ஒரு ரயில் உத்யோகஸ்தன் ஒவ்வொரு தடுப்பாக நின்று, ராத்திரி சாப்பாடு வேணுமா என்று பிரியமாக விசாரித்துக் கொண்டிருக்க, எனக்கு ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.
ரயில்வேக்காரர்கள் ரயிலில் ஏற வந்தால் தான் பிரயாணம் செய்யாதே என்று பயமுறுத்தித் துரத்தி விடுவார்கள். எப்படியாவது அடித்துப் பிடித்து வண்டியேறி விட்டால், என்ன கரிசனம். சாப்பாடு வேணுமா? வேணும் என்று சொல்ல வாயைத் திறந்தேன். காலில் பலமாக மிதித்து ரத்னா என்னைப் பேசவொட்டாமல் செய்தாள்.
பாட்டியம்மா மகன், ”சாப்பாடு பற்றி கேட்கிறீங்களே, என்ன விசேஷம்?” என்று ரயில்வேக்காரனைக் கேட்டான்.
“அடுத்தாப்பல அம்லா ஜங்க்ஷன் வருது. அங்கே சமையல் செஞ்சு ரெடியா வச்சிருப்பாங்க. அங்கே இருந்துதான் பலார்ஷா, இடார்ஸி, நாக்பூர் வரை ரயில் சாப்பாடு போறது என்று விளக்கம் சொன்னான் ரயில்வே உத்தியோகஸ்தன். ஒரு சாப்பாடு பனிரெண்டனா தான். சைவம் இது.. மதறாஸி சமையல்.. இது தவிர அசைவம் ..”.
”அசைவம் வேணாம், ரெண்டு சைவம்”.
பர்ஸில் பணம் எடுத்துக் கொடுத்தான்.
”எப்போ வரும் சாப்பாடு?”
“ரயில் அம்லா போனதும் வந்துடும். உங்க ரயில் டிக்கெட்டை கொடுங்க. குறிச்சுத் தரேன்” என்று டிக்கட்டில் எழுதி ரசீதும் கொடுத்துப் போகும்போது சொன்னது –
“கம்பார்ட்மெண்ட் இதை விட்டு மாத்திப் போயிடாதீங்க. டெலிவரி கஷ்டமாயிடும்”
“எல்லா ரயில்லேயும் சாப்பாடு உண்டா?”
ரத்னா கேட்டாள். அவன் நின்று ஒரு வினாடி யோசித்தான். சில வண்டியிலே தான். முக்கியமா பர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் கிளாஸுக்குத்தான் இந்த சௌகரியம். ஆனா இந்த வாரம் முழுக்க நிறைய மீந்து போறதாலே தேர்ட் க்ளாஸும் சாப்பாடு வாங்கலாம்னு டெம்பரரியா வச்சிருக்கோம் என்றான்.
அம்லா ஜங்க்ஷனை வண்டி நெருங்கியபோது இங்கே என்ன விசேஷம் என்று ரத்னா கேட்டாள். அவள் எல்லோரையும் விட்டு, எதிர் சீட் பாட்டியின் மருமகளிடம் நேரடியாகக் கேட்டது இது.
”சுல்தான் ஆட்சி காலத்துலே வெடி மருந்து செஞ்ச இடம்”.
அம்லான்னா நெல்லிக்காய் இல்லையோ என்று நான் விசாரித்தேன்.
“ஒவ்வொரு பாஷையிலும் ஒவ்வொரு அர்த்தம். இந்தியிலே நெல்லிக்காய் தான். சம்ஸ்கிருதத்திலேயும் அது ஆமலகம். நெல்லி தான்”.
அந்தப் பெண் அடக்கமானவளாக இருந்தாலும், நிறையப் படித்திருக்கிறாள் என்று புலப்பட்டது. என்ன செய்ய, இந்தக் கிழவி சதா பாய்ந்து பிராண்ட முதுகைக் காட்டிக் கொண்டு நிற்கவேண்டிப் போனது அவளுக்கு.
ராத்திரி எட்டு மணியாகும் போது ரயில் அமலா ஜங்க்ஷனில் பெருமூச்சு விட்டுக்கொண்டு நின்றது.
ஜங்க்ஷனில் இரண்டு ரயில்வே உத்தியோகஸ்தர்கள் எவர்சில்வர் தட்டுகளில் சாதம், பருப்புக்கும் சாம்பாருக்கும் இடைப்பட்ட ஒன்று, பூரி, ஊறுகாய், தயிர், மோர் மிளகாய் என்று வைத்த தட்டுகளோடு கம்பார்ட்மெண்ட் உள்ளே வந்தார்கள். தட்டிலேயே குழித்து சாம்பாரும், கூட்டும் வைக்க இடம், ஓரமாக சப்பாத்தி, ரொட்டி மடித்து வைக்க இடம் என்று அமைந்த அந்தத் தட்டு எங்கே கிடைக்கும் என்று ரத்னா ரயில்வேக்காரனை விசாரித்தாள்.
நாம் கேட்டால் எரிந்து விழுகிற அந்த மனுஷர்கள் ரத்னாவுக்காக ஏழு மலை, ஏழு கடல் தாண்டி தகவல் அறிந்து வந்து சொல்ல . ஓட்ட ஓட்டமாக ஓடி அடுத்த நிமிஷம் திரும்பி வந்து கும்பகோணம் என்றார்கள்.
”அன்னத்ரேஷம்.. இது என்ன கொழந்தை வெளிக்கு போனமாதிரி ஒரு வஸ்து, யாரோ பீக்கையாலே வடிச்சு அனுப்பின சாதம், கோழி எச்சம் மாதிரி அதென்ன, ஊறுகாயா.. கண்றாவி. இதை எல்லாம் தின்னால்தான் உசிரை உடம்போட பிடிச்சு வைக்க முடியுமா?”
பாட்டி சொன்னபடி சத்துமாவு உருண்டையை எடுத்துப் பிய்த்துச் சாப்பிட்டாள். அவள் மருமகளும் மகனும் வேறு யாரோடோ அந்தக் கிழவி ஏச்சு பேச்சில் இருக்கிறாள் என்பதாக அவளை முழுக்க ஒதுக்கி சாப்பிட ஆரம்பித்தார்கள். நானும் ரத்னாவும் கொண்டு வந்த சாப்பாட்டை ருசித்து உண்டோம். எதுவும் ஊசிப் போகவில்லை. எதுவும் கெட்டுப் போகவில்லை.
பாட்டியம்மா, மகன், அவன் மகள், மனைவி என்று அடுத்த மணி நேரத்தில் தூக்கத்தில் ஆழ்ந்தார்கள். ரத்னாவும். ரயிலின் லயம் தவறாத ஆட்டத்தில் தூக்கம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம். என் காதில் சதுர்புஜம் சதுர்புஜம் சதுர்புஜம் சதுர்புஜம் என்று தொடர்ந்து ஒலிக்கும் தாளக்கட்டு அது.
எழுந்து மணி பார்த்தேன். ராத்திரி பத்து மணி. சத்தமின்றி வந்து சேர்ந்திருந்த இடம் இடார்ஸி. ப்ளாஸ்கில் பால் வாங்கப் போனபோது எழுந்த அந்தப் பெண்ணைக் கேட்டேன், அவங்களுக்கும் ப்ளாஸ்கிலே பால் வாங்கி வரணுமான்னு. பெரியவங்களுக்கு வேண்டாம்னாலும் குழந்தைக்கு வேண்டி இருக்குமே. வேண்டாம் என்று சொல்லி விட்டாள் அந்தப் பெண்மணி.
அவள் ரத்னாவுக்குக் கண் சாடை காட்ட, இவளும் சரி என்று தலையசைத்தாள். ரெண்டு பேரும், போதும் இந்த சம்சாரம் என்று ஓடப் போகிறார்களா? அடுத்து வரும் ஸ்டேஷனில் தெலுங்குக்காரி போல இட்லிக்கடை வைத்துப் பிழைத்துக் கொண்டு சுதந்திரமாக இருக்க திட்டமா?
ரத்னா என் தோளில் இருந்து ஜோல்னா பையை வெடுக்கென்று பறித்தாள். பையோடு நானும் இழுக்கப்பட்டு பாட்டி காலடியில் விழப் போகப் பாட்டியம்மாள் கண் விழித்தாள்.
ரத்னா என் பையிலிருந்து தண்ணீர் கூஜாவை வெளியே எடுத்தவள், திரும்ப உள்ளே வைத்து, பையை எனக்கு மாலை போல் மாட்டிவிட்டு, ’ஜோ தூங்குப்பா’ என்றாள். எதிர்க் குடும்பக் குழந்தை கெக்கே என்று சிரித்தது.
பாட்டி மறுபடி படுத்துக்கொள்ள பதினொரு மணி சுமாருக்கு போபால் ஸ்டேஷன் வந்தது. உள்ள காரியத்தை பார்க்கலாமா என்று ரத்னாவைப் பார்த்து அபிநயம் பிடித்தாள் பிராமணப் பெண்.
சரி என்று தலையாட்டி எழுந்து என் பக்கத்தில் இருந்து ஜோல்னாபையை எடுத்தாள் ரத்னா. எதிர் சீட் குடும்ப மருமகள் பாட்டி தலைமாட்டில் இருந்து காசி கூஜாவை எடுத்தாள். அதன் இடத்தில் ரத்னா அவசரமாக ஜோல்னா பையில் இருந்த எங்கள் கூஜாவை வைக்க, பாட்டி எழுந்திருந்தாள்.
’கார்சிகன் ப்ரதர்ஸ்’ இங்க்லீஷ் படத்தில் டக்லஸ் ஃபேர்பாங்க்ஸ் ஜூனியர் ரெட்டையராக வருவது போல பாட்டியின் காசி கூஜாவும் அருகே எங்கள் தண்ணி கூஜாவும் நெருக்கியடித்து பாட்டிக்குத் தலைமாட்டில் இருந்தன. அடையாளம் கண்டுபிடிக்க பாட்டியின் காசி கூஜா தலையில் பட்டுத்துணி மட்டும்.
எழுந்து இருக்கும் இடம், காலம் புலப்படாமல் கிழவி ’சத்துமா’ கேட்டாள். பிசைந்து வைத்திருந்ததை மருமகள் எடுத்து ஒரு தட்டில் வைத்து நீட்ட பால் இல்லையா என்று குற்றம் சொல்லியபடி அதைத் தின்று முடித்தாள் கிழவி. பத்தே நிமிஷத்தில் மறுபடி தூங்க ஆரம்பித்தாள்.
தலப்பா கட்டிடலாம் என்றாள் மராட்டியில் அந்த நாட்டுப்பெண். அவளுக்கு மராட்டி தெரியும் என்பது அந்த நடுநிசியில் தெரியவர சந்தோஷ பரிபூரணன் ஆனேன்.
ரத்னாவிடம், ”என்ன விஷயம், என் முதுகுக்குப் பின்னால் என்ன நடக்கிறது” என்று கேட்டேன். மராட்டியில் தான். அவள் சொன்ன பதில் நான் பார்க்காத வேறேதோ இங்க்லீஷ் சினிமா போல இருந்தது.
பிற்பகலில் எல்லோரும் தூங்கும்போது அந்தக் குழந்தைப் பெண் பாட்டி தலைமாட்டில் வைத்திருந்த அப்பிச்சியை எடுக்க, என்றால் இனிப்பு பதார்த்தத்தை எடுக்க அவள் அருகில் போய்க் கையை நீட்ட, காசி கூஜா கீழே சரிந்து உள்ளே இருந்த புனித ராமேஸ்வரம் தீர்த்தங்களின் கலவையான தண்ணீர் முழுக்கத் தரையில். இத்தனை விமரிசையாக அதைக் கொண்டு வந்த பாட்டியம்மா சரியாக அதை மூடி வைக்கவில்லை. அல்லது ரயில் ஆட்டத்தில் மூடியின் பிரிகள் கழன்று கூஜா தானே திறந்திருக்கக் கூடும்.
பாட்டி எழுந்தால் பத்ரகாளியாக ஆடுவாள் என்று பயந்து நடுங்கிய மருமகள் ரத்னாவைப் பார்க்க அவள் சற்றும் தாமதியாது என் ஜோல்னா பையில் இருந்து எங்கள் தண்ணீர்க் கூஜாவை எடுத்து பாட்டி தலைமாட்டில் வைத்து பட்டுத்துணி கொண்டையை அதற்கு அணிவித்து விட்டாள். கம்பார்ட்மெண்ட் தரையை நனைத்த கூஜா நீரைப் பழம்புடவை போட்டுத் துடைத்ததும் அவளே.
பாட்டியின் கிட்டத்தட்ட காலியான காசி கூஜாவை என் ஜோல்னாவுக்கு இடம் பெயர வைத்தது அவள்தான்.
குழந்தை என்னோடு இறங்கி வந்து நாக்பூரில் நிரப்பியது பாட்டியுடைய காசி கூஜாவை என்று எனக்குத் தெரியாது போனது.
அந்தக் காசி கூஜாவை பாட்டி தலைமாட்டில் திரும்ப வைத்து, எங்கள் தண்ணீர் கூஜாவை ஜோல்னா பைக்குள் திரும்ப கொண்டு போக வேண்டும். இதற்கான முஸ்தீபு எடுக்கும் போதெல்லாம் பாட்டி கண் விழித்துக் கொள்கிறாள். ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் போவதற்குள் கூஜா இடமாற்றம் நடத்தி முடிக்கணும். நான் செய்கிறேன் என்று முன்வந்தேன்.
நானும் பரபரப்பானேன். ரயில் வேகமெடுத்திருந்ததால் வலம் இடமாக வெள்ளத்தில் படகு போல் அலை பாய்ந்தது. மெல்ல மறுபடி இரண்டு ரெட்டைப் பிறவி கூஜாக்களையும் அருகருகே இருத்தினேன்.
பட்டுத் துணியை கூஜாத் தலைக்கு இடம் மாற்ற அவிழ்க்க, கை தவறி அது தரையில் விழுந்தது.
அதை எடுக்கக் குனிய ரயிலின் ஆட்டத்தில் இரண்டு கூஜாக்களும் தரையை நோக்கிச் சரிய ரத்னா அவற்றைச் சேர்த்துப் பிடித்து ஒரமாகத் தள்ளினாள்.
பாட்டி கண் விழித்து எழுந்து உட்கார்ந்தாள். ரெண்டு கூஜா ரயில் சீட்டிலும், பட்டுத்துணி தரையிலும், அவள் கண்ணில் எந்த வினாடியும் படலாம்.
ரத்னா எங்கள் கூஜாவை எடுக்க முயன்று, எது அது என்று புரியாமல் ஒரு வினாடி குழம்பி பக்கத்தில் இருந்த கூஜாவை எடுத்து பின்வலித்து எங்கள் சீட்டில் வைத்தாள்.
பாட்டி, தரையில் பட்டுத் துணியைப் பார்த்தாள். அதை எடுத்து மேலே வைக்கும்போது கூஜாவையும் பார்த்தாள். எங்களுக்கு அது காசி கூஜாவா அல்லது எங்கள் தண்ணீர் கூஜாவா என்று தெரியவில்லை. பட்டுத் துணியைத் தரையிலிருந்து எடுத்து, அந்தக் கூஜாவுக்கு முடிசூட்டினாள்.
“ஏண்டியம்மா ரத்னா உங்காத்து தண்ணி கூஜாவையும் இங்கேயே இருத்திட்டியா? போறது போ. தீட்சிதர் கோபிச்சுக்க மாட்டார். இது என் ரயிலா அவர் ரயிலா முணுக்குன்னா கோபிக்க? தண்ணியைத் தூக்கிண்டு கிறுக்கச்சி மாதிரி காசிக்கு போறேன்னு நினைச்சுக்காதே… காசியிலே தரிசனம் முதல்லே பண்ணினா அங்கே இருந்து கங்கா ஜலம் எடுத்துண்டு ராமேஸ்வரம் வந்து ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் பண்ணனும். ராமேஸ்வரத்துலே முதல்லே தரிசனம் செஞ்சு வடக்கே காசிக்கு போனா, ராமேஸ்வரத்துலே இருக்கற புண்ய தீர்த்தங்களோட ஜலத்தை காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் பண்ண எடுத்துப் போகணும்னும் நியமம். கூஜா வாயைக் கட்டி, என் வயத்தை கட்டி சிரமப்பட்டு எடுத்துண்டு போறேன்.”.
இப்போது நான் அடக்க முடியாமல் சிரித்து, நடுராத்திரியிலே சும்மா சிரிக்கற அபிஷ்டுத்தனத்துக்கு பாட்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டேன். அவள் என்ன சொன்னாலும் கோபம் ஏனோ வரமாட்டேன் என்கிறது.
ஆக, அந்தக் குடும்பம் காலையில் ஆக்ராவில் இறங்கத் தயாரானபோது அவர்கள் எடுத்துக் கொண்டு போகும் புனித நீர்ப் பாத்திரம் எங்கள் தண்ணீர் கூஜாவா, அல்லது பாட்டியின் மடியான காசி கூஜாவா என்று அடையாளம் தெரியாமலே போனது. கூஜாவில் இருந்தது எந்த ஊர்த் தண்ணீர் என்றும் தெரியவில்லை. தெரிந்து என்ன ஆகப் போகிறது?
இந்த தேசத்தில் எங்கே இருந்தும், சுத்த மனசோடும் பக்தியோடும் எடுத்துப் போகும் சுத்தமான தண்ணீரை அபிஷேகத்துக்கு வேண்டாம் என்று காசி விசுவநாதன் ஒருபோதும் சொல்ல மாட்டான்.
பாட்டியின் மருமகள் ரத்னா பக்கம் வந்து, எல்லாத்துக்கும் நன்றி என்று துரைகள் துரைசானிகளின் தேவ பாஷையில் காலை நேரத்தில் கனிவாகச் சொல்லி எனக்கும் காலை வணக்கம் சொல்லிக் கடந்து போனாள். அவளுக்கு பட்டாம்பூச்சி பாஷை, பசுமாடு மொழி தவிர மற்ற எல்லாம் அத்துப்படிபோல.
பாட்டி ’”புத்ர ப்ராப்தி ரஸ்து” என்று ரத்னா தலையைத் தடவி என்னையும் சேர்த்துப் பார்த்து ஆசிர்வாதம் செய்து மருமகள் கையைப் பிடித்து இறங்கிப் போனாள். அவள் இதை மராட்டியில் சொல்லியிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.
(எடிட் செய்யப்பட வேண்டியது)