விட்டோபா கூட ஆச்சரியப்பட்டார் –
“என்ன சார், வேறே வேலை இல்லேன்னா துக்காம்பாளையத் தெருவிலே டீ போடலாம்னு கிளம்பிடுறீங்க..”
ரத்னாவிடம் சொல்ல அந்த சிரிப்புக் குப்பி இதற்கும் சிரித்தாள்.
”இப்படி சிரிச்சுச் சிரிச்சு மனசுலே உட்கார்ந்தாச்சு .. அடுத்த வாரம் ஊருக்கு போறேங்கறே.. அப்புறம் எப்படி நம்ம சிநேகிதம் வளரும்?”
காந்தி பார்க்கில் கூட்டம் ஓய்ந்த பின்மாலை நகர்ந்து முன்னிரவு சூழும் பொழுதில் அவளுக்கு உள்ளங்கையில் அவசரமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டுக் கேட்டேன். எனக்குப் பின்னால் ஒரு குரல் –
”நாளைக்கு ரெட்டிராயர் அக்ரஹாரத்துலே ட்யூட்டி . சர்க்கரை ஒரு ஆழாக்கு தான் ஸ்டாக் இருக்கு.. ஒரு வீசையாவது வாங்கக் காசு வேணும்.. சக்கரை கம்மியா டீ கொடுத்தா டீயும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு திருப்பி அனுப்பிடுவாங்க.. நாக்கு எல்லாருக்கும் நாலு முழம்” என்று கேட்டு விட்டோபா வந்து நின்றார். பார்த்திருப்பாரோ. அதுக்காக அவருக்கு தர முடியுமா என்றாள் ரத்னா என் காதில் மட்டும் கேட்க. அது போன வாரம்.
இன்றைக்கு துக்காபாளையத் தெருவிலேயே டீ உபசாரத்தை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்க கங்கா வீட்டுக்குப் போனேன். ரத்னா தான் வாசலுக்கு வந்தது.
”இன்னிக்கு பட்டணத்திலே இருந்து யாரோ ஒரு வெங்கோபராவ் கங்காவைப் பொண்ணு பார்க்க வர்றார்… அதுனாலே இன்னிக்கு ஒரு நாள் திண்ணையிலே டீ போடவோ, டீத்துள் விக்கவோ வேண்டாம்னு கமலா அத்தை சொல்லச் சொன்னாங்க.. அதுக்குத்தான் வாசல்லேயே நின்னுட்டிருந்தேன் ..”.
அவள் இப்போது புன்னகைப்பாள் என்று தெரியும். ஏமாற்றவே இல்லை. என்னைப் பார்க்க நின்றிருக்கிறாள் திருடி.
”சார் இங்கே இன்னிக்கு இல்லேன்னு ஆச்சு.. நாம காமாட்சி ஜோசியர் தெருவுக்கு விசிட் அடிச்சா என்ன? போய் ரொம்ப நாளாச்சே…” விட்டோபா புறப்பட ஆயத்தமாக இருந்தார்.
காமாட்சி ஜோசியர் தெருவில் டீ உபசாரம் என்று போகிற வழியில் யாதவர் தெருவில் கோனாரிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப வேண்டும்.
பள்ளிக்கூடம் அரைப் பரீட்சை லீவு என்பதால் காமாட்சி ஜோசியர் தெருவில் தெருவை அடைத்து கபடி விளையாடிக் கொண்டிருந்த பையன்கள் எங்களைப் பார்த்து உள்ளபடிக்கு சந்தோஷப்பட்டார்கள்.
“டீ சார், குட் மார்னிங்” என்று பகல் ஒரு மணிக்கு சல்யூட் செய்தவர்கள் ”பிஸ்கட் தருவீங்களா இன்னிக்கு?” என்று ஆர்வத்தோடு கேட்டார்கள். இவர்களுக்கு இத்தனை சீக்கிரம் டீயை, காப்பியை பழகித்தர வேண்டுமா என்று தயக்கமாக இருந்தது.