Excerpt from my forthcoming RAMOJIUM
என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு சைக்கிள் வந்து நின்றது. ஆண்கள் சைக்கிள் என்றாலும் நளினமாக ஓட்டி வந்து நிறுத்தியவள் ரத்னா. பால்காரர் சைக்கிள் அது என்று பின்காரியரில் பால் கேனைப் பார்த்ததுமே தெரிந்தது.
நீ பால்காரராயிட்டியா என்று அவள் பக்கத்தில் வந்ததும் கேட்டேன். வியர்த்து இருந்தாள். அப்படியே கட்டி அணைத்து உதட்டு மேல் வியர்வையை இதழால் ஒற்றி எடுக்க வேண்டும் என்று நேரம் காலம் பார்க்காமல் மனசு நச்சரித்தது.
“டீ ஆபீசர், வீட்டு விசேஷத்துக்கு பால் சொல்ல மறந்து போச்சு. பால்காரர் கையை விரிச்சுட்டார். நான் அவர் கிட்டே சண்டை போட்டு, கங்காவை பொண்ணு பாக்கறதுக்கு கட்டாயம் பால் கொடுத்தே ஆகணும்னு வற்புறுத்திச் சொன்னேன்.. உங்க கிட்டே கேக்கச் சொன்னார்.. நீங்க காமாட்சி ஜோசியர் தெருவிலே டீ ஆத்தறதை நாளைக்கு வச்சுக்குங்க, நம்ம தெருவிலேயே நம்ம வீட்டிலேயே இன்னிக்கு டீ செரிமனி..”
நீளமாகப் பேசி நிறுத்த அவளுக்கு மூச்சு வாங்கியது. அது பார்க்க, வேறே என்ன சொல்வேன், அழகாக இருந்தது.
என்னிடம் இதைத் தெரியப்படுத்த பால்காரரின் 26 இஞ்ச் சைக்கிளைப் பறித்துக்கொண்டு வந்து விட்டாள். பாலை முன் ஜாக்கிரதையாகப் பறிமுதல் செய்து கங்காவின் வீட்டுக்குள் வைத்திருக்கிறாளாம்.
திண்ணையில் இல்லாமல் எப்படி பால் காய்ச்சி டீ கொடுக்கறது? நான் விழித்தேன்.
“ஏன், வீட்டுக்குள்ளே டீ போடறது” அவள் விஷமமாகச் சிரித்தாள்.
”டீ ஸ்பெஷலிஸ்ட் விட்டோபா மாமா டீ போடட்டும்….. நான் கமலா பாய் அத்தையோட கூட டிபன் பரிமாறறேன்.. வடை சுட வேண்டி இருக்கு.. அதையும் நான் தான் கவனிச்சுக்கணும்…” என்று நிறுத்தாமல் பேசினாள்.
“அப்போ நான்?” என்று கேட்டேன்.
“நூறு தடவை துக்காம்பாளையத் தெருவிலே குறுக்கும் நெடுக்கும் போய்ட்டு வாங்க”.
“அலுத்துப் போனா?”
”எனக்கு அசிஸ்டெண்டா வடை சுடுங்க”.
அவள் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போயே போய்விட்டாள்.
நாளைக்கு வரேண்டா பசங்களா என்று காமாட்சி ஜோசியர் தெரு நண்டு சிண்டுகளிடம் விடைபெற்று வேகமாக துக்காம்பாளையத் தெரு வந்தேன்.
மாலை நாலு மணிக்கு நானும் விட்டோபாவும் கமலா பாய் வீட்டு சமையலறையில் டீ போட்டுக் கொண்டிருக்க, ஹாலில் மதறாஸிலிருந்து வந்த வெல்ல மண்டிக்கார வெங்கோப ராவ் அண்ட் பார்ட்டி கும்பகோணத்தில் கொசு அதிகம் என்று கல்யாணப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். ராமாராவ் மாமாவும் கல்யாண ப்ரோக்கர் அவதாரத்தில் எழுந்தருளி இருந்தார்.
வெங்கோபராவுக்கே நாற்பது வயது காணும். கூட வந்த மூன்று பெரிசுகளும் எழுபது வயது யுவர்கள். கமலா பாய் பரிமாறிக் கொண்டிருக்க ஜாங்கிரிகளையும், போளியையும் வந்தவர்கள் ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
”டீ ஆபீசர், நிஜமாவே வடை சுடுவீங்களா?”, வாழை இலைத் துண்டில் வடை மாவைப் பரப்பி வடை தட்டிக்கொண்டிருந்த ரத்னா கேட்டாள். அவள் பரிமாற வரவேண்டாம் என்று கமலா பாய் சொன்னதற்கு எனக்கு அர்த்தம் புரியாமல் இல்லை. அக்காவைப் பெண் பார்க்க வந்து தங்கையைப் பெண் கேட்கிற உலகம் இது.
வடை தட்டிக்கொண்டே, கங்கா எங்கே என்று ரத்னாவைக் கேட்டேன். முகத்தை அலம்பிக் கொண்டு, அம்மா அழைத்ததும் ஒரு நிமிடம் வெளியே வந்து நமஸ்காரம் பண்ணிப் போக சலிப்போடு சம்மதித்திருக்கிறாளாம்.
கோபு எங்கே? அவன் இந்தப் பக்கம் வந்தே ரெண்டு வாரம் ஆகிறது நினைவு வந்தது. காலேஜ் மூடி வைத்திருப்பதால் சொந்த ஊருக்குப் போயிருக்கலாம்.
ராமாராவ் மாமா சமையல்கட்டுக்குள் வியர்த்து விறுவிறுத்த என்னையும் பக்கத்தில் அதே ஸ்திதியில் ரத்னாவையும் கொஞ்சம் நெருக்கமாகவே நிற்கப் பார்த்துத் தலையை ஆட்டிக்கொண்டார். தப்பு என்கிறாரா, எப்படி வேணும்னாலும் போங்க என்கிற சைகையா புரியவில்லை.
வெங்கோபராவ் கூட வந்த பெரிசு ஒருத்தர் சத்தமாக ராமாராவ் ராமாராவ் என்று ஹாலில் இருந்து கூப்பிட, வடை எடுத்துப் போக சமையல்கட்டுக்கு வந்த ராமாராவ் அவசரமாக வெளியே ஓட, விட்டோபா டீயை எடுத்து டம்ளர்களில் வார்த்தார். என் கைங்கர்யத்தில் டீ கமகமவென்று ரெடியாகி விட்டிருந்தது. தேயிலையைப் பாலோடு சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலம், சுக்கு, இஞ்சி தட்டிப் போட்டு வசீகரமான வாடை அடிக்கும் டீ. இந்த டீக்கே இந்த வீட்டில் கண்ணை மூடிக்கொண்டு பெண் எடுக்கலாம்.
விட்டோபா நான் திரும்பிப் பார்ப்பதற்குள் டீயை எடுத்துக்கொண்டு போய் வந்தவர்களிடம் நீட்டியதை பதைபதைப்புடன் பார்த்தேன். வடை இன்னும் பரிமாறவே இல்லை.
அந்த கோஷ்டி எல்லா பாராட்டோடும் டீயை ருசித்துப் பருக விட்டோபா மனம் குளிர்ந்து, ‘உங்கள் மாலை நேரத்தை இனிமையாக்குகிறது டீ. தேநீர் சைனாவில் முதலில் பழக்கத்துக்கு வந்தது’ என்று விற்பனை பிரசங்கத்தை ஆரம்பிக்க, நான் அவசரமாகப் பின்னால் சென்று அவரைக் கையைப் பிடித்து இழுத்து உள்ளே அனுப்பினேன்.
”பிள்ளையாண்டன் யாரு குக்கனா, வயசுப் பொண் இருக்கற வீட்டுலே இள வயசு பரிசாரகனை வேலைக்கு ஜாக்கிரதையா தான் வச்சிருப்பீங்க” என்று ஒரு பெரிசு தொடங்க, கமலா பாய் உள்ளே போனாள்.
இன்னொரு பெரியவர் ”டெல்லி சுல்தான் அரண்மனை அந்தப்புரத்திலே அழகான பசங்களை அறுத்து விட்டுட்டு வேலைக்கு சேர்த்துப்பாங்களாம்” என்று யாரும் கேட்காத தகவல் தந்தார். அது என்னை அதிர்ச்சியோடு புரட்டிப் போட்டது.
ரத்னா கேட்டிருந்தாள். ஆனால் சிரிக்கவில்லை. அவள் இடுப்பை நான் வெறிக்க, போடா என்று தாவணியால் மறைத்துக்கொண்டாள். எந்தக் கிழம் என் ஆண்மையைச் சந்தேகப்பட்டால் என்ன, என் ரத்னா என்னோடு தான் எப்போதும்.
”உருளியை விட்டோபா கிட்டே கொடுத்து விட்டுடு..” என்று ரத்னாவிடம் சொல்லிவிட்டு வெளியே புறப்பட்டேன்.
”மாட்டோம், பிச்சு தின்னுடுவோம்” என்றாள் குறுகுறுப்பாகப் பார்த்து. இதற்கே அவளைப் பிய்த்துத் தின்னலாம் என்று ரசனை உள்ள காட்டுமிராண்டியாக மனம் சொன்னது.