விருந்துகளைக் குறையுங்கள் என்று அடுத்த சிக்கனம் பேணுவோம் புத்திமதி. இந்த யுத்தம் வந்தது முதல்கொண்டு விருந்து என்ற ஒரு சமாசாரத்தையே மறந்து போயிருக்கிறோமே. குறைக்க இனி என்ன இருக்கிறது?
எங்கள் மதறாஸ் பிரசிடெண்சி மாகாணத்தில் கெஸ்ட் கண்ட்ரோல் சட்டம் போட்டிருக்கிறார்கள் விருந்து என்று முப்பது பேருக்கு மேல் கூப்பிடக்கூடாது. அதில் விருந்து கொடுக்கிறவர்களும் அவர்கள் குடும்பமும் அடக்கம்.
முப்பது பேருக்கும் தலா ஒரு சின்ன பெரி பிஸ்கட், ஆளுக்கொரு வாழைப்பழம், ஒரு துண்டு கேக் இப்படிக்கூட ஒண்ணும் தரக்கூடாது. சாப்பாடு ஃபோட்டோ அச்சடித்த காகித நோட்டீஸ் தரலாமா தெரியவில்லை.
காளி மார்க் கோலி சோடா, கலர், எலுமிச்சம்பழ ஜூஸ், நீர்க்கக் கரைத்த பானகம், கெட்டியாகக் கரைத்து சப்ஜா விதை போட்ட ஒண்டிப்பிலி சர்பத், நீர்மோர் இப்படி பானமாகத் தரலாமே தவிர திட பதார்த்தமாக ஒரு கடலை அச்சும் காக்காக் கடி கடித்துக் கூடக் கொடுக்கக் கூடாதாம்.
பிறந்த நாளுக்கு பத்துப் பேரை அழைத்து பானகம் கொடுத்தால் கேட்பார்களே – இன்னிக்கு ராவ்நவமியா ராம்நவமியா என்று. இந்த கஷ்டம் உங்கள் பிரஜைகளான எங்களுக்கு எதுக்கு மகாராஜா?
பகவத் கடாட்சத்தால், கல்யாணத்துக்கு முப்பது பேரை அழைத்து விருந்துச் சாப்பாடு போடலாம் என்று சட்டம் தாராளம் காட்டுகிறது. கல்யாண விருந்துக்கு போகிறவர்கள் அவரவர் ரேஷன் அரிசியை கல்யாணம் நடக்கும் இடத்துக்குக் கொண்டு போய்க் கூட்டாஞ்சோறு சமைக்க வைத்துச் சாப்பிட்டு தம்பதியை வாழ்த்த வேண்டும் என்று கெஸ்ட் கண்ட்ரோல் சட்டம்.
இதையும் குறைத்தால் என்ன ஆகும்? பெரிய குடும்பங்களில் மூணு வேளை குடும்பத்தில் இருக்கிற எல்லோரும் சேர்ந்து இருந்து சாப்பிடுவது விருந்து என்று கருதப்படுமா? அப்படியானால் தினசரி ஐந்து பத்து பேரை பட்டினி போட்டு அதுவும் ரொட்டேஷனில் மீதிப் பேர் சாப்பிடணுமா?
லங்கணம் பரம ஔஷதம் என்று எந்த மகானுபாவனோ எந்தக் காலத்திலோ சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டு எழுதி வைத்திருக்கிறான். அதையே கட்டாயமாக்கினால் எப்படி?
வீட்டில் தீபாவளி, பொங்கல் இப்படி விசேஷம் வந்தால் வீட்டுக்குள்ளேயே சிலரை கலந்து கொள்ளச் சொல்லி விட்டு மற்றவர்களை காலி வயிற்றோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கச் சொல்லணுமா?
சக்கரவர்த்திகளின் அரண்மனைத் தோட்டத்தில் தோட்ட விருந்து நடத்தத் தடை கிடையாதா? விருந்துகளுக்கு வருபவர்களுக்கு மொட்டத்தண்ணி டீயும் ஒரு துண்டு கேக்கும் தருகிறபடியால் அவனவன் வருந்தி அழைத்தாலும் வரமாட்டேன் என்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். தோட்ட விருந்துகளை இல்லாதாக்கினால் அரண்மனைச் செலவு குறையுமே?
(கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து – 1945)
From the forthcoming novel RAMOJIUM