ராமோஜியம் புதினம் –இன்னொரு 1942 அத்தியாயம் –மதறாஸ் : சில பகுதிகள்

ராமோஜியான நான் செயிண்ட் ஜியார்ஜ் கோட்டையில் அமைந்த என் ஆபீஸில், எனக்கான உத்தியோகபூர்வமான நாற்காலியில் இருந்து பென்ஷன் கணக்குகளைப் பார்த்தபடி பென்சிலை வாயில் கடித்துக் கொண்டிருந்தபோது சூப்பரிண்டெண்ட் பந்துலு என் கீகடமான இருப்பிடத்திலிட்ட மேஜைப் பக்கம் வந்து விட்டார்.

”ஏமி ஐயா ராமோஜி, இதென்ன பென்சில் கடிக்கற பழக்கம்? என் பிள்ளை சத்யா இருக்கானே, தேர்ட் ஃபாரம் படிக்கறவன் .. சீமந்த புத்ரன் .. அவன் வச்சு எழுதின பென்சிலை விட பல்லாலே துருவித் துருவித் தின்னது தான் அதிகம். பென்சில்லே என்ன சர்க்கரை தடவி இருக்காரா பெருமாள் செட்டி?”

நான் எழுந்தபடி பென்சிலைப் பார்த்தேன். பெருமாள் செட்டி கடை ஹெச் பி பென்சில் தான். இவருக்கு எல்லாம் தெரியும்.

”சொல்லுங்க சார், பென்சில் வேணுமா? பென்ஷன் கணக்கு ஒரு ரூபா பதினேழு காசு ஒதைக்கறது.. பாத்துட்டிருக்கேன்” என்றேன்.

”ஐயே, எச்சப் பண்ணின பென்சில் எனக்கெதுக்கு.. நீரே வச்சுக்கும்.. இப்போ வீட்டுக்கு கிளம்பும்.. வேலை எல்லாம் அப்படியே இருக்கட்டும் .. நாளைக்கு வந்து பார்க்கலாம்..”.

அவர் என்னை போ என்று சைகை செய்தார். நான் சுவரில் தொங்கிய பழைய கடியாரத்தில் நேரம் பார்த்தேன், மணி பிற்பகல் நாலு தான் ஆகிறது. இன்னும் இரண்டு மணி நேரம் ஆபீஸ் நேரம் பாக்கி உண்டு.

”சார், இப்போ டைம் …” என்று அவரை கடியாரத்தைப் பார்க்க வைக்க எடுத்த முயற்சிகள் வீணாக பந்துலு என் மேஜை மேல் உட்கார்ந்தபடி சொன்னார் –

“இனிமேல்கொண்டு, உம்மை தினசரி நாலு மணிக்கு வீட்டுக்கு அனுப்பச் சொல்லி கவர்மெண்ட் உத்தரவு போட்டிருக்கு . அதான் தாமதிக்க வேண்டாம்னு அனுப்பிவைக்க நேர்லே வந்துட்டேன்”.

அவர் இறங்கி வந்த கடவுளின் அவதாரம் போல் பெருந்தன்மையோடு சொல்லிப் புன்னகைத்தார். ஒற்றைவாடை தியேட்டரில் கன்னையா கம்பெனி நடிக்கும் தசாவதாரம் நாடகத்தில் கிருஷ்ணன் போல் முக ஜாடை அவருக்கு. ரத்னாவை தசாவதாரம் பார்க்கக் கூட்டிப் போனபோது கூர்மாவதாரத்திலேயே அவள் தூங்கி விட்டாள். சர்ப்ப நடனம், தேவ சபை நடனம் என்று நாடகத்துக்குள் வரும் நடனக் காட்சிகளைக் கூடப் பார்க்கவில்லை. அதற்கு அப்புறம் கன்னையா கம்பெனி சிலோனில் ஆடப் போய் விட்டது. ஒற்றைவாடை தியேட்டரில் அப்புறம் நாடகம் பார்க்க என்று நானும் போகவில்லை. அங்கே இப்போது என்ன நாடகம் ஆடுது என்று பேப்பரில் படித்ததை நினைவு படுத்தப் பார்த்தேன். ராமசாமி நடிக்கும் மனோகரா தான் என்று புத்தி சொன்னது. என்ன ஒரு ஞாபக சக்தி எனக்கு!

“கிளம்புமய்யா” பந்துலு பொறுமை இழக்கிறார். இன்னும் நின்றால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்.

ரத்னா நான் போனதும் பசியாற சாயந்திர டிஃபன் பண்ணிக்கொண்டிருப்பாள். இந்த நேரத்தில் வீட்டுக்குப் போனால் ஆபீசுக்குப் போய் வேலை பார்த்து விட்டு வருகிறேன் என்றே நம்பமாட்டாள்.

“அது ஏன் சார் என் மேலே சர்க்காருக்கு ஸ்பெஷல் அக்கறை?” பந்துலு சாரை விடாமல் கேட்டேன்.

”நீர் ஏ ஆர் பி வார்டன் தானே உங்க வார்டுக்கு? எல்லா வார்டன்களையும் அவங்க அவங்க ஆபீசிலே, அது கவர்மெண்ட் ஆபீசோ, பிரைவேட் கம்பெனியோ. இன்னிலே இருந்து பிரதி தினம் நாலு மணிக்கே வீட்டுக்கு அனுப்பச் சொல்லி ஆர்டர்.. கிளம்பும்” என்று உத்தரவிட்டபடி ஆபீஸின் குறுக்கே நடந்து போனார்.

இன்றைக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வெள்ளியும் சாயந்திரம் ஐந்து மணிக்கு ஆபீஸில் பூஜை நடத்தி பிரசாதமாக தேங்காய்ப் பத்தையும், வாழைப்பழமும் கேண்டீன் ஸ்வீட்டும் கிடைக்கும். பாதி ஆபீஸ் செலவு, மீதி எங்கள் டிபார்ட்மெண்ட் உத்தியோகஸ்தர்கள் செலவு என்று அமோகமாக நடக்கும் அந்த வாராந்திர பூஜையில் இன்றைக்கு பாதுஷா ஸ்வீட் விநியோகிக்கப்படும்போது எனக்குக் கிடைக்காது. ரொம்ப கஷ்டம்.

”ஏன் சார் இந்த அவசரம்? ஜப்பான் ப்ளேன் குண்டு போட வந்துட்டிருக்கா?”. சூப்பர்நியூமரெரி ஆராவமுதன் பக்கத்தில் வந்து ரகசியம் போல் கேட்டார்.

என்னைக் கேட்டால்? சாயந்திரம் குண்டு போடப் போகிறான் என்றால் வீட்டுக்குத் திரும்பப் போய் அடையும் பீர்க்கங்காய்த் துவையலும் சாப்பிட நேரம் இருக்காது. உயிர் முக்கியமா அடை சாப்பிடுவதா?

ஏ ஆர் பி சீஃப் வார்டன் என்று நாங்கள் வம்பு பேசும்போது நியமித்த ரிடையர்ட் ஹெட்மாஸ்டரைப் போகிற வழியில் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்று தீர்மானித்தேன்.

ஏப்ரல் முதல் வாரத்தில் இப்படித்தான் நாலு மணிக்கு வீட்டுக்குப் போக அறிவிப்பு வரும், பின்னாடியே ஜப்பான் விமானத் தாக்குதல் வரும் என்றார்கள். வரவே இல்லை. இப்போது ஆகஸ்ட். அப்படி இருக்குமோ என்று யோசித்தேன். போகட்டும், சூப்பரிண்டெண்ட் பந்துலு சார் சொன்னால் சரிதான்.

இரண்டு நாளுக்கு முன் காந்திஜி வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஆரம்பித்திருக்கிறார். செய் அல்லது செத்து மடி என்று ஒற்றை வரி செயல்முறை வேறே. காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தி கொத்துக்கொத்தாகக் கைதாகிறார்கள். அவர்களை ஒடுக்க ஏ ஆர் பியைப் பயன்படுத்தப் போகிறார்களோ. அது போலீஸ் வேலை ஆச்சே. அதுக்கு நாலு மணிக்கு நான் ஏன் வீட்டுக்குப் போக வேண்டும்? ஏர் ரெய்டு வார்டனுக்கும் காந்தி பக்தர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ராமோஜியம் புதினம் –இன்னொரு 1942 அத்தியாயம் –மதறாஸ் : சில பகுதிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன