ப்ளாஸ்க் எங்கே?
இங்கே என்று ரயிலில் எங்கள் கம்பார்ட்மெண்டில் வந்த நாலு சிப்பாய்களில் தமிழ் பேசும் ராணுவக்காரன் என் ப்ளாஸ்கை நீட்டினான்.
“நாங்க கடைசியா இறங்கறபோது பார்த்தோம்… சீட் ஓரமா கிடந்துது.. சரி எப்படியாவது பார்த்து கொடுத்திடலாம்னு எடுத்து வந்தேன்”
நான் சொன்ன நன்றியை அப்புறம் ஒருநாள் சாவகாசமாக வாங்கிக்கறேன் என்பது போல் சிரித்தபடி கையசைத்துப் போனான் அவன். அவர்.
“போகலாமா பீமா. ட்ரைவர் எங்கே போனாரு?” கெத்தாக கார் உள்ளே உட்கார்ந்தேன். “நான் தான் ட்ரைவர்” என்றபடி காரை ஸ்டார்ட் செய்தான் பீமாராவ்.
“அண்ணா நீ ஊர்லே சைக்கிள் கூட ஓட்ட மாட்டே. இங்கே வந்து கார் ஓட்ட படிச்சுட்டியா?” ரத்னா அழகாக ஆச்சரியப்பட்டாள்.
”லைசன்ஸ் எடுக்க என்ன செலவாகும்” நான் விசாரித்தேன். கார் படிக்க ஐநூறு ரூபாயும் லைசன்சுக்கு இன்னொரு நூறும் மொத்தம் அறுநூறு. ரெண்டு பேர் கத்துக்கிட்டா மொத்தம் ஆயிரம் ரூபாய்லே முடிச்சுடலாம்”
பீமாராவ் சொல்ல நான் ஆபீசில் யாரோடு போய் கார் கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துப் பார்க்க, சம்பந்தமே இல்லாமல் கேளப்பன் எட்டிப் பார்த்தார். விலாசினிக்கு ஜலதோஷம் என்பதால் வரமுடியவில்லையாம்.
”உனக்கு கார் ட்ரைவிங் கம்பெனி கொடுத்தது யார்?” ரத்னா கேட்க, நானும் சுமித்ராவும் ஜோடியாப் போய் கார் கத்துக்கிட்டோம் என்றான் பீமா.
“அட, அண்ணியும் கார் ஓட்டறாங்களா? நல்லதா போச்சு. நீ ஆபீஸ் போனாலும் அவங்களோட டெல்லி சுத்திப் பார்த்து, வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கிடலாம்” என்றாள் ரத்னா களிப்போடு.
நான் சும்மா வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். வயிற்றில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு மணி அடித்த மணியமாக இருந்தது. பகல் ரெண்டு மணியாச்சே.
சீரான வேகத்தோடு பீமாராவ் கார் ஓட்டிப் போனான். வருடம் முழுக்க, நாள் முழுக்க காரோ ட்ரக்கோ ஏன் டாங்கு கூட ஓட்ட டெல்லி வீதியில் பழகலாம் என்று தோன்றியது. எந்த வீதியிலும் கூட்டம் இல்லாமல் அவ்வப்போது ஒன்றிரண்டு கார்களும் ஒன்றிரண்டு மோட்டார் சைக்கிள்களும் கண்ணில் பட்டுக் கடந்து போயின. கணிசமான சைக்கிள்கள் எங்கும் எல்லாத் திசையிலும் போன மணியமாக இருந்தன.
”பீம் அண்ணா, உங்க ஊர்லே வெய்யில் இதமா இருக்கு. மெட்றாஸ் மாதிரி காயறது இல்லே போலிருக்கு” என்றாள் ரத்னா.
“அக்டோபர்லே அப்படித்தான் அம்மா. அடுத்த மாசம் இந்த வெய்யிலும் காயப். குளிர் ஆரம்பிச்சுடும். ஸ்வெட்டர், கம்பளி, மப்ளர் எல்லாம் லாஃப்ட்லே இருந்து வந்துடும்.”.
பீமாராவ் மிக்சர் செய்வதுபோல் தமிழ், இந்தி, மராட்டி, இங்க்லீஷ், உருது என்று எல்லா பாஷையில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் கிள்ளிப்போட்டு உருவாக்கிய ஒரு பாஷையில் பேசிக்கொண்டே காரின் வேகத்தை சற்றே அதிகப்படுத்தினான்.
ஒரு சைக்கிளின் பின்னால் கார் சற்றே முகர்ந்து பார்க்க, ஓட்டிப் போனவன் காலை ஊன்றித் தலை திருப்பி முறைத்தான். முறைத்தாள். ஆறடி அரம்பை அவள். பஞ்சாபிப் பெண்.
ஆயிரத்து முன்னூற்று எழுபத்துமூன்று மைல் தூரத்துக்குள் விதவிதமான அழகியரைக் கண்ணில் படவைத்த தெய்வத்துக்கு நமஸ்காரம். அதையெல்லாம் நான் ரத்னா கண்ணில் படாது பார்த்து அனுபவிக்க வைத்ததற்கு இன்னொரு ஸ்பெஷல் நன்றி.
– எழுதிக் கொண்டிருக்கும் ராமோஜி நாவலில் இருந்து