ராமோஜி கடிதங்கள் – 1945 ராமோஜியம் புதினத்தில் இருந்து

இந்த நடிகர்களை எல்லாம் விட சிறப்பாக செயல்படுகிற ஒரு அற்புதமான உத்தியோகஸ்தரை உங்கள் ரேடியோ ஸ்டேஷன் சம்பளத்துக்கு எடுத்திருக்கிறது என்பது பற்றி நீங்கள் நிஜமாகவே பெருமைப்படலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் பலவேசம் பிள்ளை அவர்கள் தான் அந்த அற்புதமான கலைஞர்.

காலையில் பெயர் அறிவிக்காமல் நிலைய வித்வான் என்று பொதுவாக அறிவித்தாலும் ஸ்ரீவிலி.பலவேசம் குரல் அல்லா அல்லா என்றோ கிருஷ்ணா கிருஷ்ணா என்றோ, சமயத்தில் அடுத்தடுத்துமோ உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும். செய்தி விமர்சனத்தில் புதிதாகப் பதவி ஏற்ற பிரிட்டீஷ் பிரதமர் அட்லி சொன்னதாவது என்று உலக அரசியல் அலசும். எட்டரை மணிக்கு கர்நாடக இசைக்கச்சேரியில் கச்சிதமாக எட்டரைக்கு முடிகிற மாதிரி ராக ஆலாபனை, கீர்த்தனை என்று நிலைய வித்வானாக அறிவிக்கப்பட்டு, பாதிக் கச்சேரி முடிக்கும். மதியம் மற்ற நாளில் எப்படியோ, ஞாயிறன்று சூர்யகாந்தி கதம்ப நிகழ்ச்சியில் பள்ளிக்கூட உபாத்தியாயராக கையில் குடையோடு பள்ளிக்குக் கிளம்பும். சாயந்திரம் நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் வாங்க கண்ணுச்சாமி, யுத்தம் எப்படி முடிந்ததுன்னு சர்ச்சில் பிரபு சொல்லியிருக்கார், தெரியுமா என்று அரசியல் சொல்லித் தரும். கிராமப்புறப் பாடல்கள் நிகழ்ச்சியில் ’பொன்னாத்தா நீ முன்னே நடந்தா’ என்று வரப்பில் பாடிக்கொண்டு போகும்.. வியாழனன்று நாடக நிகழ்ச்சியில் விபீஷணனாக சரணாகதிக்காக ராமநாடக கீர்த்தனை பாடிக்கொண்டு வரும். ராத்திரி அன்றைய நிகழ்ச்சிகள் முடியும்போது அடுத்த நாளுக்கான நிகழ்ச்சி விவரம் படிக்கும்.

பலவேசம் மட்டும் இல்லையென்றால் உங்கள் ரேடியோ ஸ்டேஷனே இயங்காது என்று தோன்றுகிறது. அவர் நல்ல நாள், வீட்டில் விசேஷம் என்று லீவு எடுத்துப் போனால் எப்படி சமாளிக்கிறீர்கள்?

போகட்டும், மதியம் அதென்ன நிலைய வித்வான் கோட்டு வாத்தியம் வாசிப்பார், நிலைய வித்வான் தில்ரூபா வாசிப்பார், நிலைய வித்வான் சாரங்கி வாசிப்பார் என்று இங்கிலீஷ் நியூஸை இன்னொரு தடவை ஒலிபரப்பி அடுத்ததாக உடனே இசை மழை பொழிவது எதற்காக? உச்சி வெய்யில் நேரத்தில் தில்ரூபா வாத்திய சங்கீதம் கேட்க எத்தனை பேர் ஆர்வமாக இருக்கிறார்கள்? நிலைய வித்வான் தானே, சாயந்திரம் உட்கார்ந்து சூரிய அஸ்தமன காலத்தில் வாசிக்கச் சொன்னால் மாட்டேன் என்று சொல்லப் போவதில்லை. அந்த நேரத்தில் அவரை ’வாங்க கன்னய்யா வாங்க சின்னய்யா’ என்று நாட்டு நடப்பு பேசச் சொல்லாமல் இருந்தால் சரி.

இப்போது பகல் ஒலிபரப்பில் தண்டபாணி தேசிகர், சுப்புலட்சுமி, வசந்தகோகிலம் என்று பெரிய பெரிய வித்வான்கள் பிளேட் கொடுத்த கானங்களையும் போடுவதாகக் கேள்வி. நான் போன மாதம் இந்த நிகழ்ச்சியைக் கேட்கும்போது, பிரபல பாடகி கேபி சுந்தராம்பாள் ’உமை மறந்திடப் போமா’ என்று கல்லும் உருகப் பாடிய கஸ்தூர்பா இரங்கல் ரெகார்ட் ஒலிபரப்பானது. ஆனாலும், கஸ்தூர்பா காலமாகி ஒரு வருஷம் சென்று இன்னும் துக்கம் அனுஷ்டித்து இப்போது இரங்க வேண்டுமா என்ற கேள்வி எனக்கு இருக்கிறது. தப்பித் தவறி, ‘வண்ணான் வந்தானே’ ரெகார்ட் ஒலிபரப்பி விடாதீர்கள். ரசாபாசமாகிப் போகும்.

சாயந்திரம் ஐந்து மணிக்குத் தொடங்கி ராத்திரி ஒன்பதரை வரையான ஒலிபரப்பு அதிகம் பேரால் கேட்கப் படுகிறது. பார்க்கிலும் மெட்றாஸ் கடற்கரையிலும் கார்ப்பரேஷன் லவுட் ஸ்பீக்கர் ஏற்பாடு செய்து அதிக ஜனங்கள் கேட்க வசதி செய்திருப்பதற்காக சர்க்காருக்கு நன்றி. இதில் மாலை ஆறு மணிக்கு காலையில் விட்ட குறை தொட்ட குறையாக சங்கீத வித்வான் மீதிக் கச்சேரியை நிகழ்த்தும்போது சில பேராவது ரசிக்க உண்டு. என்னைப் போல நல்ல சங்கீதத்தை விரும்புகிறவர்கள் இதையே தனிக் கச்சேரியாகச் செய்ய வைத்தால் நன்றியுடன் இருப்போம்.

இதைத் தொடர்ந்து நான் ஏற்கனவே சொன்ன, நாட்டு நடப்பு கொஞ்சம் பழைய செய்திகளை ஊறுகாய் போட்டு பலவேசம் பிள்ளையும் மற்றவர்களும் பரிமாற, அரை மணி நேரம் ஊர்ந்து போகிறது. கேட்டுக் கேட்டு பழகிப் போய் அது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது. தொடர்ந்து அதையே ஒலிபரப்பக் கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீவில்லிப்புத்தூர் பலவேசம் பிள்ளைவாளும் சந்தோஷப்படுவார்.

அதற்கு அடுத்து சில நாள் கிராம நிகழ்ச்சிகள் என்று அறிவித்து பலவேசம் பிள்ளை நாட்டுப்பாடல்கள் பாடுவது ஒலிபரப்பாகிறது. நாட்டுப் பாடல்கள் எல்லாம் புத்தம்புதுசாக யாராவது ரேடியோ ஸ்டேஷனில் எழுதித் தருகிறார்களா? நிலைய வித்வான் போல் நிலையக் கவிஞரும் உண்டா? வாத்திய வ்ருந்தா என்றோ வாத்திய கோஷ்டி இசை என்றோ அடுத்து வரும்.

அபூர்வமாக ராத்திரி ஏழரைக்குப் பிரமுகர்களின் பேட்டி ஒலிபரப்பாகிறது. போன மாதம் கதகளி கலைஞர் அர்ஜுனன் நாயர் பேட்டி என்று கேட்க உட்கார்ந்தால், இந்த ரீதியில் இருந்தது பேட்டி –

சார், நீங்க 1895இல் சங்கணாச்சேரியில் பார்க்கவன் பிள்ளை – நாராயணி அம்மா தம்பதிக்கு ரெண்டாம் மகனாகப் பிறந்தீங்க

அதே அதே

1920இல் கல்யாண சௌகந்திகம் ஆட்டக் கூத்தில் பீமனாக நடித்தீர்கள்

அதே அதே

1925-ல் மோகினி ஆட்டக்கலைஞர் லட்சுமி அம்மாளைக் கல்யாணம் செய்துக்கிட்டீங்க

அதே அதே

மிக அபூர்வமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி

அதே அதே

இந்த அதே அதேயைக் கேட்க ஒரு பேட்டியா, அதுவும் ராத்திரியில்?

———————————————————————-

அடுத்த சிக்கனம் பேணுவோம் யோஜனை ரொம்பவே குடாக்குத்தனமானது என்று சொல்ல அனுமதிக்க வேணும் மகாராஜா. இன்னும் பட்டவர்த்தனமாகச் சொல்லப் போனால், மூத்திரத்தில் மீன் பிடிக்கும் விஷயம் இது. மறுபடி தரக்குறைவான வார்த்தை. தயவுசெய்து மன்னிக்கவும். வேறே எப்படிச் சொன்னாலும் அது சரியாக வராது.

பட்டம் விட்டு நூலை வீணாக்காதீர். இதுதான் அந்த சிக்கன யோஜனை.

சக்கரவர்த்திகள் பக்கிம்ஹாம் அரண்மனை மொட்டை மாடியில் மாலைப் பொழுதில் பட்டம் விட்டு அல்லது ராஜகுமாரர்களும் ராஜகுமாரிகளும் பட்டம் விடுவதை காற்று வாங்கிக்கொண்டு உட்கார்ந்து ரசித்திருக்கிறீர்களா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

வஜ்ரப்பசையில் கண்ணாடித்தூள் கலந்து காய்ச்சியதை நூலில் பூசி டீல் விட்டுப் போட்டிக்குப் பறக்கும் பட்டத்தையும் சமயத்தில் அப்படி விடுகிறவன் கழுத்தையும் அறுப்பது ரொம்ப நாளாக நடந்து வந்தது. சர்க்கார் நடவடிக்கை எடுத்து அதை ஒழிப்பது சரியானதுதான். அது உயிர் காக்கும் செயல்.

ஆனால், பட்டம் விடாதே, நூலை வீணாக்காதே என்று என்னத்துக்கு சொத்தையாக ஒரு யோஜனை? வீட்டு மொட்டை மாடியில் குழந்தைகள் பட்டம் விட்டு தொம்தொம்மென்று குதிக்க, தலையில் குதிக்கிற மாதிரி சத்தம் வந்து படிப்பு கெடுகிற, அரட்டை கெடுகிற யாரோ மூத்த துரைகளோ துரைசானியோ கூட்டிச் சேர்த்த யோஜனையோ இது?

பட்டம் விட்டு வீணாகும் நூல் பற்றி வீண் கவலை ஏதும் சமூகத்துக்கு வேண்டாம். கொஞ்சூண்டு நூல், நிலையான சந்தோஷம் என்று கணக்கில் கொள்ள வேண்டியது.

மரத்தை வெட்டி கிரிக்கெட் மட்டை செய்து நாலு நாள் முழுக்க இருபது சொச்சம் பேர் விளையாடும் கிரிக்கெட்டைவெறும் நாலே மணி நேரம் விளையாடி , மரம் வளர்த்து சிக்கனம் பேணுவோம் என்று யோசனை சொல்ல சர்க்காருக்கு தைரியம் உண்டா?

நூல் சேமித்து ராணுவத்துக்கு பொத்தான் தைத்துக் கொள்ள அனுப்புவதுதான் சர்க்காரின் நோக்கமாக இருந்தால், நூலுக்குப் பஞ்சமே இல்லாத பூமி பாரத பூமி என்று பெருமையோடு அறிவித்துக் கொள்கிறேன்.

மகாத்மா காந்தியும் தேச பக்தர்களும் உங்களுக்கு வேண்டப்படாதவர்கள் பட்டியலில் இருந்தாலும் அவர் லோக ஷேமத்துக்காகச் செய்யும் காரியங்களை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்குமா? காந்தி சுற்றாத கை ராட்டினமா, நூற்காத நூலா?

காந்தியும் காந்தி அனுதாபிகளும் நூற்றதில் நேர்த்தியான நூல் கதர்த் துணியாகிறது. மற்றது சாயங்காலம் கோவிலிலும் வீட்டிலும் தீபம் ஏற்றத் திரி ஆகிறது. .

மோட்டா நூலை எல்லாம் சர்க்கார் செலவுக்கு பணம் கொடுத்தால் சக்கரவர்த்திகளின் முகவரிக்கு பக்கிங்ஹாம் அரண்மனைக்கே தினம் தினம் அனுப்பித் தருகிறோம். ஒழிந்த நேரத்தில் அதை உருட்டி உசிதம் போல் தாம்புக் கயிறோ கால்மிதியோ ராஜாவும் ராணியம்மாவும் திரித்து மார்க்கெட்டில் விற்கக் கொடுத்தால் ஜனம் ராஜா திரித்த கயறு என்று விரும்பி வாங்கும். கஜானாவுக்கும் அதிக வருமானமாச்சு.

(கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து – 1945)

From the forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன