‘ராமோஜியம்’ – உருவாகி வரும் புதினத்தில் இருந்து –
இரண்டே மாதத்தில் ஊரும் ஊர்க்காரர்களும் நல்ல பழக்கமாக விட்டோபா இரண்டாம் காரணம். டீ முதல் காரணம். நான் பேண்ட் சட்டை ஷூவில் இருந்து வேட்டிக்கு மாறி ஊரோடு ஒத்து வாழத் தொடங்கியது மூன்றாம் காரணம். கிட்டத்தட்ட ஊர்ப் பிரமுகர் அந்தஸ்து டீ பீல்ட் ஆபீசருக்கு அங்கே.
பக்கத்தில் சக்ரபாணி கோவிலுக்குப் போனாலோ இல்லை காலை வீசிப் போட்டு ஆதி கும்பேஸ்வரர் கோவில் மொட்டைக் கோபுர வாசலுக்கு வந்தாலோ, இரண்டு கோவிலிலும் நாளைக்கு தரிசனம் செய்து கொள்ளலாம் என்று இன்னும் அருகில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தாலோ, பட்டர்கள், குருக்கள்மார், நாகசுவர கோஷ்டி, ஓதுவார்கள், கும்பிட வந்தவர்கள் என்று பலரும் என்னெதிரே புன்னகையோடு கடந்து போகிறார்கள்.
கடைத்தெருவில் பலசரக்குக் கடை என்றில்லை, ஸ்டேஷனரி கடை என்றில்லை, மருந்துக் கடைக்காரர்களும் ஜவுளிக்கடைக்காரர்களும் கூட கூப்பிட்டுப் பேசுகிறார்கள் –
”சாயா சார், அதென்ன நாங்க வியாபாரத்தை கவனிச்சுக்கிட்டு இஞ்ச சிவனேன்னு இருக்கோம்.. வீட்டிலே பசங்க, பொண்டாட்டி, அம்மா, மாமின்னு நீங்க எப்போ டீ எடுத்து வருவீங்கன்னு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. டீத்தூள் வாங்கணும்னு நச்சரிப்பு தாங்கலே… நாலு பாக்கெட் நம்ம கடையிலும் போடுங்களேன்”.
கேட்டவர் ஜவுளிக்கடை உடமையாளர். இன்னும் சிலர் இதற்கு மேலும் போய், ”வீடு இருக்கற தெருவிலே எல்லாம் காந்தி கணக்குலே டீ கொடுக்கறீங்களே, அது போல கடைத்தெருவிலேயும் கொடுங்க.. பின்னாலேயே ஒரு மலையாளத்தாரை அனுப்புங்க…. மெட்றாஸ் மாதிரி டீக்கடை போடுவார் வந்தவர்.. அப்புறம் என்ன, அவர் கடை டீ இல்லாம இருக்க முடியாதுன்னு ஆகிடும்” என்று யோசனை தெரிவித்தார்கள்.
மலையாளத்து சேட்டன்மார் யாரும் வேலை இல்லாமல் இருக்கிறார்களா என்று விட்டோபா மூலம் விசாரித்தேன். வேலை இல்லாத மலையாளியா, எங்கே போய்ப் பிடிக்க, என்று அவர் நழுவி விட்டார்.
கும்மோணம் முழுக்க ஆள் யாரென்று பரிச்சயமானதில் ஒரே ஒரு இக்கட்டு என்ன என்றால், வந்த நாளில் படியேறி அற்புதமான ஃபில்டர் காப்பி குடித்த மங்களாம்பிகா ஹோட்டலில் அப்புறம் காப்பி சாப்பிடப் போக முடியவில்லை. டீ போர்ட் காரன் காப்பி சாப்பிடுவதாவது! பேசுவார்கள். வாசாலகமாக நொட்டச்சொல் சொல்வார்கள். எதுக்கு அதெல்லாம்?
விட்டோபா தினசரி சுதேசமித்திரன் வாங்கிப் படிப்பதை நிறுத்தி விட்டார். “நல்லதா ஒண்ணுமே நடக்குறதில்லேங்கோ… இங்கிலாந்துலே பத்திரிகை தொடர்கதையை பயாஸ்கோப் ஆக்கி ஜனம் கூடி வந்து தினம் பாக்குதாம்.. என்னாத்துக்கு? தினம் அத்தப் போய்ப் பார்த்தா, பார்க்கறபோதே காட்டேறி மாதிரி ரத்தத்தை உறிஞ்சுடுமே.. பயாஸ்கோப் லேசுப்பட்டதில்லே.. கரண்ட் ஆச்சே”
வந்து பத்து நாளில் ரத்னா நெருங்கி வந்தாள். முதலில் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டது, கும்பேஸ்வரர் கோவில் இருண்ட பிரகாரத்தில் ஒரு நொடி கைத்தலம் பற்ற, விட மாட்டேன் என்று இறுக்கிப் பிடிக்க, விடுங்க என்று உள்ளங்கையில் பூவாகக் கிள்ள என அந்த சிநேகம் வளர்ந்தது.
ரெண்டு பேரும் ஸ்கூல் பைனல் படித்து முடித்து இருக்கிறோம். காலேஜ் படித்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் என்ன, சேர்ந்து வாழ்க்கையில் பிரயாணப்பட பாதுகாப்பாக ஒரு சர்க்கார் உத்தியோகம்.
இதைச் சொல்லாமல் இருக்க முடியாது, ரெண்டு பேரும் வீட்டில் பெரும்பாலும் தமிழும், மராத்தியும் பேசுகிறவர்கள். அசல் தஞ்சாவூர் ஷத்திரிய மராத்தி குடும்பங்களிலிருந்து வருகிறவர்கள். எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக விரதம் எடுத்துக்கொண்டு சைவ உணவு உண்கிறவர்கள். ரத்னா குடும்பத்தில் எப்போவாவது அசைவம் சாப்பிடுவதும் உண்டுதான்.
எப்படி நாங்கள் தம்பதிகளாவது?