“வாடா ராமோஜி. உங்க அப்பாவுக்கு எங்க வீட்டு டோர் நம்பர் பதினேழுக்கு பதிலா இருபத்தேழுன்னு தப்பா எழுதிட்டேன் .. போஸ்ட் பண்ணினதும் தான் உறைச்சது.. அது கமலா பாய் வீடாச்சேன்னு. நம்மடவங்க தான்.. வண்டி கீழண்டை வேறே போயிட்டிருக்கா, நீ நேரே அங்கே போய் எறங்கப் போறேன்னு நினைச்சேன்.. இஞ்ச எறங்கி ஓரமா இருட்டுலே நிக்கறதை பாக்கலே” என்றபடி வெற்று மேலுடம்போடு, பனைஓலை விசிறியால் முதுகு சொறிந்தபடி ராமாராவ் மாமா வரவேற்றார்.
உள்ளே போனோம். அடுத்த தெருவரை நீளுமாயிருக்கும் அந்த வீடு. தெரு வீடுகள் எல்லாமே அப்படித்தான் இருக்க வேண்டும்.
மாமியோடு மெட்றாஸ் கதை பேசும்போது அம்மா வழியில் அவளும் உறவு என்று தெரிய சந்தோஷமாக இருந்தது. அப்பா வாங்கிக் கொடுத்திருந்த ராயர்கடை அல்வா, காரசேவ், ஜாங்கிரியை அவளிடம் கொடுக்க அதற்குக் குறையாத சந்தோஷத்தோடு வாங்கிக்கொண்டாள் மாமி.
“சாப்பாட்டுக்கடையை முடிச்சு குழந்தைங்க எல்லாம் தூங்கிட்டாங்கோ.. நீ வரேன்னு தான் நாங்க ரெண்டு பேரும் உக்காந்திருக்கோம்”.
மாமியிடம் ரயில்வே சார்பிலும் என் சார்பிலும் நேரம் தப்பி வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்க் கொண்டேன்.
”வா, சாப்பிட்டுப் படுத்துக்கோ”. ராமாராவ் மாமா விசிறியை இடுப்பில் செருகிக்கொண்டு பிரியமாக அழைத்தார்.
இலை போட்டு உட்கார, மெத்தென்று ஊத்தப்பம். கூட புதினாத் துவையலும், மத்தியான புளிக்குழம்பும் தேங்காய் மிளகாய்ப்பொடியும் மணத்தக்காளி ஊறுகாயுமாக தேவாமிர்தம் தான். மிளகாயைப் பொடியாக அரிந்து போட்டு, எலுமிச்சை பிழிந்து, தூள் பெருங்காயம் டப்பாவைக் காட்டி எடுத்து, கொத்தமல்லித் தழை தூவிய கெட்டி மோர் மங்களம் பாட, பசி தீர்ந்து உறக்கம் எட்டிப் பார்த்தது.
ராமாராவ் மாமா வற்றல் மிளகாய் மெட்றாஸில் என்ன விலைக்கு கிடைக்கிறது என்று கேட்டதைக் காதில் அரைகுறையாக வாங்கிக்கொண்டு நான் தலையைக் குலுக்க, தூக்கம் வருதாப்பா, இந்தா இங்கே படு என்று கூடத்தில் பாய் விரித்த இடத்தைக் காட்டினார்.
காலையில், டெல்லியில் இருந்து இரண்டு டீ போர்ட் ஆபீசர்கள் புதுப்பாளையம் தெரு கோவிந்தா லாட்ஜில் இருப்பதாக புறப்படும்போதே தகவல் அனுப்பியிருந்ததால், அங்கே அவர்களைச் சந்திக்கப் போனேன். அவர்கள் என்னிடம் இருந்த வேலை உத்தரவு, என் படிப்பு சான்றிதழ், நன்னடத்தை சர்ட்டிபிகேட் எல்லாம் சரி பார்த்தார்கள்.
அந்த ஆபீசர்கள் நான் தினசரி செய்ய வேண்டியதாகக் கொடுத்த வேலை விவரம் இப்படி இருந்தது –
உத்தியோகம் Tea Propaganda Officer – டீ பிரசாரகர் என்ற பெயரால் அழைக்கப்படும். சம்பளம் மாதம் அறுபத்தைந்து ரூபாய். வருடாவருடம் ஐந்து ரூபாய் இன்க்ரீமெண்ட், திருப்திகரமாக வேலை செய்தால்.
உத்தியோகம் பார்ப்பதற்கான கமாண்ட் ஏரியா – கும்பகோணமும், சுற்றுவட்டாரத்தில் பத்து மைல்களுக்குள் இருக்கும் கிராமங்களும்.
ஆபீஸ் – டீத்தூள், சர்க்கரை, விற்பனைக்கான பாக்கெட்டுகள் இவற்றை வைக்க சிங்கிள் ரூம் மாத வாடகை ரூ 10-க்குள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஒரு மாத வாடகை அட்வான்ஸ் மற்றும் மர ஷெல்ப், பூட்டு இவற்றுக்கான செலவு வகையில் முன்பணம் அனுப்பி வைக்கப்படும்.
கும்பகோணத்தில், தினசரி ஒரு தெருவில் ஒரு வீட்டு திண்ணையில் பால் காய்ச்சி டீ தயார் செய்ய வேண்டும். தெருவில் எத்தனை வீடு உள்ளது, அதில் எத்தனை பேர் டீ குடிக்கக் கூடியவர்கள் என்று குத்துமதிப்பாக மதிப்பீடு செய்து டீ போர்ட் விற்பனைக்கு வைத்திருக்கும் தேயிலையைக் கொதிக்க வைத்து டீ டீகாஷன் இறக்க வேண்டும்.
உள்ளூர்க்கார உதவியாளர் ஒருவரும் நியமிக்கப் பட்டுள்ளார். சர்க்கரை வாங்க, பால் நேரத்துக்கு வரும்படிக்கு பால்காரரை மறக்காமல் பின் தொடர, டீ போட உதவ, வீடுகளுக்கு எடுத்துப் போக என்று செயல்பட அவருக்குச் சம்பளம் தரப்படும்.
நான்கு நாளுக்கு ஒரே தெருவில் தொடர்ந்து மதியம் நாலு மணிக்கு டீ போட்டு வீடு வீடாக எடுத்துப் போய் டம்ளர்களோ போகிணியோ வாங்கி ஊற்றிக்கொடுத்து பருகுகிறார்களா என்று உறுதி செய்து கொண்டு அடுத்த வீட்டுக்கு டீ கொடுக்கப் போகவேண்டும். குடிக்காத வீட்டைக் குறித்து வைத்துக் கொண்டு அடுத்த நாளும் டீ தர முயற்சி செய்ய வேண்டும்.
நான்கு நாள் டீ கொடுத்த பிறகு அந்தத் தெருவை அடுத்த இரண்டு நாள் விட்டுவிட்டு வேறு தெருவில் டீ தர வேண்டும். அதற்கு அப்புறம் திரும்ப முந்திய தெருவுக்குப் போக வேண்டும். அங்கே வசிப்பவர்கள் காய்ச்சிய பால் கொண்டு வந்தால் டீ டீகாஷன் இலவசமாகக் கலந்து தரப்படும். டீ தூளும் விற்பனைக்கு வைத்து இருபத்தைந்து சதமானம் தள்ளுபடியில் கிடைக்கும் என்று எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஒரு பவுண்ட் டீ பவுடர் வாங்கினால் ஸ்பூன் இலவசம், ஐந்து பவுண்ட் தேயிலை வாங்கினால் ஒரு எவர்சில்வர் சம்புடம் இலவசம் என்ற அறிவிப்பு கோவில் உற்சவம், தர்க்கா விசேஷம், மாதாகோவிலில் கிறிஸ்துநாதர் பிறந்த நாள், என்று கூட்டம் கூடும்போது விளம்பரம் செய்ய வேண்டும். பரிசுப் பாத்திரங்களும், தேயிலை பாக்கெட்டுகளும் அவ்வப்போது மெட்றாஸில் இருந்து உங்கள் உள்ளூர் முகவரியில் டெலிவரி செய்யப்படும்.