என்றாள் செல்லப் பெண்டாட்டி. இடுப்பிலிருந்து பெட்டிகேஷ் சாவியை எடுத்துவிட்டு அவள் படுக்கச் சொன்னதை அவன் மீறவில்லை.

சொர்க்க உத்யானவனத்தில் படி ஏறிக் கொண்டிருந்த விக்டோரியா மகாராணி காதில் மெட்றாஸ் வண்ணாரப்பேட்டையில் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் ஜதையாகச் சொல்லும் சத்தம் முக்கல் முனகலுக்கு இடையே கேட்டது. இந்திய ஜனங்கள் வித்தியாசமானவர்கள். அந்தரங்க நேரத்தில் ராணியம்மாவையும், ஆபீஸ் நேரத்தில் கிரீடையையும் நினைத்துக் கொள்வார்கள். சௌக்கியமாக இருக்கட்டும். ஹர்ர்ர் என்று உறிஞ்சி, ஒன்றுபட்டுத் தும்மி கலவி வேகத்தில். கட்டிலில் இருந்து இருவரும் சரியும் சத்தத்தை காதில் வாங்கியபடி விக்டோரியா மகாராணி புன்னகையோடு அடுத்த படியில் ஏறினாள். அவள் கையிலும் ஒரு சிட்டிகை பொடி இருந்தது.

(நிறைவு)

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன