நான் எழுதி வரும் ‘ராமோஜியம்’ புதினத்தில் கும்பகோணம் அத்தியாயம் – நிறைவுப் பகுதி

ரத்னா கண் கலங்கினாள். பீமா அசந்திருந்த ஒரு வினாடி சுமித்ரா கண்காட்ட அருகில் நின்ற என்னிடம் காதில் சொன்னாள் ரத்னா –

“என் ராஜா.. சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிப் போயிடு.. உன்னையே நினைச்சிட்டிருப்பேன்”.

“வந்துடறேண்டா. அழாம போ. அப்புறம் அந்த முகம்தான் சதா நினைவிலே எனக்கு வரும்”, என்றேன் கண் நிறைந்து நிற்க.

அபத்தமாகத் தெரியும். ஆனால் இந்த வார்த்தைகளின் ஆத்மார்த்தம் வேறெதிலும் வராது.

ரயிலோடு கிறுக்கன் போல் அவுட்டர் வரைக்கும் ஓடினேன். அன்றைக்கு் உடம்பு சரியில்லை என்று விட்டோபாவுக்கும் லீவு கொடுத்து விட்டு நானும் வேலைக்குப் போகவில்லை.

அடுத்த இரண்டு மாசம், கதைகளில் வருமே, நடைப்பிணம்.. அதேதான்.. நடைப்பிணமாக கும்பகோணத்தில் டீ போர்ட் பீல்ட் ஆபிசர் உத்தியோகம் பார்த்தேன். துக்காம்பாளையத் தெருவிலிருந்து விட்டோபா வீட்டுப் பக்கம் ஜாகையை மாற்றிக் கொண்டேன். கமலா பாய் வீட்டுத் திண்ணை வெறுமையாக இருந்தது. அந்தத் தெருவுக்குப் போனாலே ரத்னா நினைவு அடர்ந்து கவிவது வழக்கமாகிப் போனது. ஒன்றிரண்டு முறை கங்காவை சக்ரபாணி கோவிலில் தொழுதபடி பார்த்தேன். அவளே என்னிடம் சொன்னாள் –

“ரத்னா சௌகரியமா ஊரு போய்ச் சேர்ந்தாச்சாம்.. காய் சமாச்சார்ன்னு கேட்டிருக்கா.. ராமோஜிராவ் எப்படி இருக்கார்னு பதில் போட?”.

உதடு பிரியாமல் சிரிக்கும் கங்காவையும் அவளைப் படைத்தவனையும் கைகூப்பித் தொழத் தோன்றியது.

1936 புது வருடம் பிறந்தபோது குளிரும் அதிகமாக இருந்தது. ரத்னாவைக் கொஞ்சமாவது மறக்க, திருவையாறில் தியாகராய ஆராதனைக்கு கோபுவோடு போய்க் குளிரில் கச்சேரி கேட்டேன்.

”நல்ல பனிக்காலம் பார்த்து தியாகையர் சமாதி ஆகிட்டார்’ என்று என் உடுப்பு அலங்காரத்தை பார்த்து கோபு சிரித்ததை ரசித்தேன். புஷ்ய பஹுள பஞ்சமியன்று எல்லா வித்வான்களும் கூடியிருந்து பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாட, என் ரத்னத்தை மனதில் ஆராதித்தேன். நானும் அந்தப் பனிக்காலத்தில் முடிந்து போயிருக்கலாம் என்று தோன்றியது.

பொங்கலுக்கு வீட்டுக்குப் போனேன்.

“ஏதோ கவர் வந்திருக்குடா நேத்திக்கு”. அப்பாஜி கொண்டு வந்து கொடுத்தது நான் சர்வீஸ் கமிஷன் பாஸ் ஆனேன் என்று அறிவிக்கும் கடிதம்.

கும்பகோணம் திரும்பும்போது நம்பிக்கையும் சந்தோஷமுமாக இருந்தேன். ரத்னா இனி என்றும் என்னுடைய காதலி, அன்பு மனைவி என்று திடமாகத் தோன்ற ஆரம்பித்தது.

அப்பாஜி அடுத்து எனக்கு வந்த சர்க்கார் கடிதாசை எடுத்துக்கொண்டு கும்பகோணத்துக்கே வந்துவிட்டார். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் வாட்டர் போர்டில் எல் டி சி உத்தியோகம் ஆகியிருந்தது எனக்கு. பிப்ரவரி பத்தாம் தேதி வேலைக்குச் சேரவேண்டும்.

பிப்ரவரி முதல் வாரம் ராஜினாமா கடிதம் எழுதி டீ போர்டுக்கு அனுப்பி உத்தியோகத்திலிருந்து விடுவிக்கப்பட்டேன். விட்டோபாவை என் இடத்தில் வேலை செய்ய ஆதரவாக நான் எழுதியதை தலைமை ஆபீஸ் ஏற்றுக் கொண்ட சூசனை தென்பட்டது. எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கும்பகோணத்தில் இருந்து புறப்பட ஆயத்தமானேன்.

“ரத்னாவை சீக்கிரம் கட்டிக்கிட்டு கல்யாணச் சாப்பாடு போடுங்க டீ ஆபீசர்” என்றாள் கங்கா.

“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை எங்க வீட்டுலே கேசரியும் சுவியனும் செய்யப் போறோமே… மிஞ்சினா மெட்றாஸுக்கு அனுப்பி வைக்கவா?”

அவள் கூட சிரிக்க மனம் வரவில்லை. கொச்சியில் இருந்து மிலிட்டரி ஓட்டல் தலைமை சமையல்காரர் பெண் பார்க்க வருகிறாராம். “கோளி அறுக்கறபோது விரல்லே கத்தி பட்டிடிச்சு ” என்று அவர் புகார் சொன்னபடி சாயந்திரங்களில் வீட்டுக்கு வர சீக்கிரம் கங்கா கல்யாணமும் நடந்தேறணும் என்று மனதுக்குள் பட்டீஸ்வரம் துர்க்கையை பிரார்த்தித்தேன்.

மெட்றாஸில் வேலைக்கு சேர்ந்த வாரத்தில் ஒரு வாழ்த்துக் கடிதம் வந்திருந்தது. பீமாராவ் தான் எழுதியிருந்தது. சுமித்ராவும் வாழ்த்து சொல்லி கையெழுத்து போட்டிருந்தாள்.

ரத்னா கடிதம் தனியாகக் கிடைத்தது. அவள் மனதை மாற்ற டெல்லிக்கு கூட்டி வந்தானாம் பீமாராவ். ஆனால் வந்த இடத்தில் சுமித்ரா அண்ணி ரத்னாவுக்கும் எனக்கும் ஆதரவாக இருக்க, பீமா மனம் மாறினானாம்.

அதற்கு இரண்டு காரணங்கள் – எனக்குக் கிடைத்த நிரந்தர கவர்மெண்ட் உத்தியோகம். இரண்டாவது ராமாராவ். அவர் என் ஜாதகத்தை அப்பாவிடம் வாங்கி ரத்னா ஜாதகத்தை பரிமாற்றம் செய்ய ரெண்டு பக்க ஜோசியர்களும் எல்லா பொருத்தமும் 99 சதவிகிதம் வந்ததாக அறிவிக்க கல்யாண நாள் குறிக்கப்பட்டது.

முழுக்க முழுக்க திட்டமிட்டபடி வாழ்க்கை நடக்குமா என்ன?

அப்பாஜி திடீரென்று மாரடைப்பால் காலமானார். இரண்டு மாதம் என் கனவுகளைத் தூக்கித் தூரவைத்து விட்டு அவர் நினைவில் துக்கப்பட்டேன். அது தீரும்போது இன்னொரு நல்ல முகூர்த்தத்தில் ரத்னாவைக் கைபிடித்தேன்.

கோபுவும் விட்டோபாவும் ராமாராவ் மாமாவும் கும்பகோணத்திலிருந்து என் கல்யாணத்துக்கு வந்து சிறப்பித்தார்கள். கமலா பாய் இரண்டு மாதம் முன் காலமான செய்தியை விட்டோபா தெரிவித்தார். இருந்தும் எப்படியும் கங்கா வருவாள் என்று நானும் ரத்னாவும் வெகுவாக எதிர்பார்த்தோம். கல்யாணம் முடிந்து இரண்டு நாள் கழித்து துக்காம்பாளையத் தெருவில் கங்கா பாய்க்கு அனுப்பியிருந்த கல்யாண அழைப்பு ‘விலாசதாரர் அங்கு இல்லை’ என்ற குறிப்போடு திரும்பி வந்தது.

எங்கள் கல்யாணம் பற்றியும், ரத்னாவுக்குப் பொடி வாங்க நான் அலைந்தது பற்றியும் ஒரு விடலைப் பயல் எழுதிய, ‘பொடி’ என்று தலைப்பு இட்ட விவரணத்தை அடுத்துப் படிக்கத் தருகிறேன். அதில் பாதி கப்ஸா. இருந்தாலும் படிக்க சுவாரசியமாக எழுதியிருக்கிறான் என்றாள் ரத்னா. அவள் சொன்னால் ஆட்சேபம் ஏது?

(ராமோஜியம் நாவல் – கும்பகோணம் அத்தியாயம் நிறைவுப் பகுதி)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன