Excerpt from my forthcoming novel Ramojiyam
”இந்த பஸ் தான். வாங்க அம்மா”.
பூர்ணா, வந்து கொண்டிருந்த பஸ்ஸைக் கைகாட்டி நிறுத்தினாள். கன்னாட் ப்ளேஸ் போகும் வண்டி அது என்று எழுத்துக்கூட்டி இந்தி மட்டுமே ஆன அறிவிப்புப் பலகையைப் படிப்பதற்குள் பஸ் கன்னாட் ப்ளேஸ் போய்விட்டது.
மெட்றாஸ் ஹோட்டல் என்று பெயர் பொறித்திருந்த ஹோட்டலுக்குள் போனபோது வலிந்து சென்னை சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி செய்திருப்பதைக் கண்டேன். டி என் ராஜரத்தினம் பிள்ளை வாசித்த யோசனா கமல லோசனா என்ற தர்பார் ராக க்ருதி நாகஸ்வர சங்கீதமாக கிராமபோனில் கேட்டுக்கொண்டிருந்தது. வாசலில் வீட்டு விசேஷத்துக்கு வருகிறவர்களை வரவேற்பது போல், செண்ட் கொட்டிய சந்தனப் பவுடரை சந்தன பேலாவில் கரைத்து வைத்து, பூசிக் கொள்ளச் சொல்லி அழைத்தவர் முதலாளியாக இருக்கக் கூடும். நீர்த்த சாம்பாரை கும்பா கும்பாவாகக் குடித்துக் கொண்டிருந்த சர்தார்ஜிகள் அது அலுக்கும்போது ஒரு விள்ளல் தோசையை ரொட்டி மாதிரி இரண்டு கையாலும் பிய்த்து எடுத்து வாயிலிட்டு மென்றது கண்ணில் பட்டது.
அநேகமாக எல்லோரும் முரட்டு ஜிப்பாவும், பட்டை ப்ரேம் மூக்குக் கண்ணாடியும், அளவாகக் கத்தரித்த தாடியுமாக பத்திரிகைக் காரர்கள் போல் தோன்றிய ஒரு சிறு கூட்டம் சுவாரசியமாக மெட்றாஸ் ரேஷன் நிலைமை பற்றி இட்லி சட்னியோடு நிதானமாக அலசிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது.
ரத்னா ஏற்கனவே டெல்லியில் இங்கெல்லாம் வந்திருப்பவள் போல் தோன்றியது. அவள் இந்தி என் இந்தியை விட ஊருக்குப் பொருத்தமான பஞ்சாபி சாயலோடு இருந்ததைக் கவனித்தேன்.
ஆளுக்கு ஒரு சாண்ட்விச்சும் பில்டர் காப்பியும் வாங்கிக் கொண்டோம். அடுத்து என்ன, ஐஸ்கிரீமா என்று சீண்டினேன். ஆமான்னா என்ன பண்ணப் போறீங்க? இல்லேன்னா என்ன பண்ண போறீங்க? நானே அவள் பதிலையும் சொல்லி விட்டேன். பேஷ் பேஷ் என்று இரண்டு பெண்களும் கரோல்பாக் தமிழ்க் கடைக்காரர் குரலில் சிலாகித்தார்கள்