கல்லறைக்காரர்

யுகமாயினி பத்தி

ஏதோ ஒரு பக்கம் கல்லறைக் காரர் இரா.முருகன்

தோப்புத் தெரு வீடு பழையது. அதற்கு வயது கிட்டத்தட்ட நூற்றி இருபது. அழுக்குக் கறுப்புக் கல் சுவர் வைத்த வாசல். எடின்பரோ நகரத்தில் எல்லாக் கட்டிடங்களும் இதே கறுப்புக் கல் அலங்காரத்தோடு தான். ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கவே கூடாது. பார்த்தால் அநாதையாகக் கிடக்கிற தெரு நெடுக ஈரக் கறுப்பில் துக்கம் கொண்டாடுகிற இந்தக் கட்டிடங்களைப் பார்க்க எனக்கும் அழுகை முட்டிக் கொண்டு வரும்.

எதிர் ஃப்ளாட்காரர் என் வீட்டு காலிங் பெல் அடித்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை நேரத்தில்தான். ஜான் மில்னே என்று பெயர். எழுபது வயது. இன்னும் துடிப்பாக லோத்தியன் தெருவில் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார். வருமானம் பிய்த்துக் கொண்டு போகிற வேலை அது. சவ அடக்கம். மற்றும் அதற்கான முன்னேற்பாடு.

‘மேட், விரசா ஒரு கை கொடு’. ஞாயிற்றுக் கிழமையிலும் மிடுக்காக த்ரீ பீஸ் சூட் அணிந்து, நீல நிற டை கட்டி மழுங்க மழுங்க சிரைத்துக் கொண்டு ‘இந்தியன்’ தாத்தாவுக்கு இன்னொரு லேயர் ப்ரோஸ்தெட்டிக் மேக்கப் போட்ட மாதிரி நிற்கிற ஸ்காட்டிஷ் தாத்தா அவசர உதவி கேட்கிறார் என்ன உதவி? பிணம் தூக்கணுமா? எடின்பரோ வந்த காரியம் பரிபூர்ணமாக நிறைவேறின திருப்தி எனக்கு.

‘இந்திய சவம். நேத்தே ஆஸ்பத்திரியிலே இருந்து வாங்கி, குளிர் பதன அறையிலே வச்சாச்சு. இன்னிக்கு சொந்தக்காரங்க மான்செஸ்டர்லே இருந்து சாயந்திரம் கால்பந்து பந்தயம் முடிஞ்சதும் கிளம்பி வராங்க. அதுக்குள்ளே சவ அடக்கத்துக்கு சாமக் கிரியை எல்லாம் ரெடி பண்ணனும். என்ன எல்லாம் வாங்கி வச்சாகணும். உங்க ஊரு, உங்க மனுசங்க, உங்க சவம். உதவி பண்ணு தம்பி’.

இந்த ஊரில் முன்னேப் பின்னே சாகாததால் இடுகாடு போகிற அனுபவம் கிட்டவில்லை. அது சரி, என்ன டைப் ஆசாமி? எரிக்கற டைப்பா, புதைக்கிறதா?

‘பெட்ஷீட்டை கடாசிட்டு பேண்ட் மாட்டிக்கிட்டு வா’. மில்னே அழுத்தமாகச் சொல்ல, உள்ளே போய் வேட்டியை (ஹூம், இதுவா பெட்ஷீட்?) உருவி, ஜீன்சில் நுழைந்து தாத்தாவோடு படி இறங்கினேன். அவரிடமிருந்து இதமான ஒயின் வாடை. காலையிலேயே அளவாக சுதி ஏற்றிக்கொண்டு தொழிலுக்குப் புறப்பாடு.

மில்னே துரை கடையில் முதல் தடவையாகப் படி ஏற, இருட்டு தான் வரவேற்றது. அது பழக்கமானதும், சப் ஜீரோ வாட் வெளிச்சம் போடும் ஒரு பல்ப் முழு ஹாலையும் இருட்டடித்துக் கொண்டிருந்தது புலப்பட்டது. தரை முழுக்க சைஸ் வாரியாக, கலை நேர்த்தியோடு செய்து கிடத்திய சவப் பெட்டிகள். திறந்து கிடந்த இரண்டு மகோகனி மர சவப் பெட்டிகளுக்கு நடுவே கொள்ளை அழகோடு ஒரு வெள்ளைக்கார சுந்தரி நிற்கிறாள். நின்ற படிக்கே மலராத பூ உதடுகளைக் குவிக்கிறாள். நான் பல் விளக்கிவிட்டு வந்திருக்கலாம். காலை நேர முத்தம் வேண்டாம் என்று மரியாதையோடு சொல்ல உத்தேசிக்கும் முன், இடுப்பு பர்ஸிலிருந்து உதட்டுச் சாயத்தை எடுத்து (அதுக்கு உலகம் முழுக்க ஏன் இப்படி விபரீதமான வடிவம்?) குவிந்த மொட்டுகளை வயலட் நிறமாக்குகிறாள். எனக்கும் ஒரு ஹலோவை நடுவே சொல்ல அந்த மொட்டுகள் திறந்து மூடுகின்றன.

‘என் அசிஸ்டெண்ட் எமிலி’. மில்னே அறிமுகப் படுத்திவைக்கிறார். டிராகுலா ரத்தம் குடிக்கும் திகில் சினிமாவில் பேய்க்கு வசப்பட்ட பேரழகிகள் நினைவு வருகிறார்கள். எமிலிக்கும் ரத்தம் இல்லை, மாசாந்திர சம்பளம் கிடைக்கிறது.

விளக்குகளை மில்னே போட, மேஜையில் கடை விளம்பர நோட்டீசுகள். ஒன்றை எடுத்துப் புரட்டுகிறேன். ‘நாளைய சவ அடக்கம் இன்றைய ரேட்டில்’ என்ற ஒன்று கண்ணை ஈர்க்கிறது. ‘நாளுக்கு நாள் விலைவாசி ஏறிட்டுப் போறதே. சவ அடக்கச் செலவு போன வருடத்தை விட இன்னிக்கு இருபத்தைந்து பெர்செண்ட் அதிகம். இது இன்னும் கூடும். எங்க திட்டத்திலே டிபாசிட் பண்ணினா, எத்தனை வருசம் கழிச்சு பரலோகம் போனாலும், இன்னிக்கு நிலவர ரேட்டுக்கே சிக்கனமா முடிச்சுக் கொடுக்கறோம்’. மில்னே விளக்குகிறார். எடின்பரோவில் சாக உத்தேசம் இல்லாததால் நான் சந்தா கட்டப் போவதில்லை.

‘இண்டியன் பாடி பின்னாடி கோல்ட் ஸ்டோரேஜில் இருக்கு. பார்க்கறியா?” நைச்சியமாகக் கேட்கிறாள் எமிலி. கோல்ட் ஸ்டோரேஜ், கோஸ்ட் ஸ்டோரேஜ் எல்லாம் வேணாம் என்று சங்கடத்தோடு மறுத்துவிட்டு பெயரைக் கேட்கிறேன். அதான் எமிலின்னு சொன்னேனே? தாத்தா எகிறுகிறார். இந்தப் பொண்ணு இல்லே. உள்ளே பொணம். அதுக்கு உயிர் போகற முந்தி ஒரு பெயர் இருந்திருக்குமே?’

‘ரோனி பாட்டில்வாலா’ எமிலி ஒரு லிஸ்டை எடுத்து தட்டுத் தடுமாறிப் படிக்கிறாள். பார்சிக் காரர். அமைதிக் கோபுர உச்சியில் வைத்து காக்கா, கழுகு கொத்தித் தின்ற மிச்சம் உலர்ந்து உதிர்வது தான் பார்சி அடக்க முறை என்று நினைவு வருகிறது. பாட்டில்வாலாவை எப்படி சுவர்க்கத்துக்கு பார்சல் செய்வது?

‘உங்க கடையிலே மொட்டை மாடி இருக்கா?’ நான் கரிசனமாகக் கேட்கும்போது தொலைபேசி ஒலிக்கிறது. ஐந்து நிமிடம் பொறுமையாகக் கேட்டு அவ்வப்போது ஆ, ஊ என்று என்னத்துக்கோ சந்தோஷக் குரல் அனுப்பிய எமிலி சொல்கிறாள் – ‘ அடக்கத்தை அவங்களே கவனிச்சுக்கறாங்களாம். அமரர் ஊர்தி மட்டும் ஏற்பாடு செய்தால் போதுமாம்’. பாட்டில்வாலா ஆத்மா சாந்தி அடையட்டும்.

மில்னே கடைக்கு இன்னொரு தடவை போகவேண்டும். பல் தேய்த்துவிட்டு படியேற மறக்கக் கூடாது. எமிலி தனியாக இருப்பாள். உதட்டுச் சாயம் மிச்சம் இருக்கும்.

‘குளிக்க வேம்பாவில் வெந்நீர் போட்டு’ என்று ஒரு வாரப் பத்திரிகை பத்தியில் எழுதியிருந்தேன். உதவி ஆசிரியர் அவசரமாக தொலைபேசினார் – இந்த வேம்பான்னா என்ன சார்? ஆர்டிஸ்ட் கேக்கறார். படம் போடணும்’. நான் வேம்பாவை விளக்கினேன். ‘அட, பாய்லர், டீக்கடை பாய்லருக்கு அண்ணாத்தை’.

நினைத்தாலும் மறக்க முடியாத செம்மண் பூமித் தமிழ் அது. கண்டனூர் பழனியப்பா சுப்பிரமணியன் தொகுத்த ‘செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி’ (தமிழினி வெளியீடு) புத்தகத்தைப் புரட்டியபோது அங்கே என் வேம்பா பத்திரமாக இருந்தது. இன்னும் ‘அடிக்கட்டை’ (வங்கி சலானின் கவுண்டர்ஃபாயில்), இசைகுடிமானம் (கல்யாணத்தின் போது இரண்டு தரப்பு பெற்றோர், பங்காளிகள் எழுத்து மூலமாக செய்து கொள்ளும் திருமண உடன்படிக்கை) போன்ற ‘அறுதப் பழசு’ சொற்களும் நல்லா இருக்கீகளா தம்பி என்று விசாரிக்க, குரங்கு பெடலில் சைக்கிள் மிதித்துக் கொண்டு தள்ளுகாற்றில் குஷியாகப் பயணமானது மனசு.

சிவகங்கை பிரதேசத்திலும் அங்கேயிருந்து சிங்கப்பூர் மலேசியா போன தமிழர்களிடையும் பிரபலமான ‘கொங்கஞ்சுங்காய் வங்கி’ (ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பேங்க்), உலாந்தா வங்கி (பேங்க் ஓஃப் ஹாலண்ட்), உண்டி (டிராஃப்ட்) போன்று ‘கருக்கடை’யாக (கரிசனத்தோடு) சேர்த்த வட்டார வழக்கு சொற்கள் ‘உண்டன’ நிறைந்த புத்தகம் இது. சுப்பிரமணியத்துக்கு ‘ஏலா’ போடாலாம்.

(யுகமாயினி செப்டம்பர் 2008)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன