சைக்கிளில் வந்து வழி மறித்து நின்றார் போஸ்ட்மேன்.
“ராமாராவ் வீட்டுக்கு விருந்து வந்திருக்கற பையன் நீங்க தானா? சர்க்கார் டீ விக்க மெட்றாஸ்லே இருந்து புறப்பட்டு வந்திருக்கீங்களாமே?”.
ஆமா என்று சொல்லும்போது பெண்கள் சிரிக்கும் சத்தம். கண் காணாமல், முதுகுப் பக்கம் இருந்து தென்றல் வீசிய மாதிரி இனிமையாக அனுபவம் அது.
”வாங்க அந்த வீட்டுத் திண்ணையிலே உக்கார்ந்து கையெழுத்துப் போடுங்க.. மணியார்டர் வந்திருக்கு மெட்றாஸ்லே இருந்து.. நூறு ரூபா.. அதென்ன சம்பள அட்வான்ஸா?”.
தபால்காரர் எல்லாத் தகவலையும் எதிர்பார்த்தபடி நடந்தார். அவரைப் பின் தொடர்ந்தோம் விட்டோபாவும் நானும்.
நாங்கள் போனது இடது பக்கம் பத்தடி தூரத்தில் இருந்த வீட்டுத் திண்ணைக்கு. அங்கே பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்த இரண்டு அப்சரஸ்கள் தான் சேர்ந்து சிரித்து இன்னும் ஓயாத கலகலப்பு.
வெய்யில் வட்டத்துக்கு வெளியே நிழலோடு குளிர்ந்திருந்த திண்ணையில், என் பார்வையைச் சந்தித்தவள் ரத்னா. நேற்று என்னோடு ரயில் இறங்கி இங்கே வந்தவள். கண்ணால் சிரிக்கும் பேரழகி.
தபால்காரர் நாலு தடவை எண்ணி என்னிடம் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு, மணியார்டரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, எட்டணா வெகுமதியும் பெற்றுப் புறப்பட்டுப் போனார். பாக்கெட்டில் பணத்தை வைத்தபோது ஏகப்பட்ட தன்னம்பிக்கை மனதில் புகுந்து நிறைந்தது.
“பசு .. வழிச்சு வாரியாச்சு”
கையில் குவித்துப் பிடித்திருந்த பல்லாங்குழிச் சோழிகளை பிரதட்சணமாகக் குழிக்கொன்றாகப் போட்டு வந்த ரத்னா, வெற்றுக் குழிக்கு முந்தையதில் கடைசிச் சோழியைப் போட்டுவிட்டு, ஹேய் ஹேய் என்று உற்சாகமாகப் பட்டென்று பலகையில் தட்டி, வெற்றுக் குழிக்கு அடுத்த குழியிலிருந்து எல்லாச் சோழிகளையும் வாரி வழித்தெடுத்துத் தரையில் பத்திரமாக வைத்துக் கொண்டபடி கூவினாள்.
சின்னஞ்சிறு வெள்ளைச் சோழிகளை நேர்த்தியாகக் கோர்த்தது போன்ற அவளது பல்வரிசையைப் பார்த்தபடி செவ்விதழ்களில் குவிந்த பார்வையை சற்றுப் பிரயத்தனத்தோடு அகற்றி நிறுத்தினேன்.
சிரிக்கலாமா கை குவிக்கலாமா என்று தெரியாமல் ஒரு வினாடி குழம்ப, விட்டோபா சத்தமாகச் சொன்னார் – ‘கங்கா, சார் டீ போர்ட் சேல்ஸ் ஆபீசர், நான் சேல்ஸ்மேன்’.
“மன்னிக்கணும்.. என் பெயர் ராமோஜி” என்று நம்பிக்கையோடு ரத்னாவைப் பார்த்தபடி தொடங்கினேன்.
”அதுக்கு ஏன் மன்னிக்கணும்?”.
கங்கா என்ற அந்த இளம்பெண் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டு விட்டு உடனே மறுபடியும் சிரித்தாள்.
”கங்கா, டீ ஆபீசர் பாவம், விட்டுடு” என்றபடி ரத்னா என்னை நோக்கினாள். பகையோடு வரவில்லை, நட்போடு வந்திருக்கிறேன் என்று உணர்த்த, பெருமாள் கோவிலில் கருடாழ்வார் மாதிரி கை கூப்பி நின்றேன் இரண்டு பேரும் சொல்லி வைத்தாற்போல் திரும்பக் கைகூப்பி வணங்கித் திண்ணையில் இன்னொரு முறை சிரிப்பு அலையடித்து நிறைந்து வழிந்தது.
”சார், இந்தத் திண்ணை சரியா இருக்குமா? இல்லேன்னா அடுத்த வீட்டுக்குப் போயிடலாமா?”
விட்டோபா என்னைக் கேட்டார். புரியாமல் விழித்தேன். அந்தப் பெண்களும் என்ன சமாசாரம் என்று கேள்வியே பார்வையாக, விட்டோபாவை விட்டு விட்டு என்னைப் பார்த்தார்கள்.
“எதுக்கு விட்டோபா?” நான் மெதுவாகக் கேட்டேன். அடுத்த வீட்டுக்குப் போய்விடலாமாமே? ரத்னாவோடு இப்போது தான் ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தை என்று பேச்சு ஆரம்பித்திருக்கிறது. இவர் அந்த போக்குவரத்தை நசித்து குறுக்கே பாறாங்கல்லைத் தூக்கிப் போடுகிறார்.
‘நாம மொதல்லே இந்தத் தெருவிலே தானே டீ சப்ளை பண்ணப்போறோம். பால் காய்ச்ச, டீ போட இந்தத் திண்ணை சரியா இருக்கும்னு தோணுது” என்றார் அவர்.
”எப்படி நமக்கு வேணுமோ அப்படி இருக்கு தான் ஆனா, அவங்க கிட்டே அனுமதி வாங்காம நாம்பளா எப்படி முடிவு செய்யறதாம்?”
நான் பொதுவாகப் பார்த்துக் கேட்டேன் என்றாலும் ரத்னா மேல் என் பார்வை நிலைத்தது.
இரண்டு பேரும் எழுந்து அடுத்தடுத்து நின்றார்கள். ரத்னாவைப் பார்க்காமலேயே சொல்லலாம், பதினெட்டு வயது இருப்பாள். அந்த வயது தானே உடம்பிலும் முகத்திலும் தன்னை அறிவித்துக் கொண்டுவிடும்.
கங்கா, ரத்னாவை விட ஒரு பிடி உயரமாக, நாலைந்து வயசு கூடியவளாகத் தோன்றினாள். இரண்டு பேரும் சேர்ந்து தெருவில் நடந்து போனால் ஊரே ஸ்தம்பித்துப் போகும்.
ரத்னாவையும் கங்காவையும் பார்த்து, ”இவர் தவறாகச் சொல்லி விட்டார், மன்னிக்கவும்” என்று ஜாக்கிரதையான இங்க்லீஷில் சொன்னேன்.
”பரவாயில்லை, விட்டோபா மாமா வெகுளி. மனசுலே ஒண்ணும் வச்சுக்க மாட்டார்” என்றாள் கங்கா.
”நீங்க டீ போர்ட் ஆபீசரா?”
கங்கா என்னைக் கேட்க பெருமையோடு ஆம் என்றேன். ரத்னா முகத்தில் அடக்க முற்பட்ட சிரிப்பு முழு முகத்துக்கும் தனி அழகூட்டியது. அவள் சிரிக்கக் கூட வேண்டாம். இதுவே சுவர்க்க அனுபவம்.
“ஆமா, தினம் ஒவ்வொரு தெருவுக்கு போவோம். டீ போட்டு எல்லோருக்கும் அய்யா குடி அம்மா குடின்னு இலவசமா கொடுப்போம்… டீ குடிக்கறதோட பிரயோஜனம், நன்மை பற்றி சார் அங்கங்கே பிரசங்கம் பண்ணுவார். அவருக்கு வாய் வலிச்சா நான் பேசுவேன்”.
ரத்னா சிரித்தபடி உள்ளே ஓடி விட்டாள். அவள் சிரிப்பாள் என்றால் இன்னும் கொஞ்ச நேரம் விட்டோபா என்ன வேண்டுமானாலும் பேசட்டும் என்று தோன்றியது. பல்லாங்குழிப் பலகையை உள்ளே இருந்து சோழிகள் சிதறாமல் ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு கங்காவும் உள்ளே போனாள்.