Excerpt from my forthcoming novel ‘Ramojium’
புது மாம்பலம் பாத்திரக்கடை வெளியில் இருந்து பார்த்ததை விட உள்ளே நீளமாக இருந்தது. பெரிய கடைகளை விடக் குறைவுதான் என்றாலும் கடைக்குள் வைத்திருந்த வெங்கலப்பானை, அடுக்கு, குடம், தவலை, போகிணி, டபரா செட், உருளி என்று பாத்திரங்கள் லட்சுமிகரமாக வீட்டுச் சூழ்நிலையை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. நவராத்திரி கொலு வைத்தது போல் அவற்றை அழகான மரப்படிகளில் வைத்திருப்பது மனதில் பதிந்தது. ரத்னா ஒரு கச்சேரி ரசிகனின், ரசிகையின் சங்கீத ஈடுபாட்டோடு, ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து நோக்கித் திரும்ப வைத்து முன்னே போய்க் கொண்டிருந்தாள். அது அவள் வழக்கம்.
பாத்திரக் கடைக்குள் வந்து ஒரு மணி நேரம் கழித்து தேடி வந்த பாத்திரம் இல்லை என்று திரும்பவும் சங்கடப்பட மாட்டாள் ரத்னா. வந்ததற்காக சின்ன எவர்சில்வர் கிண்ணம், ஸ்பூன் என்று அப்போது ஏதாவது வாங்குவது உண்டு.
ஒரு தடவை திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு சின்னக்கடைத் தெருவில் ’எவர்சில்வர், வெங்கலம், பித்தளை, அலுமினியப் பாத்திரங்கள், இதர இரும்பு ஜாமான்கள் நயமான விலைக்குக் கிடைக்கக் கூடும்’ என்று எல்லா ரகத்தையும் அடக்கி விளம்பர போர்ட் நிறுத்திய கடையில் பாதாளக் கரண்டி வாங்க வேண்டும் என்று நுழைந்து விட்டாள் ரத்னா. ’மெட்றாஸிலே கிடைக்கலே, இங்கே இருக்கான்னு பார்க்கலாம்’.
பாதாளக் கரண்டி என்றால் என்ன என்றே, கூட்டம் இல்லாத காலை நேரத்தில் கடையை பத்து நிமிஷம் பார்த்துக் கொள்ள கடைக்காரர் நிறுத்திப் போன கடைப்பையனுக்குப் புரியவில்லை. அவன் இருக்கிற கரண்டிகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் காட்ட, இதுவும் வேண்டாம் என்று ஒதுக்கினாள்.
”பாதாளக் கரண்டின்னா கரண்டி இல்லே, பாதாளம் வரை போகவும் போகாது” என்று விளக்க உரை கொடுத்து அந்தப் பையனை இன்னும் குழப்பினாள்.
“உங்க வீட்டிலே கிணறு இருக்கா?” என்று அடுத்து அவள் கேட்க, அவன் ரத்னாவைப் பார்த்த பார்வையில் ‘பார்க்க லட்சணமா இருக்காங்க இந்த அக்கா பாவம் இப்படி” என்று வருத்தம் தட்டுப்பட, நான் கண்டேன் ஓரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பாதாளக் கரண்டியை.
”இதுவா, கேணியிலே பாத்திரம் விழுந்துச்சுன்னா எடுக்கறதுக்கு” என்றான் அவன் சுதாரித்துக்கொண்டு. பேரு என்ன இதுக்கு என்று ரத்னா கேட்டாள். தெரியாதுங்க என்றான். அப்புறம் எப்படி விக்கறே என்று விடாமல் அடுத்த கேள்வி. ”தெரியாட்ட உங்க சார் மாதிரி அவங்களே தேடி எடுத்துடுவாங்க” என்று சாமர்த்தியமான பதிலை அவனும் சளைக்காமல் சொன்னான். இன்னொரு நாள் வந்து வாங்கறேன் என்று அவள் கடையை விட்டு வெளியே வர, நமச்சிவாயா என்று கடைக்காரர் குரல் ஆதூரத்தோடு ஒலித்தது கேட்டது. எப்போது அவர் வந்தாரோ தெரியாது.
இன்னொரு தடவை அடுக்கு செட் வாங்க கூட்டம் அதிகம் மொய்க்கும் மைலாப்பூர் மாடவீதிக் கடையில் நுழைந்து தேடி, அரை மணி நேரம் கழித்து உள்ளங்கையில் வைத்துக் கொள்ளத்தக்க சின்ன எவர்சில்வர் தட்டோடு வந்து பில் போடச் சொன்னாள்.
”பில் எல்லாம் வேணாம்மா… கடை விளம்பரத்துக்கு தந்ததா இருக்கட்டும்.. எடுத்துக்குங்க” என்றார் கடைக்காரர்.
இப்படி வாழ்க்கையில் சில மணி நேரங்களை பாத்திரம் பண்டம் வாங்குவதில் செலவழித்தாலும் புது மாம்பலம் கடையில் காப்பி பில்டர் வாங்க அவள் ஐம்பத்தைந்து நிமிடம் மட்டும் எடுத்துக் கொண்டது அரிய சம்பவமாகும்.
ரொம்ப அழகா இல்லே என்று திருப்பித் திருப்பிப் பார்த்தபடி அதை பேப்பரில் கட்டித் தரவேண்டாம் என்ற் சொல்லி விட்டாள். என் ஜோல்னாப்பையில் கொண்டு வருகிறேன் என்று சொன்னாலும் கேட்காமல் வேறே துணிப்பையை எடுத்து வந்து அதில் போட்டுக் கொண்டு போக முற்பட்டாள்.
கடைக்காரர் உடனே ரத்னா ஸ்டோர்ஸ் என்று கடைப்பெயர் எழுதிய விளம்பரப் பையை உள்ளே இருந்து எடுத்து பெருமையோடு நீட்டினார்.
அட இதுவும் ரத்னாவா என்று நான் கேட்க, வேறே யார் ரத்னா என்று அவர் புரியாமல் கேட்டார். நான் தான் என்றாள் உச்சகட்ட பெருமையோடு ரத்னா. ”நல்லா இருங்கம்மா, நம்ம கடையிலே இன்னிக்கு வியாபாரத்தை ஆரம்பிச்சு வச்சிருக்கீங்க. உங்க கைராசி நல்லா வரட்டும்” என்று மங்கல வார்த்தை சொல்லி பத்து பெர்செண்ட் தள்ளுபடி செய்து பில்போட்டார். ஒரு சீப்பு மலை வாழைப்பழமும் கூடவே வெகுமதியாகக் கொடுத்து அனுப்பினார் அவர்.
நடக்கும்போது காப்பி ஃபில்டரைக் காட்டிச் சொன்னாள் ரத்னா – ஒவ்வொரு வெட்டிங்டேக்கும் ஒரு பாத்திரம் வாங்கறதை செண்டிமெண்டா வச்சிருக்கேன். இந்த வருஷம் இது. அடுத்த வருஷம் பொழச்சுக்கிடந்தா, ருக்மணி குக்கர்…
நான் சிரித்தபடி நடந்து வந்தேன். ஒரு காப்பி பில்டரை மட்டும் பரிசாகக் கொடுத்துக் கொண்டாடும் சாதாரண தினமா அது?
“டீயிலே ஆரம்பிச்ச இந்த உறவை காப்பியோடு கொண்டாடறோம் இப்போ” என்றேன்.
ஒரே நேரத்திலே ரெண்டு பேரும் நினைச்சுப் பார்க்கலாம்.
எலக்ட்ரிக் ட்ரெயினில் போகும் போது அவளிடம் சொன்னேன். அதற்கென்ன என்றாள்.
ஸ்டார்ட் சொன்னேன்.
ஒன்பது வருஷம் முந்தி, 1935-இல் ……..