”இந்தத் தெரு திரும்பி நேரே ஒரு மைல் போனா நம்ம வீடுதான்.. கரோல்பாக் வந்துடும்” என்றான் பீமாராவ். ”தமிழ்நாட்டிலே இருந்து யார் ஷார்ட் ஹாண்ட், டைப் ரைட்டிங் ஹையர் இல்லே லோயர் சர்டிபிகேட்டோட வந்தாலும் இங்கே ஏதாவது மினிஸ்ட்ரியிலே வேலை கிடைச்சிடும்.. என்னை மாதிரி வாய் வார்த்தை, டைப் ரைட்டிங் மட்டும் தெரிஞ்சிருந்தாலும் அதுக்கு ஏத்த மாதிரி மினிஸ்ட்ரி வேலை இல்லாட்ட ப்ரைவேட் கம்பெனி உத்தியோகம்னு டெல்லியிலே வேலைக்கு பஞ்சமே இல்லை .. டைப் ரைட்டிங் எந்த விரல் எந்த எழுத்துக்குன்னு மட்டும் கத்துக்கிட்டு வந்த நம்மாள் ஒருத்தர் இப்போ ஒரு கம்பெனியிலே ஜெனரல் மேனேஜர்னா பாத்துக்க” என்றான் பீமா. பேசாமல் டெல்லிக்கு குடித்தனம் மாற்றிக்கொண்டு வந்தால் என்ன என்று ஒரு வினாடி தோன்றியது.
— — — — —
வீட்டுக்குள் தமிழ் மருந்துக்காகக் கூடப் புழங்கவில்லை என்பதையும்,பேச்சு வார்த்தை எல்லாம் இந்தியில் தான் முழுக்க இருக்கும் என்பதையும் கவனித்தபோது, என் இந்தியை கொஞ்சம் ஜாக்கிரதையாக்கிக் கொள்ள தீர்மானம் செய்துகொண்டேன். இவர்களில் யாரும் என் வீட்டில் போன தலைமுறை வரை புழங்கிய தஞ்சாவூர் மராட்டி பாஷை பேச மாட்டார்கள் என்று நினைக்க ஏனோ கொஞ்சம் வருத்தமாக இருந்தது. எனக்குத் தமிழ் மட்டுமில்லை அந்த பாஷையும் தான் தாய்மொழி.
—————– —–
சுமித்ரா அண்ணி வஞ்சனையில்லாமல் ஆளாளுக்கு நாலு துண்டு ஆலு பரோட்டாவும் தயிரும், கத்தரிக்காய் வதக்கல் கறியும், படேகர் ஊறுகாயும் பரிமாற திவானில் உட்கார்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டே சாப்பிட நன்றாக இருந்தது. தயிர் சாதமும் பாசந்தியும் பிரிட்ஜில் வாங்கி வைத்த கரோல்பாக் ஸ்பெஷல் ஐஸ்கிரீமும் வயிற்றில் இடம் இல்லாமல் போனாலும் எப்படியோ உள்ளே புகுந்து உடம்பிலும் மனசிலும் இனிமையையும் குளிரையும் பரப்பின.
–