ராத்திரி எட்டு மணிக்கு அரை நிஜாரும், ஏ ஆர் பி ஹெல்மெட்டுமாக டியூட்டிக்குக் கிளம்பியபோது ரத்னா நானும் வரட்டுமா என்று கேட்டாள். வேணாம், ஜப்பான் காரன் குண்டு போடலாம் என்று சொல்ல நினைத்துக் கைவிட்டேன். வேறே வினையே வேண்டாம். ஜப்பான்காரன் தாக்கினால் வீட்டில் நான் தனியாக உட்கார்ந்து என்ன பண்ணப் போகிறேன் என்று கூடவே தொத்துக்குட்டியாகக் கிளம்பி விடுவாள் என் அப்சரஸ்.
நான் தெருக்கோடிக்குப் போனபோது கடைசி ட்ராம் நடுவழியில் நின்று கொண்டிருந்தது. புரசைவாக்கத்திலிருந்து வால்டாக்ஸ் ரோடுக்குப் போகும் வண்டி அது. ட்ராமைச் சுற்றி பத்து பதினைந்து பேர். குடித்து விட்டு யாராவது ட்ராம் பாதையில் படுத்திருந்து அவர்களை அகற்றுகிற சம்பவம் போல.
ஆனால் சச்சரவு சத்தம் கேட்கிறதே என்று ட்ராம் பாதையைப் பார்த்தேன். ஒரு குறுக்கீடும் இல்லை. எல்லோரும் ஏக காலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
டிரைவரும் கண்டக்டரும் ட்ராம் காரின் முகப்பில் நின்று கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயே ஏ ஆர் பி சீஃப் வார்டன் என்று நாங்கள் நாமகரணம் செய்திருந்த ரிடையர்ட் ஹெட்மாஸ்டர்.
ட்ராம் டிரைவரும் அவரும் ஏதோ வாக்குவாதத்தில் இருப்பது தெரிய விலக்கிவிடலாம் என்று நானும் அங்கே சைக்கிளைச் செலுத்தினேன்.
“போலீஸ்காரங்க ஒண்ணு சொல்றாங்க, நீங்க இன்னொண்ணு சொல்றீங்க.. உங்க ரெண்டு கோஷ்டிக்குள்ளும் ஒரே அபிப்ராயம் இல்லாட்ட தேசத்துலே எப்படி ஒற்றுமை வந்து சுதந்திரம் கிடைக்கும்?” என்று ட்ராம் ட்ரைவர் நாளைக்கே சுதந்திரத்தை வழங்க தட்டில் எடுத்துக்கொண்டு பிரிட்டீஷ் பிரதமர் தெரு ஓரத்தில் நிற்கிறதுபோல் அரையிருட்டில் பிரசங்கம் செய்தார்.
“ட்ராம் ஓட்டும்போது வண்டிக்குள்ளே விளக்கு எரியக்கூடாதுன்னா எரியக் கூடாதுதான்.. ப்ளாக் அவுட் நடவடிக்கை அது.. எங்க கையேட்டுலே இருக்கு” என்றார் ஹெட்மாஸ்டர்.
நான் இதைப் படித்த நினைவில்லை. என்றாலும் ஹெச் எம் சொன்னால் ஆண்டவனே சொன்ன மாதிரி. என்னை பாஸ் போட்டு ஸ்கூல் ஃபைனல் வரை கொண்டு வந்து விட்டவர் அவர்தான். எஸ் எஸ் எல் சியில் புத்தி வந்து நானும் நன்றாகப் படித்தேன் என்பது வேறு கதை.
“என்ன சார் ஆச்சு?” சைக்கிளில் இருந்தபடியே கால் ஊன்றிக் கேட்டேன்.
என் தலையைப் பார்த்ததும் ட்ராம் கண்டக்டரும் எங்கள் தெருவாசியுமான கண்ணாயிரம் உற்சாகமாகச் சொன்னார் –
”ராமோஜி சார், நீங்களே பாருங்க… ட்ராம்லே லைட் போட்டு ஓட்டிப்போனா, இப்போ ஹெட்மாஸ்டர் சார் சொன்னபடி, ப்ளாக் அவுட் நேரத்திலே விளக்கை எல்லாம் அணைச்சுட்டு ஓட்டிப் போகணும்னு ஏ ஆர் பி சொல்றீங்க… விளக்கை போட்டுக்கிட்டு ஓட்டணும்னு போலீஸ் சொல்லுது.. நாங்க என்ன பண்ணுவோம் சொல்லுங்க”, என்றார் அவர்.
நாலு பேர் ஏஆர்பி சொன்னது சரியென்று சொல்ல, இன்னும் நாலு பேர் போலீஸ் சொல்வது தான் கரெக்ட் என்று திடமாக வாக்கு உதிர்க்க, வாக்குவாதம் வளர்ந்து கொண்டு போனது. ட்ராமில் இருந்த நாலைந்து பிரயாணிகள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கி நடந்தார்கள். கடைசியாக ஜாக்கிரதையாக நாலு திசையும் பார்த்தபடி இறங்கியவர் நம்ம எதிர்வீட்டுக் கேளப்பன்.
கண்ணாயிரம் அவரிடமும் சச்சரவுக்கான காரணத்தைச் சொல்ல, புன்னகையோடு கேளப்பன் சொன்ன பதில் அட்சர லட்சம் பெறும் –
“அரை மணி நேரம் ட்ராமுக்குள்ளே லைட்டை ஓஃப் பண்ணுங்க.. அடுத்த அரை மணி நேரம் லைட்டைப் போட்டு வையுங்க.. இப்படியே மாறி மாறிச் செஞ்சுக்கிட்டு ட்யூட்டி முடிச்சு சௌக்கியமா வீட்டுக்குப் போங்க”
சிரித்துக் கொண்டே அந்தக் கூட்டம் கலைய ஆரம்பித்தபோது ஒரு ப்ளஷர் கார் வந்து நின்றது. மோரிஸ் மைனர், கருப்பு நிறம். உள்ளே இருந்து இறங்கினவரைப் பார்த்ததும் கேளப்பன் சத்தமாகச் சொன்னார் –
”சகாவு சக்கரை செட்டியார் ஜிந்தாபாத்”.
அப்போது தான் கவனித்தேன் மேயர் வந்திறங்கி இருக்கிறார் என்று. பக்கத்தில் போய் பெயர் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டேன். புன்சிரிப்போடு கை குலுக்கினார் மேயர். ஒரு பார்வைக்கு பாதிரியார் மாதிரியும் மற்றொரு பார்வைக்கு தொழிற்சங்க பிரமுகர் மாதிரியும் அவர் இருந்ததாகத் தோன்றியது.
சட்டென்று அவர் முகம் மலர்ந்து புன்னகை சிந்தியது. நான் என் பின்னால் திரும்பிப் பார்க்க, ரத்னா நின்று கொண்டிருந்தாள். என்னை அனுப்பி வைத்துவிட்டுப் பின்னாலேயே வந்திருக்கிறாள். சாப்பிட்டாளோ என்னமோ.
“என் ஒய்ஃப் சார், ரத்னா” என்றேன். செட்டியார் புன்முறுவலோடு கைகூப்பினார். நான் ரத்னாவின் மகாராஷ்ட்ர பின்னணி பற்றி அறிமுகப்படுத்தினேன்.
”சார், கடவுளை அறிவது ஞானம் இல்லே அனுபவம்னு நீங்க சொன்னதா பத்திரிகையிலே படிச்சேன். ரொம்ப அருமையா இருந்தது. நீங்க கிறிஸ்துவரா இருந்தாலும் மத்தவங்களுக்கும் இது பிடித்துப் போனது” என்று ரத்னா சொல்ல அவர் சந்தோஷத்தின் உச்சிக்கே போய்விட்டார்.
”ஓய் ராமோஜி, மராட்டா ஸ்திரி கும்டா, அதான் பர்தா மாதிரி துணியை சேலைக்கு மேலே மூடி உடுத்திப்பாங்களே.. அதை போடாம, ராத்திரி வெளியே வரக்கூடாதுன்னு நான் உங்க வயசிலே இருந்தபோது கட்டுப்பாடு. அதையும் மீறி எங்க ஊர் வெங்கல்-லே அவங்க தெருவில் நடந்து போய், பள்ளிக்கூடத்திலே சாயந்திர க்ளாஸ்லே கலந்துக்க ஏற்பாடு செஞ்சிருந்தேன். உங்க ஒய்ஃப் புது யுகப் பெண். படிக்கறதை மறக்கறது இல்லே போலே இருக்கு. நலமா இருங்க, தேவனால் எப்பொழுதும் ஆசிர்வதிக்கப்பட்டு இருங்க”.
அப்புறம் சக்கரைச் செட்டியார் எங்கள் பேட்டை வார்டுகளைப் பார்வையிட்டபோது நானும் ரத்னாவும் அவரோடு அவர் காரில் போனோம். என் சைக்கிளை கேளப்பன் சேட்டனிடம் கொடுத்து அனுப்பி விட்டு மேயரோடு பயணம் தொடங்கினேன்.
“நீங்க எங்கே உத்தியோகம் பார்க்கறீங்க?” என்று என்னைக் கேட்டார். செயிண்ட் ஜியார்ஜ் கோட்டையில் சர்க்கார் ஊழியன் என்று சொன்னதும் கொஞ்சம் ஆச்சரியத்தோடு பார்த்தார்.
“அபூர்வமான வர்க்கம் நீங்க.. கவர்மெண்ட் டிபார்ட்மெண்டை எல்லாம் ஜப்பான்காரன் குண்டு போடப் போறான்னு மெட்றாஸிலே இருந்து வேறே எங்கெங்கேயோ இடம் மாத்திட்டாங்க. எப்படி அவங்களோட ஒத்துழைப்பு இல்லாம இங்கே மெட்றாஸ் கார்ப்பரேஷன் வேலை செய்யும்?” என்று கேட்டார்.
“ஆமா சார், போர்ட் ட்ரஸ்ட் ஆபீசை ஊட்டிக்கு மாற்றிட்டாங்கன்னு பத்திரிகையிலே படிச்சேன். ஊட்டியிலே எந்தக் கடல் இருக்குன்னு அங்கே போனாங்களோ”.
ரத்னா எடுத்துக் கொடுக்க, இன்னொரு பத்து நிமிடம் போல சின்னஞ்சிறு ஜப்பானிய போர் விமானத்துக்குப் பயப்படும் போர்க்கால சர்க்கார் பற்றியும், முக்கியமாக மதறாஸ் மாகாண சர்க்கார் பற்றியும், அவர் தலைமையில் கார்ப்பரேஷன் செய்யத் திட்டமிட்டிருக்கும் நல்ல காரியங்கள் பற்றியும் பேச்சு மழை பொழிந்தார். காந்திஜி பற்றி மிக உயர்வாகச் சொன்னபடியே வந்தார் மேயர் சக்கரை செட்டியார்.
அவரை எங்கள் வீட்டுக்கு வந்து போகச்சொல்லிக் கேட்டுக் கொண்டேன். ரத்னாவும் என்னோடு சேர்ந்து அன்போடு அழைத்தாள்.
“நிச்சயம் வரேன். இன்னிக்கு ரொம்ப நேரமாயிடுச்சு. சாவகாசமா, மெட்றாஸ் பழைய நிலைமைக்கு திரும்பினதும் ஒரு நாள் வரேன்” என்றார் வெங்கல் சக்கரை செட்டியார் எங்களை இறக்கி விடும்போது. அவருடைய மேயர் பதவி முடிவடைவதற்குள் யுத்தம் முடிந்து விட வேண்டுமே என்று சௌகார்பேட்டையில் கோயில் கொண்ட நிமிஷாம்பாளை வேண்டினேன்.