ராமோஜியம் – புதினத்திலிருந்து – தேநீர் உபசாரம் 1935

நான் டீ பாக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அலை பாய்ந்தேன்.

”டீ ஆபீசர், என்ன உங்க பிரச்சனை?”

கங்கா கூர்த்த நாசி முனையில் சிரிப்பு எட்டிப் பார்க்கக் கேட்டாள்.

நான் சொல்லலாமா வேண்டாமா என்று ஒரு வினாடி தயங்கி, ”பால்லே டீதூளைப் போட்டு காய்ச்சணுமா, தண்ணீலே டீத்தூளைப் போட்டுக் காய்ச்சணுமா?” என்று கேட்டேன்.

“அதானே, டீ ஆபீசர்னு அனுப்பறவங்க டீ குடிச்சது கூட இல்லேன்னு அடுத்து வருமோ?” என்று ரத்னா உதட்டைக் கடித்துக் கொண்டு என்னைப் பார்த்தாள்.

”சரி நீயே சொல்லேம்மா… எனக்குத் தெரியாது நான் கட்டுப்படியாகறதில்லேன்னு காப்பி கூட அதிகம் குடிக்கறதில்லே…” என்றார் விட்டோபா.

”டீ எப்படிப் போடணும் கங்கா?”, ரத்னா கங்காவிடம் கேள்வியைத் திருப்பியதில் அவளுக்கும் சரியான பதில் தெரியவில்லை என்று புரிந்து கொண்டேன். ஒரே பெஞ்சில் ஏறி நிற்க வகுப்பில் தண்டனை விதிக்கப்பட்ட பசங்க போல் நானும் அவளும் நிற்பதாகக் கற்பனை செய்யச் சிரிப்பு வந்தது.

கங்கா சொன்னாள் –

”நம்ம பக்கத்திலே, ஏன் மேலண்டை, கீழண்டை பிரதேசத்திலே எல்லாம் கூட டீ இலை, டீதூள் இப்படி தண்ணியிலே கொதிக்க வச்சு டீ டிக்காஷன் இறக்கி, காய்ச்சின பாலோடு அதை சேர்த்து, சர்க்கரை கலந்து டீ போடறது வழக்கமாகிட்டு இருக்கு. வடக்கே பால்லேயே டீத்தூளைப் போட்டு கொதிக்க வச்சு டீ. ரெண்டு பழக்கத்திலே எது நல்ல டீ கொடுக்கும்? அவங்கவங்க ரசனையைப் பொறுத்தது அது..”

கங்கா பேசி முடித்ததும் ரத்னா புது விஷயத்தைக் கற்றுக்கொண்ட சந்தோஷத்தில் கை தட்டினாள். நானும் ஹிப்ஹிப்ஹுரே சொல்லிக் கைதட்ட விட்டோபா என்ன சமாசாரம் என்று குழம்பி நின்றார்.

“கை தட்டு எல்லாம் சரிதான், எப்படி டீ போட்டாலும் டீகாஷனை வடிகட்ட, வடிகட்டி வேணுமே, அது எங்கே என்று கேட்டாள் கங்கா. நான் விட்டோபாவைப் பார்த்தேன். அவர் சங்கோஜத்தோடு சொன்னார் –

”இன்னிக்கு முதல் நாள் இல்லே… வடிகட்டி இல்லாம அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமா.. வேறே எதிலாவது வடிகட்டி .. ”.

நானும் எதிரொலித்தேன் – ”வேறே எதிலேயாவது வடிகட்டி”.

அதான் ஜமக்காளம் இருக்குமே என்றாள் கங்கா. ரத்னா ஓவென்று சிரித்தபடி அவள் தோளில் தட்ட, உள்ளே இருந்து கங்காவின் அம்மா என்ன விஷயம் என்று வாசலுக்கு வந்து பார்த்தாள்.

“ரத்னா, கங்கா உள்ளே போங்க”, என்றபடி அவர்களை மறித்து நிற்க இரண்டு பெண்களும் பக்கவாட்டில் நழுவி அடுப்புக்கு முன்னால் போய் நின்றார்கள்.

”ஏண்டி பொண்ணுகளா, அடுப்பு பக்கத்திலே நின்னா மேலே பத்திக்கப் போவுது. அது வேறே யார் அப்புறம் வைத்தியம் பார்க்கறது.. உனக்குன்னு ஏதாவது சிரிக்கறதுக்கு கிடைச்சுடும்.. விட்டோபா தம்பி, டீ போர்ட் உத்தியோகம் போக்குவரத்து எல்லாம் திண்ணையோட வச்சுக்கறது நல்லது”.

என்னை பொதுவாகப் பார்த்து என்னிடம் போய் அழுந்த அர்த்தமாகும்படி சொல்லி விட்டு உள்ளே போனாள் கமலா பாய். ஒரு நிமிஷம் அங்கே நடுராத்திரி அமைதி.

கங்கா உள்ளே போய் வடிகட்டியை எடுத்து வந்தாள். நான் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டேன். ஆல் த பெஸ்ட் என்றபடி குமிழ்ச் சிரிப்போடு ரத்னா வாழ்த்து சொல்ல முதல் ஈடு டீ குடிக்கத் தயாராக பாத்திரத்தில் உருவானது.

கங்கா, ஒரு போகிணி எடுத்து வா.. உங்க வீட்டுக்குத்தான் முதல் டீ தரப் போறோம் என்று விட்டோபா சொன்னார்.

“ஆபிசர் சார், உங்களுக்கும் எனக்கும் டீ குடிக்க ரெண்டு கப்பும் சாசரும் வாங்கிட்டேன். பாத்திரம் வாங்கினதுலே தள்ளுபடி கிடச்ச பணத்திலே இது வாங்கினதாலே சர்ககார் பணத்துலே சொந்த செலவுல்லே வராது..” என்றபடி விட்டோபா டீயை ஒரு டம்ளரில் நிறைத்து என்னிடம் கொடுத்தார்.

நான் சட்டென்று பக்கத்தில் நின்ற ரத்னாவிடம் அதை நீட்டினேன். ‘ரத்னா ஜி, முதல் டீ நீங்க டேஸ்ட் பண்ணினதா இருக்கட்டும்’.

அவள் கையில் கொடுக்கும்போது அந்த விரல்கள் தண்ணென்று என் விரல்களோடு ஒரு வினாடி உறவாடின. வாழ்க்கை இனிமையானது என்று அந்த வினாடியில் கும்பகோணம் துக்காபாளையத் தெரு வீட்டுத் திண்ணையில் மனதிலே மயிலாடியது. இவள் என் மனைவியாவாள் என்று மனம் திரும்பத் திரும்பச் சொன்னது. எப்படி என்று கேட்டேன். பதில் இல்லை.

ரத்னா டீ குடித்து விட்டு பிரமாதம் என்று சொல்லும்போது கமலா அம்மாள் போகிணியோடு வாசலுக்கு வந்தவள் பக்கத்தில் பக்கத்தில் நானும் ரத்னாவும் நிற்பதைப் பார்த்து சற்றே கவலைப்பட்ட முகக்குறிப்பைக் காட்டினாள்.

”ரத்னா உள்ளே போ”, கண்டிப்பும் கரிசனமும் குரலில் காட்டிச் சொன்னாள்.

”போறேன் அத்தை. டீ டிபார்ட்மெண்ட்காரங்க எப்படி இருக்குன்னு முதல் முதலா டீ போட்டுட்டு அபிப்ராயம் கேட்டாங்க.. பம்பாய் டீக்கு இது ரொம்ப சுமார் தான்.. ஆனா டீ மாதிரி இருக்கு.. ” என்று கொஞ்சம் இகழ்ச்சியாகச் சொன்னது பொய் என்று எனக்குப் புரிந்தது.

துக்காபாளையம் தெருவில் எல்லா வீட்டுக்கும் விட்டோபா டீ கொண்டு போய்க் கொடுத்தார். நானும் முதல் நாள் என்பதால் வீடு வீடாக ஏறி நமஸ்காரம் சொல்லி இன்னும் அரை மணி நேரத்தில் கமலா பாய் அம்மாள் வீட்டு வாசலில் கூட்டத்துக்கு வரணும் என்று கேட்டுக் கொண்டேன்.

சாயந்திரம் ஐந்து மணிக்கு கிட்டத்தட்ட எல்லா தெருப் பெண்களும், வேறு வேலை இல்லாத வயசானவர்களும் கூடி விட்டார்கள். டீயின் மகத்துவம் பற்றி நான் பேசியது எனக்கு டீ போர்ட் கொடுத்த தகவலை முழுக்க கிரகித்து பள்ளிப் பிள்ளைகள் ஆண்டு விழாவில் பேசுகிறதுபோல் இருந்தது என்று எனக்கே தெரியும்.

ரத்னா மிகுந்த ஆர்வத்தோடு நான் பேசுவதைக் கேட்டபடி வாசலில் நின்றிருந்தது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. நான் பேசிய பிறகு பத்து நிமிடம் விட்டோபாவும் டீ போர்ட் ஆபீசரின் பதவி விசேஷம், சலுகை விலைக்கு டீ கொடுக்க இருப்பது என்று நான் அடுத்த கூட்டத்தில் பேச உத்தேசித்திருந்ததைத் தப்பும் தவறுமாகப் பேசி முடித்தார்.

கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால் கேட்க அடுத்த அரை மணி நேரம் செலவிட்டேன். கிட்டத்தட்ட எனக்கு டீ போர்ட் ஏற்கனவே எதிர்பார்த்து பதிலும் தயார் செய்து என்னிடம் கொடுத்தவை தான் பெரும்பாலான கேள்விகளும்.

ஒரு கிழவர் விடாப்பிடியாக, ”டீ குடித்தால் தினசரி வாழ்க்கை நன்றாக இருக்குமா?” என்று கேட்டார். நான் ஐந்து நிமிடம் டீயின் மகிமையை ஏற்கனவே பாடிய ராகத்தை விட்டு இன்னொரு ராகத்தில் வெளிப்படுத்தினேன்.

”அது இல்லே சார், டீ குடிச்சா ராத்திரி சௌகரியமா இருக்குமா?”.

”டீ குடிச்சா காலையிலே கலகலன்னு சவுகரியமா இருக்கும்” என்றார் விட்டோபா.

”அது இல்லேப்பா, தாம்பத்தியம் மெச்சத் தகுந்த நிலை அடையுமா?”. கிழவர் விடாமல் பிடித்தார்.

இதோடு முடித்து வைக்க, ”ஆஹா, ரொம்ப பிரமாதமா இருக்கும்” என்றேன்.

”அதைத்தான் கேட்கறேன் .. அதுக்கு முன்னாடி டீ குடிக்கணுமா பின்னாடியா?” என்று அதுக்கு என்பதில் அழுத்தம் கொடுத்து அடங்காமல் தொடர்ந்தார் அவர்.

எதுக்கு முன்னாடியா எதுக்கு பின்னாடியா, ஒரு கண்றாவியும் புரியவில்லை.

”முன்னாடி ஒண்ணு பின்னாடி ஒண்ணு குடிக்கலாம்”, என்று நான் பொதுப்படையாகச் சொல்ல ரத்னாவும் கங்காவும் சிரிப்பை அடக்கியபடி உள்ளே ஓடியது தெரிந்தது. ஏதோ அபத்தமாகப் பேசிவிட்டேன் என்பது மட்டும் புரிந்தது. முன்னாடியா பின்னாடியா? ஹெட் ஆபீசைத்தான் கேட்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன