an excerpt from my forthcoming novel RAMOJIUM : Kumbakonam 1935
நான் சாரங்கபாணி கோவிலை நோக்கி நடந்தபோது வெங்கோப ராவ் அண்ட் பார்ட்டி வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ராமாராவ் மாமா பின்னாலேயே போனார்.
கோவிலுக்குப் போய் விட்டு ஏழு மணிக்குக் கிளம்பிய போது, கமலா பாய் பிரகாரத்தில் தூணை ஒட்டி உட்கார்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் பிரமை பிடித்தது போல் இருந்தாள்.
துக்காம்பாளையத் தெருவுக்கு வந்தபோது என்னமோ தோன்ற கங்கா வீட்டுக்குப் படியேறினேன். ரத்னாவும் கங்காவும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க,. வாங்க சார், ரொம்ப நன்றி என்றாள் கங்கா.
வெங்கோப ராவுக்குப் பெண் பிடித்ததாம். ஆனால் அவளுடைய அப்பா ஒரு தமிழ்ப் பிராமணர் என்பது ஒத்து வராதாம். எதிர்பார்த்ததுதான். அடித்துப் பிடித்துக்கொண்டு பார்ட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு பாசஞ்சர் பிடிக்கப் போன அவசரத்தில் வடை வந்து சேரும் வரை இருக்க முடியவில்லையாம்.
வந்ததுக்கு வடை சாப்பிட்டுப் போங்க என்றாள் கங்கா. வடை பரிமாறுவதற்குள் வெங்கோபராவ் வாக் அவுட் செய்ததால் வடை, சட்னி நிறைய மீந்திருக்கிறதாம்.
“மாமி அரிசி உப்புமா, கத்தரிக்காய் கொத்ஸு ராத்திரி சாப்பாட்டுக்கு செய்யப் போறதா காலையிலேயே சொல்லிச்சு” என்றேன் மன்னிப்புக் கேட்கும் தொனியில்.
“சரியான சாப்பாட்டு ராமன்” என்றாள் ரத்னா. இருந்துட்டுப் போறேன் என்றேன்.
”போன தடவை வாழைக்காய் பஜ்ஜி, அதுக்கு முந்தி போண்டா.. இப்போ மெனுவை மாத்தி உளுந்து வடை.. அதுவும் மிச்சமாயிடுச்சு .. பேஷ்..”
கங்கா சிரித்தபடி சொன்னாலும் அவள் மனம் புரிந்தது. ரத்னா இருக்கச் சொல்லி விட்டு உள்ளே போய் ஒரு பாத்திரத்தில் நாலு வடை சட்னியோடு வந்தாள்.
”வீட்டுலே போய் தின்னுங்க. ராமாராவ் மாமாவுக்கு தராதீங்க. இனிமே இப்படி மாப்பிள்ளை கூட்டி வந்தால் பாகற்காய் அல்வா தான் அவருக்கு..”.