கரோல்பாக் மார்க்கெட்டில் சுமங்கலி ஸ்டோர்ஸ் என்று கோணல் மாணலாகத் தமிழிலும், அச்சடித்தது போல் இந்தி, இங்க்லீஷிலும் பெயர்ப் பலகை வைத்த கடை வாசலில் நின்றோம்.
சுமங்கலி ஸ்டோர்ஸில் முதல் பார்வைக்கு வரிசையாக பிள்ளையார் கோவிலில் நேர்ந்து கொண்டு சூரைத் தேங்காய் போடக் கொண்டு வந்து குவித்தமாதிரி தேங்காய்கள் பெரும் குவியலாகக் கண்ணில் பட்டன. தண்ணீர் வைத்த கும்பாக்களில் வெற்றிலை முழுக்க அமிழ்ந்திருந்தது. தமிழ்ப் பத்திரிகைகள் மெட்றாஸில் இருந்து சுடச்சுட அனுப்பப்பட்டு தூசி உதிரும் ஷெல்ப்களில் ஓரமாக வெண்சாமரம் காவலுக்கு இருக்கக் காட்சியளித்தன. மனோன்மணி விலாஸ் தாரண வருஷத்துப் பாம்புப் பஞ்சாங்கம் மஞ்சள் அட்டையோடு அச்சடிக்கப்பட்டு பெரிய எழுத்தில் தென்பட்டது. மண்டை வெல்லம், வட்டுக் கருப்பட்டி, இட்லி மிளகாய்ப்பொடி, மோர்மிளகாய், மிதுக்க வற்றல், பொரிவிளங்காய் உருண்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ஸ்நாந பௌடர், அரப்புத் தூள், மெட்றாஸ் 777 ரெண்டு நிமிஷ இட்லிக்கான பொடி, ஜாடிகள், தமிழில் வெங்கடேச சுப்ரபாதம் புத்தகம், விசேஷங்களுக்கான மந்திரங்களும் நடைமுறையும் போன்ற புரோகிதர்களுக்கும், ஆபீஸ் அவசர பிரம்மசாரிகளுக்கும் உதவியான கும்பகோணம் பிரசுரம் புத்தங்கள் என்று மெட்றாஸ் மாகாணத்துக்கே உரித்தான பொருட்கள் கம்பீரமாக இடத்தைப் பிடித்துக்கொண்டு இருந்தன. ஓரமாக ’தேங்காய் அழுகியிருந்தால் பணம் வாபஸ் இல்லை’ என்றும் ’ஹரித்வார், ரிஷிகேச யாத்திரை இவ்விடம் ஏற்பாடு செய்யப்படும்’ என்றும் ‘எம் எஸ் சுப்புலக்ஷ்மி பாடிய ரெகார்டு ‘காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே’ கிடைக்கும்’ என்றும் அட்டை போர்டுகள் விட்டத்திலிருந்து தொங்கின.
இத்தனையும் வைத்துக்கொண்டு எப்படியோ கடைக்காரர் உள்ளே கல்லாவில் இருக்கவும், வெளியே ஏழெட்டு வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பிராமணக் கொச்சையில் தங்களுக்குள்ளும் கடைக்காரரோடும் பேசிக்கொண்டு நின்றார்கள். இட நெருக்கடி தெரியாத இடமாக அது இருந்தது. நான் ஷெல்பில் மேல் தட்டிலிருந்த பத்திரிகையை எடுத்தேன்.
போன வாரக் கல்கி. ஜி என் பாலசுப்ரணியம் அட்டையில் இருந்ததைப் பார்த்து விட்டுப் புரட்ட, கார்டூனில் ஒரு மெட்றாஸ் தலைவர் பெட்டியோடு ஜனாப் ஜின்னா வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டிருந்தார். சார் வாங்கறதுன்னா படிங்கோ என்றார் கடைக்காரர் சிரித்தபடி. வாங்கித்தான் படிக்கணும் சார் என்றேன். அங்கிள் சேர்த்தே பில் போட்டுடுங்க.. எங்க அங்கிள் ஆண்ட்டி தான், மெட்றாஸ்லே இருந்து வந்திருக்காங்க என்றாள் பூர்ணா.
ஓ மெட்றாஸ்லேயிருந்து வந்திருக்கேளா:, பேஷ் பேஷ் அங்கே என்ன பண்ணிண்டிருக்கேள்? நான் சர்க்கார் சேவகன் என்று சொன்னதை கடையில் நின்ற யாரும் சட்டை செய்யவில்லை. இன்னொரு மதறாஸி சர்க்கார் சேவகன். கடைக்காரர் மட்டும் இன்னொரு பேஷ் பேஷ் உதிர்த்தார்.
சார், மெட்றாஸ்லே இருந்து கிளம்பற அவசரத்துலே ரேஷன் அரிசியும் ரேஷன் கார்டும் கொண்டு வர மறந்து போச்சு. கொஞ்சம் அரிசி கிடைக்குமா? ரத்னா கேட்டாள்.
அவர் கொஞ்சம் யோசித்தார். எத்தனை நாள் கெஸ்ட் ஆக வந்திருக்கீங்க இவாத்துக்கு? மூணு நாள். என் தமையன் தான் பீமாராவ். ஓ பேஷ் பேஷ்..
நான் இங்கேயும் ரேஷன் கறாரும் கண்டிப்புமாக நடத்தப்படுகிறதா என்று விசாரித்தேன்.
எங்கேயும் அப்படித்தான் சார், லண்டன்லேயே அப்படித்தானாம் அஸ்கா சர்க்கரைக்கும் விஸ்கி ப்ராண்டிக்கும்..
பெரிதாகச் சிரித்தார் அவர் ஏதோ காளி என் ரத்தினம் காமெடி பார்த்த மாதிரி.