எனக்கென்னமோ லண்டனை ஒரு மாறுதலுக்காக விட்டுவிட்டு, ஜெர்மன் விமானங்கள் இவ்வளவு தொலைவு பறந்து வந்து, மெட்றாஸில் பிளிட்ஸ்கிர்க் என்ற அதிரடித் தாக்குதல் நடத்தத் திட்டம் போட்டு, அது வெளியே கசிந்து விட்டதோ என்று தோன்றியது.
ஆனால் ஜனங்கள் இப்போது கொஞ்சம் போல் துணிச்சல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏப்ரலில் ஜப்பான் விமானம் மதறாஸை நொறுக்கித் தூசாக்கப் போகிறது என்று பட்டணத்தைக் காலி செய்து கொண்டு ஓடியது அநாவசியம் என்று இப்போது தெரிகிறது. இனி ஜெர்மனியோ ஜப்பானோ வாசலில் வந்து நின்றாலும், வேலை இருக்கு, போய்ட்டு அப்புறம் வா என்று அனுப்பி வைக்கக் கூடியவர்கள் ஆகி விட்டார்கள் நம் பொதுஜனம்.
ஹெட்மாஸ்டர், வீட்டில் சாவகாசமாக ஈசிசேரில் சாய்ந்து ஆனந்த விகடன் படித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ஓரமாக இருந்த இந்துநேசனை அவசரமாக மறைத்தார். வீட்டில் யாருமில்லை என்றால் இந்துநேசன் கேட்கிறதா இவருக்கு? எப்படி கிடைத்தது?
“ஆபீஸ் போகலியா ராமோஜி?”
..
இனி இந்தக் கேள்விக்கு வீட்டுக்குள் போகும்வரை யார்யாருக்கோ பதில் சொல்லிக்கொண்டு போக வேண்டும். ஆபீஸ் உத்தியோகஸ்தன் அலுவலக நேரங்களில் வெளியே சுற்றித் திரிந்தால் சர்க்கார் மானம் போகும்.
”சார் இன்னிக்கு நாலு மணிக்கே ஏஆர்பி ட்யூட்டி பார்க்கறவங்க வீட்டுக்குப் போகலாம்னு அனுப்பிட்டாங்க.. இன்னியிலேயிருந்து”.
”அது ஏப்ரல்லே இல்லே ..?”
ஹெட்மாஸ்டருக்கு, நான் ஏதோ மாயாஜாலம் செய்து, இறந்த காலத்தில் நாலு மாதம் முந்திய தேதிக்குப் போயிருப்பதாக நினைப்பு போல. ஆனால் அவருக்கு அவ்வளவு கற்பனை வளம் எந்தக் காலத்திலும் கைகூடி வந்திருக்காது.
”எப்பவும் போல ராத்திரி எட்டு மணிக்கு வந்து ரோந்து சுத்தினா போதுமா?” என்று எல்லோருக்கும் புரிகிற மாதிரி கேட்டேன். ”எட்டு மணிக்கு முந்தி ஜப்பான்காரன் போர் விமானத்தில் வந்தால் யார் ஏர் ரைட் வார்டன் டியூட்டி பாக்கறது?” என்று எதிர்க் கேள்வி கேட்டார் அவர்.
”அப்போ இன்னிக்கு அட்டாக் இருக்குமா?”
“அப்படி நான் எங்கே சொன்னேன்?”.
“எட்டு மணிக்கு முன்னால் ஜப்பான் காரன் குண்டு போட்டால் யார் ரோந்து வர்றதுன்னு கேட்டீங்களே?”
”நாலு மணிக்கு வந்தா உடனே ரோந்து ஆரம்பிக்க வேணும்னு நீ எப்படி எதிர்பார்த்தே?”.
இவரிடம் மாட்டிக்கொண்டால் வெறும் நாளிலேயே உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார். இப்போது ஜப்பான் விஷயம் வேறே.
அடை சாப்பிடும் உத்தேசத்தோடு வீட்டுக்கு நடக்க ஆரம்பிக்க அவர் பின்னால் இருந்து கூவினார் –
“இன்னிக்கு ராத்திரி நம்ம வார்ட்லே போலீஸ், ஏ ஆர் பி காவல் ரோந்து எப்படி இருக்குன்னு பார்க்க மெட்றாஸ் கார்ப்பரேஷன் மேயர் சக்கரை செட்டியார் வருவார்னு ஹேஷ்யம்”.
இதை முன்னாலேயே சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா?
வீட்டுக்கு நடக்கும்போது தான் பத்திரிகையில் பார்த்த விளம்பரம் நினைவு வந்தது. இன்றைக்கு எம்விஎம் கம்பேனி எடுத்த சினிமா, டி டி ராமசந்திரனும் தெலக்ஸ் புவனாவும் நடித்த தசாபதி, பாரகன் தியேட்டரில் வெளியாகிறதாமே.
இன்று காலையிலேயே இப்படி நாலு மணிக்கு வீட்டுக்குப் போகலாம் என்பது தெரிந்திருந்தால், தியேட்டர் மேனேஜர் ரெட்டியாரிடம் ரெண்டு டிக்கட் எடுத்து வைக்கச் சொல்லியிருப்பேன். ரத்னாவும் நானும் சேர்ந்து போய்ச் சினிமா பார்த்து நாளாகிவிட்டது. அதுவும் தசாபதி போல காமெடி படங்கள். இப்படி திட்டமிட முடிந்திருந்தால், இன்றைக்கு ராத்திரி ரோந்து போக லீவு சொல்லியும் இருப்பேன்.
வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது ராத்திரி சாப்பாடு வேண்டாம் என்று தீர்மானமாக ரத்னாவிடம் சொல்லிவிட நினைத்துக்கொண்டேன். ராத்திரி மேயர் சக்கரை செட்டியார் வரும்போது வயிற்றைத் தள்ளிக்கொண்டு அபூரண கர்ப்பிணி மாதிரி நிற்கக் கூடாது.
”அடை நாளைக்கு செய்யலாம்னு வச்சுட்டேங்க.. பீர்க்கங்காய் சரியா இல்லே.. புதுசா நாளைக்கு வாங்கிக்கலாம்.. இன்னிக்கு நம்ம கங்கா அக்கா எந்தக் காலத்திலேயோ சொல்லிக்கொடுத்த கும்மாயம் தான் செஞ்சிருக்கேன் .. கூட சாபுதானா வடை.. எடுத்து வரட்டா?”
கங்கா நினைவில் ரெண்டு பேரும் மௌனமாக இருந்தோம். அந்த தேவதை உடலை உதிர்த்து விட்டு தேவலோகம் பறந்து போய் இரண்டு வருடமாகிறது. ராத்திரி படுத்தாள், காலையில் எழுந்திருக்கவில்லை. அநாசாயச மரணம். கோபு தந்தி அடித்துத் தகவல் வந்தது. நானும் ரத்னாவும் உடனே போய் வந்தோம். கங்கா ஒரு மராட்டி அபங்க், தெய்வ சங்கீதம் மாதிரி இனிமையாக பிரவாகம் எடுத்து முடிஞ்சு போய்ட்டாள் என்றாள் ரத்னா. உண்மைதான்.
கமலா பாயும், தொடர்ந்து கங்காவும் துக்காபாளையத் தெரு வீடும் மனதில் முடிந்து போன அத்தியாயங்களாகி, தேங்கிய நினைவுகளாக வளைய வருவதைப் பழகிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலத்தின் இனிமையான நினைவுகளில் நாங்கள் அந்தரங்கமான நிமிடங்களில் மறுபடி வாழ்கிறோம்.
இரண்டு கரண்டி கும்மாயமும், இரண்டு ஜவ்வரிசி வடையும் சாப்பிட எடுத்து வந்த ரத்னாவிடம் இன்றைக்கு ராத்திரி சாப்பாடு வேணாம் பிரியசகி, மேயர் சக்கரை செட்டியார் வரப் போகிறார் என்று குழப்பமாக அறிவித்தேன்.
”மேயர் நம் வீட்டுக்கு வராரா? வெல்கம். சைவமா அசைவமா அவர்?”..
”அவர் சைவமா அசைவமா தெரியாது. நம்ம வீட்டுக்கு சாப்பிட வரலே. நம்ம வார்ட்லே ஏ ஆர் பி டியூட்டி எல்லாம் எப்படிப் போயிட்டிருக்குன்னு பார்க்க வராராம். நான் அவரோட கைகுலுக்கும்போது புளி ஏப்பம் வரக்கூடாது”.
”நீங்க ராத்திரி சாப்பிடலேன்னா பசி ஏப்பம் வரும், பரவாயில்லையா?”