ஈ மசி

 

கல்கி ‘டிஜிட்டல் காண்டீன்’ பத்தி

சின்ன வயசில் பெரிய வீட்டில் இருந்துவிட்டுப் பெரிய வயசில் சின்ன வீட்டில் குடி போவது போல் துயரம் எதுவுமில்லை. அட, பல மாடிக் குடியிருப்பு அபார்ட்மெண்டைச் சொல்றேன் சார். ரெண்டு பெட்ரூம், எலிப் பொறி மாதிரி சமையல் அறை, ஹாலில் சோபா, நாலு நாற்காலி, டைனிங் டேபிள் என்று நாலாவது மாடியில் எண்ணூறு சதுர அடி ஃப்ளாட்டின் வசிக்கும் பலருக்கும் புத்தகம் படிக்க ஆசையிருந்தாலும் வாங்கிச் சேர்த்து வைக்க இடம் இருக்காது. கவலையை விடுங்க, டெக்னாலஜி எதுக்கு இருக்கு? எலக்ட்ரானிக் மசி வந்தாச்சு.

இந்த ஈ-மசியின் அடிப்படை சின்னச் சின்ன கோளங்கள். ஒவ்வொன்றின் விட்டமும் நம் தலைமுடியின் கனத்தை விடச் சிறியது. ஒவ்வொரு கோளத்துக்கு உள்ளேயும் கருப்பும் வெளுப்புமாக கடுகைவிடச் சிறிய மசித் துணுக்குகள் மிதந்தபடி இருக்கும், இப்படி லட்சக்கணக்கான கோளங்களை இரண்டு மெல்லிய பிளாஸ்டிக் படலங்களின் (ஃபிலிம்) நடுவே வைத்துவிடலாம். மிகமிகக் குறைவான மின்சக்தியை அவற்றில் செலுத்த வேண்டும். கோளத்தில் பாசிடிவ் சார்ஜ் மின்சாரம் பாயும்போது வெள்ளை மசித் துணுக்கு முன்னணிக்கு வரும். அது நெகட்டிவ் ஆக இருந்தால் கருப்புத் துணுக்கு முன்னுக்கு வரும். இந்த எளிய தத்துவத்தையும், எலக்ட்ரானிக் மசி கோளங்களையும் கொண்டு புத்தகம் உருவாகி விடும் எப்படி?

நீங்கள் படிக்கிற கல்கியின் இந்தப் பக்கத்துக்கு எழுத்தும் படமுமாக ஒரு தனி வடிவம் உண்டு. இதே பத்திரிகையின் அடுத்த பக்கத்துக்கு கொஞ்சம் மாறுபட்ட இன்னொரு வடிவம் இருக்கிறது. கருப்பு வெளுப்பு டிஜிட்டல் மசித் துணுக்குகளை மின்சக்திக்கு உட்படுத்தி இந்த இரண்டு பக்கங்களையும் வெவ்வேறு வடிவங்களாக சேமித்து விடலாம். மசித் துணுக்குகள் இணைந்து உருவாக்கிய வடிவங்களை இதற்காகவே தயாரிக்கப்பட்ட வாசிக்கும் கருவி (ரீடர்) அடையாளம் கண்டு, படிக்க வசதியான பத்திரிகைப் பக்கமாக மின் திரையில் பரத்தும்.

இரண்டு படலங்களுக்கு நடுவே எலக்ட்ரானிக் மசிக் கோளங்கள் உருவாக்கும் பக்கங்கள் இரண்டோடு முடிவதில்லை. இந்த வாரக் கல்கி, போன வாரம் வந்தது, கடந்த பத்து ஆண்டு மொத்த இதழ்கள் இப்படிப் பலவற்றையும் ஒரு சிறிய பரப்பில் சேமித்துக் கொள்ளலாம். இதையே புத்தகக் கணக்காகப் போட்டால்? ஆயிரம் ‘தலகாணி சைஸ்’ புத்தகங்களை கைக்கு அடக்கமான சின்னத்திரை எழுத்தாக மாற்றி, போகும் இடத்துக்கு எல்லாம் கூடவே எடுத்துப் போகலாம். இவற்றின் காகிதப் பதிப்புகளை வாங்கி அடுக்கி சேர்த்து வைக்க முழு வீடும் தேவைப்படும்.

எலக்ட்ரானிக் இங்க் வடிவங்களாக சேகரித்த புத்தகங்களைப் படிக்க மின்சக்தி செலவும் குறைவு. மின் திரையை ஒரு முறை மட்டும் ஒளியூட்ட இத்தணூண்டு பாட்டரி சார்ஜ் வேண்டும். அதை வைத்து ஏழாயிரம் பக்கம் படித்து விடலாம் – நேரம் இருந்தால். நல்ல பகல் நேரத்திலும் பளிச்சென்று தெரியும் ஒளித் திரை அது என்பதால், திரையைப் பெரிதாக்கி நாலு தெரு சந்திக்கும் இடத்தில் நிறுத்தி முழுப் பத்திரிகையையும் பலர் படிக்க வழி செய்யலாம். பள்ளிக்கூடத்தில் இந்த வசதி வரும்போது குழந்தைகளுக்கு புத்தக மூட்டை சுமை குறையக் கூடும்.

எலக்ட்ரானிக் மசியின் மகத்துவம் இது என்றால், இணைய நூலகம் புத்தக ரசிகர்களுக்கான இன்னொரு தொழில்நுட்ப வசதி. பதினைந்து லட்சம் புத்தகங்களை இண்டர்நெட் லைப்ரரியாக டிஜிட்டைஸ் செய்து வைத்து உலகம் முழுக்க இலவசமாக கிடைக்க அமெரிக்காவின் கார்னகி மெல்லன் யூனிவர்சிட்டி வழி செய்திருக்கிறது. (http://www.ulib.org/) ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் (ஓ.சி.ஆர்) என்ற பரவலாகப் பயனாகும் டெக்னாலஜி இதற்கு பின்னே உள்ளது. புத்தகப் பக்கங்களை ஸ்கேனர் கொண்டு வருடிக் கிடைத்த வடிவங்களில் இருந்து என்ன எழுத்து எங்கே என்று கண்டுபிடிக்கும் மென்பொருள் வழிமுறை இது.

பழைய புத்தகங்களில் அச்சு அங்கங்கே அழிந்து போயிருந்தால் ஓ.சி.ஆர் தடுமாறும். ஆனால் மனித மூளை எழுத்தை சரியாக ஊகித்து விடும். பல்கலைக் கழக இண்டர்நெட் நூலக ஓ.சி.ஆருக்கு உலகம் முழுக்க நம் போன்றவர்கள் நமக்கே தெரியாமல் உதவி செய்கிறோம். இண்டர்நெட்டில் ஈமெயில் மற்றும் அடையாளத்தை நிரூபிக்க வேண்டிய இணைய தளங்களில் நுழையும்போது, கோணல்மாணலான எழுத்துக்களில் ஒரு வார்த்தையைத் திரையில் சதுரம் போட்டுக் காட்டுவார்கள். அது என்ன என்று கம்ப்யூட்டர் கீ போர்டில் எழுத்தெழுத்தாக அடிக்க வேண்டியிருக்கும். ஓ.சி.ஆர் கண்டுபிடிக்கத் தடுமாறிய பல லட்சம் அச்சு வடிவங்கள் இப்படி சதுரமாக விரிய, நாம் தினசரி சரியான எழுத்துக்களைக் கண்டுபிடிக்கிறோம். இதெல்லாம் இணைய நூலகத்தில் பதிவாகி ஓ.சி.ஆருக்கு உதவும். யார் சொன்னது நெட்டில் மேய்வது வெட்டி வேலை என்று?

(அண்மையில் வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன